Friday, May 9, 2025
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

போலிஸ் கொலைகள் தமிழகம் முதலிடம்! : மதி

இனியொரு... by இனியொரு...
03/08/2010
in பிரதான பதிவுகள் | Principle posts, அரசியல்
0 0
11
Home பிரதான பதிவுகள் | Principle posts

பெருந்திரள் மக்கள் போராட்டங்கள் இந்தியா முழுக்க வெடித்து வரும் நிலையில், இன்னொரு பக்கம் பிராந்தியவாதமும் அதன் பிராந்திய அடையாள அரசியலும் ஒரு பக்கம் விரிவடைந்து செல்கிறது. உலகமயச் சூழலில் வெடித்தெழும் மக்கள் போராட்டங்களை ஒடுக்க அரசும் போலீசும் கையாளும் ஒரு வழிமுறைதான் இத்தகைய என்கவுண்டர்கள்.சத்தீஸ்கர் மாதிரியான மாநிலங்களில் அரசே “சல்வார்ஜுடூம்”மாதிரியான குண்டர் படையை உருவாக்கி அரசுக்கு விரோதமாக போராடுபவ்ர்களை அழித்தொழிக்கும் பொறுப்பை இம்மாதிரி அடியாள் படைகளுக்கு வழங்கிவிடுகிறது.

ஆனால் தமிழகத்தில் அம்மாதிரி சூழல் இல்லை எல்லா காலத்திலும் நகச்ல்பாரிகளை வேட்டையாடவும் அடங்க மறுக்கும் ரௌடிகளை மட்டுமே வேட்டையாடவும் என்கவுண்டர் பயன்படுத்தப்பட்டு வருகிறது.ஆனால் இந்த நீண்ட கொலைகளுக்கு பிறகும் ஒரு ரௌடி உருவாகி வருவதையோ தீவிர சோஷலிச எண்ணமுள்ள இளைஞர் ஒருவர் ஆயுதம் தூக்குவதையோ அரசாலோ போலீசாலோ தடுத்து நிறுத்த முடியவில்லை என்பதுதான் உண்மை.

இந்த காவல்துறை ரௌடிகள் மோதல் தொடரத் தொடர இன்னொரு பக்கம் சேரிகளில் இருந்தும் கூவம் நதியின் கரையோரங்களில் இருந்தும் ரௌடிகள் உருவாகிக் கொண்டுதான் இருக்கிறார்கள்,என்றாவது ஒரு நாள் நாம் போலீசால் வேட்டையாடப் படுவோம் என்பது தெரிந்திருந்தும் அவர்கள் புதிய ரௌடிகளாக உருவாகிக் கொண்டிருக்கிறார்கள்.

பொதுவாக இன்று நடந்து கொண்டிருக்கும் என்கவுண்டர்கள் தொடர்பாக இரண்டு கேள்விகள் நமது மனதில் தோன்றுகிறது.

ஒன்று இம்மாதிரி கொலைகளை செய்யும் அதிகாரம் சட்டபூர்வமாக போலீசுக்கு வழங்கப்பட்டிருக்கிறதா?

போலீஸ் மோதலின் போது நிகழும் இம்மாதிரி கொலைகளை சட்டம் அனுமதிக்கிறதா? எனக் கேட்டால் தற்காப்புக்காக போலீசார் இம்மாதிரி கொலைகளை செய்யலாம் என்கிறது இந்திய குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 46 – வது பிரிவு.மரணதண்டனையோ ஆயுள் தண்டனையோ பெறக் கூடிய அளவுக்கு குற்றம் புரிந்த ஒரு நபரைக் கைது செய்ய முயலும் போது தற்காப்புக்காக தேவைப்பட்டால் குற்றவாளி என கருதும் நபருக்கு மரணத்தை விளைவித்தால் கூட குற்றமில்லை என்கிறது.ஆனால் சட்டம் எப்படி காவலர்களுக்கு சட்டப் பாதுகாப்பை வழங்கியிருக்கிறதோ அதே பாதுகாப்பை குற்றவாளிகள் எனக் கருதப்படுகிறவர்கள்க்கும் வழங்கியிருக்கிறது.என்கவுண்டரில் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டால் அந்தக் கொலையில் தொடர்புடைய காவலர் அல்லது அதிகாரி மீது இந்திய தண்டனைச் சட்டம் 307 – வது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட வேண்டும்.

அந்த அதிகாரி சான்றுச் சட்டத்தின் கீழ் தான் செய்த கொலையானது தற்காப்பின் நிமித்தமே நிகழ்த்தப்பட்டது என்பதை நீதிமன்றத்தில் நிரூபிக்க வேண்டும்.இம்மாதிரி மோதல் சாவுகளை நிகழ்த்தும் காவல்துறை அதிகாரிகளுக்கு பதவி உயர்வுகளோ அன்பளிப்பு பரிசுகளோ கொடுத்து ஊக்குவிக்கக் கூடாது என தேசீய மனித உரிமைகள் ஆணையம் அனைத்து மாநில அரசுகளுக்கும் வழிகாட்டும் நெறிமுறைகளையும் வழங்கியுள்ளது.ஆனால் தமிழகத்தில் இம்மாதிரியான என்கவுண்டர்களில் ஈடுபடும் அதிகாரிகளுக்கு பதவி உயர்வும் விருதுகளும் வழங்கப்படுகிறது.

ஆனால் இம்மாதிரி வாழ்வுரிமை ரீதியிலான வழிகாட்டுதலகள் எதையும் என்கவுண்டரின் போதும் அதற்குப் பின்னரும் காவல்துறை பின்பற்றுவதில்லை என்பதுதான் குற்றச்சாட்டு.என்கவுண்டரின் தொட்டில் என்றால் அது மும்பை நகரம் என்று இருந்தது.

டில்லி, குஜராத் மாநிலங்களிலும் போலி மோதலகள் நடைபெற்றிருக்கின்றன. டில்லியில் இரு வியாபாரிகளை தீவீரவாதிகள் எனச் சொல்லி சுட்டுக் கொன்ற காவல் உதவி ஆணையர் ரதி உட்பட பத்து போலீசாருக்கு சிறைத் தண்டனை வழங்கப்பட்டிருக்கிறது.

பல மாநிலங்களிலும் சில காவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டு நீதிமன்றத்துக்கு அலைந்து கொண்டிருக்கிறார்கள்.மும்பை நகரத்தின் காவலதிகாரியாக இருந்த பிரதீப் வர்மாவுக்கு காவல் வட்டாரத்திலும் ரௌடிகள் மத்தியிலும் வைக்கப்பட்ட செல்லப் பெயர் ‘அப்தக் 100’அதாவது நூறு என்கவுண்டர் செய்தார் என்பதால் அப்படி செல்லப் பெயர் வந்ததாம்.பிரதீப் வர்மாவின் காவல் வாழ்வை சித்தரித்து எடுக்கப்பட்டதுதான் நானாபடேகரின் ‘அப்தக் 56’ இந்தப் படத்தில் நடித்த நானா படேகருக்கு பிரதீப் வர்மா எபபடி என்கவுண்டர் செய்வது,நடந்த மோதலை எப்படி தந்திரமாக கையாள்வது என்றெல்லாம் வகுப்பெடுத்தாராம்.

அப்பேர்ப்பட்ட பிரதீப் வர்மாவின் வாரிசுதான் தயாநாயக் இவர் செய்த என்கவுண்டர்களோ 83.மாதம் எட்டாயிரம் ரூபாய் ஊதியம் வாங்கும் தயாநாயக்கின் சொத்து மதிப்போ நூறு கோடி.ரௌடிக் கும்பலிடம் பணம் வாங்கிக் கொண்டு எதிர் கோஷ்டிகளை அழித்தொழிப்பதுதான் இருவரின் வேலையும் இன்று இவர்கள் பணி நீக்கம் செய்யப்பட்ட கதைகளும் உண்டு.

