உலகின் ஏகபோக அரசுகளிடையேயான முரண்பாடும் உறவுகளும் தொண்ணூறுகள் வரை காணப்பட்டதைப் போன்று சிக்கலான நேரிடையான கூட்டல் கழித்தல்களுக்குள் உட்படாதவையாக உள்ளன. சீனா, அமெரிக்கா, இந்தியா, ஐரோப்பிய நாடுகளிடையேயான உறவுகளில் இத்தன்மையைக் காணலாம். சீன அரசாங்கம் நிர்வகிக்கும் சைனா கொம்யூனிகேஷன்ஸ் கொன்ஸ்ரக்ஷன் கொம்பனி((CCCC)china communications construction company) இலங்கையில் போர்ட் சிட்டி என்ற துறைமுகத்தை விரிவுபடுத்தும் திட்டத்தை செயற்படுத்திவந்தது. இத்திட்டத்தைத் தொடர அனுமதிக்கப்போவதில்லை என இன்றைய பிரதமர் ரனில் விக்கிரமசிங்க தேர்தல் பிரச்சாரத்தின் போது தெரிவித்தார். ஆட்சியமைத்துக்கொண்ட சில நாட்களுக்குள்ளாகவே போர்ட் சிட்டி திட்டத்தை நிறுத்தப்போவதில்லை என ரனிலின் அரசு தெரிவித்துள்ளது.
ரனில் அரசின் இந்த முடிவை மையமாக வைத்துப் பல்வேறு வாதப் பிரதிவாதங்கள் தோன்றியுள்ளன. இலங்கையில் உதவி அரசு துறைச் செயலாளர் நிஷா பிஸ்வால் இன் வருகைக்குப் பின்னரே இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது குறிப்ப்பிடத்தக்கது.
நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி ஆட்சி முறையை எவ்வாறு பலவீனப்படுத்துவது என்பது தொடர்பாக ரனிலிற்குப் பயிற்சி வழங்கியதிலிருந்து ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தி அதன் பின்னர் இலங்கையைச் சூறையாடுவதற்கான வழிமுறைகளை வகுத்துக்கொண்டது அமெரிக்க அரசு.
அமெரிக்க அரசின் அதிபயங்கர அடியாட்களில் ஒருவரான ரிச்சாட் ஆர்மிதாஜ் இலங்கையை மையப்படுத்திய தெற்காசிய விவகாரங்களில் நேரடியாகத் தலையிட்டுவருபவர். பல தசாப்தங்களாக இலங்கையின் ஒவ்வொரு அரசியல் அங்கத்திலும் ஆர்மிதாஜின் தலையீடு பல்வேறு சதிகளைக் கொண்டது, இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் அங்கு நடுநிலை அரசு உருவாகிவிட்டதாகவும் இனிமேல் அமரிக்க அரசு அங்கு நேரடியான உறவுகளைப் பேண்ணும் என்றும் கட்டுரை வரைந்தார்.
ஜனாதிபதித் தேர்தலின் போதும் அதற்குப் பின்னான காலப்பகுதியிலும் அமெரிக்காவின் தலையீடு நேரடியாகவே காணப்பட்டது. ஆர்மிதாஜ் போன்ற சதிகாரர்களை அமெரிக்கா நியமித்திருகிறது என்றால் எதிராகலம் இருட்டும் பயங்கரங்களும் கொண்டதாகவே அனுமானிக்க முடியும்.
இவ்வாறு அமெரிக்காவின் நேரடி அடியாள் படையாக ஆட்சிக்கு வந்த அரசு சீன நிறுவனத்தின் துறைமுக – நகரைக் கட்டியெழ்ப்பும் திட்டத்தை தொடர வேண்டிய எந்தத் தேவையும் இல்லை எனினும் அதனைத் தொடர்ப்போவதாக அரசு அறிவித்துள்ளது.
இந்த நிலையில் சீனாவிற்கு எதிராக அமெரிக்கா, இந்தியாவிற்கு எதிராகச் சீனா என வாய்பாடுகளை உச்சரித்த அரசியல் ‘சோதிடர்களின்’ ஆய்வுகள் பிசுபிசுத்துப் போவதைக் காணலாம்.
