தோழர் இளஞ்செழியன் இந்நாட்டிற்காகவும் அடக்கியொடுக்கப்பட்ட மக்களுக்காகவும் தன் வாழ்நாளை அர்பணித்தவர். ஒரு நசுக்கப்பட்ட சமூகத்திலிருந்து தோன்றுகின்ற இவ்வாறான ஆளுமைகள் இரு வழிகளில் தமது செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளதை வரலாறு எமக்கு புதிய படிப்பினையாக தந்துள்ளது. ஒன்று தம்மைதாமே சுத்திகரித்துக் கொள்ளல், இரண்டு தமது சமூக வளர்ச்சிக்கு தடையாகவுள்ள எதிரிகள் மீதும் அதன் தளங்கள் மீதானதுமான தாக்குதல்கள். இளஞ்செழியனது நோக்கும் போக்கும் அது சார்ந்த முன்னெடுப்புகளும் இந்தப் பின்னணியிலே பிறக்கின்றன என்பது புலனாகுகும். குறிப்பாக மலையக மக்களின் வாழ்வுக்கான மார்க்கம், அது தொடர்பில் எழுப்ப வேண்டிய அறைக்கூவல்- அத்தகைய செயற்பாடுகள் உழைக்கும் மக்களின் நலனை பழுதுபடுத்தாமல் முன்னெடுத்து செல்கின்றதா என்றவகையில் அவர் பொறுத்தும் அவர் சார்ந்த இயக்கங்கள் பொறுத்தும் ஆய்வுகள் வெளிவரவேண்டியுள்ளது. அத்தகைய ஆய்வுகள் புதிய உலகை நிர்மாணிக்கும் அழகும் யௌவனமும் நிறைந்ததோர் நாகரிகத்தை கட்டியெழுப்ப முனைவதாக அமைய வேண்டும். அதேசமயம், இவ்வகையான ஆய்வுகளுக்கு கணிசமான அளவு சான்றாதாரங்கள் இலகுவில் கிடைக்க கூடியனவாய் இல்லை. இளஞ்செழியன் வெளியிட்ட அறிக்கைகள் தோழர்களுக்கு எழுதிய கடிதங்கள் இன்னும் இது போன்ற ஆவணங்கள் தொகுக்கப்படவில்லை. எனவே இருப்பவற்றை வைத்துக் கொண்டே நாம் இவற்றை செய்ய வேண்டியுள்ளது. இந்தப் பின்புலத்தில் மலையக தேசியத்திற்கு இளஞ்செழியனின் பங்களிப்புக் பற்றி நோக்க வேண்டியுள்ளது சம கால தேவையாகும்.
இளஞ்செழியன் இந்தியாவிலே பிறந்தவர். அவர் தமது 12 இரண்டாவது வயதில் இலங்கைக்கு வந்ததாக அவரும் அவருடன் தொடர்புக் கொண்டிருந்த மூத்த தோழர்கள் சிலருடன் கலந்துரையாடியதிலிருந்து அறிய முடிகின்றது. இளஞ்செழியன் பெரியார் ஈ.வே ராமசாமி நாயக்கரின் சிந்தனையால் கவரப்பட்டவர். அவரது சமூக பண்பாட்டு கருத்தியல் தளத்தை உருவாக்குவதில் பெரியாரிய சிந்தனைக்கு முக்கிய இடமுண்டு. பெரியார் தமிழ் நாட்டில் மிக நீண்ட காலம் வாழ்ந்து பண்பாட்டுத்தளத்தில் மிக முக்கியமான தாக்கத்தை ஏற்படுத்திய தலைவர்களில் ஒருவராவர். காலத்திற்கு காலம் அவரது சிந்தனைகளிலும் செயற்பாடுகளிலும் முரண்பாடுகள் தோன்றிய போதினும் தனக்கான தனிப்பாதையை வகுத்துக் கொண்டு பிராமணிய ஆதிக்கத்தை தகர்க்கும் வகையிலான பண்பாட்டு போராட்டத்தை முன்வைத்தவர். இந்தியாவில் இந்துத்துவம் முனைப்புற்றிருந்த சூழலில் பெரியாரால் கட்டியெழுப்பபட்ட சுயமரியாதை இயக்கமே அத்தகைய தீவிரவாதத்தின் தாக்கம் தமிழகத்தல் செல்வாக்கு பெற முடியாமல் போனமைக்கான அடிப்படையாகும். அந்தவகையில் பெரியாரது பிராமண எதிர்ப்பு மத எதிர்ப்பு தவிர்க்க முடியாத வரலாற்றுத் தேவையாகும். அவரது சாதியத்திற்கு எதிரான போராட்டத்திலிருந்து பெற வேண்டிய விடுதலைக் கூறுகள் உண்டு. அதேசமயம் மேலாதிக்கம் ஏகாதிபத்தியம் பேரினவாதம் ஆகியவற்றுக்கு எதிரான போராட்டத்தில் பார்பனியத்திற்கு எதிராக முனைப்புறும் முரண்பாட்டின் கூறுகள் கவனத்தில் எடுக்கத்தக்கனவாய் உள்ள அதே சமயம், வரலாற்று பொருள் முதல்வாத நோக்கில்லாத பெரியாரின் பாரப்;பன எதிர்ப்பையும் நாத்திக வாதத்தையும் சாதிய விடுதலைப் போராட்டத்திலிருந்து பிரித்துப் பார்கின்ற நிலையும் காணப்படுகின்றது. இந்திய தேசிய விடுதலைப் போராட்டத்தில் பிராமணர்களின் பங்களிப்பை பிரித்தெடுத்து எல்லாத் தவறுகளுக்கும் பிராமணர்களே காரணம் என குறுகிய தலித்திய பார்வைகள் தோன்றுவதற்கும் பெரியாரியம் காரணமாக இருந்துள்ளது என்பதும் இவ்விடத்தில் கவனத்தில் கொள்ளத்தக்கது.
