இன்றுள்ள இடைவெளியில் எம் தேசிய இனப்பிரச்சனையில் அதற்காக வேலைசெய்பவர்கள்குறித்த வேலைத்திட்டத்தின் அடிப்படையில் ஒரு பொதுத்தளத்தை எட்ட முடியாமலுள்ள நிலையில், இதற்கான சிந்தனைமுறையில் எம்மீதுள்ள தவறுகளை பார்க்கவேண்டிய காலகட்டமிது.
அந்த வகையில் எங்களில் பெரும்பாலான மக்களுக்கு சர்வசாதாரணமாக தோன்றுவது எது? அசைகின்ற நிலையா? அல்லது அசையாத நிலையா? அதாவது மிகவும் இயல்பாக தெரிவது இயக்கமா? இயக்கமின்மையா? இப்படியான விடயங்களில் எங்களுக்கு ஒரு தெளிவான பார்வைவேண்டும்.
அசைவதற்கு முன்னால் எல்லாம் ஆரம்பத்தில் அசையாமல், இயங்காமல் கிடந்தன என்றே பொதுவாக நினைக்கின்றார்கள். இதன் அடிப்படையில் தான் எங்கள் சிந்தனையும் உள்ளது. அசைகின்ற நிலை, அசையாநிலை, இயக்கம், மாறுதல் என்றசொற்களின் பதங்கள் எதை உணர்த்துகின்றன என்பதை நாங்கள் உணர்வதில்லை. இயக்கம், மாறுதல் என்கின்ற இரண்டு சொற்களும் ஒரே பொருளை குறிப்பதில்லை. உதாரணமாக விழுந்து கொண்டிருக்கும் கல்லும், ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு வந்து கொண்டிருக்கும் ரயிலும் இயங்கிக்கொண்டு இருக்கின்றன என்று சொல்கின்றோம். ஆனால் மாறுதல் என்ற சொல்லுக்கு முறையான அர்த்தம் ஒரு வடிவத்தில் இருந்து இன்னொரு வடிவத்திற்கு போவது என்பதாகும். உதாரணமாக இலைகள் உதிர்ந்த மரம் தன்வடிவத்தை மாற்றிக்கொண்டு விட்டது. மேலும் மாறுதல் என்ற சொல் ஒரு நிலையில் இருந்து இன்னொரு நிலைக்கு மாறிப்போவதைக் குறிக்கும். இதை மாறுதல் என்று குறிப்பிடுகின்றோம். இப்படியான மாற்றங்களை உணராதபடியால்தான் எம் சிந்தனைமுறையில் மாற்றம் காணமுடியாமல் உள்ளது.
இப்பொழுதுள்ள எம்மக்களின் பிரச்சினைகள், தேவைகள், அரசின் ஒடுக்குமுறைகள்,புலத்திலும் – புலம் பெயர்ந்த நாடுகளிலும் வாழ்கின்ற மக்களின் வாழ்நிலைகள் எல்லாம் மாறுதல் அடைந்துள்ளன. அதாவது தன் வடிவத்தை மாற்றிவிட்டது . ஆக இயக்கம் என்பது இடமாற்றத்தைக் குறிக்கின்றது. மாறுதல் என்பது வடிவத்தின் நிலையில் மாற்றத்தைக் குறிக்கின்றது. இந்த வேறுபாட்டை நாங்கள் கருத்தில் கொள்ளாவிட்டால், எம் சிந்தனைமுறையில் மாற்றம் காணமுடியாது.
இதற்கொரு உதாரணத்தை பார்ப்போமாயின், ஒரு சோடி பழுப்புநிற செருப்பு நாங்கள் வாங்கியதாக வைத்துக்கொள்வோம். பிறகு சிறிதுகாலம் கழித்து, பல தடவை திருத்தி, அடித்தோலையும், மேல்தோலையும் அடிக்கடி புதிப்பித்து, அதன் நிறம் மாறிய பிறகும்கூட அதே பழுப்பு நிற செருப்புத்தான் போட்டுக்கொண்டு இருக்கின்றோம் என்று சொல்லிக்கொண்டு இருப்போம். வாங்கும் போது அது இருந்த நிலைக்கும், அது இன்று இருக்கும் நிலைக்கும் உள்ள வித்தியாசத்தை எண்ணிப் பார்க்காமலே சொல்லிக்கொண்டிருப்போம். ஏதோ ஒரு நாள், எப்பொழுதோ வாங்கிய செருப்பின் நினைப்பிலேதான் இப்பொழுதும் பேசிக்கொண்டிருப்போம். வாங்கிய செருப்பில் ஏற்பட்ட மாற்றங்களை நாங்கள் கவனிப்பதில்லை.