சைனா கொம்யூனிகேஷன் என்ற நிறுவனம் கட்டுமானத் தொழிலை விற்பனை செய்யும் உலகின் மிகப்பெரும் நிறுவனங்களில் ஒன்று. அமெரிக்கா தென்சூடானைப் பிரித்துத் தனி நாடாக்கியதும் அங்கு அலுவலகம் அமைக்கப் போவதாக நாடுகடந்த தமிழீழம் படம் காட்டியது நினைவிருக்கலாம். அங்கு முதலில் தனது அலுவலகத்தைத் திறந்துகொண்டது சீன அரசே.
லாப்செட் வளாகத் திட்டம்(Lamu Port South Sudan Ethiopia Transport (LAPSSET)) என்ற கடல்வழிப் பாதைத் திட்டத்தை தென் சூடானில் சைனா கொம்யூனிகேஷன் சூடானிய அரசுடன் இணைந்து செயற்படுதியது. தென்சூடானின் லம்பு துறைமுகத்திற்கும் எதியோப்பியாவிற்கும் இடையேயான கடல்வழிப் பாதையை நிர்வகிப்பதற்கான இத் திட்டம் 500 மில்லியன் டொலர்கள் பெறுமதி வாய்ந்தது.
போர்ட் சிட்டியை நிர்மாணிக்கும் அதே சீன நிறுவனம் தென் சூடானிலும் துறை முகத் திட்டம் ஒன்றைச் செயற்படுத்துகிறது என்பதன் பின்னால் அமெரிக்க சீன பல்தேசிய வியாபாரச் சூறையாடல் ஒளிந்துள்ளது.
தென் சூடானின் எண்ணை வளங்களில் 75 வீதமானவை புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டவையே. கடலடிக் குழாய்கள் வழியாக எண்ணையை விற்பனை செய்வதே சூடானியத் திட்டத்தின் பெரும் பகுதியாகும். இதன் இடைத்தங்கல் பகுதியாக இலங்கையின் போர் சிட்டி பயன்படுத்தப்படும். அமெரிக்காவினதும் சீனாவினதும் நலன்கள் இங்கு இணைந்தே செயற்படுகின்றன. இதனால் தான் அமெரிக்க அடியாள் அரசான ரனில் அரசு இத்திட்டத்தை அமெரிக்காவின் ஆசியுடன் அனுமதித்துள்ளது.
இது மட்டுமல்ல, அமெரிக்க அரசால் ஆப்கானிஸ்தானின் ஒவ்வொரு அங்குல நிலமும் கட்டுப்படுத்தப்படுகிறது. இஸ்லாமிய அடிப்படைவாதத்தைத் தோற்றுவித்து ஆப்கானிஸ்தானில் தலையிட்டு ஆயிரக்கணக்கில் உயிர்களைப் பலிகொடுத்த அமெரிக்காவும் அதன் துணை நாடுகளும் அங்கு சீனாவை வியாபாரம் செய்ய அனுமதித்திருக்கிறது. ஆப்கானின் அரசுடன் சீன முப்பது வருட ஒப்பந்தத்தை எழுதிக்கொண்டது. உலகின் பெரிய கனிம அகழ்வுத் திட்டம் ஒன்றை 2007 ஆம் ஆண்டிலிருந்தே செயற்படுத்தி வருகிறது.
2011 ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானில் எண்ணை அகழ்விற்கு சீன அனுமதி பெற்றுக்கொண்டது. ஒக்ரோபர் 2014 இல் ஆப்கானி முதலீட்டாளர்களின் ஒன்றுகூடல் பீஜிங் இல் நடைபெற்றது. அங்கு 300 மில்லியன் டொலர்கள் உதவித் தொகையை ஆப்கான் அரசிற்கு சீன அரசு வழங்கிற்று.
உலகில் நடைபெறும் பல்தேசிய நிறுவனங்களின் கொள்ளைகளில் சீன அரசுடன் இணைந்தே அமெரிக்க அரசு செயற்பட்டுவருகிறது.
