ராஜீவ் கொலை வழக்கில் கைதாகி 30 ஆண்டுகளாக சிறையில் உள்ளார்கள் பேரறிவாளன் உட்பட எழுவர். இதில் பேரறிவாளன் உள்ளிட்டோரை விடுதலை செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் ஆளுநர்கள், ஒன்றிய அரசுகளால் அவர்கள் விடுதலை செய்யப்படாமல் கால தாமதம் செய்யப்படுகிறார்கள்.
கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சரை தீர்மானத்தை ஆளுநர் நிராகரித்த தகவலே தெரியாமல் இருந்தனர். ஆனால், இப்போது திமுக ஆட்சிக்கு வந்ததும் மீண்டும் எழுவரையும் விடுதலை செய்ய வேண்டும் என அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றி அனுப்பியும் அதன் பேரில் எந்தமுடிவையும் எடுக்கவில்லை. இது தொடர்பாக பல முறை ஆளுநருக்கு தமிழ்நாடு அரசு அறிவுறுத்தியும் கூட முடிவெடுக்காத நிலையில் பேரறிவாளன் தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கில் தமிழ்நாடு அரசு பதில் மனு தாக்கல் செய்தது. அந்த மனுவில் தமிழ்நாடு அமைச்சரவையின் முடிவுக்கு ஆளுநர் கட்டுப்பட்டவர் ஆனால் தமிழ்நாடு ஆளுநர் இந்த விவாகாரத்தில் முடிவு எதனையும் எடுக்காமல் காலம் தாழ்த்துகிறார் என்று தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது.
இதனையடுத்து, பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் ஆளுநர் கால தாமதம் செய்வதை ஏற்க முடியாது என்றும் பேரறிவாளன் உட்பட எழுவர் விவகாரத்தில் உரிய முடிவு எடுக்குமாறும் உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கும் தமிழ்நாடு ஆளுநருக்கும் உத்தரவிட்டு வழக்கை ஜனவரிக்கு ஒத்தி வைத்தது.