“நாட்டின் ஜனநாயக ரீதியான மேம்பாட்டுக்கு சகல இலங்கையரையும் உள்ளீர்க்கும் அரசியல் நடவடிக்கைகள் மிகவும் முக்கியமானதாகும். அத்துடன் மீண்டும் ஆயுத மோதல் ஏற்படாமல் தடுப்பதற்கும் இது மிகவும் முக்கியமானதாகும் என்று சுதந்திர இல்லத்தின் (பிரீடம் ஹவுஸ்) நிறைவேற்றுப் பணிப்பாளரான ஜெனிபர் வின்ட்ஸர் தெரிவித்ததாக பி.ரி.ஐ. செய்திச் சேவை குறிப்பிட்டுள்ளது.
தேர்தல் நடவடிக்கைகள் இடம்பெறும் நாட்களில் ஜனநாயக கோட்பாடுகளுடன் செயற்படுமாறும் இதனைச் செய்வதனால் தேர்தல் வன்முறைகளைக் குறைக்க முடியுமெனவும் இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்துவதாக அவர் கூறியுள்ளார். சட்டவிதியை அமுல்படுத்தி ஊடக சுதந்திரத்திற்கான சகல விடயங்களையும் முன்னெடுக்குமாறும் அவர் கூறியுள்ளார்.
நீண்டகால மோதல் முடிவுக்கு வந்ததையடுத்து அரசியல் சுதந்திரத்தில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ள போதும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக இலங்கையர்கள் தொடர்ந்தும் அனுபவங்களைப் பெற்றுவருவதாக சுதந்திர இல்லம் குறிப்பிட்டுள்ளது.