தொடர்ச்சியாக சமூக வலைத்தளங்களிலும் யுடியூப் தளத்திலும் இந்துத்துவ கருத்துக்களை பரப்பி வந்த யுடியூபர் மாரிதாஸ் தமிழ்நாடு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
முப்படை தளபதி பிபின் ராவத் மரணத்துடன் திமுக அரசை தொடர்புபடுத்தி அவர் வெளியிட்ட ட்விட் சர்ச்சைகளை உருவாக்கிய நிலையில் காவல்துறையினர் மதுரையில் உள்ள அவரது வீட்டிற்குச் சென்று முறையாக சம்மன் கொடுத்து விசாரணைக்கு அழைத்தனர். ஆனால் அவர் சம்மனை பெற்றுக் கொள்ள மறுத்து விட்டார்.
தமிழ்நாடு காஷ்மீராக மாறிவருகிறது என்று அவர் ட்விட்டரில் தெரிவித்த கருத்து தொடர்பாகவே அவர் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டுள்ள அவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்.
’
இந்நிலையில் நாம் தமிழர் கட்சி யுடீயூபர் சாட்டை துரைமுருகன் இரு முறை ஆபாசமாகப் பேசி சிறை சென்றார். முதல் வழக்கில் கைதான சாட்டை துரைமுருகன் மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்து ஜாமீன் பெற்றார்.பின்னர் இரண்டாம் முறையும் அப்படிப் பேசி சிறை சென்றார். பின்னர் அதிலும் மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்து சில நாட்களுக்கு முன்னர் வெளியில் வந்தார்.இந்த வழக்கில் தமிழ்நாடு அரசுத் தரப்பு சாட்டை துரைமுருகனின் ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்ய அந்த மனுவை விசாரித்த நீதிபதி புகழேந்தி, “முதல்வர் தன் சக்தியையும் மீறி உழைக்கிறார். அவரை பாராட்டா விட்டாலும் மைக் கிடைக்கிறது என்பதற்காக எதையாவது பேச வேண்டாம். சாட்டை துரைமுருகன் ஜாமீன் நிபந்தனைகளை மீறி ஒரு வார்த்தை பேசியிருந்தாலும் அவரது ஜாமீன் ரத்து செய்யப்படும்” என்றார்கள். அவர் என்ன பேசினார் என்பதை எழுத்து பூர்வமாக சமர்ப்பிக்கும் படி உத்தரவிட்டுள்ளார்கள்.
இந்த வழக்கில் சாட்டை துரைமுருகனுக்கு வழங்கப்பட்ட இரண்டு ஜாமீன்களும் ரத்து செய்யப்படும் என தெரிகிறது.