எங்களை பொறுத்த வரை அதுவும் இதுவும் ஒன்றேதான். அன்று வாங்கிய செருப்பும் இன்று இருக்கின்ற செருப்பும் ஒற்றை நிலையிலேயே தான் இருந்து வருவதாக நினைக்கின்றோம். ஆகவே அந்த செருப்பின் ஒற்றை நிலையைத்தான் மனதில் கொண்டிருக்கின்றோம். அதைப் பார்க்கப்போய் முக்கியமானது எதுவும் நடக்காததுபோல், மாறுதல் ஏற்பட்டிருப்பதை கவனிக்காமல் இருந்து விடுகின்றோம்.
இதேபோல்தான் இன்றும் பலர் இதுவரை போராடிய அமைப்பினில் எதுவும் நடக்காதது போல் எந்த மாற்றத்தையும் கவனிக்காமல் கட்டமைப்பு, தலைமை, கொடி என்று இருக்கின்றார்கள். அதாவது அன்று வீரத்துடன் போராடி பலமுகாம்களை தகர்த்த அந்த நினைப்பிலேயே இன்றும் இருக்கின்றார்கள். ஏன் உடலில் புலிக்கொடியை அதே நினைப்பில் பச்சை குத்திக்கொண்டும் இருக்கின்றார்கள். இதை விட இன்னும் ஒரு சாரார் 100 வருடங்களுக்கு முன்பு லெனின்,மாவோ சொன்ன கருத்துக்களை ஒரு மதவாதி போல் மனப்பாடம் பண்ணிக்கொண்டு, அதில் இன்று வரை எந்த மாற்றமும் நடக்காதது போல் ஒரு சிலர் எழுதிக் கொண்டிருக்கின்றார்கள். இது தான் எம் சிந்தனைமுறையில் உள்ள ஒற்றை நிலைக் கோட்பாடாகும்.
அதாவது இயக்க மறுப்பு இயல் என்ற சிந்தனை முறையில் அதுவே இது என்ற பார்வையை குறிக்கும் நிலைப்பாடாகும். இது இயக்கமறுப்பு சிந்தனையின் குணாம்சமாகும்.
நிகழ்வுகளை பார்த்து ஆராயும் விடயத்தில் இந்தக் கோட்பாடு இயக்க நிலையை புறக்கணித்து அசையா நிலையை அங்கீகரிக்கின்றது. மாறுதலை புறக்கணித்து எப்போதும் ஒற்றை நிலையை அங்கீகரிக்கின்றது.
இப்போதுள்ள நிலையை புறக்கணித்துவிட்டு பழைய நிலையை அங்கீகரிக்கும் போக்குத்தான் எங்களை ஒரு தளத்தில் இணைய வைக்க தடையாக உள்ளது. மனிதன் என்றென்றுக்கும் அப்படியே இருக்கின்றான் என்று சொல்கின்றது. மனித இயல்பு மாறவேயில்லை என்று கூறுகின்றார்கள். ஏன் தங்களுடைய மாற்றத்தையும் உணராமல் இருக்கின்றார்கள்.
முன்னேறியபிரிவினர் என்று சொல்பவர்கள் கூட இந்த ஒற்றைநிலை சிந்தனை முறையில்தான் உள்ளார்கள். இதனால் தான் 25 வருடங்களுக்கு முன்பு போட்ட அதே பழுப்பு நிற செருப்பை பற்றி இன்றும் பேசுகின்றார்கள். இன்று அந்த செருப்பு இருக்கும் நிலையை பார்க்க முடியாதவர்களாக இருக்கின்றார்கள். இந்த முன்னேறிய பிரிவினர்கள் 25 வருடங்களுக்கு முன்பு நடந்த இயக்கங்களின் தவறுகளில் உண்மையைத் தேடுகின்றார்கள். இணையத்தளங்களிலும் விவாதிக்கின்றார்கள். இந்த பேச்சுக்கள், எழுத்துக்கள் எல்லாம் மேற்சொன்ன கண்ணோட்டத்தைத்தான் பிரதிபலிக்கின்றன. நம்மனதினுள்ளே இந்தக் கண்ணோட்டம் ஆழமாக வேர்விட்டுள்ளது . இந்த தவறை ஆளும் அதிகார வர்க்கம் முழுக்க முழுக்க பயன் படுத்திக்கொள்கின்றது.
