மாலைத்தீவில் புதிய அரசியலமைப்புக்கு ஜனாதிபதி அங்கீகாரம்!

08.08.2008.

தசாப்தகால சர்வாதிகார ஆட்சியின் பின்னர் நாட்டில் பல கட்சிகள் பங்கேற்கும் தேர்தலை நடாத்துவதற்கும் முக்கிய ஜனநாயக சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்கும் அனுமதியளிப்பதற்கான புதிய அரசியலமைப்பில் மாலைதீவு ஜனாதிபதி மௌமூன் அப்துல் கயூம் கைச்சாத்திட்டுள்ளார். மனித உரிமைகள், நீதித்துறை, பொலிஸ், பாதுகாப்பு, தேர்தல் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகள் விசாரணைகள் போன்றவற்றிற்கான சுயாதீன அமைப்புக்களை முதல் தடவையாக நாட்டில் உருவாக்குவதற்கும் இவ் அரசியலமைப்பு அனுமதி வழங்கியுள்ளதாக அரச பேச்சாளர் மொஹமட் ஷெரீப் தெரிவித்துள்ளார்.
இதன் பிரகாரம் முதலாவது ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் ஒக்டோபர் 10 ஆம் திகதிக்கு முன்பாக நடத்தப்படவுள்ளதாகவும் அரசியலமைப்பின் பிரகாரம் 30 நாட்களுக்குள் தேர்தல் ஆணையாளர் நியமிக்கப்பட்ட பின்னர் தேர்தல் நடைபெறும் சரியான திகதி அறிவிக்கப்படுமெனவும் ஷெரீப் தெரிவித்துள்ளார்.

மேலும் இதனை ஒரு முக்கியத்துவம் வாய்ந்த மைல்கல் என வர்ணித்துள்ள ஷெரீப் இதிலிருந்து பல மாற்றங்கள் நிகழுமெனவும் குறிப்பிட்டுள்ளார்.

இஸ்லாமிய நாடான மாலைதீவை கடந்த 30 வருடங்களாக கடும் கட்டுப்பாடுகளுடன் ஆட்சி செய்து வரும் கயூம் சீர்திருத்தத்தை கோரும் ஆர்ப்பாட்டங்கள் பரவலாக இடம்பெற்றதைத் தொடர்ந்து 2004 இல் புதிய அரசியலமைப்பை அமுல்படுத்துவதாக உறுதியளித்தார்.

கயூமின் ஆட்சிக்காலத்தில் 3 இலட்சம் மக்கள் தொகையைக் கொண்ட மாலைதீவில் 1190 பவளத் தீவுகள் உருவாக்கப்பட்டுள்ளன.

இதனால் தெற்காசியாவின் வளம்மிக்க நாடாகவும் சுற்றுலாப்பயணிகளை அதிகளவில் கவரும் நாடுகளில் ஒன்றாகவும் மாலைதீவு உருவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந் நடவடிக்கையை வரவேற்றுள்ள எதிர்க்கட்சிகள் ஏகாதிபத்திய ஆட்சி முடிவுக்கு வந்துள்ளதன் மூலம் முதல் தடவையாக ஜனாதிபதியை தெரிவு செய்யும் வாய்ப்பை மக்கள் பெற்றுள்ளனரென தெரிவித்துள்ளன.

இவ் அரசியலமைப்பு கைச்சாத்திடப்படும் நிகழ்வை தொலைக்காட்சி நேரடி ஒளி பரப்பின் மூலம் மக்கள் கண்டுகளிப்பதற்காக நேற்றைய தினத்தை தேசிய விடுமுறையாக அரசு பிரகடனப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.