சட்ட ரீதியான அரசாங்கங்களுக்கு இடையிலான பிணக்குகளின் போது சர்வதேச சட்டங்களை எதிர்பார்க்க முடியும் என்ற போதிலும், பயங்கரவாத அமைப்பொன்றுடனான போராட்டங்களின் போது இதனை எதிர்பார்க்க முடியாதென மகிந்த ராஜபக்ச ஐ.நா சபையில் தெரிவித்துள்ளார்.
இலங்கை ஜனாதிபதியின் இக்கருத்தானது மனித உரிமை மீறல்களையும் போர்க் குற்றங்களையும் ஒத்துக் கொள்ளும் வகையில் அமைந்திருப்பதாக கருதப்படுகிறது.
தமிழ் மக்களை பிரதிநிதித்துவப் படுத்துவதாக பிரச்சாரம் செய்த தமிழீழ விடுதலைப் புலிகள் தமிழ் மக்களையே கொடூரமாக நடத்தியதாக அவர் தெரிவித்துள்ளார்.
பயங்கரவாதிகளை பயங்கரவாதிகளாகவே நோக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கைத் தமிழ் மக்களின் நலன்கள் தொடர்பில் உலகின் வேறு எந்த நாடும் காட்ட அளவிற்கு நாடு கரிசனை காட்டி வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
எமது நாடு எதிர்நோக்கிய துயரமான சகாப்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
90 வீதமான இடம்பெயர் மக்கள் மீள் குடியேற்றப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
பலஸ்தீன பிரச்சினைக்கு விரைவில் தீர்வு எட்டப்படும் என இலங்கை மக்களின் சார்பில் தாம் வேண்டிக் கொள்வதாக அவர் தெரிவித்துள்ளார்.
அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகளின் பொதுச் சபைக் கூட்டத்தில் பலஸ்தீனமும் அங்கம் வகிக்க வேண்டும் என்பதே தமது விருப்பம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக யுத்த வழியை தெரிந்தெடுத்த போதிலும் பேச்சுவார்த்தைகளே பிரச்சினைகளுக்கு தீர்வு காணக் கூடிய சிறந்த வழியென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.