31.12.2008.
இந்தியாவின் நேரு காந்தி, இலங்கையின் பண்டாரநாயக்கா, பாகிஸ்தானின் பூட்டோ குடும்பங்களை போன்று தெற்காசியாவின் பரம்பரை அரசியல் தன்மையை கொண்டதாக பங்களாதேஷின் அவாமி லீக்கட்சியின் தலைவியான ஷேக் ஹசீனாவின் குடும்பமும் உள்ளது.
ஷேக் ஹசீனாவின் வாழ்க்கை சிறுபராயம் முதல் அதிக உயர் மட்டத்திற்கும் பின்னர் தாழ்ந்த நிலைக்கும் மாறிமாறிச் சென்றுள்ளது.
பாகிஸ்தானின் சிறையிலிருந்து விடுதலைபெற்று ஹசீனாவின் தந்தை முஜிபுர் ரஹ்மான் பங்களாதேஷின் முதலாவது ஜனாதிபதியானமை, பின்னர் ஹசீனா பிரதமராக பதவி வகித்ததுடன் அவாமில்லீக்கின் தலைவராக சர்ச்சைக்கிடமின்றி இருந்து வருகின்றமை அவருக்குக் கிடைத்த சிறப்புகளாகும்.
மறு பக்கத்தில் தந்தையும் குடும்ப உறுப்பினர்களும் சதிப்புரட்சியில் கொல்லப்பட்டமையும் பிரதமராக இருந்து அதிகாரம் பறிபோனமையும் அண்மையில் ஊழல் குற்றச்சாட்டுகளில் கைதாகி சிறை வைக்கப்பட்டமையும் அவரின் வாழ்க்கையின் இருண்டகாலப்பகுதிகளாகும்.
1947 செப்டெம்பரில் பிறந்த ஷேசீனாவின் இரத்தத்துடன் ஊறியது அரசியலாகும்.
1971 இல் அவரின் குடும்ப உறுப்பினர்கள் யாவரும் படுகொலை செய்யப்பட்டபோது ஷேக்ஹசீனாவும் அவரின் சகோதரி ஷேக் ரெசானாவுமே தப்பினர். அவர்கள் அச்சமயம் ஜேர்மனியில் இருந்தனர். இவர்களின் மூன்று சகோதரர்களும் கொல்லப்பட்டனர். 1971 இல் பங்களாதேஷ் சுதந்திர மடைந்த காலகட்டத்தில் டாக்காபல்கலைக்கழக மாணவர் தலைவராக இருந்தவர் ஹசீனா. தந்தையார் கொல்லப்பட்டபின் அஞ்ஞாதவாசமிருந்த அவர் 1981 இல் நாடுதிரும்பி எர்ஷாட்டின் இராணுவ அரசுக்கு எதிராக பிரசாரத்தில் ஈடுபட்டார். அந்த தசாப்தத்தில் சிறை செல்வதும் விடுதலையாவதுமாக அவரின் வாழ்க்கை கழிந்தது.
எர்ஷாட்டின் ஆட்சி வீழ்ச்சி கண்டபின் 1991 இல் இடம்பெற்ற தேர்தலில் பங்களாதேஷ் தேசியவாத கட்சியின் தலைவி காலிதாஸியா ஆட்சியை கைப்பற்றினார். தனது கணவர் ஸியாவுர் ரஹ்மானே பங்களாதேஷின் சுதந்திர நாயகன் என்று காலிதாஸியா உரிமை கோரியதுடன் ஹசீனாவின் தந்தை ஷேக் முஜிபுர் ரஹ்மான் உண்மையில் சுதந்திரத்தை பெற்றுத் தந்தவரல்ல என்று பிரசாரம் செய்தார்.
இந்த இரு பெண்களுக்கும் இடையிலான பகைமை அதிகரித்து வந்ததுடன் அவர்களின் கட்சியே மாறி மாறி ஆட்சியைக் கைப்பற்றின.
இராணுவ ஆதரவுடனான இடைக்கால அரசின் 2 வருட ஆட்சியின் போது அஞ்ஞாதவாசத்திற்கான நிலைமை அவர் மீது திணிக்கப்பட்டபோதும் மற்றும் அதிக எண்ணிக்கையான நீதிமன்ற விசாரணைகளை எதிர்கொண்ட போதும் அவற்றிலிருந்தும் விடுபட்டு தற்போது ஆட்சியைக் கைப்பற்றியிருக்கிறார். சுமார் ஒரு வருடகாலம் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஹசீனாவுக்கு 2008 இன் இறுதிப்பகுதியிலேயே மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா செல்வதற்கு அனுமதி கிடைத்தது.
மக்கள் மத்தியில் அவருக்கு இருந்த அமோக ஆதரவும் அவரின் சொந்த உறுதிப்பாடும் அவருக்கு எதிரான முயற்சிகளை பூச்சியமாக்கியிருப்பதாக ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.