மர்ம மனிதனின் நடமாட்டம் பற்றி மக்கள் மத்தியில் பேசப்படுவது கட்டுக்கதைகளோ வெறும் இட்டுக்கட்டுதல்களோ அல்ல. அல்லது சிலர் கூறுவது போன்று மக்களின் மனப் பிராந்தியோ, மாயையோ அல்ல. கடும் கறுப்பு நிறம் கொண்ட உருவ அமைப்பும் கோரமான முகமூடியும் கொண்ட தோற்றத்துடனேயே இம் மர்ம மனிதன் இரவு வேளைகளில் வீடுகளுக்குள் இறங்கிக் கொள்கிறான். குறிப்பாகப் பெண்கள் மீது தாக்கியும் பயப்பீதி கொள்ள வைப்பதிலும் இம் மர்ம மனிதன் அட்டகாசம் செய்து வருவதைப் பல்வேறு பகுதிகளிலும் மக்கள் நேரடியாகக் கண்டுள்ளனர். அது பற்றி அச்சம் பீதியுடன் விபரிக்கின்றனர். அதேவேளை இம் மர்மமனிதனைப் பிடிப்பதற்காகத் துரத்திச் செல்லும் மக்களை ராணுவத்தினர் அவ்வப் பகுதிகளில் தாக்கியும், வீடுகளைச் சேதப்படுத்தியுள்ளதையும் மக்கள் நேரடியாக எமக்குக் காட்டி மர்மமனிதனைப் பார்த்த கதைகளையும் எடுத்துரைத்தனர். அத்துடன் இம் மர்ம மனிதனை ராணுவத்தினர் பாதுகாத்து வருவதைத் தாம் நேரடியாககக் கண்டதாகவும் மக்கள் கூறுகின்றனர்.
இத்தகைய மர்ம மனிதனின் அட்டகாசங்கள் நிகழ்ந்த குடாநாட்டின் வலிகாமம், வலிமேற்கு, வலிவடக்கு, வலிகிழக்கு, வடமராட்சி ஆகிய பிரதேசங்களின் பல கிராமங்களுக்கு எமது கட்சியின் வடபிராந்தியக் குழு உறுப்பினர்களும் நானும் நேரடியாகச் சென்று மக்களிடம் கேட்டறிந்த போது அவர்கள் தாம் நேரில் கண்ட மர்ம மனிதன் பற்றிய விபரங்களை எடுத்துரைத்தனர.; நாங்கள் இரவு எட்டுமணியளவில் வலிகிழக்கின் ஒரு கிராமத்தின் சனசமூக நிலைய முன்றலில் மக்களுடன் உரையாடிக் கொண்டிருநந்த போது பக்கத்துக் கிராமத்தில் மக்கள் பெரும் கூச்சலிட்டு அவலக்குரல் எழுப்பியதைக் கேட்க முடிந்தது.
அவ்விடத்திற்குச் சென்று விசாரித்த போது மர்ம மனிதன் வீட்டுக்குப் பின்னால் வந்ததைக் கண்டதாகக் கூறினர். மக்கள் ஒன்று சேர்ந்து கலைத்துச் செல்ல அவன் ஓடி மறைந்தாகவும் கூறினர். அங்கு பெண்கள், சிறுவர்கள், மாணவர்கள் முதியவர்கள் மிகுந்த அச்சத்தில் பீதியில் இருந்ததைக் காணமுடிந்தது. இவ்வாறு தான் பெரும்பாலன பகுதிகளில் பதற்ற நிலை காணப்படுகிறது.
இத்தகைய சூழலில் இம் மர்ம மனிதன் நடமாட்ட அச்சத்தினால் மக்கள் இரவு முழுவதும் நித்திரை இன்றி குடும்பங்கள் ஒரே இடத்தில் குழுமி விழித்திருக்க வேண்டிய துயர நிலையை எடுத்து விளக்கினர். இதனால் தொழில்களுக்குச் செல்ல வேண்டியவர்களும் மாணவர்களும் கடும் பாதிப்பைப் பெற்று வருகிறார்கள். பெண்கள் தத்தம் தொழில்களுக்கு பகல் வேளைகளில் கூடச் செல்வதற்கு அஞ்சும் நிலையே காணப்படுகின்றது. வன்னி இழப்புக்கள் அவலங்களுக்குப் பின்பு இப்படி ஒரு நிம்மதியற்று அச்சம் பீதியில் மக்கள் வாழ்ந்து வரும் நிலையை அவர்கள் கடும் துயரத்ததுடன் எடுத்துக் கூறினர்.
