பிரெஞ்சு தேசிய முன்னணியின் (FN) பாசிச அரசியலை சட்டபூர்வமாக அங்கீகரிக்கும் சர்வதேச பிரச்சாரம், அக்கட்சியின் தலைவர் மரீன் லு பென்னால் சார்லி ஹெப்டோ துப்பாக்கிச்சூடு மீது எழுதப்பட்ட ஒரு தலையங்க கட்டுரை நியூ யோர்க் டைம்ஸில் பிரசுரிக்கப்பட்டதுடன், திங்களன்று ஒரு புதிய கட்டத்தை எட்டியது.
அமெரிக்க தாராளவாதத்தின் சிதைந்துபோன தூணாக விளங்கும் டைம்ஸ், லு பென்னுக்கு அதன் பக்கங்களைத் திறந்துவிட்டதன் மூலம், அமெரிக்க ஆளும் வர்க்கத்தின் சக்தி வாய்ந்த பிரிவுகள் அப்பெண்மணியின் கருத்துக்களைப் பொது விவாதத்தின் ஒரு முக்கிய பாகமாக கருதுகின்றன என்பதை எடுத்துக்காட்டி உள்ளது. அக்கட்டுரை பிரான்சிலேயுமே சாத்தியமான அளவுக்கு அதன் பரந்த வாசிப்பைப் பெற வேண்டுமென்பதை உறுதிப்படுத்துவதற்காக, டைம்ஸ் இதழ் ஒரேநேரத்தில் பிரெஞ்சு மொழிபெயர்ப்பையும் உள்ளடக்கி கூடுதல் அடியை எடுத்து வைத்தது.
மத்திய கிழக்கில் ஏகாதிபத்திய நடவடிக்கைளுக்கு எதிராக பலமாக வேரோடிய எதிர்ப்பையும் மற்றும் உள்நாட்டில் பின்தங்கிய சமூக நிலைமையையும் எதிர்கொள்வதற்கு, ஆளும் மேற்தட்டுக்களால் முஸ்லீம்-எதிர்ப்பு இனவாத துருப்புச்சீட்டைப் பிரயோகிக்கும் ஒரு பரந்த முயற்சியின் பாகமாக லு பென் மேலுயர்த்தப்பட்டு வருகிறார். சார்லி ஹெப்டோவின் முஸ்லீம்-எதிர்ப்பு கேலிச்சித்திரங்கள் ஜனநாயகத்தின் அடையாளங்களாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள நிலையில், இப்போதோ லு பென் அதன் இரட்சகராக சித்தரிக்கப்படுகிறார்.
டைம்ஸில் (“இந்த அச்சுறுத்தலை அதன் பெயரில் அழைப்பதற்கு” என்ற தலைப்பின் கீழ்) லு பென்னின் பேரினவாத வாதங்கள், பெரிதும் அமெரிக்காவின் “பயங்கரவாதத்திற்கு எதிரான போர்” என்பதன் அரசியல் களஞ்சியத்திலிருந்து பெறப்படுகின்றன. “மனித உரிமைகள் மற்றும் சுதந்திரத்தின் பூமியான” பிரான்ஸ் “ஒரு கொடுங்கோன்மை சித்தாந்தத்தால், அதாவது இஸ்லாமிய அடிப்படைவாதத்தால், அதன் சொந்த மண்ணில் தாக்கப்பட்டது” என்று அவர் எழுதுகிறார்.
பின்னர் அவர் “புலம்பெயர்வைத் தடுக்கும் ஒரு கொள்கையை”, குடியுரிமை பெற்ற மக்களை வெளியேற்றும் புதிய கொள்கைகளை, மற்றும் பிரெஞ்சு பாரம்பரியங்களுக்கு “வேறுபட்ட வாழ்க்கை முறைகளுக்கு மற்றும் வகுப்புவாதத்திற்கு” எதிராக சண்டையிடுவதைப் பரிந்துரைத்து, பிரான்சின் வலுவான ஐந்து-மில்லியன் முஸ்லீம் மக்கள் மீது அரசியல் போர் தொடுப்பதற்காக சுதந்திரம் மற்றும் மனித உரிமைகளை முற்றிலுமாக ஒதுக்கித் தள்ளுகிறார்.