இளஞ்செழியன் பெரியாரிய உலக நோக்கை வரித்தபடியே தமது சமூக செயற்பாடுகளக்கு தளம் அமைத்துக் கொண்டவர்;. பெரியாரிரின் சுயமரியாதை இயக்கத்தின் தாக்கம் இலங்கையிலும் செல்வாக்கு செலுத்தியது. அதன் விளைவாக 1932 ஆண்டு கொழும்பில் தோற்றுவிக்கப்பட்ட இயக்கமே இலங்கை சுயமரியாதை இயக்கமாகும்(இ.சு.இ). திரு. ந. முத்துப்பரியரை தலைவாராக கொண்டு தோற்றுவிக்கப்பட்ட இவ்வியக்கத்தில் இளஞ்செழியன்; முக்கிய உறுப்பினர்களில் ஒருவராக இருந்தவர். கடை சிப்பந்திகள், வீட்டு வேலையாட்கள், நகர சுத்திகரிப்பு தொழிலாளர்கள், சலவை, சிகையலங்கார தொழிலாளர்கள் என இன்னும் இது போன்ற தொழில்களில் ஈடுப்படுபவர்கள் இவ்வியக்கத்தில் அங்கம் வகித்தனர். இவர்களின் கூட்டம் பொதுவாக இரவு 10 மணிக்கு பின்னர் தான் நடைப்பெற்றிருப்பதை அறிய முடிகின்றது. 1932இல் பெரியாரின் இலங்கை வருகையின் போது அவருடனான சந்திப்பு கூட்டமும் இரவு 10 மணிக்கே தொடங்கியுள்ளது. இவ்வியக்கத்தில் அங்கம் வகித்த பெரும்பாலானோர்கள் தொழிலாளர்கள் என்ற அடிப்படையில் அவர்களுக்கான ஓய்வு நேரம் அதாகவே இருந்துள்ளது என்பதை இளஞ்செழியன் தமது ‘ ஈழத்தில் பெரியார் முதல் அண்ணாவரை’ என்ற நூலில் குறிப்பிடு;கின்றார். இக்காலச் சூழலில் இ.சு.இ பெரியாரின் சுயமரியாதை இயக்கத்தின் நேரடி தாக்கத்தினாலேயே செயற்பட்டது. அக்காலக்கட்டத்தில் இவ்வியக்கத்தினர் முன் வைத்த நாத்திகவாதம், சாதி எதிர்ப்பு, பெண்ணடிமைக்கு எதிரான குரல், மூடநம்பிக்கைகளுக்கு எதிரான கோபாவேசம் என்பன பெரியாரின் சுயமரியாதை இயக்கத்தின் நேரடி விளைவுகளே. இளஞ்செழியனின் சமூக நோக்கும் பங்களிப்பும் இப்பின்னணியிலே வேர் கொண்டிருந்தது.
இத்தகைய பின்னணியில் தமது சமூக பண்பாட்டுச் செயற்பாடுகளுக்கு வியூகம் அமைத்துக் கொண்ட இளஞ்செழியனுடைய பார்வை மலையகத்தை நோக்கி நகர்கின்றது. சுயமரியாதை திருமணம் ஒன்றிற்காகவே அவர் மலையகத்திற்கு (கடுகண்ணாவில் உள்ள கிரிமெட்டியா தோட்டத்திற்கு) வந்திருக்கின்றார். அத்துடன், இலங்கை திராவிட முன்னேற்றக் கழகம் (இ.தி.ம.க) என்ற ஒரு அமைப்பையும் உருவாக்குகின்றார். இக்காலச் சூழலில் இ.தி.மு.க. தின் நோக்கும் போக்கும் இலங்கையை தழுவியதாக மாறுகின்றது. இது தொடர்பில் இளஞ்செழியன் வெளியிட்ட துண்டுப் பிசுரத்தில் பின்வரும் பந்தி அவதானத்திற்குரியது.
