இலங்கையில் பௌத்த மதமும், இந்தியாவில் இந்து மதமும், இன்னும் இஸ்லாம் கிறீஸ்தவம் என்று உலகத்தின் பின் தங்கிய நாடுகள் முழுவதும் மதத்தின் பெயரால் மக்கள் கூட்டங்களிடையே பிளவுகள் ஏற்படுத்தப்படுகின்றன. இந்து மதத்தின் தோற்றம் என்பதே மன்னர்களின் அதிகாரத்தோடு தோன்றுகிறது. இயற்கையின் சக்தியை மீற முடியாத மனிதன் தனக்கும் மேலே ஒரு சக்தி இருப்பதாகக் கற்பனை செய்து கொள்ளும் போதே கடவுள்கள் தோன்றினார்கள். சமூகத்தின் இயல்பான போக்காகாவே கடவுள்களின் தோற்றத்தை விளக்கலாம்.
இந்தியாவில் இந்து மதம் தோன்றுவதற்கு முன்பதாக ஒவ்வொரு பிரதேசங்களிலும் சிறிய கடவுள்களை மக்கள் வழிபட்டார்கள். அவை பெரும்பாலும் தொழிலோடு தொடர்புடையனவாகவும் இயற்கையின் அனர்த்தங்களோடு தொடர்புடையனவகவும் இருந்தன.
கால்நடைகள் விவசாயத்திற்குப் பயன்படத் தொடங்கிய காலத்திற்கு முன்பதாக கி.பி 500 ஆண்டுகளின் முன்னர், வேள்விகளில் மிருகங்கள் கொல்லப்பட்டு எரித்து உணவாக்கபட்டன. அவை வேளாண்மைக்குப் பயன்பட ஆரம்பித்த போது கால்நடைகள் கடவுள்களாக்கப்பட்டன. மாமிசம் உண்ணல் என்பது கடவுளுக்கு எதிரானதாக மாற்றப்பட்டது.
இந்து மதம் என்பதன் பரிணாமம் இவ்வாறு தான் ஆரம்பமாகிறது. குறு நில மன்னர்கள் அழிக்கப்படு பேரரசுகள் தோன்றிய காலத்தில் மக்கள் மத்தியில் குழப்பங்கள் தோன்றின. வெவ்வேறு குறு நிலப்பகுதிகளில் வாழ்ந்த மக்கள் மைய அரசிற்கு எதிராகப் போர்க்கொடி உயர்த்தினர் அக்காலப்பகுதியில் இந்துத் துவம் விழித்துக்கொண்டது. ஒவ்வொரு பகுதியில் வாழ்ந்தவர்களது தொழிலின் அடிப்படையில் அவர்களைப் பிரித்தது. அவர்களை தொழில் சார்ந்து சாதிக்கு உரியவர்களக மாற்றியது. முற்பிறப்பின் பலனாக அவர்கள் ஒவ்வொரு சாதியில் பிறந்தவர்கள் என்றது. முற்பிறப்பில் அதிக பாவம் செய்தவர்கள் தாழ்த்தப்பட்ட சாதியில் பிறப்பர் என்றது.
புராணங்கள் இதிகாசங்கள் என்று கற்பனைக் கதைகளை உருவாக்கிற்று. சிவனை மையமாக வைத்து இந்து மதம் தனது வேர்களைப் பரப்பியது. மண்டையோட்டை வழிபட்ட மக்கள் கூட்டத்தை சிவனின் அடிமை என்று சிவனின் உருவத்தில் மண்டையோட்டைத் திணித்து மக்களை இந்துத்துவத்தின் பகுதியாக்கியது. பாம்பை வழிபட்ட மக்களைத் திருப்திப்படுத்த சிவனின் கழுத்தில் பாம்பைச் சுற்றி வைத்து ஏமாற்றியது. யானையை வழிபட்டவர்களை உள்வாங்க பிள்ளையார் என்ற கற்பனைப் பாத்திரத்தைச் சிவனின் மகனாக்கியது. இவ்வாறு சிவன் என்ற பாத்திரம் சிறு வழிபாடுகளை உள்வாங்கி மக்களை அடக்கியாளப் பயன்பட்டது.
