தந்தை பெரியார் தன் வாழ்நாள் முழுக்க பணி செய்த அலுவலகம் அமைந்திருக்கும் சாலையை 1970-பதுகளில் எம்.ஜி.ஆர் அரசு ஈ.வே.ரா பெரியார் சாலை என்று பெயர் மாற்றியது. அந்த சாலையில்தான் தினத் தந்தி அலுவலகமும் உள்ளது. அந்த இடமும் குறைந்த விலைக்கு பெரியார் ஆதித்தனாருக்கு கொடுத்த இடம்தான்.அப்போது முதல் இப்போது வரை பெரியார் சாலை என்ற அடையாளத்துடன் இருந்த இந்த சாலையை தமிழக அரசின் நெடுஞ்சாலைத்துறை கிராண்ட் வெஸ்டர்ன் டிரங்க் ரோட் (Grand western Trunk Road) என்று பெயர் மாற்றியது. இந்த பெயர் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் வைக்கப்பட்ட பெயர்.
அதன் பின்னர் பெயர் மாற்றம் பெற்ற பிறகு ஈவேரா பெரியார் சாலை என்ற பெயர் இருந்தது. ஆனால் இப்போது பாஜக கட்டுப்பாட்டில் எடப்பாடி பழனிசாமி இருப்பதால் திராவிட சிந்தனையை விதைத்த தலைவர்களின் அடையாளங்களை அழிக்கும் தொடர் நடவடிக்கைகள் தமிழகத்தில் வேகம் பெற்று வந்த நிலையில் பெரியார் சாலை என்ற பெயர் தமிழக அரசு ஆவணங்களில் மாற்றப்பட்டது. இதை அறிந்த பல இயக்கங்கள் போராட்டங்களை அறிவிக்க தமிழக அரசு பெயர் மாற்றும் முயற்சியில் இருந்து பின் வாங்கியது.கிராண்ட் வெஸ்டர்ன் டிரங்க் ரோட் என்ற பெயர் பலகை மீது கருப்பு மை கொண்டு பெரியார் திராவிடர் கழக தோழர்கள் அந்த பெயர் பலகையை அழித்தனர். அந்த இடத்தில் ஈ.வே.ரா பெரியார் சாலை என்று பெயர் வைக்க வேண்டும் இல்லை என்றால் போராட்டம் வெடிக்கும் என பல அமைப்புகள் எச்சரிக்கை விடுத்துள்ளது.