தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சு நடத்தப்படும் என்று அரசாங்கம் கூறிவருகின்றமை குறித்து அமைச்சர் சம்பிக்க ரணவக்க என்ற பெளத்த துறவிகளின் அடிப்படைவாதக் கட்சியின் பின்வருமாறு தெரிவித்தார்.
“அரசியலமைப்பு திருத்தங்களை மேற்கொள்வது தொடர்பில் அரசாங்கம் நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அனைத்து உறுப்பினர்களிடமும் யோசனைகளைப் பெறவேண்டும். அவர்களுடன் கலந்துரையாடி இணக்கப்பாட்டுக்கு வரவேண்டும்.
மேலும் தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் அரசாங்கம் பேச்சு நடத்துவதாயின் அது மஹிந்த சிந்தனை எதிர்கால நோக்கு வேலைத்திட்டத்துக்கு அமையவே இடம்பெறவேண்டும். அதனை மீறி எதுவும் இடம்பெறக் கூடாது.
அதேவேளை, நாட்டுக்குப் பொருத்தமான அரசியலமைப்பு மாற்றங்களை மேற்கொள்வது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. இதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.
முக்கியமாக அரசியலமைப்பு திருத்தங்கள் தொடர்பில் ஆராய்வதற்கு வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தலைமையில் விசேட குழுவொன்றும் அமைக்கப்பட்டுள்ளது” என்றார்
ஜாதிக கெல உருமய “பெளத்த துறவிகளின் அடிப்படைவாதக் கட்சி” அல்ல.
அது சிஹள உருமயவாகத் தொடங்கிய சிங்கள பவுத்தத் தேசியவாதக் கட்சியின் விருத்தி.
தேர்தலை வெல்லுவதற்காக அது புத்த பிக்குமாரை வேட்பாளர்களாக நிறுத்தியது. வெற்றி பெற்ற 9 பிக்குமாரின் நடத்தையும் மோசமாக இருந்ததால் பின்பு அந்த உபாயத்தைக் கைவிட்டுவிட்டது.
அக் கட்சி படித்த, வசதி படைத்த பேரினவாதிகளின் கட்சி. அதன் முக்கிய ஆதரவுத் தளம் கொழும்பும் பிற சில நகர்ப் புறங்களுமே.
ஜே.ஆருக்கு மத்தியு எப்படியோ, அப்படியே ராஜபக்சவுக்கு சம்பிக ரணவக, விமால் வீரசன்ச ஆகியோர்.
தமிழர் தேசியக் கூட்டமைப்ப்பின் பாடும் அன்று கூட்டணியின் பாடு போலச் சங்கடம் தான்.
ஓ…. ஜீசஸ்!!!! -சாரங்கபாணி ஐயர். (கட்டுரை)
தமிழனுடைய சாபக்கேடு என்னவென்றால் ஒற்றுமை பற்றி பேசிக்கொண்டே காலை வாருவது. புலிகள் ஒற்றுமை பற்றி பேசிக்கொண்டே கழுத்தை அறுப்பதிலும் இது எவ்வளவோ மேல் என்றாலும் தமிழ்ப் பகுதிகளில் பாசிசம் இல்லாத இன்றைய நிலையில் சமத்துவம், சகவாழ்வு, புரிந்துணர்வு, விட்டுக்கொடுப்பு ஆகியவற்றை அணைத்துக் கொள்ள வேண்டாமா? குறைந்தபட்சம் அதை நோக்கி நடைபோட வேண்டாமா? மேலிருந்து கொண்டு அருளுவதையே அனைவரும் விரும்புகின்றனர். இது மனிதனுடைய சாதார ஆசையென்றாலும் பொதுவாழ்வில் ஈடுபட்டிருப்பவர்கள் அதுவும் அரசியலில் இருப்பவர்கள் மக்களோடு மக்களாக இருந்து சேவை புரிவதைக் காட்டிலும் மேலிருந்து அருள் பாலிக்கவே படாதபாடு படுகின்றனர்.