புலிகளின் தலைமையை நியாயப்படுத்தும் எம்மவர்களுக்கும் பிடித்தமான வாதமும்கூட. மனிதன் இயல்பாகவே ஒரு சுயநலமி. எனவே அவனை கட்டுப்படுத்த ஒரு சக்தி தேவை. ஒரு தலைவர் அவசியம். இல்லாவிட்டால் இந்த இனம் இப்படித்தான். ஆகவே தலைவர் வருவார் என்று சொல்வார்கள் . இது எல்லாம் இயக்கமறுப்பு சிந்தனைமுறையின் கண்ணோட்டத்தினால் விளைகின்ற விளைவு தான். மனித இயல்பு எப்போதும் ஒன்றே தான். அது மாறவே முடியாது என்று சொல்கின்றது.
இதனால் தான் இந்த முனேறிய பிரிவினர்கள் என்று சொல்பவர்கள் அதே பழுப்பு நிறசெருப்பின் நினைப்பில் உள்ளார்கள். அந்த செருப்பின் அடித்தளம் ,மேல்த்தளம் பலதடவை மாற்றப்பட்டு, அதன் நிறம் மாறிய பிறகும், அதே நினைப்பில் உள்ளார்கள். அதாவது இன்று எம்முன்னுள்ள மக்களின் பிரச்சனையை பார்க்கத் தவறியவர்கள், பழுப்புநிற செருப்பை பற்றி உண்மையைத் தேடுகின்றார்கள். இது எப்படி என்றால் எதிர் காலத்தில் வாழப்போகின்ற மனிதன் இன்று வாழ்கின்ற நம்மைப் போல் இருப்பான் என்று நமக்கு நாமே கற்பித்து கொள்கின்றோம். அப்படி இல்லை என்றால் ஏன் 25 வருடங்களுக்கு முன்னால் போய் உண்மையைத் தேடுகின்றார்கள்? இவர்கள் எல்லாம் சமுதாயம் மாறினால் மனிதன் மாறுவான் என்ற விடயத்தை மறுத்து விடுகின்றார்கள். அன்றும் இன்றும் உள்ள மாறுதல்களை ஒப்புக்கொள்ளாமை என்பது இயக்க மறுப்பு கண்ணோட்டத்தைதான் காட்டுகின்றது.
இந்த சிந்தனைமுறையினால்தான் ஒவ்வொரு விடயத்திலும் ஒற்றை நிலையை பார்க்க விரும்புகின்றோம். அதாவது அது அது அப்படியே இருப்பதாக பார்க்கவிரும்புவதால், இன்றைய
மாற்றத்தையும், புதிய தளத்தையும் உணர மறுக்கின்றோம். ஒற்றை நிலையிலேயே பார்த்துப் பழக்கப்பட்டபடியால், ஒவ்வொன்றையும் மற்றவைகளிலிருந்து பிரித்து விடுகின்றோம். இது ஒரு பழைய புலி, பழைய புளொட் என்று இயல்பாக சொல்லிவிடுகின்றோம். இப்படி சொல்வதில் உள்ளார்ந்தமாக என்ன தொனிக்கின்றது என்றால் நாம் ஒற்றை நிலையை வலியுறித்திக் காட்டுகின்றோம் என்பது தான். அதே நேரத்தில் இப்பேச்சுக்கு உள்ளார்ந்தமாக நாம் இன்னொன்றையும் சொல்லிவிடுகின்றோம். அதாவது இவை இல்லை என்றால் இன்னொன்றாக இருக்கின்றது என்ற கூற்று தொனிக்கின்றது.
