ஜிஎஸ்பி பிளஸ் சலுகை இலங்கைக்கு கிடைக்க கூடாது என்பதற்கான பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. அதன் ஒரு பிரிவாக ஐக்கிய நாடுகள் சாசனத்தின் 27 ஆம் பிரிவில் நாட்டில் முன்னெடுக்கப்பட்ட மனிதாபிமான நடவடிக்கைகளையும் ஐரோப்பிய ஒன்றியம் புகுத்துவதற்கு முயற்சிகளை மேற்கொள்கின்றது என்று வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு மற்றும் நலன்புரி அமைச்சரும் தேசிய பாதுகாப்பிற்கான அரசாங்கத்தின் பேச்சாளருமான கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார். பயங்கரவாதத்திற்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட மனிதாபிமான நடவடிக்கைக்கும் இதற்கும் தொடர்பு இல்லை. இவ்வாறானதொரு நிலையில் ஐரோப்பிய ஒன்றியத்தின் இந்த முயற்சிகளுக்கு அரசாங்கம் ஒருபோதும் அனுமதிக்காது. அது நாட்டின் இறைமையை பாதிக்கும் என்றும் அவர் சொன்னார்.
தேசிய பாதுகாப்பிற்கான ஊடக மத்திய நிலையத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு செய்தியாளர் கேட்ட கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கும்போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்; ஜிஎஸ்பி பிளஸ் சலுகையானது ஜனாதிபதிக்கோ அல்லது தனிநபருக்கோ உரித்தான பிரச்சினையில்லை. நாட்டிற்கு எதிரான பிரச்சினையாகும். சலுகையை வழங்குவதற்காக இதுவரையிலும் கடைப்பிடிக்கப்பட்ட முறைமைக்குள் புதிய காரணத்தையும் புகுத்துவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதற்கு இடமளிக்கமாட்டோம்.
நாட்டின் இறைமை மற்றும் ஒருமைப்பாட்டை பாதுகாக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும். ஐக்கிய நாடுகள் சாசனத்தின் 27 ஆம் பிரிவில் மனித உரிமைகள் பேணல், ஊழல் மோசடிகள் மற்றும் தொழிலாளர் பாதுகாப்பு தொடர்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும் அதற்கு புதிய அம்சங்களில் ஒன்றான இலங்கையில் முன்னெடுக்கப்பட்ட மனிதாபிமான நடவடிக்கைகளையும் முன்னெடுப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. சலுகையை வழங்குவதற்கும் யுத்தம் மற்றும் பயங்கரவாதத்தை தோற்கடிப்பதற்காக முன்னெடுக்கப்பட்ட மனிதாபிமான நடவடிக்கைக்கும் எவ்விதமான சம்பந்தமும் இல்லை. இவ்வாறான நிலையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட சாசனத்திற்குள் புதிய காரணத்தை புகுத்துவதற்கு முயற்சிக்கப்படுவதை வன்மையாக கண்டிக்கின்றோம்.