‘இலங்கை திராவிட முன்னேற்றக் கழகம்;, இலங்கை மக்களுடையது என்பதே அதன் லட்சியமும் வாழ்வும் ஆகும் என்பதை புரிந்துக் கொண்டு ஒரே இன மக்கள் என்ற திராரவிட இனத்தவர்களுக்கான தன்னால் ஆன மட்டும் ஒத்துழைப்பு கொடுப்பவர்களாக இருக்க வேண்டுமே தவிர, பாரத நாட்டு காந்தியார், நேருஜி போன்ற தலைவர்களின் பெயர்களை கூறி நாம் இந்தியர்கள் நமது தலைவர்கள் காந்தி நேரு என காங்கிரஸ் பக்கம் மலைநாட்டு மக்களை இழுத்து மக்கள் மீது இந்நாட்டுப் பற்றும், இந்நாட்டு நம்பிக்கையை கொள்ளாத வண்ணம் பல லட்சம் மக்களது வாழ்விலே மண்ணைத் தூவி அவர்களை நாடற்றவர், நாதியற்றவர், என்ற நிலைக்கு ஆளாக்கியுள்ளனர். மலைநாட்டு மக்களே! அஞ்ஞாதீர்! அஞ்ஞாதீர்! உங்களது பிரஜா உரிமை இதோ பாரோர் புகழும் பாரதப் பிரதமர் நேருவிடமிருந்து வருகிறது தபாலில் என்ற நம்பிக்கையை ஊட்டி… இன்னுமொரு பிரிவினர் சென்னையை காட்டி அங்கிருந்துதான் உங்கள் விடுதலை நிச்சயமாக வரும் என்ற ஆகாத ஊட்டி ‘…வருகின்றனர் (முத்துலிங்கம். பெ. மேற்கோள், இலங்கையில் தி. மு. க. வரலாறு, ப.40).
என இ.தி.மு.க சார்பில் தோழர் இளஞ்செழியன் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடுகின்றார். பெரும்பாண்மையாக உழைக்கு மக்களை தளமாக கொண்டிருக்கின்ற மலையக வாழ்நிலை இ.தி.ம.க. த்தினதும் இளஞ்செழியனதும் சமூக செயற்பாடுகளுக்குமான பரந்து விரிந்த தளத்தை வழங்குகின்றது.
இதே காலப்பகுதியில் இளஞ்செழியனின் சிந்தனையில் இன்னொரு பாரிய மாற்றமும் நிகழ்கின்றது. மலையகத்தில் ஏற்கனவே செல்வாக்கு பெற்றிருந்த சமஜமாச கட்சியினரின் தொடர்பு ஏற்படுகின்றது. குறிப்பாக ட்ரொக்ஸிய தத்துவார்த்ததில் இளஞ்செழியனும் நாட்டங்கொள்கின்றார். உலகளவில்; இடது சாரி இயக்கங்கள் தோன்றி வளர்ச்சியடைதிருந்த காலத்தியெல்லாம் தொழிலாள வர்க்கத்தின் ஓற்றுமைக்கும் வளர்ச்சிக்கும் குந்தகம் விளைவிப்பதாகவே ட்ரொக்ஸியவாதம் இருந்து வந்துள்ளது. பேச்சில் அதிதீவிர வாதத்தையும் நடைமுறையில் பாராளுமன்ற சரணாகதிiயையுமே பிரதானமாக கொண்டு செயற்பட்டிருக்கின்றது என்பதை இதுவரைக்கால வரலாறு எடுத்துக் காட்டுகின்றது. இலங்கை இதற்கு அந்நியப்பட்டதொன்றல்ல. இந்த பண்பை நாம் இலங்கையில் ட்ரொக்ஸிவாதத்தை அடிப்படையாக கொண்டு இயங்கிய ஸ்தாபனங்களிலும்; காணலாம்.
இதே காலச் சூழலில் மலையகத்தில் திரு. சண்முகதாசன் தலைமையிலான இடதுசாரி இயக்கமும் தொழிற்சங்கம் சார்ந்த செயற்பாடுகளை முன்னெடுத்துக் கொண்டிருந்தது. இளஞ்செழியன் தமது ட்ரொட்க்ஸிய தத்துவார்த்த நிலைப்hட்டின்; காரணமாக மா ஓ நிலைப்பாட்டினை ஏற்றிருந்த அணியினருடன் ஐக்கிய படத்தவறியிருந்தார். அதேபோன்று இவ்விடதுசாரி இயக்கங்களும் இளஞ்செழியனின் முக்கியத்துவத்தை உணரத்தவறியிருந்தன. மலையகத்தில தொழிற்சங்க அரசியலை இடதுசாரி முனைப்புடன் முன்னெடுத்த ந. சண்முகதாசன் சிங்கள மக்களின் மனம் நோகக் கூடாது என்ற வகையில் தமிழர்கள் தேசிய இனமல்ல என்ற முடிவுக்கு வருகின்றார். இந்நிலைப்பாட்டினையே அவர் மலையக மக்கள் தொடர்பிலும் முன் வைத்தார். அதே போன்று மொழியுரிமை மலையக மக்களின் வாக்குரிமை தொடர்பில் கூடிய கவனமெடுத்த இளஞ்செழியன் மலையக மக்களின் வர்க்க ஒடுக்குமுறைக் குறித்து அதிக கவனமெடுத்திருப்பதாக கூற முடியாது. இந்நிலையில் இவ்விரு அரசியல் போக்குகளையும் மலையக யதார்த்தத்துடன் ஒப்பு நோக்குகின்ற போது, இவ்விரு போக்குகளுமே மலையக சமூகமாற்றத்திற்கான போராட்டத்தில் ஒவ்வொரு பகுதிகளை நிறைவு செய்வதாக அமைந்திருந்தன. இந்த பின்னணியிலே இளஞ்செழியனின் மலையக தேசியம் குறித்த அவரது சமூக நோக்கும் செயற்பாடுகளும் மலையக சமூகத்திற்கு எத்தகைய தாக்கங்களை கொண்டு வந்து சேர்த்தன என்பது பற்றி நோக்குதல் அவசியமானதாகும்.
