போலீஸ் பக்ருதீன் கைது செய்யப்பட்ட முறையில் விதிகள் மீறப்பட்டதா? என்பதுபற்றி அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தீவிரவாத செயல்களில் ஈடுபட்டதாக கூறி பக்ருதீன் என்ற போலீஸ் பக்ருதீன் சமீபத்தில் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் ஐகோர்ட்டில் இந்திய தேசிய லீக் கட்சியின் பொதுச்செயலாளர் ஜெ.அப்துல் ரஹீம் மனு தாக்கல் செய்தார்.
இக் கைது ஒரு தீவிரவாதச் செயல் போன்று நடத்தப்பட்டுள்ளது. தமிழக அரசும் போலீஸ் துறையும் இரு வேறான தலவல்களைக் கூறுகின்றன.
அதில், பக்ருதீன் எனது நண்பர். அவரை கைது செய்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் அதை உறுதி செய்ய போலீசார் மறுக்கின்றனர். எனவே அவரை என்கவுண்டர் என்ற பெயரில் துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்ய போலீசார் திட்டமிட்டுள்ளனரோ என்ற அச்சம் உள்ளது என்று கூறியிருந்தார்.
இதற்கு பதில் அளித்த அரசு, பக்ருதீனை கைது செய்திருக்கிறோம். இதுதொடர்பான தகவலை அவரது தாயாரிடம் கூறிவிட்டோம் என்று குறிப்பிட்டது. இந்த நிலையில் ஐகோர்ட்டில் கூடுதல் மனு ஒன்றை அப்துல் ரஹீம் தாக்கல் செய்துள்ளார்.
நீதிபதிகள் எஸ்.ராஜேஸ்வரன், ஏ.ஆறுமுகசாமி முன்பு அந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் வக்கீல் எம்.ராதாகிருஷ்ணன் ஆஜராகி வாதிட்டார். அவர் கூறியதாவது:-
பக்ருதீனின் கைது குறிப்பாணையின் நகலை வேலூர் கோர்ட்டில் இருந்து வாங்கினோம். அதில், அவரை கைது செய்ததாக கூறி, திருவண்ணாமலை சி.பி.சி.ஐ.டி. இன்ஸ்பெக்டர் கே.அண்ணாதுரை கையெழுத்திட்டுள்ளார்.
இந்த நிலையில் 15-ந்தேதி அரசாணை ஒன்றை தமிழக அரசு வெளியிட்டது. அதில், பக்ருதீனை கைது செய்த லெட்சுமணன், ரவீந்திரன் மற்றும் வீரகுமார் ஆகியோருக்கு சன்மானம் வழங்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி பார்த்தால், அந்த கைது குறிப்பாணை தவறானது என்று தெரிய வருகிறது.