லு பென்னுக்கு ஒரு அரசியல் அடித்தளம் வழங்குகின்ற அதேவேளையில், அவரது அரசியல் பாரம்பரியத்தை அதன் வாசகர்களுக்குத் தெரிவிக்க வேண்டியதைக் குறித்து டைம்ஸ் சிறிதும் அக்கறை கொள்ளவில்லை. இரண்டாம் உலக போர் நாஜி ஒத்துழைப்பாளர் விச்சி ஆட்சியின் முன்னாள் ஆதரவாளர்களால் மற்றும் அல்ஜீரியாவில் பிரெஞ்சு காலனித்துவ ஆட்சியின் பாதுகாவலர்களால் தேசிய முன்னணி (FN) 1972இல் உருவாக்கப்பட்டது. அதன் முஸ்லீம்-விரோத மற்றும் யூத-விரோத இனவாதத்திற்காக, அதன் தீவிர தேசியவாதத்திற்காக, மற்றும் அரசியல் எதிர்ப்பாளர்கள் மீது அதன் குண்டர் தாக்குதல்களுக்காக அது இழிபெயர் பெற்றுள்ளது.
லு பென்னின் கட்டுரையைப் பிரசுரிப்பதென்ற அவர்களது முடிவை நியாயப்படுத்துவதில் டைம்ஸ் பதிப்பாசிரியர்கள், ஒருவர் விரும்புகிறாரோ இல்லையோ, லு பென்னை புறக்கணிக்க முடியாது என்று வாதிடக்கூடும். அவருக்கு ஒரு களத்தை வழங்கி இருப்பதன் மூலமாக, அவர் தன்னைத்தானே வெளிப்படுத்துவதற்கு அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருப்பதாக அனேகமாக டைம்ஸூம் மற்றும் அதன் அனுதாபிகளும் வாதிடுவார்கள்.
இது அர்த்தமற்றது. சார்லி ஹெப்டோ தாக்குதல்களுக்குப் பின்னர் உடனடியாக எலிசே மாளிகைக்கு லு பென்னை அழைத்ததன் மூலமாக பிரெஞ்சு ஜனாதிபதி பிரான்சுவா ஹோலாண்ட் அப்பெண்மணியின் மற்றும் FNஇன் அந்தஸ்தை உயர்த்தியதைப் போலவே, டைம்ஸால் லு பென் திட்டமிட்டு சட்டபூர்வமாக அங்கீகரிக்கப்பட்டு வருகிறார்.
லு பென்னை மேலுயர்த்துவதென்பது சர்வதேச அளவில் பாசிசத்தை மற்றும் அதிதீவிர வலதுசாரி அமைப்புகளைப் பரந்த விதத்தில் மேலுயர்த்துவதன் பாகமாகும். கடந்த ஆண்டு, அமெரிக்காவும் ஜேர்மனியும் விக்டொர் யானுகோவிச்சின் ரஷ்ய-சார்பு அரசாங்கத்தைத் தூக்கியெறிய, இரண்டாம் உலக போரின் போது உக்ரேனில் நாஜி ஒத்துழைப்பாளர்களால் கொண்டாடப்பட்ட அமைப்புகளான Right Sector மற்றும் ஸ்வோபோடா ஆகியவற்றுடன் கூடி வேலை செய்தன, அந்நடவடிக்கை ஜனநாயகத்திற்கான ஒரு இயக்கமாக அரசியல் ஸ்தாபகம் முழுவதும் சித்தரிக்கப்பட்டது.
