இலங்கை அரச பாசிஸ்ட் மகிந்த ராஜபக்ச யாழ்ப்பாணம் சென்று நாகவிகாரையை தரிசிக்கச் செல்லும் சிங்கள பௌத்த பயணிகளின் வசதிக்காக நிர்மாணிக்கப்பட்ட இறங்கு துறையைத் திறந்து வைத்தார். 45 மில்லியன் நிதி ஒதுக்கீட்டில் கட்டி முடிக்கப்பட்ட புதிய இறங்குதுறையினை தனது சகோதரர் கோத்தாவின் துணையுடன் அதிவேகப் படகில் சென்று மகிந்த திறந்து வைத்தார். சிங்கள பௌத்த மயமாக்கலில் நாகவிகாரை அமைந்துள்ள நயினாதீவு முற்றிலும் சிங்கள பௌத்தமயமாக்கப்பட்டுள்ளது.
முன்னதாக அபிவிருத்திக் கூட்டம் ஒன்றில் கலந்துகொண்ட மகிந்த பயங்கரவாதம் தலையெடுக்க அனுமதிக்க மாட்டேன் என்றார். அனைவரும் இலங்கையரே என முழங்கினார்.
சிங்கள பௌத்த மயமாக்கலுக்கு ஆதரவாக யாழ்ப்பாணத்திலிருந்து இயங்கும் குகநாதனின் டான் ரிவி தனது பிரச்சாரங்களை ஏலவே முடுக்கிவிட்டிருந்தது. அதில் கலந்துகொண்ட புலம்பெயர் ‘ஜனநாயக வாதிகள்’ யாழ்ப்பாணத்தில் மிக நீண்டகாலமாக பௌத்தமத வழிபாடுகள் நடைபெற்றதற்கான ஆதரங்கள் இருந்ததாகக் குறிப்பிட்டனர்.
மகிந்த சிறிது நேரம் தமிழில் உரையாற்றினார். மகிந்தவுக்கு வெற்றிலை கொடுத்து வரவேற்றார்கள். தேசிய ரீதியில் கணிதப்பிரிவில் மூன்றாம் இடம் பிடித்த ஹாட்லி கல்லூரி மாணவனுக்கு மகிந்த பரிசு வழங்கிய போது தலைமை ஆசிரியரும் வேறு சிலரும் விழுந்தடித்துகொண்டு முதுகு வளைந்து மகிந்தவுடன் கை குலுக்கினார்கள். மகிந்தவின் பாதம் பட்டததால் ரில்கோ கொட்டேல் விமோசனம் அடைந்திருக்கும். கைதாகியுள்ள பல்கலைக் கழக மாணவர்கள் இன்று விடுதலை செய்யப்படுவதாக மகிந்த அறிவித்துள்ளார்.