இலங்கை அரசியலில் காலத்திற்கு காலம் முக்கிய அம்சமாக திகழ்ந்து வந்த விடயம் தேசிய இனப்பிரச்சனையே. தேசிய உணர்வு என்பது ஒரு மக்கள் கூட்டத்தினரின் தன்னடையாளங்களில் ஒன்றாக செயற்படுகின்றது. இன, மத, மொழி சாதி, கலாசார வேறுப்பாடுகளால் அது நிலைநிறுத்தப்படுகின்ற போது அவ்வம்சங்கள் புறக்கணிக்க தக்கதொன்றல்ல. மனித சிந்தனைகள் மனித நாகரிகம் வளர்ச்சி அடைகின்ற போது அது இயல்பான ஒன்றாக காணப்படுகின்றது. அதே சமயம் அவ்வுணர்வுகள் தம்மை- தன் இனத்தை முதன்மைப்படுத்திக் கொண்ட அதே சமயம் இன்னொருவர்- இன்னொரு இனத்தின் மீது மேலாதிக்கம் செலுத்த முனைகின்ற போது அது பகை முரண்பாடாக மாறுகின்றது. இந்நிலையில் தேசியம் என்பது; ஓடுக்கப்படுகின்ற தேசியமாகவும் ஒடுக்கும் தேசியமாகவும் வளர்சியடைகின்றன. தேசியத்தின் இந்த குணாதிசியத்தை அடிப்படையாக கொண்டே முற்போக்கு தேசியம், பிற்போக்கு தேசியம் என வரையறை செய்வர்.
மலையக மக்களின்; இனத்தனித்துவத்தை சிதைப்பதற்பாக காலத்திற்கு காலம் பல பேரினவாத நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. 1937 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட கிராமிய குழுக்கள் சட்டம் இம் மக்கள் கிராமிய குழுக்களுக்கான தேர்தலில் வாக்களிக்கும் உரிமை மறுக்கப்பட்டது. இன்றுவரை கிராமிய சபை முறைகளின் பயன்களை மலையக பெருந்தோட்ட தொழிலாளர்கள் அனுபவிக்க முடியாது இருப்பதற்கு இச்சட்டம் காரணமாக அமைந்துள்ளது(எஸ். விஜயசந்திரன்,இரா. ரமேஷ்2013). 1948 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட குடியுரிமை பறிப்பு சட்டம், இம்மக்களை அரசியல் அநாதைகளாக்கியதுடன் அவர்களை இந்நாட்டின் மூன்றாவது தேசிய இனம் என்ற நிலைக்கு தள்ளியது. 1964 ஆண்டு கொண்டு வரப்பட்ட ஸ்ரீமா- சாஸ்திரி ஒப்பந்தம் இன்னும் போன்ற சட்டங்கள் சாட்சியாக அமைந்திருக்கின்றன. அத்துடன் காலத்திற்கு காலம் இம்மக்கள் மீதாக கட்டழித்து விடப்பட்ட காட்டு மிராண்டி தனமான இனவண்முறைகள், திட்டமிடப்பட்ட குடியேற்றவாதங்கள் இவையாவும் இம்மக்களின் இருப்பை சிதைப்பதற்கான பேரினவாத முயற்சிகளாகவே அமைந்திருந்தன. மக்கள் விடுதலை முன்னணி(ஜே. வி .பி) முதலான இனவாத கட்சிகளும் மலையகத்தை இந்திய விஸதரிப்பு வாதத்தின் ஒரு பகுதியாகவே நோக்கின. இவர்களது ஐந்து வகுப்புகளில் ஒன்று இந்திய விஸ்தரிப்புவாதமாகும். ஒருவகையில் இம்மக்கள் மீதா பேரினவாத அடக்குமுறைகளே மலையக மக்களிடையே தாம் தனித்துவவமான தேசிய இனம் என்ற உணர்வை ஏற்;படுத்தியிருந்தது.