2007-ல் தெஹல்கா இதழ் இந்தியா முழுக்க உள்ள என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் காவல்துறை அதிகாரிகளின் பட்டியலை வெளியிட்டிருந்தது.அதில் தமிழக காவல்துறை அதிகாரிகளின் பெயர் எதுவும் இல்லை.

ஆனால் மும்பைக்கோ, குஜராத்திற்கோ, டில்லிக்கோ நாங்கள் ஒன்றும் சளைத்தவர்கள் அல்ல என்பது போல போட்டி போட்டுக் கொண்டு போலி மோதல்களை அரங்கேற்றிக் கொண்டிருக்கிறார்கள் தமிழக காவல்துறையினர். எப்படி வட இந்தியாவில் என்கவுண்டர் ஸ்பெஷலிஷ்டுகள் உண்டோ அப்படி தமிழக காவல்துறையிலும் உண்டு. அதில் மிக பிரலபாமக அறியப்பட்டவதான் வெள்ளைதுரை என்கிற மதுரை துணை கமிஷனர்.

சாதாரண கான்ஸ்டபிளாக தன் வாழ்வைத்துவக்கிய வெள்ளைதுரையின் சொத்து மதிப்பை யாராவது புலனாய்வு செய்து வெளிக்கொண்டு வந்தால் பல உண்மைகள் வெளிவரும்.

தவிறவும் காவல்துறையின் மிக உயர்ந்த பதவியில் இருக்கும் பல அதிகாரிகள் பதவியில் இருந்து கொண்டே தொழிலதிபர்களாகவும் இருக்கிறார்கள். சில அதிகாரிகள் ரியல் எஸ்டேட் தொழிலில் கொடிகட்டிப் பறக்கிறார்கள். தாங்களின் இந்தத் தொழிலுக்கு துணையாக தங்களின் பதவியை அதிகார துஷ்பிரயோகமும் செய்து கொள்கிறார்கள். பல நேரங்களில் பெரும் பணக்காரர்களிடம் பல லட்சங்கள் பணங்களைப் பெற்றுக் கொண்டும் சில கொலைகளை செய்கிறார்கள் என்ற சந்தேகங்கள் நிலவுகிறது.

இரண்டாவது கேள்வி சட்டம் தன் கடமையைச் செய்யாதா?

சட்டம் எல்லாக் குடிமக்களையும் சமமாகவோ ஒன்றாகவோ பாவிப்பதில்லை என்பதற்கும் பல நேரங்களில் அது போலீஸ் மனதோடு செயல்படுகிறது என்பதற்கு இரண்டு உதாரணங்களைச் சொல்ல முடியும் சென்ற ஆண்டு சுட்டுக் கொல்லப்பட்ட வெள்ளை ரவி மீதான வழக்குகளை விசாரிக்க தனிநீதிமன்றம் அமைக்கச் சொல்லி 1999 – ல் உத்தரவிட்டது அரசு.அப்போது அவரது மீதிருந்த வழக்குகளின் எண்ணிக்கை 24.ஆனால் தனி நீதிமன்றம் அமைக்கப்பட்டதோ 2003 – ல் அதற்குள் பல வழக்குகளில் இருந்து நிரபராதி என விடுதலை ஆனார் வெள்ளைரவி. மேலும் பல வழக்குகள் அவர் மீது போடப்பட்டது.கடைசியில் எந்த ஒரு வழக்கிலும் தண்டிக்காப்படாமல் போலீஸ் மோதலில் சுட்டுக் கொல்லப்பட்டார். மணல் மேடு சங்கரின் கதையோ வித்தியாசமானது.அவர் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் போதே தான் என்கவுண்டர் செய்யப்படுவோம் என பயந்தார்.அவரது தாய் மனித உரிமை அமைப்புகளிடம் போய் முறையிட்டார் மனித உரிமை அமைப்பினர் நீதிமன்றம் சென்றனர்.மணல் மேடு சங்கரின் தாய் உயர்நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்தார்.

நீதிமன்றம் தமிழக அரசிடம் இது குறித்து விளக்கம் கேட்ட போது அப்படி மணல் மேடு சங்கரைக் கொல்லும் திட்டம் எதுவும் தமிழக காவல்துறைக்கு இல்லை என நீதிமன்றத்தில் சொன்னது தமிழக அரசு ஆனால் அடுத்த சில வாரங்களிலேயே நீதிமன்றத்திலிருந்து சிறைக்கு கொண்டு செல்லும் வழியில் மணல் மேடு சங்கர் மோதலில் கொல்லப்பட்டார்.

ரௌடி, போலீஸ், அரசியல்வாதிக் கூட்டு……. தண்டனை ரௌடிக்கு மட்டும்?

முன்னர் ரௌடிகளுக்கும் அரசியல்வாதிகளுக்கும் நேரடியான தொடர்புகள் இருந்ததில்லை. ஆனால் எண்பதுகளுக்குப் பின்னரே ரௌடிகள் அரசியல் ரௌடிகளாக உருவானார்கள். லோக்கல் கவுன்சிலராக இருந்து வட்டம், மாவட்டம் என்று படிப்படியாக திருட்டு அரசியல்வாதியாக உருவான காலம் போய் வாரிசுகளுக்கு மட்டுமே பதவிகள் என்று உருவானது எண்பதுகளுக்குப் பின்புதான்.

இந்தியா என்ன நேருவின் குடும்பச் சொத்தா? என்று கேள்வி எழுப்பிய கருணாநிதிதான் தென்னிந்தியாவில் வாரிசு அரசியலின் மூல கர்த்தா. வாரிசு அரசியலுக்கும் ரௌடி அரச்யலுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. லோக்கல் தாத்தாக்கள் அரசியல்வாதிகள், போலீஸ் கூட்டு இல்லாமல் வளர முடியாது. ரௌடிகள் கூட்டு இல்லாமல் அரசியல்வாதியோ போலீஸோ செயல்பட முடியாது. ஊழல் மலிந்து போன இந்த அமைப்பில் ஒன்றை ஒன்று சார்ந்தே இயங்கிக் கொண்டிருக்கிறது.

தொண்ணூருகளுக்குப் பிறகு அரசியல்வாதி ரௌடிக் கூட்டு என்பது இந்தியாவின் எல்லா மாநிலங்களிலும் பரவி விரிவடைந்தது. ஒரு அரசியல்வாதி செல்லும் போது அவருடன் செல்லும் பத்துப் பேரில் ஐந்து பேராவது அல்லக்கைகளாக இருப்பார்கள். இந்த அல்லக்கைகள் என்போர் தனித்து எதுவிதமான அதிகாரமும் இல்லாமல் அரசியல்வாதியின் செல்வாக்கிலேயே வலம் வருவார். அரசியல்வாதிக்கும் அவரின் வாரிசுகளுக்கும் பாதுகாப்புக் கொடுப்பதுதான் இவரது வேலை. தவிறவும் அரசியல்வாதி கொடுக்கும் அசையின்மெண்டுகளை அவ்வப்போது முடித்துக் கொடுப்பதுதான் இந்த அல்லக்கை ரௌடிக்கு வழங்கப்பட்டிருக்கும் வேலை.

இவர் அரசியல்வாதியின் நிழலில் இருக்கும் போது இயல்பாகவே இவர் போலீசின் நண்பராகவும் ஆகிவிடுகிறார். அவர்களுக்கும் தன்னால் ஆன சேவைகளைச் செய்கிறார். அயோத்திக்குப்பம் வீரமணி, பங்க் குமார், வெள்ளை ரவி, மணல் மேடு சங்கர், என்று நீளும் கொலையுண்ட ரௌடிகள் அனைவருமே ஒவ்வொரு காலத்திலும் ஏதோ ஒரு அரசியல்வாதிக்கு பயன்பட்டவர்கள்தான். திமுக, அதிமுக, பமக என்று கட்சி வேறு பாடுகள் எல்லாம் கிடையாது. ஆனால் தங்களின் ரௌடி அரசியலுக்கு பயன்படும் இந்த ரௌடிகளை நிரந்தரமாக எந்த அரசியல்வாதிகளும் வைத்துக் கொள்வதில்லை. காரியம் முடிந்ததும் முடித்துக் கொடுத்தவனையே போலீஸை விட்டுப் போட்டுத் தள்ளிவிடுவார்கள்.

