ஏகாதிபத்திய நாடுகள் இலங்கையில் ஆட்சி மாற்றம் ஒன்றை ஏற்படுத்தி அடுத்த ஜனாதிபதியாக ஐக்கிய தேசியக் கட்சியைச் சார்ந்த ஒருவரை நியமிக்க முற்படுகின்றன. குறிப்பாக அமரிக்கா தலைமையிலான நகர்வுகள் இவ்வாறு அமைந்துள்ளன. இந்த அடிப்படையில் பிரித்தானியாவிற்கு புலிசார் அமைப்புக்களின் ஆதரவு வேண்டிப் பயணம் செய்த மங்கள சமரவீரவை உலகத் தமிழர் பேரவையைச் சேர்ந்த சுரேன் சுரேந்திரன் உட்பட மேலும் சிலர் லண்டனில் சந்தித்துப் பேச்சுக்கள் நடத்தியுள்ளதாகத் தெரியவருகிறது. மகிந்தவிற்குப் பிரதியீடாக மற்றொரு பேரினவாதக் கட்சியை ஆட்சியில் அமர்த்துவதற்கான முயற்சிகள் மேற்கு அரசுகளின் தலைமையில் நடத்தப்படுகின்றன. இதற்கான போராட்டங்களும் புதிய அமைப்புக்களும் கருத்துக்களும் இலங்கை முழுவதும் மட்டுமல்ல புலம்பெயர் நாடுகளிலும் செயற்படுத்தப்படுகின்றன.








தமிழ்மக்களின் உரிமைகளை மதிப்பதுபோல் நடித்து தமிழருக்கு எதிராக தமிழரையே தூண்டிவிட்டு, தமிழினம் தன் எதிரியால் அழிக்கப்படுவதை உணராமலே அழியும் அவலத்தை ஏற்படுத்திய கட்சிதான் ஐக்கிய தேசியக் கட்சி.
புற்றுக்குள் இருக்கும் பாம்பு ஐக்கிய தேசியக் கட்சி. புற்றுக்கு வெளியே இருக்கும் பாம்பு சிறீலங்கா சுதந்திரக் கட்சி என்று அன்றே ஜீ. ஜீ. பொன்னம்பலம் ஐக்கிய தேசியக் கட்சியை தோலுரித்தும் காட்டியுள்ளார்.
வெளிப்படையாகவே தமிழினத்தை அழிக்கும் சிறீலங்கா சுதந்திரக் கட்சி மேலானது. தமிழினம் தான் அழிவதை உணர்ந்து சரியோ, தவறோ அழிவிலிருந்து மீள்வதற்கு, ஏதேதோ செய்ய முனைகிறது.
“வாள்போல் பகைவரை அஞ்சற்க அஞ்சுக
கேள்போல் பகைவர் தொடர்பு”