இப்படியே எல்லாத்தையும் பிரித்து வைத்துக் காட்டிக்கொண்டுபோகின்றோம். அப்படியே போய் ஒவ்வொன்றுக்கும் இன, குண வேற்றுமைகளை குறிப்பிட்டு ஒவ்வொரு விடயத்தையும் மற்றவைகளில் இருந்து கறாராக பிரித்து விடுகின்றோம். இது தான் எங்களை பொதுத்தளத்திற்கு கொண்டுபோக முடியாமல் தடுக்கின்றது . இந்த சிந்தனை முறை தான் எங்களை ஒரு குறிப்பிட்ட கோணத்தில் இருந்து எம்மை பார்க்கும்படி செய்துவிடுகின்றது. இவ்வாறு பிரித்து ஒன்றுக்கு ஒன்று சம்பந்தமில்லாதபடி கடுமையாக பார்ப்பது இயக்க மறுப்பு சிந்தனையால் வரும் விளைவுகளில் ஒன்று. இதுதான் கடந்த காலங்களில் நடந்தது. அது அரசியல் பிரிவு, இது இராணுவப்பிரிவு, நீங்கள் பணத்தை மட்டும் தாருங்கள், மிகுதியை தலைவர் பார்ப்பார் என்ற கூற்றுக்கள்.
இதனால்தான் மற்றவைகளில் இருந்து நாம் இனம் பிரிக்க முற்படுகின்றோம். விலத்தி தனித்தனியே ஒவ்வொன்றையும் பார்க்கின்றோம். மேலும் எதை எதை பரிசீலித்து புரிந்து கொள்ள விரும்புகின்றோமோ, அதை அதை அப்படியே தனியாக பிரித்தெடுத்து பகுத்தறிய முற்படுகின்றோம்.
அதாவது ஒரு அரசை, ஒரு மக்கள் இயக்கத்தை எப்படிப் பார்க்கின்றோம் என்றால் சமுதாயத்தில் இருந்து தனிமைப்படுத்தி பார்க்கின்றோம். சமுதாய அமைப்பாக நில்லாத சுயேச்சைபொருளாக பார்க்கின்றோம். இப்படி யதார்த்தத்தில் இருந்து தனிமைப்படுத்திக்கொண்டு தர்க்கம் புரிவதின் அர்த்தம், அரசு அல்லது இந்த மக்கள் இயக்கத்திற்கு உள்ள தொடர்பை வெட்டிவிட்டு தனியே அரசை அல்லது இயக்கத்தை பார்ப்பதாகும். ஏன் தனிமனிதர் விடயத்திலும் இப்படியே தான் தவறு செய்கின்றார்கள். மற்ற மனிதர்களிலிருந்தும், சூழ்நிலைகளிலிருந்தும், சமுதாயத்தில் இருந்தும், தனிமைப்படுத்தி தனிமனிதனை பற்றி பேசுவதிலும் இதே தவறைத்தான் செய்கின்றோம் . இதுதான் இயக்கமறுப்பு சிந்தனையின் இரண்டாம் குணாம்சமாகும். இப்படியே பொருட்களையும் விடயங்களையும் இயங்கா நிலையில், மாறா நிலையில் பார்க்கும் பார்வையை விரும்பிக்கொண்ட பிறகு நாங்கள் அவற்றை தனித்தனியே இனம் பிரித்து
வேறுவேறாக பட்டியல் போட்டு வைத்துள்ளோம். இதன் மூலம் அவற்றினிடையே பிரிவுகளை ஏற்படுத்தி உள்ளோம். அவற்றிக்கு இடையே உள்ள தொடர்பை நாங்கள் மறுக்கும்படி இந்த பிரிவினைகள் செய்துவிட்டன. இந்த மாதிரி பார்த்து முடிவு செய்யும் பழக்கம் எம்மை இந்த பிரிவினைகள் எல்லாம் நிரந்தரமானவை, எதனுடனும் எந்தவித சம்மந்தமோ, தொடர்போ கொண்டவையல்ல, அவற்றை கடந்து போகமுடியாது என்று நம்பும் நிலைக்கு எம்மை கொண்டுவந்துள்ளது . அது அது தான், அதுக்கும் மற்றவற்றுக்கும் இடையே தொடர்பு ஏற்படுத்தி வைக்கும் பொதுவான அம்சங்கள் உண்டா என்ற பேச்சுக்கே இடம்மில்லை. இது தான் இயக்க மறுப்பு சிந்தனையின் மூன்றாவது குணாம்சம் ஆகும் .