சில நேரங்களில் சிறைக்கு அனுப்பி அங்கே ரௌடிகளை மோத விட்டும் கொல்வார்கள். சம்பந்தப்பட்ட ரௌடியைக் கொன்ற பின் கொன்றவன் வெளியில் வந்ததும் எதிர்தரப்பு ஆளைத் தூண்டி விட்டு அவனையும் தீர்த்துக் கட்டி விடுவார்கள். இதெல்லாம் ரௌடிகளுக்கிடையிலான மோதல் என்கிற அளவிலேயே முடிந்து விடும்.இப்படி முடியாத முடிக்க இயலாத தாத்தாக்களை போலி மோதல் என்ற பெயரில் சுட்டுக் கொன்றும் விடுவார்கள்.

1993-ஆம் ஆண்டு நடந்த மும்பை குண்டு வெடிப்பில் மூளையாக செயல்பட்ட தாவூத் இப்ராஹிம் மெமன் சகோதரர்கள் ஆகியோருக்கும் உள்ளூர் அரசியல்வாதிகளுக்கும் தொடர்புருப்பதாக சர்ச்சை எழுந்த போது.அதை விசாரிக்க முன்னாள் உள்துறை செயலாளர் என்.என்.வோரா தலைமையில் ஒரு விசாரணைக்குழுவை அமைத்தது காங்கிரஸ் அரசு.1995-ல் அந்த கமிட்டியின் அறிக்கை நாடாளுமன்றத்தில் வைத்த போது அந்த அறிக்கையின் விபரங்களைப் பார்த்து நாடே அதிர்ந்து நின்றது.உள்ளூர் அளவிலும் துறைமுக நகரங்களிலும் மிகப்பெரிய நகரங்களிலும் கள்ளச்சாரயம் சூதாட்டம் பாலியல் புரோக்கர் என வளரும் சிறு குற்றவாளிகள் பின்னர் போதைபொருள் கடத்தல் ரியல் எஸ்டேட் கந்து வட்டி என வளர்ந்து போலீஸ் அரசியல்வாதிகளின் கூட்டோடு எப்படி கோலோச்சுகிறார்க்காள்.என என வோரா கமிட்டி சுட்டிக்காட்டியது.ரௌடிகளுக்கு அரசியல்வாதிகளுக்கும் உருவாகியிருக்கும் கூட்டணியை ஒழிக்க வோரா கமிட்டி NODAL AGENCY என்கிற உயர் அதிகாரம் படைத்த அமைப்பு ஒன்றை உருவாக்க வேண்டும் என பரிந்துரைத்தது.ஆனால் காங்கிரஸ் பிஜேபி உடபட அனைத்து கட்சிகளுமே வோரா கமிட்டியின் பரிந்துரைகளை எதிர்த்தார்கள்.காரணம் கட்சி வேறு பாடில்லாமல் அனைத்து கட்சிகளிலும் சமூக விரோதிகள் கலந்திருந்தார்கள்.கடந்த பதினைந்து ஆண்டுகளில் தமிழகத்திலும் இந்த தாதா அரசியல் கூட்டு அனைத்து கட்சிகளிலும் வளர்ந்திருக்கிறது. தங்களின் தேவைக்கு ரௌடிகளை வளர்ப்பதும் அரசியல் வாதிகள்தான் வளர்த்த கடா வேண்டாத கடா ஆகி மார்பில் பாயும் போது போலீசை ஏவி அவர்களை அழித்தொழிப்பதும் அரசியல்வாதிகள்தான்.கடந்த காலங்களில் போலீஸ் மோதல்களில் கொல்லப்பட்ட நக்சல்பாரிகளைத் தவிர ரௌடிகள் அனைவருமே ஏதோ ஒரு அரசியல் கட்சியால் பாலூற்றி வளர்க்கப்பட்டவர்கள்தான்.தேர்தல் காலங்களில் தங்களின் அராஜக அரசியலுக்கு தொண்டர்களைக் காட்டிலும் இம்மாதிரி ரௌடிகளை நம்பியே இருக்கிறது பெரும்பாலான அரசியல் கட்சிகள்.பிரமுகர்கள்,அரசியல்வாதிகள்,காவல்துறை உயரதிகாரிகள்,கல்வி நிறுவன அதிபர்கள் என அனைவ்ருமே ஏதோ ஒரு ரௌடியை தங்களின் தொழிலுக்கு துணையாக வைத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.ஏனென்றால் ரௌடிகள் இல்லாமல் இந்த தொழில்களை இவர்களால் செய்ய முடியாத அளவுக்கு சூழல் மாசுபடுத்தப்பட்டிருக்கிறது.கிராம கூட்டுறவு வங்கிகள்,ரேஷன் கடைகள் என சிறு ராஜ்ஜியமாக உருவாகும் இம்மாதிரி அரசியல் ரௌடிகள் அரசியல் வாதிகளின் ஆசியோடும் போலீசின் துணையோடும்தான் வளருகிறார்கள் என்பதற்கு கடந்த காலங்களில் சுட்டுக் கொல்லப்பட்ட ரௌடிகளின் இறந்த கால அரசியல் தொடர்புகளை கிளரினாலே தெரியும்.

புத்திசாலி ரௌடிகள் எம்.எல்.ஏ. எம்.பி. ஆகி விடுகிறார்கள்….

ஒரு கான்ஸ்டபிள் சாராய வழக்கில் சிக்கி சஸ்பெண்ட் ஆனார். என்ன செய்யலாம் என யோசித்தவர் வசிதிக்காக கரைவேட்டி ஒன்றை வரித்துக் கொண்டார். மெள்ள அந்தக் கட்சியின் தலைவருடன் நெருக்கம் பேணியவர் அவருக்கு பாதுகாப்புப் பொறுப்பை எடுத்துக் கொண்டார். தலைவர் எங்கு போனாலும் பத்து பல சாலிகளோடு பாதுகாப்புக் கொடுப்பதுதான் அவரது வேலை. அடியாள் வேலை பார்த்த இந்த மனிதர் இன்று இந்தியாவின் பெரிய கல்வி வள்ளல். தமிழகத்தில் மிகப்பெரிய பொறியியல் கல்லூரிகளின் அதிபர் என்பதோடு தனது பல்கலைக்கழகத்தின் பெயரில் கமலஹாசன், ரஜினிகாந்த் உள்ளிட்ட நடிகர்கள், பெரியமனிதர்களுக்கு டாக்டர் பட்டங்களை வாரி வழங்குகிறார். இது போல தென்னகத்தில் எஸ்.ஏ. ராஜா என்று ஒரு கல்வி வள்ளல் இருந்தார் அப்போதே ஆகப் பெரிய ரௌடியாக வலம் வந்தார். போலி மருத்துவக் கல்லூரி நடத்தி எண்பதுகளிலேயே அம்பலப்பட்டவரை அரசியல் தொடர்புகள் காப்பாற்ற கல்வி எல்லை விரிவடைந்தது. ஆனால் போட்டிக்கு இன்னொரு பெரிய மனிதர் வந்தார். அவர் திமுகவின் முன்னாள் சட்ட அமைச்சரான ஆலடி அருணா ஆலடி இதே பகுதியில் பொறியியல் கல்லூரியைத் துவங்க ஒரு நாள் காலையில் வாக்கிங் போன ஆலடி அருணாவை வெட்டிப்படுகொலை செய்தது எஸ். ஏ. ராஜாவின் கூலிப்படை. சென்னை விமான நிலையம் மூலம் வெளிநாட்டிற்கு தப்பிச் செல்ல முயன்ற எஸ். ஏ. ராஜா இப்போது சிறையில் இருக்கிறார். ஆலடி அருணாவின் அரசியல் வாரிசான பூங்கோதை திமுக அமைச்சராக இருப்பதால் இந்த வழக்கிலிருந்து எஸ். ஏ. ராஜாவால் தப்ப முடியாவில்லை. ஆனால் கொலை செய்யும் எல்லா ரௌடிகளையும் திமுகவோ சட்டமோ தண்டித்து விடுகிறதா? என்ன?

