போபால் விஷ வாயு நிகழ்வுக்கு காரணமான யூனியன் கார்பைடு நிறுவன முன்னாள் தலைவர் வாரன் ஆண்டர்சனை இந்தியாவில் இருந்து தப்பவிட்டது யார் என்பதை அறிந்து கொள்ள எந்தவித ஆவணமும் இல்லை என மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார்.
ஆண்டர்சனை அமெரிக்காவுக்கு அனுப்ப அப்போதைய உள்துறை அமைச்சர் நரசிம்ம ராவ்தான் காரணம் என மத்தியப் பிரதேச முன்னாள் முதல்வர் அர்ஜுன் சிங் மாநிலங்களவையில் நேற்று முன்தினம் தெரிவித்தார்.
இந்நிலையில், போபால் விஷவாயு நிகழ்வு தொடர்பாக மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகளின் குற்றச்சாற்றுகளுக்கு ப.சிதம்பரம் பதில் அளிக்கையில், ஆண்டர்சன் பாதுகாப்பாக அமெரிக்கா செல்ல வழிவகுக்கப்பட்டது என அப்போது அயலுறவுத்துறை செயலராக இருந்த எம்.கே.ரஸ்கோத்ரா கூறியுள்ளார். அர்ஜுன் சிங்கும் அதையே கூறியுள்ளார்.
அவர்களது கூற்றை உறுதி செய்யவோ, மறுக்கவோ கூடிய நிலையில் நான் இல்லை. காரணம், ஆண்டர்சன் தப்பிச் செல்வதற்கு முன் மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிகள் தொலைபேசி மூலம் நெருக்குதல் கொடுத்தார்கள் என்பதற்கும், அவர் பாதுகாப்பாக செல்வதற்கு உறுதி அளிக்கப்பட்டது என்பதற்கும் ஆவணம் எதுவும் இல்லை.
ராஜீவ் காந்திக்கு இந்த நிகழ்வில் தொடர்பு இல்லை என அர்ஜுன் சிங் கூறியுள்ளதை நாம் நம்பித்தான் ஆகவேண்டும். ஆண்டர்சன் பாதுகாப்பாக வெளியேற அமெரிக்க தூதரக அதிகாரிகள் வலியுறுத்தியிருப்பதற்கு வாய்ப்புள்ளது. அதை நெருக்குதல் என்றோ அல்லது அவர்களது கடமை என்றோ விவரிக்கலாம். நமது தவறுகளுக்கு அமெரிக்காவை நாம் ஏன் குறை கூறவேண்டும்?
மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் அருண் ஜேட்லி இப்போது கேட்கும் கேள்விகளை 2001இல் அவர் சட்டத்துறை அமைச்சராக இருந்தபோது கேட்டிருந்தால், என்னைவிட திறமையான உள்துறை அமைச்சர் (எல்.கே.அத்வானி) அதற்கான ஆவணங்களைத் தேடி கண்டுபிடித்து பதில் கூறியிருந்திருப்பார்.