ஜேர்மனியில், இரண்டாம் உலக போருக்குப் பின்னர் ஜேர்மன் இராணுவவாதத்தின் மீது கொண்டு வரப்பட்ட அனைத்து கட்டுப்பாடுகளையும் நீக்குவதற்கு ஆளும் வர்க்கம் நகர்ந்துள்ள நிலையில், அது அதன் கடந்தகால குற்றங்களைக் குறைத்துக் காட்டவும் நியாயப்படுத்தவும் வேலை செய்து வருகிறது. பேர்லின் ஹம்போல்டு பல்கலைக்கழகத்தின் ஒரு முன்னணி வரலாற்றாளர் ஜோர்ஜ் பார்பெரோவ்ஸ்கி, ஹிட்லரின் நடவடிக்கைகளை ஸ்ராலின் மற்றும் சோவியத் தலைமையில் இருந்தவர்களினது நடவடிக்கைகளுடன் சாதகமானரீதியில் ஒப்பிட்டு, “ஹிட்லர் குரூரமானவர் இல்லை” என்று சமீபத்தில் வாதிட்டார்.
ஒரு சமீபத்திய உரையில், சான்சிலர் அங்கேலா மேர்க்கெல் கிறிஸ்துவர்கள் “அவர்களது அடையாளத்தைப் பலப்படுத்த” வேண்டியதன் மற்றும் “அவர்களது கிறித்துவ மதிப்புகள் குறித்து இன்னும் அதிக சுய-நம்பிக்கையோடு பேச” வேண்டியதன் அவசியத்தைக் குறிப்பிட்டார்—இது ஜேர்மனியில் வலதுசாரி பெஹிடா இயக்கத்தின் இனவாத கிளர்ச்சியைத் தாங்கிப் பிடிப்பதும் மற்றும் சட்டபூர்வமாக்குவதையும் கணக்கிட்டு முஸ்லீம்-விரோத உணர்வை ஊக்கப்படுத்துவதாகும்.
பெருநிறுவன-நிதியியல் பிரபுத்துவத்தின் வளர்ந்துவரும் அடுக்குகளைப் பொறுத்த வரையில், நவ-பாசிசவாதிகளின் குரல்களுக்கு செவி சாய்க்க வேண்டும் என்பதாக உள்ளது. அவரது டைம்ஸ் கட்டுரை வெளியான அதேநேரத்தில், லு பென் வோல் ஸ்ட்ரீட் ஜேர்னலுடன் ஒரு பிரகாசமான நேர்காணலில் தோன்றினார். ஆளும் வர்க்கத்தின் கணக்கீடுகளைச் சுட்டிக்காட்டும் வகையில், ஜேர்னல் இவ்வாறு வாதிட்டது: “மரணப்படுக்கையில் கிடக்கும் பொருளாதாரம் மற்றும் ஒருங்கிணைத்துக் கொள்ளவியலாத அதன் முஸ்லீம் மக்கள் ஆகியவற்றுடன் பிரான்சின் பிரச்சினைகள், மிகவும் கூர்மையாகி உள்ளது, அத்துடன் மரபார்ந்த அரசியல் வர்க்கத்தால் சரி செய்யவியலாத அளவுக்கு கடந்துவிட்டதாக தெரிகின்ற நிலையில், அரசியல் அரங்கிற்குள் வந்துவிட்ட மதிப்பார்ந்த லு பென் செல்வாக்குப் பெற்று வருகிறார்.”
நீடித்த பொருளாதார நெருக்கடி நிலைமைகளின் கீழ், பிரான்சிலும் மற்றும் சர்வதேச அளவிலும் அரசியல் ஸ்தாபகம் ஆழமாக மதிப்பிழந்துள்ளது என்ற உண்மையைத் தான் இங்கே ஜேர்னல் குறிப்பிடுகிறது. நிதியியல் மேற்தட்டு அதன் ஆட்சிக்கு ஆதரவை உருவாக்கும் ஒரு முயற்சியில், தீவிர தேசியவாத அடித்தளத்தில் குட்டி-முதலாளித்துவ அடுக்குகளை ஒன்றுதிரட்ட முனைந்து வருகிறது. அதேநேரத்தில் வலதுசாரி சக்திகளோ தங்களைத்தாங்களே ஒரு எதிர்ப்பு சக்தியாக காட்டிக் கொள்வதற்காக “இடதின்” திவால்நிலைமையைச் சுரண்டி வருகின்றன.