கருணாநிதியின் குடும்பப் பிரச்சனை காரணமாக மதுரையில் தினகரன் பத்திர்கை அலுவலகம் கொளுத்தப்பட்டு மூன்று தினகரன் ஊழியர்கள் கொல்லப்பட்டார்கள். அதற்கு காரணம் கருணாநிதியின் மகன் மு.க.அழகிரி என்பது ஊரரிந்த விஷயம் ஆனால் அழகிரியின் அடியாளாக அந்த கொலை பாதகத்தை முன்னின்று நடத்தியது அட்டாக் பாண்டி என்னும் அரசியல் ரௌடியும் மதுரை மேயர் தேன்மொழியும் முன்னிநின்று நடத்தியவைதான் இந்தக் கொலைகள். ஆனால் தேன்மொழி இன்றும் மதுரை மேயராக இருக்கிறார்.இந்த கொலை வழக்குகளில் கைது செய்யப்பட்ட அட்டாக் பாண்டி சில நாட்களிலேயே வெளியில் வர இப்ப்போது அவனுக்கு மதுரை மாவட்ட விவ்சாயத்துறை ஆலோசனைப் பதவி வழங்கப்பட்டிருக்கிறது. அதாவது கொலைகார அரசியல் ரௌடி இப்போது அரசுப் பதவியில். கருணாநிதியின் சமூக நீதி என்பது இன்றைய காலத்தில் ரௌடி அரசியலின் கூட்டுடனே நடந்து கொண்டிருக்கிறது. கருணாநிதி மட்டுமல்ல ராமதாஸ், வைகோ, ஜெயலலிதா, திருமாவளவன் என எந்தத் தலைவரை எடுத்துக் கொண்டாலும் ரௌடிகளின் துணையில்லாமல் அரசியல் செய்ய முடியாத சூழலை இவர்களே உருவாக்கி விட்டார்கள்.

முன்னரெல்லாம் கூலிக்கு அடியாட்களை நியமிப்பார்கள். இப்போது இவர்களுக்கு அந்த அவசியமே இல்லை. ரௌடிகள்தான் அரசியல்வாதிகள்…அரசியல்வாதிகள்தான் ரௌடிகள். ஒத்துவராதவர்களை போட்டுத் தள்ளிவிட்டு எஞ்சியிருப்போரை தங்களின் வாரிசு அரசியலுக்கு தூபம் போடும் அரசியல் அடியாட்களாக உருவாக்குவதுதான் இன்றைய திமுகவின் திராவிட இயக்க அரசியல்.

இறுதியாக,

அதிகார மையங்களான போலீஸ்,அரசியல்வாதிகள்,ரௌடிகள் கூட்டை ஒழிக்காமல் ரௌடியிசத்தை ஒழிக்கவே முடியாது. ஆனால் ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் என்கவுண்ரில் கொல்லப்பட்ட வெங்கடேஷப் பண்ணையார் என்னும் பிற்படுத்தப்பட்ட ஆதிக்கசாதி ரௌடியை ஜெயலலிதாவின் போலீஸ் சுட்டுக் கொன்ற போது அதை வைத்து தெற்கில் ஆதாயம் அடைந்தது திமுக.

அந்த என்கவுண்டர் தியாகமாக மாற்றப்பட்டது. ராதிகா செல்வி என்கிற ஒரு எம்பி திமுகவுக்குக் கிடைத்தார்.ஆனால் சாதிச் செல்வாக்கற்ற ஒடுக்கப்பட்ட சாதிகளைச் சார்ந்த ரௌடிகளின் மரணங்கள் இவ்விதமாய் மாற வாய்ப்பில்லை.அம்மாதிரி அதிகாரமாய் மாற வாய்ப்பற்ற என்கவுண்டர்களை அரசியல்வாதிகள் பயன்படுத்திக் கொள்வதுமில்லை.

இன்றைய திராவிட இயக்கத்தின் ஓட்டு அரசியலில் பிற்படுத்தப்பட்ட ஆதிக்கசாதிகள் எப்படி ஆதாயம் அடைந்து திராவிட இயக்க அரசியலே பிற்படுத்தப்பட்ட ஆதிக்கச்சாதிகளுக்கானது என்று மாறிப்போன நிலையில் எல்லா துறைகளைப் போலவே என்கவுண்டர்களிலும் ஒடுக்கப்பட்ட சாதிகளைச் சார்ந்தவர்களின் கொலைகள் கேள்விகளற்றுப் போய் விடுகின்றன. இதற்கு பல உதாரணங்களைச் சொல்ல முடியும்.

சென்ற வாரத் தொடர்ச்சி..

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

அ. மார்க்ஸ் கொழும்பில்.....

Comments 11

  1. senthi says:
    15 years ago

    இந்த கட்டுரை எழுத தூண்டிய உங்களது தைரியத்தை பாரட்ட வார்த்தையில்லை.  ரௌடிசம் என்பது அரசியலில் கலந்த ஒன்று என அனைவரும் அறிந்திருந்தாலும் அந்த சாக்கடை அரசியல்வாதிகளின் பெயரோடு அநியாயத்தை பறைச்சாற்றிய தங்களின் மனோதைரியம் நீடுழி வாழ வாழ்த்துகிறேன்!  கண்முன் அநியாயம் நடந்தாலும் கேள்வி கேட்க திராணியின்றி தைரியமின்றி எம் போன்ற நடுத்தர மக்கள் இருக்கும் அளவிற்கு ஒவ்வொரு நாளும் பல்மடங்கு பெருகி வரும் இந்த கேடுகெட்ட போலீசாரின் ரௌடிசமும் அரசியல்வாதிகளின் ரௌடிசமும் எங்கு கொண்டு முடியுமோ!

    • rapheal says:
      15 years ago

      கரூர் அருகில் ராயலூர் முகாமில் சுமார் 1000 ஈழ ஏதிலிகள் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்,
      இங்கு உள்ள மூவரை சில நாட்களுக்கு முன்பு காவல்துறையினர் கைதி செய்து ,
      முன்று வருடங்களுக்கு முன்பு நடந்த ஒரு கொலை வழக்கில் அவர்களை தொடர்பு படுத்தி கொலை
      குற்றவாளிகளாக ஒப்புக்கொள்ளும்படி மிரட்டி உள்ளனர்.

      அவர்கள் மறுத்த நிலையில்,
      அந்த முன்று அகதிகளில் ஒருவரின் மனைவியை சந்தேகத்தின் பேரில் காவல் நிலையம் அழைத்து
      சென்று தன் கணவனை கொலை குற்றத்தை ஒப்புகொள்ள சொல்லு மாறு அந்தப் பெண் துன்புறுத்தப்பட்டு
      உயிர் அச்சுறுத்தலுக்கும் உள்ளாக்கப்பட்டுள்ளார்.

