இலங்கையில் பாராளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டதும் மைத்திரிபால சிரிசேனவின் நல்லாட்சி தலைகீழாக மாறிப் போனது. யாருக்கு எதிராகப் பிரச்சாரம் மேற்கொண்டு ஆட்சியைக் கையகப்படுத்தினாரோ அவரையே பிரதம மந்திரியாக்க மைத்திரி முன் நிற்கிறார். மகிந்த ராஜபக்ச அரசில் அமைச்சராகப் பதவிவகித்து ஜனாதிபதி வேட்பாளராகப் போட்டியிடுவதற்காக இறுதி நேரத்தில் புற்றுக்குள்ளிருந்து கிளம்பிய மைத்திரிபால சிரிசேன இப்போது 180 பாகையில் திரும்பி மகிந்த ராஜபக்சவையும் அவரது சகாக்களையு ம் பாதுகாத்து ஆட்சியதிகாரத்தில் அமர்த்துவதற்கு பச்சைகொடி காட்டியுள்ளார்.
இலங்கையை ஒட்டச் சுரண்டிய மகிந்த ராஜபக்சவுக்கும் அவரது நம்பிக்கைக்குரிய சகாக்களுக்கும் ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிபாலவினால் நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு முன்பதான கணிப்புக்களின் அடிப்படையில் ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்றைத்தக் கலைத்து தேர்தலை நடத்துமாறு அழுத்தம் கொடுத்தது. மைத்திரிபால சிரிசேன இதனை வெளிப்படையாகவே கூறியிருந்தார். ஐ.தே.க உம் இதனை மறுக்கவில்லை.
மைத்திரியைத் தலைவராகக் கொண்ட சுதந்திரக் கட்சி, மைத்திரி அணி / மகிந்த அணி என்ற பிளவைச் சந்தித்திருந்தது. கட்சியின் உள்ளே மகிந்தவிற்கு ஆதரவான குழுவிற்கு கணிசமான செல்வாக்கு வளர்ந்திருந்தது.
இந்த நிலையில் தேர்தல் அறிவிக்கப்பட்டால் ஐ.தே.க பெரும் வெற்றியீட்டும் நிலை காணப்பட்டது. அதே வேளை மைத்திரிக்கு எதிரான மகிந்த அணி எதிர்க்கட்சியாகும் நிலையும் காணப்பட்டது.
ஐ.தே.க வெற்றி பெற்றால் மைத்திரி ஜனாதிபதியானதே ஐ.தே.க இன் முயற்சியால் தான் என்ற கருத்து வளர மைத்திரி புறக்கணிக்கப்படலாம்.
இதனால் மைத்திரிபால சிரிசேன என்ற தனிமனிதன் அரசியலில் அனாதையாகும் நிலை தோன்றும். இதனால் மைத்திரி புதிய கணக்கு ஒன்றைப் போட ஆரம்பித்தார். மகிந்தவை மறுபடி சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் வேட்பாளராக்கிவிட்டு கட்சியை ஒட்ட வைப்பது என்பதே அதன் முதல்ப்படி. இதனால் சுதந்திரக் கட்சியின் பெரும்பாலானவர்கள் மைத்திரிக்கு எதிரான தாக்குதலை நிறுத்திக் கொள்வர்கள்.
இதன் மறுபக்கத்தில் தனது கொள்ளைக்காரச் சகாக்களுடன் மகிந்த ராஜபக்ச வாக்குக் கேட்டால் சிறீ லங்கா சுதந்திரக் கட்சி சிங்கள பௌத்தர்கள் அதிகமாக வாழும் இடங்களிலிருந்தும் அன்னியமாகும்.
புலம்பெயர் புலிகளையும், புலிகளின் மீட்சியையும் காரணம் காட்டியே மகிந்த தனது ஆட்சியதிகாரத்தையும் வாக்குப் பலத்தையும் தக்கவைத்திருந்தார். மைத்திரி – ரனில் ஆட்சி நடைபெற்ற ஆறு மாதங்களில் புலம்பெயர் புலிகள் தொடர்பான அச்சமோ அன்றி புலிகளின் மீட்சி தொடர்பான அறிகுறியோ மக்களுக்குத் தென்படவில்லை. இதனால் மகிந்தவின் தேவை காலாவதியாகிவிட்டதாகவே மக்கள் கருதுகின்றனர்.
இதனால் மகிந்த அணி தோல்வியைத் தழுவும் என்பது உறுதி. இந்த நிலையில் ஐ,தே.க ஆட்சியமைப்பது தவிர்க்க முடியாததாகிவிடும்.