சீனாவிற்கு அமெரிக்காவிற்கும் இடையிலான முரண்பாடு என்பது சிக்கலான பரிணாமங்களைக் கொண்டது. இலங்கையை முன்வைத்து சீனாவின் அரசியலை ஆய்வு செய்பவர்கள் கருதுவதைப் போன்று அது ஒற்றைப் பரிமாணத்தைக் கொண்ட நேரடியான முரண்பாடுகளையோ உடன்பாடுகளையோ கொண்டதல்ல.
சீன அரசும் அமெரிக்காவைப் போன்றே நவதாராளவாதப் பொருளாதாரத்தை உலகமயமாக்குவதையே தனது பொருளாதாரக் கொள்கையாகக் கொண்டுள்ளது. அந்த வகையில் சீன-அமெரிக்க ஒத்துழைப்புக் இறுக்கமானதாகக் காணப்படும்.
அதன் மறுபக்கத்தில் நவதாராளவாதத்தின் தலைமை நாடாகத் தன்னை அமெரிக்கா தக்கவைத்துக்கொள்ள முயற்சிக்கும் போதே சீன-அமெரிக்க முரண்பாடுகள் தோன்றுகின்றன. உலக வங்கி, உலக நாணய நிதியம், ஐக்கிய நாடுகள் நிறுவனம், மனித உரிமைகள் அமைப்புக்கள் போன்றவற்றை சீன அரசு பிரதியிட முயற்சிக்கும் போது அந்த முரண்பாடுகள் வலுவடைகின்றன.
இலங்கை போன்ற ஒரு நாட்டைக் காரணமாக முன்வைத்து இந்தியாவை மிரட்டுவதற்கு சீன அரசு இலங்கையில் அமெரிக்காவிற்குப் பயன்பட்டடது.
சீனா இலங்கையில் தலையிடுவதால் அமெரிக்காவைப் பிடித்துவந்த ராஜபக்சவைத் தூக்கில் போடுகிறோம் என்று ஐந்து வருடங்கள் தமிழ் அரசியல் தலைமை மக்களை ஏமாற்றின. மக்களை அணிதிரட்டுவதும், போர் அழிவிலிருந்து கற்றுக்கொண்டு புதிய அரசியலை முன்வைத்து இலங்கை அரசிற்கு எதிராகப் போராட்டங்கள் தோன்றுவதற்குத் தடையாகப் புலம்பெயர் அமைப்புக்களும், வடக்கில் நிலைகொண்டுள்ள அரசியல் கட்சிகளும் தடையாகின.
லாமூ துறமுகம் இவ்வளவுக்கும் மட்டுமே பல பில்லியன் டொலர் செலவு முதலீட்டில் நகர்ந்துள்ளது. கென்யா-ஈன் சோமாலி மக்கள் ஒருக்கப்பட்டு வாழும் பகுதியில் அமைவது.
லப்செட் திட்டம் 2030 வரை ஒருதிசையில் கென்யா-ஐ மையப்படுத்தி தென் சுடானையும் கடந்து மத்திய ஆபிரிக்க நிலப்பரப்பையே தரைவழியாக இந்து சமுத்திரத்துக்குள் திறந்து விடுவது. இன்னொரு திசையில் உகண்டா-இனூடாக ருவண்டா மற்றும் கிழக்கு கொங்கோ என இன்னொரு வளங்கள் பல நிறைந்த நிலப்பரப்பை சமுத்திரத்துக்கு திறக்கிறது.
சீனா ஐக்கிய அமெரிக்கா-உடன் இணைந்து செயற்படுவதின் பின்னணியில் ஆபிரிக்காவிலேயே மிகப்பெரிய ‘அபிவிருத்தி’ திட்டமான லப்செட் திட்டம் இன்னும் நடைபெற்றுக் கொண்டிருக்கும் பல இனவழிப்புகளை ஊடறுத்துச் செல்கிறது.
அதன் வழி ஈழத்தில் தமிழரின் சோகத்துடனும் சத்தமில்லாமல் கொழும்புத்துறைமுக ‘அபிவிருத்தி’ எனும் போர்வையில் இணைகிறது. இணைக்கிறது.