      மன உளைச்சலின் காரணமாக அந்தப் பெண் தீக்குளித்து உயிருக்கு ஆபத்தான நிலையில் கரூர் அரசு
      மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.கரூர் அரசு மருதுவமையில் சிகிச்சை பெற்று
      வரும் தீக்குளித்த பெண்ணின் தோழி கூறியதாவது நான் ராயலூர் எதிலி முகாமில் இருக்கும்
      பெண், எனது தோழி தான் தீக்குளித்து இப்பொது உயிருக்கு போராடி கொண்டு இருக்கும் பெண்,
      இந்த பெண்ணின் கணவர் உட்பட முன்று ஆண்களை காவல் துறையினர் கடந்த பத்து நாட்களுக்கு
      முன்பு கைது செய்து சென்றனர், பத்து நாட்களாக கணவர் வீடு திரும்பாத நிலையில் கவலையுற்று
      இருந்த இந்த பெண்ணை நேற்று ஐந்து காவல்துறையினர் காவல்துறையினரின் உடுப்பில் இல்லாமல்
      மாற்று உடுப்பில் வந்து, உனது கணவர் உன்னை சந்திக்க விரும்புகிறார் நீ உடனே கிளம்பி வா
      என்றதும் இந்த பெண் அவர்கள் சொல்வதை நம்பி தன் கணவனை பார்க்கும ஆர்வதுடன்,
      கால்வதுறையினர் உடன் அவர்கள் வந்திருந்த வாகனத்தில் மதியம் சுமார் 1.30 மணி
      அளவில் கிளம்பிச் சென்றார்.

      பிறகு மாலை 6.30 மணியளவில் அந்த பெண் வாகனத்தில் இருந்து மிகுந்த சோர்வுற்ற
      நிலையில் இறங்கி அழுதுகொண்டே வந்தாள். அவளிடம் சென்று நாங்கள் என்ன ஆனது
      என்று கேட்டபோது, அவளது வாழ்வு வீனாகப்
      போனதாகவும் இனி வாழ்வதில் அர்த்தம் இல்லை எனவும் அழுது கொண்டே கூறினாலள்,
      நாங்கள் அந்த பெண்ணுக்கு ஆறுதல் சொல்லி விட்டு வீடு திரும்பிய போது அவள் தனது
      வீட்டில் இருந்த மண்ணெண்ணையை தன் மீது உற்றி தன்னை எரித்து கொண்டாள்,
      அதை பார்த்ததும் நாங்கள் விரைந்து சென்று அவளை கரூர் அரசு மருத்துவ மனையில்
      சேர்த்தோம்.

      இப்பொது மருத்துவர் இந்த பெண்ணை காப்பாற்ற முடியாது என்று
      கூறிவிட்டார், அந்த பெண்ணின் கணவர் இன்னும் சிறையில் தான் உள்ளார், அவர் தனது
      மனைவியை பார்க்க அனுமதிக்கவில்லை போலும், இந்த பெண்ணிற்கு ஒரு மகன் உள்ளார்
      அவர் பெங்களூரில் படித்து வருகிறார், அவருக்கு செய்தியை சொல்லியுள்ளோம் !
      எங்களுக்கு வேண்டியது எல்லாம் இந்தப் பெண்ணிற்கும் அவளது மகனுக்கும் நீதி, அதேபோல்
      எங்களுக்கும் பாதுகாப்பு, இன்று இந்த பெண்ணிற்கு நடந்தது போல் நாளை எனக்கும் என்னைப்
      போன்ற பெண்களுக்கும் நடக்கக்கூடும்,
      அப்போது நாங்களும் இதே போன்ற துன்பத்திற்கு தான் ஆளாக நேரும். என்று அவர் மேலும் தெரிவித்தார்

  2. ramana says:
    15 years ago

    இதெல்லாம் நடக்கும் போது தமிழ் நாட்டில் உள்ள “பொறுக்கி” தேசியவாதிகள் என்ன செய்து கொண்டு இருக்கிறார்கள். அவர்களுக்கு புலம் பெயர் நாட்டில் இருக்கும் பணம் தான் முக்கியமாகப் படுகிறது.

  3. alex.ravi@gmail.com says:
    15 years ago

    ஓர் நடிகை புகார் செய்யாமலே ஓர் திருட்டு வீடியாவை வைத்து, பணம் சம்பாதிக்கும் சன் டிவியோ, நக்கீரன் பத்திரிகையோ, மற்றும் தலைப்பு செய்தியாகப் போட்டு வியாபாரத்தை கூட்டும் பத்திரிகையாளர்களோ, இந்த மாதர் அமைப்புகள் என்று சொல்லும் அமைப்புகளோ இந்த அபலைப் பெண்ணிற்கு நீதிக்கு போராடுவார்களா? இல்லை ஈழத்தமிழர், ஈழத்தமிழர்…. என்று கூக்குரல் போடும் அரசியல்வாதிகள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் நீதிக்கு முன் இட்டுச்சென்று தண்டனை வான்கிக்கொடுப்பார்களா?

    அல்லது இன்று ஈழ அகதிப் பெண்ணை பாலியல் வன்முறை செய்த தமிழக போலிசாரை அவ் உயர் அதிகாரிகள் விசாரித்து அவ் அவலைப்பெண்ணிற்கு நீதி சொல்வார்களா?

    இந்த இலட்சணத்தில், பெண்கள் அமைப்புகள் எதுவும் இதுவரை புகார் கொடுக்கதாத நிலையில், மாதர் அமைப்புகள் எதுவும் இதுவரை புகார் கொடுக்கதாத நிலையில் நடிகை ரஞ்சிதா செய்தியை பிரபல்யப்படுத்துவது இது ஓர் அரசியல் சாயம்பூசப்பட்டதாகவே தெரிகின்ற நிலையில் அப்பாவிப் பெண்கள் என்றால் இவர்கட்கு இளிச்சவாய். அதற்கு மேலே “சர்வதேச பெண்கள் தினத்திற்கு முண்டியடித்து ஜெயலலிதா உட்பட வாழ்த்து செய்திகள்???

    அதிலும் வைகோ தனது வாழ்த்து செய்தியில் சொல்கிறார், “உலகிலேயே எங்கும் நடந்திராத வீரகாவியத்தை ஈழத்துப் பெண்கள் போர்க்களத்தில் படைத்தனர். மகளிருக்கு எதிரான குற்றம் புரிவோரைக் கடும் தண்டனைக்கு ஆளாக்க வேண்டும். பெண்ணின் பெருமை சிறக்கட்டும். பெண் உரிமை வெல்லட்டும்.”……இதெல்லாம் இந்தப் பேசலாம் எதற்க்காக? எம் ஈழத்துப் பெண்கள் தங்கள் நாட்டில் படும் அவலம் தெரியவில்லையோ?

    அவர்களின் வாழ்த்துச் செய்திகளை வாசியுங்கள்: http://www.dinamalar.com/Political_detail.asp?news_id=17042

    சத்ய சாயிபாபாவின் மடத்தில் இறந்து யேர்மனியப் பெண் பற்றியும், பற்றைக்குள் கிடந்தது எடுக்கப்பட்ட அவரின் ககைப்பை பற்றியும் என்ன நடந்தது? அதன் பின் ஒரு முறை அவரை கொல்ல சென்றவர்களை பாதுகாவலர் கைது செய்யாமல் சுட்டுக் கொன்றது ஏன்? அதற்கு விசாரணை நடந்ததா? ஏன் மூடி மறைக்கப்பட்டது?

    இந்தியாவின் பெரும் அரசியல் தலைவர்கள் (முன்னால் ஜனாதிபதி ஒருவர் கூட), போலிஸ் முக்கியஸ்தர்கள், நீதிபதிகள், தொழிலதிபர்கள் அவரின் பக்தர்கள் ஆகும். ஏன், நாத்திக திராவிடத் தலைவர் கருணாநிதி அவரை சென்னையில் வரவேற்றது……………பணமும், செல்வாக்கும், அரசியலும் பத்தும் என்ன….. நூறும், ஆயிரமும் செய்யும்.

