மடு கோயிலை பொறுப்பேற்குமாறு இராணுவம் கோரிக்கை!

 

புலிகளிடமிருந்து இராணுவத்தினரின் வசமாகிய மடுக்கோவிலில் ஏற்பட்டிருந்த சேதங்களைச் சீர்செய்துள்ள இராணுவத்தினர், அந்தக் கோவிலைப் பார்ப்பதற்காக மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் மற்றும் மன்னார் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை விக்டர் சோசை ஆகிய இருவரையும் நேற்று அங்கு அழைத்துச் சென்றிருந்தனர்.

இராணுவ உயர் அதிகாரிகளுடன் ஆலயப் பகுதியைச் சுற்றிப் பார்வையிட்ட மன்னார் ஆயர், ஆலயத்தில் திருத்த வேலைகள் நடைபெற்றிருப்பதை உறுதிப்படுத்தியுள்ளார். எனினும் ஆலயம் உடனடியாக தம்மிடம் நேற்று கையளிக்கப்படவில்லை என்றும் இன்னும் சில தினங்களில் இராணுவத்தினர் அதனை முறையாகக் கையளிப்பார்கள் எனவும் மன்னார் ஆயர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஆகஸ்ட் மாதம் 15 ஆம் திகதி நடைபெறவுள்ள மடுக்கோவிலின் ஆவணி மாதத் திருவிழா இம்முறை நடைபெறுவதற்குரிய சாத்தியமில்லை என தெரிவித்துள்ள மன்னார் ஆயர், திருவிழா நடைபெறும்போது அங்கு கூடவுள்ள பொதுமக்களின் பாதுகாப்பை இராணுவத்தினரும், புலிகளும் உறுதிப்படுத்த வேண்டும் என்பதுடன், மடுக்கோவில் பகுதியை யுத்தமற்ற சூனியப்பிரதேசமாகப் பிரகடனப்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

தற்போது ஆயர் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள மடு மாதாவின் திருச்சொரூபம் மடுக்கோவிலுக்குக் கொண்டு செல்லப்படும் வரையில் ஆயர் இல்லத்திலேயே வைக்கப்பட்டிருக்கும் என்றும் மன்னார் ஆயர் தெரிவித்துள்ளார்