தமிழ்ப் பேசும் மக்கள் வாழும் பிரதேசங்களில் மகிந்த ராஜபக்சவிற்கு எதிரான எதிர்ப்பு வெளிப்பட்டுத்தப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் 61.14 வீதமானவர்கள் வாக்களித்துள்ளதார்கள். போர் முடிந்த பின்னர் அதிக அளவிலான வாக்குப் பதிவு யாழ்ப்பாணத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. தவிர கிளிநொச்சி மற்றும் மட்டக்களப்பிலும் மிக அதிகமான வாக்களிப்புக்கள் நடைபெற்றுள்ளன.
மகிந்தவின் செல்வாக்குப் பிரதேசங்களில் வாக்களிப்பு வீதம் எதிர்பாராத அளவிற்குக் குறைவடைந்துள்ளது.
மகிந்தவின் சொந்த ஊரான ஹம்பாந்தோட்டையில் கூட வாக்களிப்பு வீதத்தில் பத்துவீதம் சரிவு ஏற்பட்டுள்ளது. அதேவேளை மகிந்த ராஜபக்ச கடந்த தேர்தலில் வெற்றிபெற்ற மாவட்டங்களில் குறைந்த வாக்குவீதங்களே கிடைத்துள்ளன.
மகிந்த ராஜபக்ச தோல்வியடைந்த மாவட்டங்களில் வாக்குப் பதிவுகள் 70 இலிருந்து 80 வீதமாக அதிகரித்துள்ளது.
ஆக, மகிந்த ராஜபக்சவின் சரிவு ஏற்கனவே ஆரம்பமாகிவிட்டதாகக் கூறப்பட்ட போதிலும் தேர்தல் முடிவுகள் இன்னும் முழுமையாக வெளியாகவில்லை.
கடந்த தேர்தலில் மகிந்த ராஜபக்ச வெற்றிபெற்ற மாவட்டங்களில் தபால் மூல வாக்குப் பதிவுகள் அதிகமாகவும், தோல்வியடைந்த மாவட்டங்களில் வாக்குப்பதிவு குறைவாகவும் பதிவுசெய்யப்பட்டிருப்பதால் ஊழல் நடைபெற்றிருக்கலாம் என்ற சந்தேகங்கள் இலங்கையிலிருந்து வெளியாகின்றன.
மகிந்தவிற்குப் பதிலாக மைத்திரியை மாற்றுவதால் மாற்றங்கள் எதுவும் ஏற்படப்போவதில்லை எனினும், மகிந்தவிற்கு எதிரான உணர்வை மக்கள் வெளிப்படுத்தியுள்ளனர்.
இறுதியில் வெற்றிபெறுவது யாராக இருந்தாலும் மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்குக் கிடைத்த பெரும் தோல்வியாகவே இத் தேர்தல் கருதப்படும்.