    “ஸ்ரீசத்திய சாயி சேவா அமைப்பு மூலம் சுமார் ரூ.200 கோடி செலவில் கால்வாய் பலப்படுத்தப்பட்டது. பூண் டிக்கு வரும் நீரின் வேகத்தை தாங்கும் அளவிற்கு கால்வாயின் கரைகள் மேம் படுத்தப்பட்டன”.

    “சாய்பாபாவின் முயற்சியால் சென்னை மக்களுக்கு கிருஷ்ணா நீர் கிடைத்ததையொட்டி அவருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் பாராட்டு விழா நேரு உள் விளையாட்டு அரங்கில் 21-ந் தேதி காலை 11 மணிக்கு சென்னை மக்கள் சார்பாக நடத்தப்படுகிறது. முதல்-அமைச்சர் கருணாநிதி தலைமை தாங்குகிறார். விழாவில் சத்ய சாயிபாபா கலந்து கொள்கிறார்”.
    ஆதாரமும் சுவாரஸ்யமும்: http://idlyvadai.blogspot.com/2007/01/blog-post_17.html
    http://idlyvadai.blogspot.com/2007/01/blog-post_12.html

    இந்த இலட்சணத்தில் யாரோ ஓர் நடிகைக்காக இந்த சன் டிவி யில் எத்தனை முக்கியத்துவம்? அதை விட ஈழப்பிரச்சனையை வைத்து வியாபாரம் செய்யும் நக்கீரன் பத்திரிகையும் நடிகை ரஞ்சிதாவை வைத்து முழு வீடியோ பார்க்க log in செய்யும்படி. மாறன் குடும்பத்தில் ஒருவரோ, அல்லது நக்கீரன் கோபால் குடும்பத்தில் ஒருவரோ இந்த நித்தியானந்தாவின் சீடராக இப்படி நடிகை ரஞ்சிதாவின் இடத்தில் இருந்தால் இவ்வளவு விளம்பரம் செய்து இருப்பார்களா?

    பெண்ணியல் வாதி கனிமொழி எங்கு சென்றுவிட்டார்? அத்துடன் ஈழத்தமிழருக்காக குரல் கொடுப்பவர்.

  4. alex.ravi@gmail.com says:
    15 years ago

    …………. நேற்று சர்வதேச பெண்கள் தினம் கொண்டாடிய உயர் மத்திய தரப்பு மாதர் அமைப்புகள், உயர்தரப்பு மாதர் அமைப்புகள் இந்தப் பெண்ணின் நீதிக்காக குரல் கொடுப்பார்களா?

    மறு பக்கத்தில், மேல்மருவத்தூரில் ஆன்மிக குரு பங்காரு அடிகளார் பிறந்த நாள் விழா மிகுந்த உற்சாகத்துடன் ஒருவார விழாவாக கொண்டாடப்பட்டது. அவரது 70வது பிறந்தநாளாகிய இன்று அவரை அலங்கரிக்கப்பட்ட மலர் அலங்கார ரதத்தில் பக்தர்கள் ஊர்வலமாக அழைத்து வந்தனர். விழா சிறப்பு மலரை வெளியிட்டு அருள்தரிசனம் தந்த அடிகளாரிடம் பல்வேறு துறைகளைச் சேர்ந்த பிரமுகர்கள், அரசு அதிகாரிகள் மற்றும் லட்சக்கணக்கான பக்தர்கள் அருளாசி பெற்றனர்.

    பிப்ரவரி 13 முதல் 15 தேதிவரை நடைபெற்ற இலவச கண்சிகிச்சை முகாமில் 5000 பேருக்கு மேல் பங்கேற்று சிகிச்சை பெற்ற மக்கள் நலப் பணியுடன் விழா நிகழ்ச்சிகள் துவங்கின. பிப்ரவரி 25 முதல் தொடர் அன்னதானம், கலச வேள்வி பூசை, சிறப்பு பாத பூசைகள், தினசரி பல்வேறு சிறப்பு கலைநிகழ்ச்சிகள், தங்கரதத்தில் வரவேற்பு, ரூ.1கோடி மதிப்பிலான மக்கள் நலப்பணிகள், வானத்தில் வண்ணக் கதிரொளிக் காட்சிகள் என தொடர்ந்து விழா நிகழ்ச்சிகள் நடைபெற்றன. .
    அருளாசி மேடையில் பிறந்தநாள் விழா சிறப்பு மலரை அடிகளார் வெளியிட தமிழக விவசாயத்துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் மற்றும் முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி எம். தணிகாசலம் முதலியோர் பெற்றுக்கொண்டனர். தொடர்ந்து அங்கு காத்துக் கொண்டிருந்த பல்துறைப் பிரமுகர்களும், அரசு உயர் அதிகாரிகளும் ஆசி பெற்றனர்.

    மேலும் அறிய: http://www.kalaikesari.com/culture/culturenews/Results.asp?key_c=54

    இவருக்கும்உலகம் பூராகவும் கிளைகள் உள்ள நிலையிலும், பல ஈழத்தமிழர்கள் போட்டி போட்டு கிளைகள் (டொராண்டோவிலேயே ஒன்றில் இருந்து பிரிந்து என்று மூன்று கிளைகள்) அமைத்து வழிபடும் நிலையிலும், கூடுதலாக செவ்வாடை பெண்களையே கொண்டுள்ளதாலும் இவ் ஆன்மீக வாதி தானும் இப்பெண்ணிர்காக குரல் கொடுப்பாரா? இல்லை…….. ஏன் நமக்கு வம்பு என்று விட்டுவிடுவார்கள். அப்பெண்ணின் குடும்பத்தார் என்ன நன்கொடை கொடுக்கப்போகிறார்களா?

  5. alex.eravi@gmail.com says:
    15 years ago

    “ராமேஸ்வரம்” திரைப்படம் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. “நந்தா”, “கன்னத்தில் முத்தமிட்டால”; அந்த வரிசையில் இன்று “ராமேஸ்வரம்”. ஈழத்தமிழரின் அகதி நிலையை எடுத்துக்காட்டும் திரைப்படமாக இந்திய இயக்குனர்களால் எடுக்கப்பட்ட திரைப்படங்கள் இவை. இந்த மூன்று திரைப்படங்களிலும் ஒரு ஒற்றுமை என்னவென்றால் இந்தியர்கள் ஈழத்து அகதிகளுக்கு எந்த அளவிற்கு உதவி செய்யத் தவிக்கின்றார்கள் என்பதே.”

    “நான் படித்த கட்டுரைகள், சிறுகதைகளிலில் இருந்தும், தனிப்பட்ட முறையில் கேட்டறிந்த சம்பவங்களில் இருந்தும் ராமேஸ்வரத்தில் அகதிகளாக வாழும் ஈழத்தமிழர்கள் எந்த அடிப்படைத் தேவையும் பூர்த்தி செய்யப்படாமலும், அதே வேளை பலவிதமாக வன்முறைக்குள்ளாக்கப்பட்டும் வருகின்றார்கள் என்பதே. ஆனால் மேற்கூறப்பட்ட எந்த ஒரு திரைப்படத்திலும் அதற்கான அடையாளங்கள் எதுவும் காட்டப்படவில்லை. தமிழ்நாட்டின் அரசியல் அட்டூழியங்கள், வன்முறைகள், போன்றவற்றை படத்திற்குப் படம் புடம்போட்டுக் காட்டும் எந்த ஒரு இயக்குனரும் ரமேஸ்வரத்தில் ஈழத்து அகதிகளுக்கு இழைக்கப்படும் கொடுமைகளை சிறிதேனும் காட்டுவதற்கு எதற்காக அஞ்சுகின்றார்கள்?” மேலும் http://karupu.blogspot.com/2008/04/blog-post.html

    இப்படியும் ஓர் குமுறல், ஆனால் இதுதான் நிஜம். ஈழத்தமிழரை வைத்து சம்பாதிப்பவர்கள் இந்தியாவில் இருக்கும் ஈழத்தமிழருக்கு என்ன செய்கிறார்கள்? இதற்கு மேலையும் பணத்திக்காக எத்தனையோ நடக்கிறது. பிணத்தின் மேலேயே பணம் கறப்பவர்கள்.