சிங்கள வலதுசாரிகள் தான் மலையக மக்களுக்கு எதிராக இத்தகைய பேரிவாத செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றார்கள் என்றால் சிங்கள தமிழ் இடதுசாரிகளின் நிலைப்பாடு எத்தகையதாக இருந்தது என்பது முக்கியமாதோர் வினாவாகும். சுதந்திரத்திற்கு பின்னராக வடக்கிழக்கில் தோன்றிய தமிழ் தேசியம் ஏகாதிபத்தியத்திற்கு காட்டிக் கொடுக்கும் மனப்பாங்கோடு வளந்த போது அதற்கு எதிரான போராட்டத்தை முன்னெடுப்பதில் தமிழ் இடதுசாரிகள் கவனமெடுத்திருந்தனர். அதன் பின்னணியில் தமிழர் மத்தியில் பண்ணையடிமைத்தனமாக காணப்பட்ட சாதியத்திற்கு எதிராக போராடி வெற்றி கண்டனர். இந்தப் பின்னணியில், முளையிட்டு மேற்கிளம்பிய சிங்கள பேரிவாதத்திற்கு எதிராகபோராடத்தவறி விட்டனர். சிங்கள இடதுசாரிகள் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போர்குணத்தை கொண்டிருந்த அதேசமயம், பேரினவாதத்திற்கு எதிராக போராட்டத்தில் போதிய கவனமெடுக்க தவறியிருந்தனர். குறுந் தமிழ் தேசியத்தின் ஏகாதிபத்திய சார்பை அதாரமாகக் கொண்டு தமிழ் மக்களின் தேசியம் சுயநிர்ணய உரிமை ஆகியவற்றுக்கான நியாயமான கோரிக்கைகளையும் அத்தகைய நிலைபாட்டிலிருந்தே நோக்கினர். இதே கண்ணோட்டத்தை மலையக மக்கள் தொடர்பிலும் அவர்கள் கொண்டிருந்தனர். மலையக மக்களை இந்திய விஸ்தரிப்புவாத்துடன் ஒரு பகுதியாக கருதியமையமை இதற்கான காரணமாக இருக்கலாம்.
இவ்வாறானதோர் சூழலில் இளஞ்செழியன் பெரியாரிய கோட்பாடுகளை மாறி வருகின்ற மலையக சூழலுக்கு ஏற்றவகையில் பிரயோகித்து வெற்றி கண்டவர். தமது பண்பாட்டுச் செயற்பாடுகளை முன்னெடுத்து செல்கின்ற போது பல அரசியல் தொழிற்சங்க அமைப்புகளை சார்ந்தவர்களை வெகுசனமாக அணித்திரட்டியிருந்தார். அவ்வாறு வெகுசனங்களை அணித்திரட்டுகின்ற போது பெரும்பாண்மையான தொழிலாளர்களே அணித்திரண்டுயிருந்தாரகள். பல இடங்களில் அரசியல் வகுப்புகளையும் எழுச்சி கூட்டங்களையும் மநாடுகளையும் ஒழுங்கமைத்து தொழிலாளர்களை விழிப்படைய செய்தார் அதன் விளைவாக தொழிலாளர்கள் விழிப்புணர்வு பெற்றதுடன் தாம் சார்ந்த இயக்கங்களிலும் கேள்விகளை எழுப்பியுள்ளனர். இத்தகைய ஒரு மரபு இளஞ்செழியனால் தோற்றுவிக்கப்பட்டிருந்ததை நான் சிறுவனாக இருக்கும் காலத்திலே அறிவேன். ஒரு காலக்கட்ட ஆர்பரிப்பில் இளஞ்செழியனின் அரசியல் தளமாக (கோட்டை என்றுக் கூட கூறலாம்) ஹட்டன் காசல்றி தோட்டத்தில் திரு. ஜீ. ஆறுமுகம் என்பவர் தொழிலாளர் தேசிய சங்கத்தில் அங்கம் வகித்தவர். அவ்வாறே வே. மணிபாலன் இலங்கை தொழிலாளர் காங்கிரஸில் அங்கம் வகித்தவர். திரு. ந. இராஜசிங்கம் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியில் அங்கத்தவர். இவர்கள் பொதுவாக உரையாற்றுகின்ற போதோ அல்லது தொழிற்சங்க கூட்டங்களில் உரையாற்றுகின்ற போதோ தங்களை இளஞ்செழியனின் அரசியல் மாணவர்கள் எனக் கூறிக் கொள்வார்கள். அதே போன்று அப்பிரதேசத்தில் வாழ்ந்த பலர் தி.மு.வினதும் இளஞ்செழியனதும் தீவீர ஆதரவாளர்களாக இருந்து வந்துள்ளதை அவதானித்திருக்கின்றேன். இந்த போக்கு முழு மலையகம் சார்ந்து வெளிப்பட்டதாக கூற முடியாது. இளஞ்செழியனை அறியாமலே மலையகத்தில் பெரியார் அண்ணாதரை ஆகியோரின் திரைப்படங்கள் மற்று தி.மு.க பத்திரிகைகளின் மூலம் கருத்துக்கள் பரவியுள்ளமையும் கவனத்தில் கொள்ளத்தக்கது.