அபிவிருத்திகளின் தர்க்கம் முந்தைய பாதைகளை பின்தொடர்ந்து கொண்டிருக்கிறது. சமகாலத்திய அரசியல் மேலும் மேலும் 1930களின் குணாம்சத்தை ஏற்கிறது, அப்போது ஐரோப்பிய ஆளும் மேற்தட்டுக்கள் அவற்றின் ஆட்சியைப் பாதுகாக்க பாசிச கட்சிகள் மற்றும் சக்திகளை நோக்கி திரும்பியிருந்தன. இன்று லு பென் போன்றவர்களை மேலுயர்த்துவது என்பது முஸ்லீம்-விரோத இனவாதத்தை, வெளிநாடுகளில் ஏகாதிபத்திய நடவடிக்கைகளுக்கான ஒரு மைய கொள்கையாக்கவும், உள்நாட்டில் ஜனநாயக உரிமைகள் மீதான நீண்டகாலத்திற்கு நீடிக்கும் தாக்குதலுக்காகவும் பயன்படுத்தும் ஒரு பரந்த முயற்சியின் பாகமாக உள்ளது. பிரான்ஸ், அமெரிக்கா, ஜேர்மனி, பிரிட்டன் மற்றும் ஏனைய பிரதான ஏகாதிபத்திய அதிகாரங்களின் ஆளும் வர்க்கங்கள் மத்திய கிழக்கிலும் மற்றும் வட ஆபிரிக்காவிலும் புதிய போர்களைத் தொடங்க, திட்டம் தீட்டி வருகின்றன.
உள்நாட்டளவில் ஆளும் வர்க்கம் தொழிலாளர் வர்க்கத்தின் சமூக எதிர்ப்பு வளர்வதைக் குறித்து பெரிதும் கவலைக் கொண்டுள்ளது. இந்த வாரம், பில்லியனர்கள் அவர்களது ஆண்டு பொருளாதார கலந்துரையாடல் அமர்விற்காக டாவோஸில் ஒன்று கூடுகின்ற வேளையில் வெளிவந்திருக்கும் ஒரு அறிக்கை, உலகின் மக்கள்தொகையின் மிகப் பணக்கார 1 சதவீதத்தினர் அடியிலுள்ள 99 சதவீதத்தினரைவிட அதிகமாக சொத்துக்களைக் கொண்டிருப்பதாக எடுத்துக்காட்டுகிறது. மிகப் பணக்கார 80 தனிநபர்களே இந்த பூமியில் வாழும் வறிய பாதியளவு மக்களின், அதாவது சுமார் 3.5 பில்லியன் மக்களுக்கு இணையான சொத்துக்களைக் கொண்டிருக்கிறார்கள். இதுபோன்ற நிலைமைகள் நீடித்திருக்க இயலாது. பாரிய சமூக எதிர்ப்பு என்பது தவிர்க்கவியலாததாகும்.
புலம்பெயர்ந்த மக்களுக்கு எதிரான ஒரு வக்கிரமான பிரச்சாரத்துடன் சேர்ந்து, ஆளும் வர்க்கம் ஒட்டுமொத்தமாக தொழிலாளர் வர்க்கத்திற்கும் எதிராக பாசிச மற்றும் பேரினவாத இயக்கங்களைத் திருப்பிவிடுவதற்காக அவற்றை ஊக்குவித்தும், சட்டப்பூர்வமாக்கவும் செய்து வருகிறது. 1930களது அனுபவங்களின் அடிப்படை பாடம் என்னவென்றால் பாசிசத்திற்கு எதிரான போராட்டம் முதலாளித்துவ அமைப்புமுறைக்கும் மற்றும் அதன் அரசியல் பிரதிநிதிகள் அனைவருக்கும் எதிரான ஒரு போராட்டமாக நடத்தப்பட வேண்டும்.
http://www.wsws.org/tamil/articles/2015/jan/150121_thele.shtml