சென்னையை அடுத்த புழல் முகாமில் இருந்துவரும் இலங்கை தமிழர்களை, தமிழக காவல்துறையின் க்யூ பிரிவு காவல் அதிகாரிகள் விசாரணை என்ற பெயரில் அடித்து இழுத்து சென்று, அவர்கள் மீது பொய்யான வழக்குத் தொடர்ந்து சிறையில் அடைத்துள்ளனர்.
இராமச்சந்திரன் என்கிற ரமேஷ், காந்தி மோகன் என்கிற சுதர்சன், சுரேஷ் குமார், மற்றொரு சுரேஷ் குமார், சுஜா என்கிற சுஜாந்தன், உமேஷ் ஆகிய 6 பேரை முகாமிற்கு வெளியே வரச்செய்த க்யூ பிரிவு காவல் அதிகாரிகள், அவர்களை அடித்து, உதைத்து இரண்டு வாகனங்களில் ஏற்றிச் சென்றுள்ளனர். இதைக்கண்ட அவர்களின் குடும்பத்தார் கதறியழுதுள்ளனர். எதற்காக இவர்களை அழைத்துச் சென்றனர் என்று கேட்டதற்கு, அங்கிருந்த காவல் துறை உதவி ஆணையர், அவர்கள் ஆஸ்ட்ரேலியா செல்ல படகு வாங்க ஆந்திரத்திற்கு சென்றார்கள் என்று காரணம் கூறியவர், சிறிது நேரத்திற்குப் பிறகு, அவர்கள் செயற்கைக்கோள் தொலைபேசி வைத்திருந்தார்கள் என்று மாற்றி கூறியிருக்கிறார்.
வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட அந்த 6 பேரும் சென்னை கடற்கரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். அங்கு விசாரணை நடத்திய பிறகு, முகாமின் தலைவர் சொன்னார் என்பதற்காக 4 பேரை விடுவித்துவிட்டு, இராமச்சந்திரன், காந்தி மோகன் ஆகிய இருவர் மீதும் வழக்குத் தொடர்ந்து, திருவொற்றியூர் நீதிபதி முன்பு நிறுத்தி நீதி மன்றக் காவலில் புழல் சிறையில் அடைத்துள்ளனர். இவர்கள் மீது எதற்காக, எந்தப் பிரிவில் வழக்கு போடப்பட்டுள்ளது என்ற எந்த விவரத்தையும் அவர்களின் குடும்பத்தினருக்கு காவல் துறையினர் தெரிவிக்கவில்லை.
முகாமிற்குள் செல்லாமலேயே, அவர்கள் செயற்கைக்கோள் தொலைபேசி வைத்துள்ளார்கள் என்றும், படகு வாங்க ஆந்திரா சென்றனர் என்றும் ஆதாரமற்ற குற்றச்சாற்றுகளைக் கூறி, அடித்து உதைத்து அழைத்துச் சென்று சிறையில் அடைத்திருப்பது மனிதாபிமானமற்ற, சட்டத்திற்குப் புறம்பான நடவடிக்கைகளாகும். தமிழ்நாட்டின் முகாம்களில் தங்கியுள்ள ஈழத் தமிழ் சொந்தங்களை மிரட்டி வைக்க இப்படிப்பட்ட அராஜக நடவடிக்கைகளில் க்யூ பிரிவு காவல் அதிகாரிகள் அடிக்கடி ஈடுபட்டு வருகின்றனர். அதுதான் நேற்று புழல் முகாமிலும் நடந்துள்ளது. இப்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ள காந்தி மோகன் தனது நான்கு தங்கைகளுடன் இலங்கையில் இருந்து வந்தவராவார். அவர்களுடைய பிள்ளைகளும் இவரது அரவணைப்பில்தான் இருந்து வருகிறார்கள்.
It is time for the United Nations High Commissioner for Refugees to step in without any further delay.