மாணவர்கள் மீதான தாக்குதலுக்குக் கண்டனம் : சி.கா. செந்திவேல்

sentilvelகடந்த 29ஆம் திகதி கொழும்பில் உயர் தேசிய டிப்ளோமா கற்கை நெறி மாணவர்கள் நடத்திய ஊர்வலத்தின் மீது பொலிஸார் வழிமறித்துத் தாக்கிய கொடூரச் சம்பவம் நல்லாட்சியின் உண்மை முகத்தைப் படம் பிடித்துக் காட்டியுள்ளது. யார் பதவிக்கு வந்தாலும் நல்லாட்சி எனப் பெயரிட்டாலும் பொலிஸ் தாக்குதல்களும் அடக்கு முறைகளும் தொடரும் என்பதையே மாணவர் மீதான மேற்படி தாக்குதல் எடுத்துக் காட்டியுள்ளது. எனவே மாணவர்கள் மீதான இவ் அராஜகத் தாக்குதலை எமது புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி மிக வன்மையாகக் கண்டிக்கிறது. அதே வேளை மாணவர்களின் கோரிக்கைகள் நியாயமானவையும் வழங்கப்பட வேண்டியவையும் என்பதை வற்புறுத்துகிறது.

இவ்வாறு புதிய ஜனநாயக மாகிசிச லெனினிசக் கட்சியின் அரசியற் குழு சார்பாக அதன் பொதுச் செயலாளர் சி. கா. செந்திவேல் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மேலும் அவ் அறிக்கையில், உயர் தேசிய டிப்ளோமா கற்கை நெறி மாணவர்கள் நீண்ட நாட்களாகத் தமது கோரிக்கைகளை முன்னைய அரசாங்க காலத்திலிருந்து முன்வைத்து பல போராட்டங்களையும் நடத்தி வந்துள்ளனர். ஆனால் அன்றைய ஆட்சியும் அதன் கல்வி அமைச்சரும் மாணவர்களின் கோரிக்கைகளை தொடர்ந்தும் உதாசீனம் செய்தே வந்துள்ளனர்;. ஆனால் நல்லாட்சி எனக் கூறி நிற்கும் இன்றைய ஆட்சியிலும் முன்னைய ஆட்சியின் அமைச்சர்கள் அங்கம் பெற்று உள்ளனர். இச் சூழலிலேயே மாணவர்கள் தமது கோரிக்கைகளை முன்னெடுத்துச் சென்ற போது அவர்கள் மீதான கொடூரத் தாக்குதல்கள் பொலிஸ் தரப்பால் மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது. ஆயிரத்திற்கு மேற்பட்ட மாணவர்கள் ஊர்வலமாகச் சென்று தமது கோரிக்கைகளை பல்கலைக் கழக மானியங்கள் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கவே முற்பட்டனர். ஆனால் மாணவர்கள் பொலிஸாரால் வழி மறிக்கப்பட்டு கண்ணீர்ப் புகைக் குண்டுகள் வீசியும,; நீர்த் தாரைப் பிரயோகம் செய்தும,; குண்டாந் தடிகள் கொண்டும் தாக்கப்பட்டுள்ளனர். இதனால் 40 இற்கும் மேற்பட்ட மாணவர்கள் காயமடைந்தும் உள்ளனர். அத்துடன் 39 மாணவர்கள் கைது செய்யப்பட்டு பிணையில் விடப்பட்டுள்ளனர். இத்தகைய பொலிஸ் தாக்குதல்களை எமது கட்சி மக்கள் சார்பாக நின்று வன்மையாகக் கண்டிக்கிறது. அதேவேளை மைத்திரி – ரணில் ஆட்சியானது நல்லிணக்க நல்லாட்சி நோக்கி பயணிக்கிறதா அல்லது முன்னைய ஆட்சியின் பொலிஸ் அராஜகப் பாதையில் செல்லப் போகிறதா? என்ற கேள்வியை இம் மாணவர்கள் மீதான தாக்குதல் எழுப்பி நிற்கிறது.

சி.கா. செந்திவேல்

One thought on “மாணவர்கள் மீதான தாக்குதலுக்குக் கண்டனம் : சி.கா. செந்திவேல்”

  1. நல்லவேளை வள்ளுவர், வள்ளலார் எல்லோரும் இன்றில்லை. இருந்திரந்தால் மதுவிலக்கினை ஆதரித்து எழுதியதாக அம்மாவின் ஏவல்படையால் சிறையிலடைக்கப்பட்டிருப்பார்கள்.

Comments are closed.