போர்க்குற்றம்: சனல் 4 இன் செய்தியும் தமிழ்த் தேசிய வியாபாரிகளின் காட்டிக்கொடுப்பும்

slavery-chainsஐக்கிய நாடுகள் சபையும் இலங்கை அரசும் இணைந்து மனித உரிமை மீறல் தொடர்பாக விசாரணை நடத்துவதற்கான பொறிமுறை ஒன்றைத் தயாரித்துள்ளன. பிரித்தானியவிலிருந்து ஒளிபரப்பாகும் சனல் 4 தொலைக்காட்சிக்கு இந்த ஆவணம் கிடைக்கப்பெற்றுள்ளது. ஆவணத்தின் அடிப்படையில் முழுமையான உள்ளக விசாரணை ஒன்றை மேற்கொள்வதற்கான திட்டம் வரையப்பட்டுள்ளது. இந்த விசாரணையை இலங்கை அரசே நடத்தும். ஐக்கிய நாடுகள் நிறுவனம் வெறும் துறைசார் ஆலோசனைகளை மட்டும் இலங்கை அரசிற்கு வழங்கும் எனக் கூறப்பட்டுள்ளது.

தவிர ஆவணத்தில் போர்க்குற்றங்கள் தொடர்பான விசாரணை குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை எனவும் மனித உரிமை மீறல் குறித்து மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் சனல் 4 மேலும் தெரிவிக்கின்றது.

தமிழ் இனவாதிகள் சர்வதேசம் என அழைக்கும் உலகின் அதிகாரவர்க்கங்கள் போர்க்குற்றவாளிகள் எவரையும் நியாயமாகத் தண்டித்த வரலாறு கிடையாது. தமது ஏகபோக நலன்களுக்காகவும், தமது பல்தேசிய வியாபார நலன்களுக்காகவும் போர்க்குற்ற விசாரணை என்ற நாடகத்தை நடத்திவந்திருக்கின்றனர்.

‘சர்வதேசம்’ தலையிட்ட அனைத்து நாடுகளிலும் மனிதப் பிணங்களையும், சாம்பல் மேடுகளையுமே எச்சங்களாக விட்டுச் சென்றிருக்கின்றது. இனியொரு கடந்த எட்டுவருடங்களாக தமிழ்த் தேசிய வியாபாரிகளுகு ஐ.நா தொடர்பாகவும், சர்வதேச அதிகாரவர்கங்கள் தொடர்பாகவும் எழுதி வந்திருகிறது. ஐநாவில் என்ன நடக்கும் என்பது பல தடவைகள் முன்னரே எதிர்வுகூறப்ப்பட்டிருந்தது.

ஐநா விசாரணை வெளியாவதற்கு முன்பாகவே ஐரோப்பாவில் அரசியல் தஞ்சம் கோரிய அப்பாவிப் போராளிகளின் விணப்பங்கள் போர்க்குற்றவாளிகள் என்ற காரணத்தை முன்வைத்து நிராகரிக்கப்படுகின்றன.
அதிகாரவர்க்கத்தோடு தமிழ்ப் பேசும் மக்களை அடையாளப்படுத்திய இனவாதிகள் உலகம் முழுவதும் போராடும் மக்கள் பிரிவுகளிடமிருந்து போராட்டத்தை அன்னியப்படுத்தினார்கள்.

அதிகாரவர்க்கங்களின் கைகளில் ஒப்படைக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ள தமிழ்ப் பேசும் மக்களின் போராட்டம் அழிக்கப்பட்டுக்க்கொண்டிருப்பதற்கு இலங்கை அரசும், அமெரிக்க அரசும், இந்திய அரசும் மட்டும் காரணமல்ல; தமிழ் அரசியல் தலைமைகளுமே காரணம். இன்றும் சர்வதேசத்தைப் பிடித்துவந்து உரிமை பெற்றுத்தருவோம் என மக்களை ஏமாற்றி வாக்குப் பொறுக்க புறப்பட்டிருக்கிறது இந்தக் கூட்டம்.

டக்ளஸ், கருணா, பிள்ளையான் போன்றவர்கள் இலங்கை அரசின் உளவாளிகள் போலவே செயற்பட்டனர். அதே வேளை தமிழ்த் தலைமைகள் சர்வதேச உளவாளிகள் போன்றே செயற்பட்டன. இரண்டிற்கும் பெரும் வேறுபாடுகள் இல்லை.