    அதே நேரத்தில் “எந்த ஒரு மனிதப் பிறப்புக்கும் தன் சொந்த நாட்டில் வாழ்வது தான் கௌரவம்;பாதுகாப்பு. ஆனால் ஈழத் தமிழனுக்கென்று ஒரு பாழ் விதி எழுதி வைத்திருக்கிறான் கடவுள் அகதிகளாக அலைய வேண்டுமென்று. சொந்த மண்ணிலேயே வாழும் உரிமையோ, தகுதியோ இல்லாதவனாக அகதியாக்கப்பட வேண்டுமென்ற கொடும் விதி எழுதியவன் எவனோ அவனை நான் மதியேன்!”

    “உயிர் தப்பி ஓடி வர ஈழத் தமிழனுக்கு பரப்பளவுகள் குறைந்து கொண்டே போகிறது. ஒன்று தமிழகத்தை நோக்கி ஓடி வர வேண்டும்; அல்லது இலங்கையின் கொழும்பை நோக்கி பயணிக்க முனைய வேண்டும். அகதியாக கொழும்பில் இருக்க முடியாது; அங்கே தமிழனை விரோதியாகத் தான் பார்ப்பார்களே தவிர அகதியாக புகலிடம் கொடுக்கமாட்டார்கள். ஆக..எஞ்சியிருப்பது 24 மைல் கடல் தாண்டிய தூரத்திலிருக்கும் தமிழகம் மாத்திரமே!! என்றைக்கு உயிருக்காக ஓடி வர நினைத்தோமோ அன்றைக்கே எமது நிலை அண்டிப் பிழைக்கும் நிலைக்கு வந்துவிட்டது என்று தெரிந்தே தான் அகதியாக ஓடி வருகிறோம்”.

    “எங்கே தமிழன் அடித்து துரத்தப்படும் போதும் ஐயோ என்று ஓடி வருவது தமிழகத்தை நோக்கித் தான். நடுக்கடலில் உயிருக்காகத் தத்தளிக்கும் நீச்சல் தெரியாத எந்த பிறவியும் கைக்கு எந்த ஒரு பொருள் கிடைத்தாலும் அதைப் பற்றி கரையேறித் தப்பிவிடத் தான் எத்தனிக்கும். அப்படியொரு சூழ்நிலை தான் எந்த ஒரு அகதிக்கும்.
    முதலில் உயிரைக் காப்பாற்றினால் போதும் என்ற நிலை. தவிப்பு.. ஓடி வந்து விடுகிறோம். வந்த பின் உயிர் வாழ வேண்டுமென்றால் எத்தனை இன்னல்களையும் தாங்கித் தானாக வேண்டும். எத்தனை அவமானங்களையும் சகித்துத் தானாக வேண்டும். நாம் தான் எல்லாமிழந்துவிட்டோமே? எம்மைத் திரும்பக் கட்டியெழுப்பவோ நாம் இன்னார் என்று அடையாளம் காட்டவோ இனி என்ன இருக்கிறது, உயிரைத் தவிர…? பாழாய்ப் போன வயிறும், உயிரும் இருந்து தொலைக்கிறதே… என்ன செய்வது?”

    ஆனாலும்………….

    “எப்போது எமக்கான சுயம் கிடைக்குமோ அப்போது தான் அகதி என்ற வார்த்தை தமிழினத்தின் வரலாற்றிலிருந்து அகற்றப்படும். கற்பனை செய்து பாருங்கள்..அகதிகளாக தமிழகம் வருவதை விட , சுதந்திரமானவர்களாக தொப்புள் கொடியுறவுகளிடம் வரும் போது ஈழத் தமிழனுக்கு எத்தகைய ஆத்ம திருப்தி கிட்டும் என்று??. அந்த சந்தோசத்தின் அளவீடு என்பதே தனித்துவமானதாயிருக்கும்.”

    “எப்போது தமிழினம் தன் சொந்த மண்ணில் சுதந்திரமாக சுவாசிக்க முடியுமோ அப்போது தான் அகதி என்ற நிலைபாடு எம்மை விட்டுப் போகும்.”

    “அதற்கான வழிமுறையை ஈழத் தமிழன் அமைக்க முற்பட்டால் தடைக்கல் ஏன் மற்றவர்கள் போட நினைக்கிறார்கள்? இந்தக் கேள்விக்கு தார்மீகமான , மனிதாபிமான, உணர்வுமிகுந்தவர்கள் நியாயமான பதில் தரமுடியுமா?” என்று ஓர் அகதியின் எதிர்பார்ப்பு. http://groups.google.ge/group/piravakam/msg/2b11ee3d3391b823

    இதற்கு இன்று நமது தாயகத்தில் வாக்கு வேட்டைக்காக இறங்கியிருக்கும் எமது வேட்டையாளர்கள் (ஆயிரத்திற்கும் மேற்ப்பட்ட தமிழ் வேட்டையாளர்கள்) குரல் கொடுப்பார்களா? அல்லது அரசாங்கதுதுடன் இணைந்து உள்ளவர்கள், ஜனாதிபதி தெரிவில் மக்களுடன் சேர்ந்து மகிழ்ச்சிக் கடலில் குளித்தவர்கள், நிருபாமாவை சந்தித்தவர்கள், நல்லிணக்க, சமூக நலத்துறை அமைச்சர்கள் குரல் கொடுத்து இவ் நம் தொப்புள் கொடியுறவுகளை அவர் தம் தொப்புள் கொடியுறவுகளிடம் சேர்ப்பார்களா? முயற்சி தன்னும் எடுப்பார்களா?

    இன்று இவ் வாக்கு வேட்டையாடும், வேட்டையாளர்கள் இவர்களை தாயகம் அழைத்து மீள் குடியேற்றினால் அவ் இரண்டு இலட்ச்சத்திர்க்கும் மேற்ப்பட்ட வாக்குகளும் இவர்களுக்குத்தானே, அதைதன்னும் சிந்திக்கிறார்களா? இதைப்பற்றி பலதடவை எடுத்துக் கூறியுள்ளேன். தற்போது தமிழ் நாட்டு அரசியலை விட கேவலமாகிய அரசியலாகிவிட்டது.

    குஷ்புவிற்கு, ராதிகாவிற்கு, நமீதாவிற்கு, நயன்தாராவிற்கு ஓர் பிரச்சனைஎன்றால் தமிழகமே திரண்டு எழும்!

    ஏன் நம் நாட்டிலும் வசந்தம் கொண்டாடுபவர்கள் அவர்களைக் கூப்பிட்டு அரங்கேற்றி மாலைகள் , பூச்செண்டு கொடுத்து வாழ்த்துவார்கள். அதுமட்டுமா இதை எதோ ஈழத்தமிழரின் அடிப்படைப் பிரச்சனை எல்லாம் தீர்ந்து விட்டதாக பிரச்சாரம் செய்யும் இணையதளங்கள் வேறு. கூலிக்கு மாரடிப்பவர்களை, கவர்ச்சியை காட்டுபவர்களை இவ்வளவு பணம் செலவழித்து கூப்பிடுகிறவர்கள், ஏன் நம் தொப்புள்கொடி உறவுகளைக் கூப்பிடக்கூடாது……. முயற்ச்சிக்கக்கூடாது? அவர்களும் தமது திறமைகளை வெளிக்கொண்டுவருவார்கள் தானே! அவர்கள் உங்களுக்கு கவர்ச்சியில்லையா?

    வாழ்க தமிழகம்! வாழ்க ஈழத்தமிழ் எழுச்சி!

    எல்லாவற்றிக்கும் மனிதாபிமானம் வேண்டும்!