இது எப்படி என்றால் தியாகி தியாகிதான், துரோகி துரோகிதான் என்று சொல்லும்போது தியாகிக்கும், துரோகிக்கும் இடையே பொதுவான அம்சங்கள் எதுவும் இல்லை என்று அடித்துக் கூறுகின்றோம். துரோகியை தனியாகப் பார்க்கின்றோம், தியாகியை தனியாகப் பார்க்கின்றோம். இரண்டுக்கும் இடையே உள்ள தொடர்பை பார்க்காமலே இருந்துவிடுகின்றோம். ஒவ்வொன்றையும் வேறுவேறாக பிரித்து எடுத்து பார்க்கப்போய் ஒன்றுக்கு எதிராக மற்றொன்றை நிறுத்தும் நிலைக்கு நாங்கள் வந்துள்ளோம். இதுதான் இயக்க மறுப்பு சிந்தனையின் நான்காவது குணாம்சம் ஆகும்.
அதாவது ஒன்றிலிருந்து ஒன்று வேறுபட்டு இருப்பவை எல்லாம் ஒன்றுக்கு ஒன்று எதிர்மறையானவை என்று கருதுவதாகும். இது எப்படி என்றால் தியாகியாக இருக்கவேண்டும் அல்லது துரோகியாக இருக்கவேண்டும். இரண்டும் இல்லாத மூன்றாவது நிலை சாத்தியமேயில்லை.நாங்களே வரையறுத்த இரண்டில் ஒன்றை கட்டாயமாக தேர்ந்து எடுத்தாக வேண்டும். இதுவுமின்றி அதுவுமின்றி மூன்றாவது நிலை இருப்பது என்பது ஒரு முரண்பாடு. அப்படி கருதுவது சாத்தியம் இல்லை என்று நாங்கள் நினைகின்றோம். இதே போல்தான் சனநாயகம், சர்வாதிகாரம் இரண்டில் ஒன்றைத்தான் சமுதாயம் தேர்ந்து எடுத்தாகவேண்டும். இரண்டில் ஒன்றை தேர்ந்து எடுக்காவிட்டால் நாங்கள் மாட்டிக்கொள்வோம்
என்று நினைக்கின்றோம். ஆனால் நடைமுறை இரண்டும் இல்லாததுதான் என்பதை பார்ப்பதில்லை.
எங்கள் இயக்க மறுப்பு சிந்தனையின் தாக்கத்தில் இருந்து வெளியே வருவோமாயின், எல்லோரும் ஒரு பொதுத்தளத்திக்கு வந்து எம்முன்னே உள்ள எம்மக்களின் பிரச்சனைகளுக்கு வழி காணலாம்.
முதலில் விடயங்களை அசையா நிலையில், அது அது அப்படியே இருப்பதாக பார்க்கின்றோம். பிறகு ஒரு விடயத்தை மற்றவற்றில் இருந்து பிரித்து எடுத்து, அவற்றை அவற்றிற்கிடையேயுள்ள பரஸ்பர தொடர்புகளில் இருந்து அவிழ்த்து தனியே எடுத்து பார்க்கின்றோம். பின் ஒன்றில் இருந்து மற்றொன்றை நிரந்தரமாக பிரித்து வைத்து ஒவ்வொன்றுக்கும் இடையே தாண்டமுடியாத சுவரை எழுப்பி விடுகின்றோம் . பின் எதிர்மறையான இரண்டு விடயங்கள் சம காலத்தில் இருக்கமுடியாது என்று அடித்து பேசி அவற்றை ஒன்றுக்கு எதிராக ஒன்றை நிறுத்தி வைக்கின்றோம் . இந்த சிந்தனை நடைமுறை மாறவேண்டும். அப்போதுதான் எம்மக்களின் முன்னேயுள்ள பிரச்சனைகளை சரியாக பார்க்கமுடியும் .
ஏற்கணவே மூள குழம்பிக் கிடக்கும் எம்மை மனோகரனும் ஏனோ குழப்புகிறார்.எல்லாரும் ஏதோ திட்டத்தோடுதான் அலைகிறார்கள் போலிருக்கிறது.
இப்போ இன்னா சார் சொல்ல வரிங்க? சாதாரணமா எயுதவே மாட்டிங்களா?