இளஞ்செழியனின் கருத்துக்கள் எப்போதும்; மலையக மக்களின் பிரச்சனைகளை மலையக மக்களின் தேசியத்துடன், அம்மக்களின்; குடியுரிமைப் பிரச்சணைகளுடன்; இணைத்தே பார்த்துள்ளார். இந்த பின்னணியில் வெகுசனங்களை அணித் திரட்டிய இளஞ்செழியன் மொழியுரிமை, வாக்குரிமை, சாதிய எதிப்பு, பெண்ணடிமை எதிர்ப்பு ஆகிய விடயங்களை முன்னிறுத்தியே தமது செயற்பாடுகளை முன்னெடுத்து சென்றுள்ளார். மலையககத்தை பொருத்த மட்டில் அவர் அதிகமாக கவனமெடுத்ததொரு அம்சம் தான் மலையகம் மக்களின் இருப்பு தொடர்பான பிரச்சனையாகும்.
இலங்கை அரசியல் வரலாற்றில் பேரினவாத்தை சரியாக அரசியல் தளத்தில் அடையாளம் கண்டு அதற்கு எதிரான போராட்டத்தை முன்னெடுத்தவர்கள் நடேசய்யர் மீனாட்சியம்மாள் தம்பதிகளாவார். சேர். பொன். அருணாசலம், அரசியல் அரங்கிலே பேரினவாதத்தை அடையாளம் கண்டிருந்து போதினும் அதனை இயக்கவடிவத்தில் முன்னெடுப்பதற்கு முன் அவர் இறந்து விடுகின்றார். பின் வந்த தலைவர்கள் அதனை கவனத்திலெடுக்கவில்லை. அவர்களின் வர்க்க நலன்களும் அதனடியாக கிடைக்க கூடிய சலுகைகளும் அதற்கு இடம் தரவில்லை என்பது வேறுவிடயம். நடேசய்யர் மீனாட்சியம்மாள் தம்பதிகளின் தொடர்சியாக பண்பாட்டுத் தளத்தில் இளஞ்செழியனின் செயற்பாடுகள்;;: மலையக மக்களின் இனவொடுக்குமுறைகளுக்கு எதிரான போராட்டங்கள் சமூக முக்கியத்துவம் வாய்ந்தவையாகும். மலையகத்தில் பேரினவாதத்திற்கு எதிராக அவர் முன்னெடுத்த பேராட்டங்களே மலையக தேசியத்திற்கான போராட்டங்களாக அமைந்திருந்தன. இந்த பின்னணியில் தான் அவர் பேரிவாதத்திற்கு எதிரான விழிப்புக் கொண்டிருந்த தமிழரசுக் கட்சியினருடன் இணைந்து செயற்பட்டார். ஆனால் தமிழரசுக் கட்சி பிற்போக்கு வாதிகளின் கூடாரமாக மாறிய போது இளஞ்செழியன் அதனை எதிர்க்கவும் தவறவில்லை. இவ்விடத்தில் பேரினவாதத்திற்கு எதிராகவும் மலையக தேசியம் தொடர்பிலும் இளஞ்செழியன் முன்னெடுத்த செயற்பாடுகள் இரண்டை சுட்டிக் காட்டுவது அவசியமானதாகும் (லெனின் மதிவானம்,2012).
இவ்வகையில் 1963 ஆம் ஆண்டு பண்டாரவளையில் நடாத்தப்பட்ட நாடற்றவர் மறுப்பு மகாநாடு முக்கியமானது. இம்மாநாட்டின் போது திரு. கே.எம்.பி ராஜரட்ணா தலைமையில் இயங்கிய ஜாதிக விமுத்தி பெரமுன(தேசிய விடுதலை முன்னணி)இயக்கத்தை சார்ந்த பேரினவாதிகள் கூட்டத்தைக் கலைக்கவும் பங்குபற்றியவர்களை தாக்கவும் செய்தனர். இவ்வாறான சந்தர்ப்பங்களில் இடதுசாரிகள் இ.தி.மு.க ஆதரவாக செயற்பட்டுளள அத்தாக்குதல்களிலிருந்து இ.தி,ம.க அங்கத்தவர்களை காப்பாற்றியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவ்வகையான செயற்பாடுகளினால் ஆத்திரமடைந்த பேரினவாதிகளும் ஆளும் வர்க்கமும்; இ.தி.மு.க. த்தை சட்ட ரீதியாக தடைசெய்ய முற்பட்டனர். இளஞ்செழியனை இனவாதியாகவும் இந்திய விஸ்தரிப்புவாத்தின் பிரதநிதியாகவும் காட்ட முற்பட்டனர். இவ்வாதங்கள் பாராளுமன்றத்தில் நடைப்பெற்றுக் கொண்டிருந்த வேளையில் தமிழ் அரசியல்வாதிகள் பல மௌன விரதம் அணுஸ்டிக்க, சிங்கள இடதுசாரி தலைவர்கள் பலர் எதிர்த்து குரல் கொடுத்துள்ளனர். இந்நிகழ்வே இளஞ்செழியன் ஒரு இனவாதியல்ல என்பதற்கு தக்க எடுத்துக்காட்டாகும். இளஞ்செழியனை இந்திய விஸ்தரிப்புவாத்துடன் இணைத்து பார்ப்பதற்கு அவர் அங்கம் வகித்த அமைப்பான இ.தி.மு.க. என்ற பெயரும் ஒரு காரணமாக அமைந்திருக்கலாம். தடை நீக்கிய பின்னர் புதிய ஜனநாயக முன்னணி என்ற அமைப்பை தோற்றுவித்து செயற்படத் தொடங்கினார் என்பதும் கவனத்தில் கொள்ளத்தக்கது.
