கடந்த ஒராண்டுக்கும் மேலாக டெல்லி எல்லைகளில் நடந்து வந்த மாபெரும் விவசாயிகள் போராட்டம் இன்றுடன் முடிவுக்கு வருகிறது.
மத்தியில் ஆளும் மோடி அரசு விவசாயம் தொடர்பாக மூன்று சட்டங்களைக் கொண்டு வந்தது. இச்சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் மாபெரும் போராட்டங்களை ஓராண்டாக நடத்தி வந்தனர். இந்நிலையில் இந்த போராட்டமும் விவசாயிகளின் எதிர்ப்பும் உத்தரபிரதேசம் உட்பட பல மாநில தேர்தல்களில் பிரதிபலிக்கும் பாஜகவுக்கு பின்னடைவாக இது இருக்கும் என்று கருதிய பிரதமர் மோடி சில நாட்களுக்கு முன்னர் வேளாண் சட்டங்கள் வாபஸ் பெறப்படும் என தொலைக்காட்சியில் அறிவித்தார். நாடாளுமன்றத்திலும் இது தொடர்பான மசோதா தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில் விளைபொருளுக்கான குறைந்த பட்ச ஆதார விலை தொடர்பாக சட்டப்பாதுகாப்பு வேண்டும், விவசாயிகள் மீது தொடரப்பட்ட வழக்குகள் கைவிடப்பட வேண்டும், மின்வாரிய மசோதா விலக்கிக் கொள்ளப்பட வேண்டும்,இறந்த விவசாயிகளுக்கு இழப்பீடுகள் வேண்டும் என்பது உள்ளிட்ட சில கோரிக்கைகளை வைத்து போராட்டங்களை தொடர்ந்தனர்.
இந்நிலையில் வேறு வழியில்லாமல் இந்த கோரிக்கைகளையும் மோடி அரசு ஏற்றுக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. விவசாயிகள் மீது போடப்பட்ட வழக்குகள் வாபஸ் பெறப்படும் என மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது. மேலும் மின்வாரிய மசோதாவை தாக்கல் செய்வதற்கு முன்னால் விவசாய சங்க பிரதிநிதிகள் முன்னால் வைத்து அவர்களின் கருத்துக்களைக் கேட்ட பின்னரே உரிய திருத்தம் செய்து தாக்கல் செய்வோம், குறைபட்ச ஆதார விலை தொடர்பாக விரைவில் குழு அமைப்போம். நட்ட ஈடு வழங்குவது தொடர்பாக விரைவில் அறிவிப்போம் என்று உறுதிமொழிகள் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து விவசாயிகள் போராட்டங்களை முடித்துக் கொண்டு ஊர் திரும்ப முடிவெடுத்திருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
டெல்லியைச் சுற்றிய எல்லைகளான காசிப்பூர், சிங்கூர், போன்ற பல பகுதிகளிலும் போடப்பட்டுள்ள போராட்டப்பந்தல்களை பிரித்து விட்டு ஊர் திரும்ப விவசாயிகள் தயாராகி வருகிறார்கள். நாளை மறு நாள் முழுவதாக போராட்டக்களங்கள் காலியாகும் எனத் தெரிகிறது.