மிதவாத தமிழ் அரசியல் கட்சிகளும் சரி அந்தக் கட்சிகளிலிருந்து பிரிந்து புதிய கட்சிகள் தொடங்கியவர்களும் சரி ஒருவருக்கொருவர் மேடைகளில் தான் கீரியும் பாம்புமாக நிற்பார்கள். ஆனால் தனிப்பட்ட முறையில் ஒருவருக்கொருவர் முகமன் செய்து கொள்வார்கள். நண்பர்களாக பழகிக் கொள்வார்கள். ஆனால் ஆயுதம் தாங்கிய இயக்கங்கள் ஒற்றுமை பற்றி வெளிப்படையாக பேசிக்கொண்டே ஒருவருக்கொருவர் வன்மத்தையும் ஓர்மத்தையும் வெளிப்படுத்துவதில் எந்தவகையிலும் வெட்கப்பட்டதில்லை. அது ஓரே கூடாரத்திலிருந்து வெளியில் வந்தாலும் அதே காழ்புணர்ச்சி, அதே வஞ்சணை, அதே பழிபோடுதல் சற்றும் குறையாமல் இருக்கும். இன்னும் சொல்லப் போனால் வேறு வேறு இயக்கத்துக்கிடையிலிருக்கும் வன்மத்திலும் பார்க்க ஒரே இயக்கத்திலிருந்து பிரிந்து போனவர்கள் கொள்ளும் வன்மம் கொலைக்குச் சமம்.
நொந்து போன மக்களைப் பற்றியோ அல்லது அவர்களின் தேவைகள் பற்றியோ அல்ல இந்தத் தலைவர்களின் முதன்மையான சிந்தனை. தன்னுடைய ‘பவர்’ என்ன என்பதை காட்டுவதிலேயே கட்டியிருக்கும் வேட்டியை அவிட்டு விடுகின்றனர்! அதுகூட விளங்கிக் கொள்ளாமல் நான் அதைச் செய்தேன், இதைச் செய்தேன், இனியும் செய்வேன் எனவே எனக்குப் பின்னால் அணிதிரளுங்கள். கொடி பிடியுங்கள் என்பதெல்லாம் அளவிட முடியாத ஆசைகள். கணிக்கக்கூடிய ஏக்ககங்கள்!
ஒற்றுமை ஒற்றுமை என்று நாம் மாரடிப்பதிலும் இவர்களின் ஒற்றுமையை கட்டையில போட்டு எரித்து விடுதே மேல். இவர்கள் ஒருபோதும் ஒற்றுமைப்படப் போவதில்லை என்பதை நப்பாசையில் மனம் நம்ப மறுக்கிறது. ஈபிஆர்எல்எவ்வாக இருந்தாலும் சரி, அதிலிருந்து பிரிந்து சென்ற ஈபிடிபி என்றாலும் சரி, உமாமகேஸ்வரனின் தலைமையிலான புளொட் என்றாலும் சரி, சித்தாத்தனின் தலைமையிலான தற்போதைய புளொட் என்றாலும் சரி தெரிந்தே கொலை செய்து, அந்தப் பிணங்களைத் தாண்டியே ஜனநாயக அரசியலுக்குள் நுழைய முனைகிறார்கள்.
ஈபிஆர்எல்எவ் தலைவராக இருந்த சுரேஸ் பிரேமச்சந்திரன் புலிகளுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டதைத் தொடர்ந்து தொலைந்தது சனியனென்று ஆயுதங்களை முற்றாக களைந்து அரசியல் கட்சியாக ஈபிஆர்எல்எவ் -நாபா அணியினர் அரசியல் நடவடிக்கைகளில் மட்டும் கவனம் செலுத்தி வருகின்றனர். இதனையே மற்ற இயக்க தோற்ற முடையவர்களும் பின்பற்ற வேண்டும்.
புளொட் இப்பவும் வவுனியாவில் ‘தாதா’ பாணியிலான இயக்கத்தினையே கொண்டு செல்கிறது. பல நல்ல குடியேற்ற திட்டங்கள், அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தாலும் புளொட் என்றவுடன் மக்களின் மனங்களில் தோன்றுவது என்ன? என்பதை புளொட் தலைமை உணர்ந்து கொள்ள வேண்டும். மேலும் ‘இலவம் பழத்துக்கு காத்திருந்த கிளி’யாக கூட்டமைப்பின் தொலைபேசி அழைப்புக்கு காத்திராமல் வவுனியாவில் புளொட்டினால் போடப்பட்ட அரசியல் அடித்தளத்தை விரிவுபடுத்தி மேலும் முன்னேற்றமான திசையில் பயணிக்க வேண்டும் என்பதே எல்லோரதும் எதிர்பார்ப்பு.
