நாட்டின் 18ஆவது பிரதமராக மன்மோகன் சிங் இன்று மாலை பதவியேற்றுக் கொண்டார். அவர் பிரதமராகப் பதவியேற்பது தொடர்ந்து 2ஆவது முறையாகும். அவருடன் 19 கேபினட் அமைச்சர்களும் பதவி ஏற்றுக் கொண்டனர்.
குடியரசுத் தலைவர் மாளிகையில் மாலை 6.30 மணிக்கு நடைபெற்ற வண்ணமிகு நிகழ்ச்சியில் மன்மோகன் சிங்கிற்கும், கேபினட் அமைச்சர்களுக்கும் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் பதவிப் பிரமாணமும், ரகசியக்காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார்.
பிரதமர் சரியாக மாலை 6.20 மணியளவில் குடியரசுத் தலைவர் மாளிகைக்குள் நுழைந்தார். அவருடன் அவரது மனைவியும் வந்திருந்தார்.
தொடர்ந்து சரியாக 6.30 மணியளவில் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல், குடியரசுத் தலைவர் மாளிகையின் அசோகா மண்டபத்தை அடைந்ததும் பதவியேற்பு நிகழ்ச்சி தொடங்கியது.
முதலில் தேசிய கீதம் இசைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, அங்கு கூடியிருந்தவர்களுக்கு வணக்கம் தெரிவித்து விட்டு, டாக்டர் மன்மோகன் சிங் பதவியேற்க வந்தார்.
குடியரசுத் தலைவர் பிரதமருக்கு பதவிப்பிரமாணமும், ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார். பிரதமர் பதவியேற்று முடிந்தது, மரியாதை நிமித்தம் பிரதீபா பாட்டீலுக்கு வணக்கம் தெரிவித்து விட்டு, பதவியேற்பு உறுதிமொழியில் கையெழுத்திட்ட பின் மீண்டும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்டோருக்கு வணக்கம் தெரிவித்து அமர்ந்தார்.
அவரைத் தொடர்ந்து, பிரணாப் முகர்ஜி, சரத் பவார், ஏ.கே. ஆண்டனி, ப. சிதம்பரம், மம்தா பானர்ஜி, எஸ்.எம். கிருஷ்ணா, குலாம்நபி ஆசாத், சுசில் குமார் ஷிண்டே, எம். வீரப்ப மொய்லி, எஸ். ஜெய்ப்பால் ரெட்டி, கமல்நாத், வயலார் ரவி, மீரா குமார், முரளி தியோரா, கபில் சிபல், அம்பிகா சோனி, பி.கே. ஹண்டிக், ஆனந்த் சர்மா, சி.பி. ஜோஷி ஆகியோர் பதவி ஏற்றனர்.
அனைவருக்கும் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார்.
விழா நிறைவாக மீண்டும் தேசிய கீதம் ஒலிக்கப்பட்டது.
பதவியேற்பு விழாவில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி தலைவரும், காங்கிரஸ் கட்சித் தலைவருமான சோனியா காந்தி, அவரது மகனும், காங்கிரஸ் பொதுச் செயலாளருமான ராகுல் காந்தி, பிரியங்கா வதேரா, ராபர்ட் வதேரா ஆகியோர் கலந்து கொண்டனர்.
குடியரசுத் துணைத் தலைவர் ஹமீத் அன்சாரி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் எல்.கே. அத்வானி, முன்னாள் குடியரசு துணைத் தலைவர் பைரோன் சிங் ஷெகாவத், முன்னாள் பிரதமர் ஐ.கே. குஜ்ரா, முன்னாள் ரயில்வே அமைச்சரும், ராஷ்டிரிய ஜனதா தள தலைவருமான லாலு பிரசாத், லோக் ஜனசக்தித் தலைவர் ராம் விலாஸ் பாஸ்வான் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
டெல்லி துணைநிலை ஆளுநர் தேஜேந்திர கன்னா, முதல்வர் ஷீலா தீட்சித் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்றனர்.