இவ்வாறு தான் பேரரசுகளுக்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழ முடியாமல் மக்கள் மத்தியில் மதம் என்ற மூட நம்பிகை விதைக்கப்பட்டது. இந்தியாவில் பௌத்தம் காலூன்ற இயலாமல் போன போது அது தென்னிந்தியா ஊடாக இலங்கையில் தஞ்சமடைந்தது. அங்கும் மக்களை ஒடுக்குவதற்காக இந்துத்துவத்திடமிருந்து கடன்வாங்கிய சாதியமைப்பை பௌத்தம் மக்கள் மத்தியில் திணித்தது.
இரண்டாயிரம் ஆண்டுகள் கடந்துவிட்ட இன்றைய காலத்திலும் மதங்கள் இன்னும் உயிர்வாழ்கின்றன. அன்று மக்களை இணைத்து ஒடுக்குவதற்காகப் பயன்பட்ட மதங்கள், இன்று அவர்களைப் பிழவுபடுத்தி இரத்தக்களரியை ஏற்படுத்துவதற்காகப் பயன்படுத்தப்படுகின்றது.
மக்களை உலக நாடுகளின் ஆதரவோடு உள்ளூர் அதிகார வர்க்கங்கள் சுரண்ட ஆரம்பிக்கும் போது அவர்கள் போராடத் தலைப்படுகிறார்கள். மதங்களைப் பயன்படுத்தி மக்களைப் பிளவுபடுத்தி தமக்கு எதிரான போராட்டங்களை அதிகார வர்க்கம் பலவீனப்படுத்துகிறது. ஆக, இன்றும் மதங்கள் வெறும் சுரண்டல் கருவிகள் தான்.
இந்தியாவில் மோடியாலும் ஆர்.எஸ்.எஸ் ஆலும் தூண்டப்பட்ட மக்கள் கண்ணை மூடிக்கொண்டு இஸ்லாமியர்களைத் தாக்கும் போது பல்தேசிய நிறுவனங்கள் சந்தடியில்லாமல் நுளைந்து கொள்ளையடித்துச் செல்கின்றன.
இலங்கையில் பொதுபல சேனா என்ற பாசிஸ்ட் கும்பலும் இதே வேலையைத் தான் செய்கிறது. மக்கள் மோதிக்கொண்டிருக்க இலங்கையின் ஒவ்வொரு அங்குல நிலத்தையும் பல்தேசிய வியாபாரிகள் ஆக்கிரமித்துக்கொள்கின்றனர்.
மதங்களின் கொடுமைகளைச் சித்தர்கள் சிர்திருத்த முயன்றதன் விளைவாக ஒரு வகையான எதிர்ப்பிலக்கியம் தோன்றியது.
”சாதியிலே மதங்களிலே சமயநெறி களிலே
சாத்திரச்சந் தடிகளிலே கோத்திரச் சண்டையிலே
தியிலே அபிமானித் தலைகின்ற உலகீர்
அலைந்தலைந்து வீணேநீர் அழிதல் அழகல்லவே!”
– என்று சாதி சமய வேறுபாடுகளை மிகத் தீவிரமாகக் கண்டித்து அறிவுறுத்தி இருக்கிறார் வள்ளலார்.
”இருட்சாதித் தத்துவச் சாத்திரக் குப்பை
இருவாய்ப்புப் புன்செயில் எருவாக்கிப் போட்டு
மருட்சாதி சமயங்கள் மதங்களாச் சிரம
வழக்கெலாம் குழிக்கொட்டி மண்மூடிப் போட்டு”
என்று போலிச் சமயங்களையும் தத்துவக் குப்பைகளையும் சாடும் வள்ளலார், போலி கமங்களையும், சாத்திரங்களையும் மிகக் கடுமையாக
”வேதாக மங்களென்று வீண்வாதம் டுகின்றீர்
வேதாக மத்தின் விளைவறியீர் – சூதாகச்
சொன்னவலால் உண்மைவெளி தோன்ற உரைக்கவிலை
என்ன பயனோ இவை?”
என்று எதிர்த்துரைத்திருக்கிறார்.