தோழர் பத்மநாபா ஈபிஆர்எல்எவ்வின் தலைவராக இருந்த காலத்திலேயே அதன் இராணுவப் பிரிவுக்குப் பொறுப்பாக இருந்த டக்ளஸ் தேவானந்தா அணியினர் பிரிந்து சென்றனர். பிரேமதாசா ஜனாதிபதியாக இருந்த காலத்தில் ஈபிடிபி என்ற இயக்கத்துடன் திரும்பி வந்தனர். 90களின் முற்பகுதியில் ஈபிடிபியின் அரசியல் அல்லாத நடவடிக்கைகள் தான் முன்னிலையில் இருந்தது. அந்த முகம் சுழிக்கும் நடவடிக்கைகளில் இருந்து மீண்டு தனக்கென ஒரு அரசியல் ஸ்திரத்தினை ஏற்படுத்தியிருக்கிறது. அதற்காக டக்ளஸ_ம் சரி அதன் உறுப்பினர்களும் சரி எதிர்கொண்ட சவால்கள் ஆயிரம் ஆயிரம். அதனையெல்லாம் முறியடித்து இன்று ஒரு அரசியல் சக்தியாக யாழ்ப்பாணத்தில் இருக்கிறது. இன்றும் முகம் சுழிக்கும் எச்ச சொச்சங்கள் தொடர்ந்தாலும் பெரும்பாலான மக்கள் ஈபிடிபியை அங்கீகரித்திருக்கிறது. இது அரசியல் நடவடிக்கைகளுக்கான அங்கிகாரமே தவிர அரசியல் அல்லாத நடவடிக்கைகளுக்குக் கிடைத்த அங்கீகாரமல்ல என்பதை சொல்லித் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியமில்லை.
எனவே கண்ணாடி மாளிகையிலிருந்து மற்றவர்கள் மீது கல்லெறிவதை விடுத்து ஆக்கப+ர்வமான செயற்பாடுகளை டக்ளஸ் இயக்கத்துக்குள்ளும் வெளியிலும் முன்னெடுக்க வேண்டும். ஈபிடிபி என்றால் டக்ளஸ். டக்ளஸ் என்றால் ஈபிடிபி என்ற நிலைமை மாறி அது ஒரு ஜனநாயக அரசியல் கட்சியாக பரிணமிக்க வேண்டும். அதற்கு முதலில் இயக்கப் பாணியில் கட்சி நடத்துவதை அறவே கைவிட வேண்டும்.
அதைவிடுத்து ‘எல்லாப் புகழும் எனக்கே’ என்று அடம்பிடித்தால் முள்ளிவாய்க்காலில் முடிந்தது போல் எதோவோரு வாய்காலில் முடியும்! எப்படி முன்னது முகவரிக்கு மட்டும் பயன்படுகிறதோ அதேபோன்று தான் முகவரிக்கு மட்டும் பயன்படும் என்பதை புரிந்து கொண்டு வரலாற்றில் இடம்பெற வேண்டுமென்றால் தன்னை, தன்னை மட்டும் முன்னிலைப்படுத்தும் அரசியல் போக்கிரித்தனத்திலிருந்து மீளவேண்டும் என்பதே எனது தாழ்மையான கருத்து.
காட்டில் வாழும் மிருகங்களைப் போல் ‘கொலைதான் வாழ்க்கை, வாழ்கைதான் கொலை’ என்பதல்ல! நாட்டில் வாழும் அதுவும் இருபதாம் நூற்றாண்டில் வாழும் மனிதர்கள் நாம்!!!!! குறிப்பு: நான் இதை புனைபெயரிலே முன்வைக்க விரும்புகிறேன். ஏனெனில் ‘உண்மையான நட்பு, போலியான நட்பு’ என்பதையெல்லாம் ஒருபுறம் வைத்துவிட்டு இருக்கிற நட்பையாவது இழந்துவிடாது இருப்பதற்கே. –சாரங்கபாணி ஐயர்.
(மேற்படி கட்டுரையாளரின் கருத்து அவரது சொந்தக் கருத்தே தவிர “அதிரடி”யின் கருத்து அல்ல)
நன்றி! அதிரடி & சூத்திரம் இணையம்.