மத்திய வங்கி ஆளுநரிடம் ரூ.100 கோடி கோருகிறார் லலித் கொத்தலாவல

இலங்கையின் முன்னணி வர்த்தகரான லலித் கொத்தலாவல 100 கோடி ரூபா நஷ்டஈடு கோரி மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலுக்கு அறிவுறுத்தல் கடிதமொன்றை அனுப்பியுள்ளார். வங்கியிலிருந்தும் தனது செலிங்கோ குரூப் நிதிக் கம்பனிகளிலிருந்தும் தம்மை அகற்றும் தன்மை வாய்ந்த விதிமுறைகளை அறிமுகப்படுத்த அஜித் நிவாட் கப்ரால் முயற்சிப்பதாக குறிப்பிட்டு அதற்கு இழப்பீடாக 100 கோடி ரூபா கோரி கடிதம் அனுப்பியிருந்தார்.

அத்துடன் அனுமதிப்பத்திரம் பெற்ற வணிகவங்கிகள் மற்றும் பதிவு செய்யப்பட்ட நிதிக்கம்பனிகளுக்கான உத்தேச ஒருங்கிணைக்கப்பட்ட நிர்வாக விதிமுறைகளை அமுல்படுத்தும் நடவடிக்கைகளை முன்னெடுத்தால் அஜித் நிவாட் கப்ராலை ஆளுநர் பதவியிலிருந்து அகற்றுவதற்கான சட்ட நடவடிக்கையை அவருக்கு எதிராக மேற்கொள்ளப் போவதாகவும் கொத்தலாவல அச்சுறுத்தியுள்ளார்.

கொத்தலாவலவின் அறிவுறுத்தல் கடிதம் ஊடகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதிகார கட்டுப்பாட்டு சட்டவிதிமுறைக் கோவையானது பிரகடனப்படுத்தப்பட்டிருப்பது “விசேடமாக’ தன்னை செலான் வங்கி மற்றும் செலிங்கோ குரூப்பிலுள்ள 6 நிதிக் கம்பனிகளின் தலைவர், பணிப்பாளர் பதவியிலிருந்து அகற்றுவதற்காகவே என்றும் கொத்தலாவல குறிப்பிட்டிருக்கிறார். ஒருங்கிணைக்கப்பட்ட அதிகார கட்டுப்பாட்டு சட்டக்கோவையானது மத்திய வங்கியால் பிரேரிக்கப்பட்டுள்ளது. உத்தேச இந்த சட்டக்கோவையானது வங்கிகளினதும் நிதிக் கம்பனிகளினதும் பணிப்பாளர்கள், 70 வயதிற்கு மேற்பட்டவர்களாக இருந்தால் 9 வருடங்களுக்கு மேலாகப் பணிப்பாளராக இருந்தால் அல்லது ஏனைய 20 கம்பனிகளுக்கும் அதிகமான நிறுவனங்களுக்கும் பணிப்பாளராக இருந்தால் அவர்கள் தொடர்ந்தும் பதவியிலிருப்பதை தடை செய்வதாக அமைந்துள்ளது.

கொத்தலாவலவின் செலிங்கோ குரூப்பானது வெவ்வேறுபட்ட வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. காப்புறுதி, கடனட்டை நிறுவனம், வங்கியியல், சிறிய நிதி, நிதி, குத்தகை, வீடு, சொத்து அபிவிருத்தி, பிரயாணம், சுகாதார பராமரிப்பு, வைரம், நீலக்கல் போன்ற துறைகள் இந்த செலிங்கோ குரூப்பின் வர்த்தக நடவடிக்கைகளில் உள்ளடங்கியுள்ளன.

அத்துடன் பதிவு செய்யப்பட்ட நிதிக் கம்பனிகளான த பினான்ஸ், செலான் மேர்சன்ட் லீஸிங், பினான்ஸ் அன்ட் கரன்டி கம்பனி, ஏசியன் பினான்ஸ், மல்ரி பினான்ஸ், செலிங்கோ இன்ரர் நஷனல் ரிய?லிற்றி ஆகிய 6 கம்பனிகளினதும் தலைவராகவும் கொத்தலாவல இருக்கிறார்.

வங்கிச் சட்டத்தின் கீழ் உத்தேச கூட்டுறவு அதிகாரக் கட்டுப்பாடு சட்ட விதிமுறைக் கோவையானது அறிமுகப்படுத்தப்பட்டிருப்பதாக கூறியுள்ள கொத்தலாவல கூட்டுறவு அதிகாரக் கட்டுப்பாடு தொடர்பாக நடைமுறையிலுள்ள சட்டங்களுடன் தொடர்புபட்ட ஏற்பாடுகள் குறித்த அறியாமையுடன் இது மேற்கொள்ளப்பட்டிருப்பதாக தெரிவித்ததால் “லங்கா பிஸ்னஸ் ஒன்லைன்’ குறிப்பிட்டிருக்கிறது.

அத்துடன் வயதோ, பணிப்பாளர் பதவியின் எண்ணிக்கையோ இல்லாமல் சட்டரீதியான வர்த்தகத்தில் ஈடுபடும் பிரஜை ஒருவரின் உரிமையை இது மீறுவதாகவும் தனது சட்டத்தரணியூடாக அனுப்பியிருக்கும் வலியுறுத்தல் கடிதத்தில் கொத்தலாவல தெரிவித்துள்ளார்.

உத்தேச விதிமுறைக் கோவையானது குரூரத்தனமானது என்றும் வர்ணித்த அவர், இதன் சட்டபூர்வத்தன்மையின் பெறுமானத்துக்கு எதிராக செலான்வங்கி மற்றும் ஏனைய வர்த்தக வங்கிகள் உயர் நீதிமன்றத்திலும் மேன் முறையீட்டு நீதிமன்றத்திலும் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருப்பதாகவும் கூறியுள்ளார்.

இரு வாரங்களுக்குள் தனது அறிவுறுத்தல்களுக்கு கப்ரால் இணங்குவதற்கு தவறினால் சட்ட நடவடிக்கையை முன்னெடுக்கப் போவதாக கொத்தலாவல கூறியுள்ளார்.