போர்நிறுத்த உடன்பாட்டில் ரஷ்யா கையொப்பம்!

16.08.2008.
ஜோர்ஜியாவிலிருந்து பிரிந்து சென்ற பகுதியான தெற்கு அஸெட்டியா தொடர்பில் ஜோர்ஜிய ரஷ்யா இடையில் ஒன்பது நாட்களுக்கு முன் வெடித்த மோதலை முடிவுக்கு கொண்டுவருவது தொடர்பில் ஏற்படுத்தப்பட்டுள்ள போர்நிறுத்த உடன்பாட்டில் ஜோர்ஜியாவைத் தொடர்ந்து ரஷ்யாவும் கையெழுத்திட்டுள்ளது.

ஆறு அம்சங்களைக் கொண்ட இந்த சமாதான உடன்படிக்கையில் இடம்பெற்றுள்ள கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செயல்படுத்தப்படும் நேரத்தில் ஜோர்ஜியாவிலிருந்து ரஷ்யப் படைகள் வெளியேறும் என்று ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லவ்ரொவ் கூறியுள்ளார்.

ஆனால் இந்த ஏற்பாடுகள் என்ன என்று அவர் குறிப்பிட்டுச் சொல்லவில்லையென்றாலும், ஜோர்ஜியா தொடர்ந்து ஏற்படுத்தும் பிரச்சினைகள் என்று குறிப்பிட்டு – அவை காரணமாக – கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் அவசியம் என்று லவ்ரொவ் தெரிவவித்தார். அவசியமுள்ள காலகட்டத்துக்கு ரஷ்ய துருப்பினர் ஜோர்ஜியாவில் தொடர்ந்தும் தங்கியிருப்பார்கள் என்று அவர் வலியுறுத்தினார்.

இதனிடையே ரஷ்யா போர்நிறுத்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதை ஒரு நம்பிக்கையூட்டும் முன்னேற்றம் என்று கூறி அதிபர் புஷ் வரவேற்றுள்ளார்.

ரஷ்யா இனி தனது துருப்புகளை விலக்கிக்கொள்ள வேண்டும் என்று புஷ் குறிப்பிட்டார்.

தெற்கு அஸெட்டியாவும், அப்காஸியாவும் ஜோர்ஜியாவின் அங்கமாக நீடிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்