இவ்வாறு தாங்கள் மக்களிடம் நேரடியாகக் கேட்டறிந்தவற்றை ஊடகங்களுக்கு எடுத்துக் கூறும் போது புதிய – ஜனநாயக மாக்சிச-லெனினிசக் கட்சியின் பொதுச் செயலாளர் சி.கா. செந்திவேல் கூறினார்.
அவர் மேலும் கூறுகையில் இம் மர்ம மனித நடமாட்ட அச்சுறுத்தலால் பாதிக்கப்பட்ட கிராமங்களையும் மக்களையும் பார்க்கும் போது முற்றிலும் உழைப்பாளி மக்களான அன்றாடம் தொழில் புரியும் தொழிலாளர்கள், விவசாயிகள், மீனவர்கள் என்போராக இருப்பதை அவாதானிக்க முடிந்தது.
பொருளாதார, ரீதியிலும் சமூக ரீதியிலும் பின்தங்கிய மக்கள் வாழ்ந்து வரும் கிராமங்களிலேயே மர்;ம மனிதனின் நடமாட்டமும் அச்சறுத்தலும் ராணுவத்தின் தாக்குதல்களும் அதிகம் இடம் பெற்றிருப்பது அவதானிக்கக் கூடியதாக இருந்தது. இது ஏன் என்பது மக்களுக்குப் புரியாத புதிராகவே இருந்து வருகிறது.
எவ்வாறயினும் மலையகத்தில் தொடங்கி கிழக்கு மாகாணத்தின் ஊடாக இப்போது வடக்கில் குறிப்பாக குடாநாட்டில் உச்சமாகத் தலை விரித்தாடிவரும் மர்ம மனிதன் அச்சுறுத்தலுக்குப் பின்னால் பேரினவாத ஆளும் வர்க்க அரசியல் நிகழ்ச்சி நிரல் ஒன்று இருந்து வருகிறது. என்பதில் ஐயம் இல்லை. தமிழ், முஸ்லீம், மலையகத் தமிழ் மக்களை அச்சுறுத்தி அடக்கி வைத்திருக்கும் பேரினவாத ஒடுக்கு முறையின் ஒரு வடிவமாகவே இம் மர்ம மனிதன் அச்சுறுத்தல் நிகழ்த்தப்பட்டு வருகிறது என்ற முடிவிற்கே வரவேண்டும். அதன் உச்ச நிலையே இப்போது குடாநாட்டின் கிராமங்களில் பரவலாக இடம் பெற்றுவருகிறன.
எனவே இம் மர்ம மனிதன் நடமாட்டத்திற்கும் அச்சுறுத்தலுக்கும் எதிராக மக்கள் ஒன்று திரண்டு தங்களையும் தமது கிராமங்களையும் பாதுகாத்து வரும் தற்காப்பு நடவடிக்கை முற்றிலும் நியாயமானதேயாகும். அத்துடன் இம் மர்ம மனிதன் நடமாட்டத்தை முற்றாக நிறுத்தக் கோரி தமிழ்க் கட்சிகள் சிவில் அமைப்புக்கள், மதத்தலைவர்கள் ஏற்பாடு செய்து வரும் ஒரு நாள் உண்ணாவிரத நடவடிக்கையை எமது புதிய – ஜனநாயக மாக்சிச –லெனினிசக் கட்சி பூரணமாக ஆதரிக்கின்றது. அதில் பங்கு கொள்ள முன்வந்துள்ளது என்பதையும் செந்திவேல் தனது ஊடகக் கருத்துரையில் தெரிவித்தார்.