இதன் பின்னர் மகிந்தவை கட்சியிலிருந்து வெளியேற்றிவிட்டு ரனில் – மைத்திரி கூட்டாட்சியை சுதந்திரக் கட்சியின் ஆதரவோடு தொடரலாம் என்பதே மைத்திரியின் கணிப்பு.
அவ்வாறான அரசியல் சூழல் ஒன்றில் சிறீ லங்கா சுதந்திரக் கட்சியின் தோல்விக்கு மகிந்த மீது பழிசுமத்துவதற்கு மட்டுமன்றி மைத்திரி – ரனில் கூட்டாட்சியைத் தொடர்வதற்கான அங்கீகாரமும் மைத்திரிக்கு வழங்கப்படும்.
மேற்கு ஏகாதிபத்திய நாடுகள் மைத்திரி – ரனில் ஆட்சி தொடரும் என்பதில் உறுதியாக உள்ளன. அமெரிக்கா சென்ற விக்னேஸ்வரனிடம் மைத்திரி – ரனில் ஆட்சியுடன் ஒத்துழைக்குமாறே அமெரிக்கா அறிவுறுத்தியுள்ளது.
மகிந்த சுதந்திரக் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டால் போர்க்குற்றம் தொடர்பான விசாரணைகளை நடத்துவதும், மகிந்தவின் குடியுரிமையைப் பறிப்பதும் மைத்திரி – ரனில் கூட்டிற்கு இலகுவான நடைமுறையாகிவிடும்.
1980 ஆம் ஆண்டில் ஜே.ஆர்.ஜெயவர்தன சிறீமாவோ பண்டாரநாயக்கவின் குடியுரிமையைப் பறித்தார். அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியமைக்காகவே குடியுரிமை பறிக்கப்பட்டது.
அவ்வாறான ஒரு தண்டனையின் பின்னர் புலம்பெயர் அமைப்புக்களின் தேவை அற்றுப் போகும். அந்த நிலையில் புலம்பெயர் அமைப்புக்களை ஏற்கனவே திட்டமிட்டபடி தன்னார்வ நிறுவனங்களாக மாற்றும் நடவடிக்கை தொடரும்.
அதற்கான நடவடிக்கைக்ளும் மைத்திரி தலைமையில் ஆரம்பமாகிவிட்டது. ஜனாதிபதி செயலகத்தின் கீழ் இயங்கும் சமாதானத்திற்கும் நல்லிணக்கத்திற்குமான பிரிவு புலம்பெயர் தமிழர்களுக்கான வேலைத்திட்டம் ஒன்றை முன்வைத்துள்ளது. கடந்த வாரம் முன்வைக்கப்பட்ட இந்த வேலைத்திட்டத்தின் முதல்கட்டமாக தென்னாபிரிக்காவின் தலைமையில் புலம்பெயர்ந்தோர் விழா ஒன்று ஓகஸ்ட் இறுதியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
போர்க்குற்ற விசாரணையை மட்டுமே தமது வேலைத்திட்டமாக முன்வைக்கும் தமிழ் அமைப்புக்கள் நல்லிணக்கம் மற்றும் மறு சீரமைப்பு என்ற தலையங்கத்தில் இலங்கை அரசுடன் இணைந்து செயற்படுவதைத் தவிர வேறு வழிகள் கிடையாது.
இவ்வாறான ஒரு அரசியல் பொறிக்குள் மிகவும் அவதானமாக மைந்த ராஜபக்ச விழுத்தப்பட்டுள்ளார். இதன் மறுபக்கத்தில் சுய நிர்ணைய உரிமைக்கான கோரிக்கையும் அழிக்கப்படும். அதற்கான முழுப் பொறுப்பையும் ஏகாதிபத்திய நாடுகளிடம் தமிழ்ப் பேசும் மக்களின் உரிமையை விற்பனை செய்த புலம்பெயர் அமைப்புக்களே பொறுப்பேற்க வேண்டும்.
அமெரிக்காவின் அடியாள் படைகள் போன்று செயற்படும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி(அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ்), தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் மற்றும் புதிய இலங்கை அரசு போன்றன ஒரணியில் கொண்டுவரப்படும். இதனைச் சரியாகப் புரிந்துகொண்டால் மட்டுமே ஏகாதிபத்திய எதிர்ப்பு தேசிய அரசியலை முன்வைக்கலாம். அதற்கான மக்கள் சார்ந்த அரசியலை முன்வைப்பது சமூகப்பற்றுள்ள அரசியல் சக்திகளின் இன்றைய அவசர கடமையாகும்.