அவ்வாறே இலங்கையின் மூலவளத்தை கொள்ளையடித்து அதனை இந்தியாவிலே பதுக்குகின்ற- இந்நாட்டில்; வாழ்கின்ற இந்திய முதலாளிகளுக்கு எதிரான இனவாத பார்வை மலையக மக்களுக்கு எதிராகவே திருப்பட்ட்டிருந்தன. இதற்கு முக்கியமான காரணம் இலங்கை வாழ் இந்திய முதலாளிகள் தமக்கான எதிர்ப்புக்கு ஆதரவு தேடி மலையக மக்களை அணித்திரட்டும் முயற்சியில் ஈடுப்பட்டிருந்தனர். இனனொருபுறத்தில் மலையக மக்களின்; சமூக இருப்பை சிதைக்க் வேண்டிய தேவை பேரினவாதிகளுக்கு இருந்தது. இந்தப் பின்னணியில் மக்கள் விடுதலை முன்னணியின் விஸ்தரிப்புவாதம் குறித்தும், அதனை ஆட்சேபித்தும் மேலும் இது தொடர்பில் விஜயவீரா போன்றோருக்கு தெளிவுப்படுத்துவதற்குமான கூட்டமொன்று(1970களின் இறுதிப்பகுதியில்) நோர்வூட்டில் ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது. இக்கூட்டத்தை இளம் சோஷலிச முன்னணியின் சார்பில் திருவாளர்கள் கருப்பையா, பி.எம். லிங்கம், இரா ஜெயராமன், ஜெகதீஸ்வரன், முதலானோர் ஒழுங்கமைத்திருந்தனர். திரு. சி. மாசிலாமணி கூட்டத்திற்கு தலைமை தாங்கினார். தோழர் இளஞ்செழியன் இக் கூட்டத்தில் சிறப்புரையாற்றியுள்ளார். இக்கூட்டத்தில் உரையாற்றிய திரு. திரு ரோஹன விஜயவீர இந்திய விஸ்தரிப்பு வாதம் குறித்து பேச மறுத்து விட்ட அதே சமயம், அவ்விடயம் பற்றி தமது கட்சியுடன் தனிப்பட்ட பேச்சுவார்த்தையின் போது நிகழ்த்தலாம் எனக் கூறி அவ்விடத்தலிருந்து தப்பிக் கொண்டமையையும் இளஞ்செழியன் தமது நூலில் பதிவு செய்திருக்கின்றார். இந்திய விஸதரிப்புவாதம் தவறானது என்பதை திரு. ரோஹகண விஜயவீரவுக்கு சுட்டிக்காட்டியதிலும் அதனை மக்கள் மத்தியில் அம்பலபடுத்தியதிலும்; இளம்செழியனுக்கும் இளம் சோஷலிச முன்னணிக்கும் முக்கிய பங்குண்டு. இக்கூட்டத்தின் பின் இவ்வியக்கத்தினர் பொலிஸாரின் தேடுதலுக்குட்பட்டுள்ளனர். இளஞ்செழியன், இரா. ஜெயராமன் முதலானோர் தலைமறைவாகியிருந்த சந்தர்ப்பத்தில்; கருப்பையா, ஜெகதீஸ்வரன், பி.எம். லிங்கம் முதலானோர்கள் பொலிசாரின் விசாரனைக்கும் சித்திரவதைக்கும் உள்ளானார்கள் என்பதும் முக்கியமாக குறிப்பிடத்தக்கது.
இவ்விடத்தில் முக்கியமாக கவனத்தில் கொள்ளவேண்டிய விடயம் யாதெனில் இளஞ்; செழியன் பெரியாரினதும் ட்ரொக்ஸிய தத்தவார்த்தத்தின் தாக்கத்திற்கும் உட்பட்டிருந்தாலும் அத்ததுவங்களினூடாக பெற்ற தமிழ் தேசியம் பகுத்தறிவு வாதம் ஆகியவற்றின்;; குறுகிய எல்லைகளை கடந்து அவற்றை பிரயோகிப்பதில் வெற்றிப்பெற்றுள்ளார் என்றே கூறத் தோன்றுகின்றது. பண்பாட்டுத் தளத்தில் அவர் முன்னெடுத்த எத்தனிப்புகள், அரசியல் தளத்தில் நின்றுக் கொண்டு சமூக மாற்ற செயற்பாடுகளை முன்னெடுப்பதாக அமைந்திருக்கவில்லை. மாறாக பண்பாட்டுத் தளத்தில் தமது இயக்கம் சார்ந்த செயற்பாடுகளின் ஊடாக சமூகமாற்றத்தை கொண்டு வர முயற்சிப்பதாகவே அமைந்துள்ளது. அவரது செயற்பாடுகள் யாவும் மக்களை யொட்டியதாக பிரவாகம் கொண்டிருக்கின்றது.
