சேலம் அருகே பட்டாசு ஆலையில் நடந்த வெடிவிபத்தில் 4 பெண்கள், 3 பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட 8 பேர் உடல் சிதறி இறந்தனர். சேலம் மாவட்டம் மேச்சேரி அருகே உள்ள கொப்பம்புதூர் பகுதியைச் சேர்ந்தவர் சரவணன். இவரது மனைவி சாந்தி(36). இவர்கள் உப்புபள்ளம் மற்றும் செங்காட்டூர் பிரிவு காட்டுவளவு கரடு ஆகிய 2 இடங்களில் பட்டாசு தொழிற்சாலை நடத்தி வந்தனர். இவர்களுக்கு சூரியா(10), அம்மு(8) ஆகிய 2 குழந்தைகள் உள்ளனர். சில ஆண்டுகளுக்கு முன்பு உப்புபள்ளம் ஆலையில் நடந்த தீ விபத்தில் சரவணன் இறந்தார். இதன் பின்னர் சாந்தி 2 தொழிற்சாலைகளையும் நிர்வகித்து வந்தார். பகலில் மட்டும் இந்த ஆலைகளில் நாட்டு வெடிகள் தயாரிக்கும் பணி நடந்து வந்தது.
இந்நிலையில் 25.12.2012பிற்பகல் 2 மணியளவில் இடியோசை போன்ற பயங்கர சத்தத்துடன் முதலாவது பட்டாசுத் தொழிற்சாலை வெடித்துச் சிதறியது. இதில் இருந்து பரவி தீயால் அடுத்த சில வினாடிகளில் மேலும் இரண்டு தொழிற்கூடங்களும் பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறின. இதில் கட்டடங்கள் அனைத்தும் தரைமட்டமாகின. மேலும் அங்கு வேலை செய்து கொண்டிருந்த 13 தொழிலாளர்கள் பல மீட்டர் தொலைவுக்கு தூக்கி வீசப்பட்டனர்.
இந்த விபத்தில் தொழிற்சாலை உரிமையாளர் சாந்தி, இவரது மகன் சூர்யா (11), தொழிலாளர்கள் சிவகாமி (35), கேசவன் (13) ஆகிய நான்கு பேரும் உடல் கருகி அதே இடத்தில் உயிரிழந்தனர். படுகாயம் அடைந்தவர்கள் சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும், சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டனர். இது குறித்து தகவல் அறிந்த மேட்டூர்,மேச்சேரி,ஓமலூர் பகுதிகளில் இருந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.மேலும் பட்டாசுகள் வெடித்து சிதறாமல் இருக்க தண்ணீர் ஊற்றி அணைத்தனர்.
இந்த நிலையில் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்ட சில நிமிடங்களில் தங்கம் (50) பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் ஈஸ்வரி (35), விஜயா (33) ஆகியோர் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இதனால் சாவு எண்ணிக்கை 7 ஆக உயர்ந்தது.
சிகிச்சை பெற்று வருபவர்களில் மனோஜ்குமார் (12), விமலா (17), பவித்ரா (11), தீபா (12), சதீஷ் (15), பழனியப்பன் (45) ஆகிய 6 பேர்களின் நிலைமையும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. வெடிவிபத்து சம்பவம் அறிந்ததும் மாவட்ட ஆட்சியர் க.மகரnullஷணம், வருவாய் அலுவலர் பிரசன்ன வெங்கடேசன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அஸ்வின் கோட்னீஷ் உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் மேச்சேரி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.சம்பவ இடத்தை மேச்சேரி மற்றும் சுற்றுபுற மக்கள் ஏராளமானோர் சம்பவ இடத்தை சென்று பார்வையிட்டனர்.
இந்த நூற்றாண்டின் தொழில் வளர்ச்சி அதன் உற்பத்திறனில் உச்சத்தை எட்டியுள்ளது. இந்த நிலையில் பல் தேசிய நிறுவனங்கள் குறைந்த கூலியைத் தேடி ஒரு புதறத்தில் உற்பத்தியை இந்தியா போன்ற நாடுகளில் ஆக்கிரமித்துக்கொள்ள மறுபுறத்தில் உற்பத்தியின் வளர்ச்சி தடைப்பட்டு விட்டது. அப்துல் கலாம் போன்ற அரசியல் கோமாளிகள் இந்தியாவை வல்லரசாகக் கனவுகாணுமாறு உத்தரவிடும் அதே வேளை பட்டாசு தொழிற்சாலை கூட பாதுகாப்பற்ற நிலையிலேயே இந்திய உற்பத்தி காணப்படுகின்றது. தடைப்பட்டிருக்கும் பாதுகாப்பற்ற உற்பத்தி சூழலில் தமிழகத்தின் மிகப்பெரும் பட்டாசு தொழிற்சாலை போன்று கூடங்குளம் அணுமின்நிலையம் காட்சி தருகிறது.