‘கலையுரைத்த கற்பனையை நிலையெனக் கொண்டாடும்;
கண்மூடிப் பழக்கமெல்லாம் மண் மூடிப் போக’
என அருட்பெருஞ் சோதி தனிப் பெருங் கருணை என்ற சமரச சன்மார்க்கத்தைக் காட்டிய இராமலிங்க அடிகள் கூறுகிறார்.
இன்னொரு புகழ்பெற்ற சித்தர் சிவவாக்கியர்.
சிவவாக்கியர் சாதி, சமயம், கோயில், குளம், மந்திரம் தந்திரம், ஆசாரம் சடங்கு போன்ற குருட்டு நம்பிக்கைகளை மிகவும் கடுமையாகத் தாக்கிய புரட்சியாளர். ஒவ்வொரு பாடல்களிலும் மூட நம்பிக்கைகளுக்கு எதிரான அவரது சீற்றம், வெறுப்பு துலாம்பரமாகத் தெரிகிறது.
இதனால் அரண்டு போன “சைவ ஆதீனங்கள்” நாட்டிலுள்ள சிவவாக்கியர் பாடல்கள் அடங்கிய ஏட்டுச் சுவடிகளை தேடி எடுத்துக் கொளுத்தினார்கள்.
சித்தர்களின் பாடல்கள் ஓசை நயம் மிக்கவை. பழகு தமிழில் பாடப்பட்டவை. இருந்தும் மறைபொருள் பொருள் கொண்டவை. பாடல்களைப் படிக்கும் போது நேரடியாக ஒரு பொருளும் மறைமுகமாக இன்னொரு பொருளும் இருக்கக் காணலாம்.
‘நட்ட கல்லை சுற்றி வந்து நாலு புட்பம் சாத்தியே
சுற்றி வந்து மொணெமொணென்று சொல்லும் மந்திரம் ஏதடா?
நட்ட கல்லும் பேசுமோ? நாதன் உள்ளிருக்கையில்
சுட்ட சட்டி சட்டுவம் கறிச் சுவை அறியுமோ?’
சிவவாக்கியர் பாடிய இந்தப் பாடல் நாடறிந்த பாடல்.
சுட்ட சட்டியும் அதில் வேகுகின்ற கறியைக் கிளறுகின்ற கரண்டியும் அந்தக் கறிச்சுவையை அறியாதது போல, பரம்பொருள் நம் உள்ளத்தே இருக்க அதை அறியாமல் கற்சிலைக்கு நான்கு வகை மலர்கள் சாற்றுவதும் அதைச் சுற்றி வந்து முணு முணுக்கும் மந்திரம் எங்குள்ளது?
உலகமயமாகியிருக்கும் பல்தேசிய வியாபாரிகளின் சுரண்டலுக்குப் பயன்படக்கூடிய நிலையில் பிற்போக்கான இம் மதங்களை எதிர்கொண்டு கேள்விகேட்ட சித்தர்களைப் போல இன்று பொது பல சேனாவும் ஆர்.எஸ்.எஸ் உம் ஐ.எஸ்.ஐ.எஸ் உம் உலகத்தின் புதிய சித்தர்களால் அழிக்கப்பட வேண்டும்.
மிகுதி அடுத்த பதிவில்…
அருமையான பதிவு. ஆனாலும் ஆரம்பப்பகுதியில் ஒரு சிறு தவறு. சிந்து நதிக்கு இந்தப்பக்கம் இருந்த வழிபடுமுறைகள் எல்லாவற்றையும் அப்பகுதியில் இருந்தவர்கள் கிந்து என்ற தொனிப்பட அழைத்தனர். அம்முறைகளில் கட்டுரையில் குறிப்பிடப்பட்ட வழிமுறைகளும் மேலும் குறிப்பாக சமுதாயத்திற்கு பலநன்மைகள் செய்த சித்தர்களை வழிபடும் ,(வழிபாடு அல்ல) முறையும் இருந்தன. அவ்வாறு வெவ்வேறு காலப்பகுதியி்ல் வாழ்ந்த சித்தர்களே சிவன்,முருகன் போன்றவர்கள். அவர்களின் நடுகற்களே பின்பு சிறிது உருமாற்றி சிவலிங்கம். பின்பு கதைகள் புனையப்பட்டு ஆதிக்கநோக்குடன் கடவுள்கள் படைக்கப்பட்டனர்.