இவ்வகையான புரிதலுடன் ஒரு வெகுசன அமைப்பை கட்டியெழுப்பட வேண்டிய சூழ்நிலையில், இ. தி. மு. க. பற்றி சி. சிவசேகரம் இவ்வாறு குறிப்பிடுகின்றார்:
‘தமது சமூகத்தின் பின்தங்கிய நிலை, பரவலான மூடநம்பிக்கைகள், மக்களது அறியாமையைப் பயன்படுத்தி அவர்களைச் சுரண்டும் இ.தொ.கா. தொழிசங்க தலைமை போன்றவற்றைக் கண்டு மனம் வெதும்பியவர்களுக்கு திராவிட இயக்கத்தின் மீது கவர்ச்சி ஏற்பட்டது அந்தச் சூழலில் இயல்பு என்றாலும், தமிழகத்தில் பகுத்தறிவு சுயமரியாதை இயக்கங்களது வளர்ச்சிக்கு வசதியாக இருந்த பிராமண விரோத உணர்வு, இந்தி எதிர்ப்பு போன்றவை இலங்கையில் இருக்கவில்லை. எனவே பகுத்தறிவு சுயமர்யாதைச் சிந்தனைகளில் கவர்ச்சி ஒரு சமுதாய இயக்கமாக வளர மடியாது போனது. என்றாலும் புதிய சமுதாயத்துக்கான தேவையும் மனித சமத்துவம் என்ற இலட்சியத்தையும் சாதி மதங்களின் பேரால் மக்கள் ஏமாற்றப்படுவதை நிறுத்தப்படுவதையும் ஏற்றுச் செயற்படக் கூடிய சக்திகளின் முக்கியமான தோற்றுவாயிகளில் பகுத்தறிவு சுயமரியாதை சிந்தனையும் ஒன்று.’ (அறிவாஞ்சலி ,2000, தம்பு இளையதம்பி நினைவுக்குழு, கொழும்பு, ப. 15)
இதுவரை பார்த்த விடயங்களை கொண்டே மேற் குறித்த கருத்து தவறானது என்பதை காட்ட போதுமானவை என நம்புகின்றேன். தமது முன்னூகங்களுக்கு மாறாக ஆதாரங்கள் தென்படும் போது அதனை எதிர்கொள்வதற்கு நிரம்ப துணிச்சலும் நேர்மையும் தேவை. அத்தகைய பண்புகள் இல்லாத போதே மேற்குறித்த புலம்பல்கள் வெளிப்படுகின்றன.
மலையக மக்களின் நல்வாழ்வுக்கான போராட்டத்தை மலையகத்தில்- பண்பாட்டுத்தளத்தில் முன்னெடுத்த இ.தி.மு.க வரலாறு பற்றிய பதிவுகளும் மதீப்பீடுகளும் வெளி வந்த போதினும் அவை போதியதாக இல்லை. அவ்வவ் காலக்கட்டங்களில் வெளிவருகின்ற எழுத்துகளும் பதிவுகளுமே அறிவுஜீகளின் கவனத்தைப்பெற்றுள்ளன. அதற்கப்பால் இவ்வகையான அறியப்படாத ஆளுமைகள் பற்றிய களத் தேடல் மிக மிக குறைவாகவே கவனத்தை பெற்றுள்ளன. திரு. பெ. முத்துலிங்கம் எழுதிய இ. தி. மு. வரலாறு, என்ற நூலும் இளஞ்செழியன் எழுதிய ஈழத்தில் பெரியார் முதல் அண்ணாவரை என்ற நூலை தவிர ஏனைய நம்பகரமான பதிவுகள், மதிப்பீடுகள்; வெளிவந்ததாக தெரியவில்லை. பொது மக்கள் மத்தியில் செயற்பட்ட இவ்வாளுமைகள் குறித்த அப்பொது மக்களின் பார்வை கண்ணோட்டங்கள் என்ன என்பதுவும் அவசியமானது. பெரும்பாலும் அப்பொது மக்கள் தொழிலாளர்களாகவே காணப்பட்டனர். அம்மக்களுக்கு மக்களுக்கு எழுத்தறிவு இல்லாதிருந்திருந்தது இன்னொரு துரதிஸ்டவசமான நிகழ்வாகும். இளஞ்செழியனின் குறித்த ஆய்வுகளிலும் இந்நிலையை காணலாம். இருப்பினும் மலையகத்தின் இருப்பு தொடர்பில் தன்னலமற்ற- காத்திரமான பங்களிப்பை நல்கிய இவ்வகையான ஆளுமைகள் பற்றிய தேடலும், ஆய்வும் சமூமாற்றத்திற்திற்காக செயற்படுகின்ற சக்திகளால் வெளிக் கொணரப்பட வேண்டியது காலத்தின் தேவையாகும்.
இக்கட்டுரை விவாத நோக்கில் பதிவிடப்படுகிறது
Honourable Indika Gunawardene once said it right. There are Sri Lankan Tamils, Hill Country Tamils and Class Needs. So nice that this forum accomodates them too.