    – அலெக்ஸ் இரவி

    More news in
    https://inioru.com/?p=11243
    https://inioru.com/?p=11266
    http://www.athirady.info/archives/63033

    தேடலின் போது செய்தியின் பின்னணியில்:

    http://www.murasam.ch/india/19834—2——-.html

    http://www.paristamil.com/tamilnews/?p=65239

  6. alex.eravi@gmail.com says:
    15 years ago

    வெள்ளைதுரை பேட்டி: என்கவுன்டர் நடந்த இடத்தில் ஆர்.டி.ஓ., சுகுமார் விசாரணை மேற்கொண்டார். அவரிடம், உதவிக் கமிஷனர் வெள்ளைதுரை கூறியதாவது: வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த எஸ்.ஐ., தென்னரசு, ஏட்டு கணேசன் ஆகியோரை, திருடர்கள் இருவரும் கண் இமைக்கும் நேரத்தில் பட்டாக்கத்தியால் குத்தினர். இதை பார்த்து பதறினேன். என் கண்முன்னே இரண்டு போலீசார் பலியாகி விடக்கூடாது என்பதற்காகவும், அவர்களை காப்பாற்ற வேண்டும் என்பதற்காகவும், கைத்துப்பாக்கியால் இருவரையும் இரண்டு ரவுண்டு சுட்டேன். அவர்கள் உடலில் காயங்கள் எங்கெங்கு ஏற்பட்டன என தெரியவில்லை. உயிருடன் இருந்த அவர்களை ஆம்புலன்சில் ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பினேன். இவ்வாறு வெள்ளைதுரை கூறினார்.

    http://tamilnews.jupiterwebsoft.com/2010/02/17/all_tamil_news_nation_international_sports_cinema_news/547/

    தாதா வீரமணியை அவனது கோட்டையில் வைத்துப் போட்டுத் தள்ளிய வெள்ளைதுரை, பின்னர் வீரப்பனை வதம்செய்ததிலும் மிக முக்கிய பங்கு வகித்தவர். வீரப்பனை காட்டில் இருந்து ஆம்புலன்சில் ரோட்டுக்குக் கூட்டி வந்து கதையை முடித்தவர்.

    http://thatstamil.oneindia.in/news/2004/12/10/appu.html

    Who is thisஎன்கவுண்டர் வெள்ளைதுரை?…… read the links:

    http://thatstamil.oneindia.mobi/news/2004/10/23/77392.html

    http://www.dinamalar.com/court_detail.asp?news_id=5367

    http://www.dinamalar.com/fpnnewsdetail.asp?news_id=6627

  7. Thamilmaran says:
    15 years ago

    வெள்ளத்துரை தேவர் என்பதால் எது செய்தாலும் தப்பித்து விடுவார்.முட்டாள் கூட்டம் சாதிகலை வைத்து முதுகு சொறீவதால் எதிர்கால ஜெயந்தி விழாககளீல் இவரும் கலந்து கொள்ள வாய்ப்பிருக்கிறது.இவரால் கொல்லப்பட்டவர்கள் யாரும் தியாகிகள் அல்ல. மாட்டை, ஆட்டை கொன்றது போல மனிதரைக் கொன்றவர்கள்.

  8. JAMES FEREDRIC says:
    15 years ago

    யோவ் தமிழ்மாறன்! நீ சபைக்கு(இணயதளங்கள்) அரசியல் கருத்தை முன் வைக்க வந்தீரா?அல்லது விஷயங்களை சரியாக கற்காமல் உளர வந்தீரா?.தாதா அயோத்திகுப்பம் வீரமணியும் “தேவர்தான்”!.கே.பியும்,மகிந்த ராஜபக்ஷேவும் ஒரே ஜாதியா?.காலனித்துவ “பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில்” சென்னை மாநகரில்,உள்ளூர் சுதேசிகளைநையப் புடைக்க,உதைக்க,உன்னை மாதிரி தாதாக்களாக செயல்பட்டவர்கள்,கடற்கரையோர குப்பங்களில் வாழ்ந்த மீனவ சமூகத்தை சேர்ந்தவர்கள்.இவர்களின் ஆங்கிலேய வெள்ளைகாரர்களின் தொடர்பாளர்களாக இருந்தவர்கள் கத்தோலிக்கர்களும்,வெள்ளைகாரர்களுக்கு தப்பிப் பிறந்த ஆங்கிலோ இந்தியர்களும்(உங்கள் ஊர் பேகர்) ஆகும்.
    பண்டார வன்னியன்,கட்டபொம்மன் குடும்பங்கள் போன்ற சிறைப்பிடிக்கப்பட்டவர்களும்,சுதந்திரத்திற்காக போராடிய குடும்ப வாரிசுகளும்,”வேலூர் சிறையிலும்” பிறகு,”செல்டில்மெண்ட்” என்று,தாற்போதைய யாழ்ப்பாணம் போன்று,”திறந்த வெளிச் சிறைகளிலும், “செட்டில்மென்ட் கள்ளர்கள் நான்குவகையாகப் பிரிக்கபட்டுள்ளனர்.

    i. அசீஸ் நகர் செட்டில்மெண்ட் (Aziz Nagar Settlement) விழுப்புரம் மாவட்டம்.

    ii. பம்மல் செட்டில்மெண்ட் (Pammal Settlement)பல்லாவரம், தாம்பரம் வட்டம், காஞ்சிபுரம் மாவட்டம், இது பசும்பொன் நகர் செட்டில்மெண்ட் என்று இப்பொழுது அழைக்கப்படுகிறது.

    iii. பிரிஸ்லி நகர் செட்டில்மெண்ட் (Brezlee Nagar Settlement)பெரம்பூர், ஓட்டேரி, சென்னை மாவட்டம்.

    iv. அந்தமான் செட்டில்மெண்ட் (Andaman Settlement)
    இது மத்திய அரசு நிர்வாகத்தில் உள்ளது. ஆகிய இடங்களில்,தற்போது முள்கம்பி வேலிகளுக்கு பின்னால் இருக்கும் “வன்னி மக்கள் போல்” “குற்றப்பரம்பரையினராக குடியமர்த்தப்பட்டனர்”!. திராவிட இயக்க் ஆட்சிகளில் இந்த செட்டில் மெண்டுகளிலிருந்து எழும் ச்மூக பிரச்சனைகளை தீர்க்காது,சென்னை நகரின் சேரிகளில் உள்ள தாழ்த்தப்பட்டவர்களை இவர்களுக்கு எதிராக தூண்டிவிட்டு,ஏழைகளின் பக்கம் நிற்கிறேன் பேர்வழி என்று,பிரிட்டிஷ்காரன் செய்த அதே வேலையை “எண்கவுண்டர்” என்ற பெயரில்,கேள்வி கேட்கும் நடுத்தர வர்கத்தின் மீது வன்முறையை பாய்ச்சுகிறார்கள்,இதுதான் இவர்களின் “தலித்தியம்”!.இதே “நடுத்தரவர்கத்தை அழிக்கும்” போக்கைதான் “புலன் பெயர்ந்த இலங்கைத் தமிழர்களும்?” செய்கிறார்கள்!,இதற்கு வன்னிப் படுகொலையே சாட்சி!.

    • Thamilmaran says:
      15 years ago

      எதை எதையோ உளறீ எம்மை எல்லாம் முட்டாள்கள் என நினைக்கின்ற ஜேம்ஸ், சலூன் களீல் கூட ஏன் மீன் விற்பவன் கூட் இன்னும் ஏன் கள் இறக்குபவன் கூட கேட்ட கேள்விக்கு சரியான பதில் கூறூகிறான் ஆனால் நீர், எதை,எதையோ பேசி அறீவாளீ என நினைத்துக் கொண்டிருக்கிறீர்.

  9. Soorya says:
    15 years ago

    தமிழ்நாடு இந்த முதலிடத்தை ஒருபோதும் விட்டுக்கொடுக்காது.

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...