ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழக மாணவர் சங்கம் அழைப்பை ஏற்று அங்கு உரையாற்றச் சென்ற சனாதிபதி அங்கு உரையாற்ற இயலாமல் திரும்பியதைப் பற்றிப்; பலவாறான கருத்துக்கள் நிலவுகின்றன. எல்லவாற்றிலும் ஒரு பொதுக் கருத்து ராஜபக்ஷ அவமதிக்கப்பட்டுள்ளார் என்பதுதான்.
நிச்சயமாக அவருக்கெதிராக விமான நிலையத்தில் நடந்த ஆர்ப்பாட்டமும் அதன் பயனாக அவர் வேறு வழியாக வெளியேற நேர்ந்ததும் அவரது உரையை ரத்துச் செய்ய முக்கியமான பங்களித்தன.
இலங்கையின் சனாதிபதி அவமதிக்கப்பட்டது அங்கு ஒரு பெரிய விடயமல்ல என்பதை இலங்கை அரசாங்கம் எவ்வாறு விளங்கிக் கொண்டாலும், சனாதிபதி ராஜபக்ஷ அரசின் அலட்சியமான போக்கிற்கு இது ஒரு பாடமென்பதை யாரும் விளங்கிக் கொண்டதாகத் தெரியவில்லை.
அந்தக் கூட்டத்தில் தனது அரசியல் தீர்வை அறிவிக்க இருந்ததாக அவர் இப்போது சொல்லுவது நகைப்பிற்குரியதாகவே தோன்றுகிறது. தேசிய இனப் பிரச்சினைக்கான தீர்வு பற்றிய அறிவிப்பைப் பகிரங்கப்படுத்த உகந்த இடம் அதுதானா என்று யோசித்தால் அந்தக் கூற்று நிகழ்வின் பயனாகத் தமிழ் மக்கள் மீது ஏற்பட்ட சினத்தின் ஒரு வெளிப்பாடாகவே தெரிகிறது.
இன்னொரு புறம், தமிழ் மக்களின் எதிர்ப்பை விடுதலைப் புலிகளின் எதிர்ப்பாகக் காட்டுகிற முனைப்பு சிங்களப் பேரினவாதிகளிடையிலும் புலம்பெயர்ந்த புலிப் பிரமுகரிடையிலும் ஒரே அளவிற்கு உள்ளமை, பேரினவாதமும் குறுகிய தேசியவாதமும் ஒன்றுக்கொன்று எவ்வாறு ஊட்டமளிக்கின்றன என்பதை நினைவூட்டுகிற விதமாக அமைந்தது எனலாம்.
எந்தவிதமான அமைப்பும் சாராமல் விமான நிலையத்தினுள் நடந்த அமைதியான எதிர்ப்பின் போது, திட்டமிட்டே, விடுதலைப் புலிச் சின்னம் மட்டுமே பொறித்த பதாகைகளை, அங்கு திரண்டிருந்தோரிடையே வெளியேறல் வாயிலை அண்டிய பகுதியில் நின்றவர்கள் சிலர் பிடித்து நின்றனர். முன்னாலிருந்து எடுத்த படங்கள் பெருந்தொகையான புலி ஆதரவாளர்கள் இருந்தது போன்ற மயக்கத்தை உருவாக்கிய போதும் பின்னாலிருந்து எடுத்த படங்களில் நூற்றுக்கணக்கான மக்களிடையே ஒரு சிலர் மட்டுமே கூட்டத்தின் ஒரு அந்தத்தில் பதாதைகளுடன் நின்றதைக் காணக் கூடியதாக இருந்தது.
இந்த முயற்சிக்குப் பின்னால் எந்தவிதமான நோக்கங்கள் இருந்தன என்று உறுதியாகக் கூற இயலா விட்டாலும், 2008ன் பிற்பகுதியிலிருந்து போர் நிறுத்தம் வேண்டி மேற்குலகில் நடந்த மக்களெதிர்ப்பில் விடுதலைப் புலிப் பதாதைகளின் ஆதிக்கத்தின் விளைவாக அந்த எதிர்ப்பியக்கம் பெற்றிருக்கக் கூடிய அதிகளவு ஆதரவைப் பெறத் தவறிவிட்டதென்பதை ஏற்பவர்கள் பேரினவாத எதிர்ப்பிற்குத் தொடர்ந்தும் விடுதலைப் புலி முகமூடி அணிவிப்பதால் தமிழ் மக்களின் ஒருங்கிணைந்த எதிர்ப்புக்குரல் பலவீனப்படுவதுடன் பேரினவாதிகளின் கரங்களும் வலுப்படும் என்பதைப் புலம் பெயர்ந்த தமிழ் மக்கள் கவனத்திலெடுக்க வேண்டும்.
எந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்திலும், எவரும் எந்த அமைப்பும் பங்கு பற்றுவது வரவேற்கத்தக்கது. ஆனால் அதை யாரும் தமது ஏகபோகமாக முயல்வது கண்டிக்கத்தக்கது.
ராஜபக்ஸவுக்கு ஏற்பட்ட அவமதிப்பு இப்போது பழி தீர்க்கிற ஒரு வஞ்சினம் போல வடிவெடுத்துள்ளது. அது இப்போது அரசாங்கத்தின் போர்க் குற்றங்கள் பற்றி வாய் திறப்போர் மீதும் ‘புலி ஆதரவாகத்’ தோற்றந் தந்த அல்லது கருதப்பட்ட சில அரசியல்வாதிகள் மீதும் வலிந்து தாக்குதல் தொடுக்கும் நடவடிக்கைகளாகத் தன்னை வெளிப்படுத்துகிறது.
நம் முன்னால் உள்ள பணி சனநாயக மறுப்புக்கெதிராக மக்களை ஒன்று திரட்டுவதாக அமைவது முக்கியமானது. எனவே, ஜே.வி.பி. தலைவர்கள் மீதான தாக்குதல்கள் முதலாக கரு ஜெயசூரிய, ஜயலத் ஜயவர்த்தன, விக்கிரமபாகு கருணாரத்ன முதலானோர் மீதான தாக்குதல் வரை, அனைத்தையும் நிபந்தனையின்றி நாம் வன்மையாகக் கண்டிப்பதும் அதற்கான சனநாயக நியாயத்தை தெளிவாகக் கூறுவதும் முக்கியமானது.
இந்த அரசாங்கம் இந்த நாட்டில் மறுத்து வரும் கருத்துச் சுதந்திரம் பற்றி மக்களுக்கு எடுத்துரைக்கவும் இது ஒரு நல்ல தருணமாகும். தொடர்வார்களா?
மக்கள் தங்களது வர்க்க நிலைமைகளையும் ஆளும் வர்க்க மேட்டுக்குடி எசமானர்களைப் பற்றியும் அரசியல் ரீதியில் உணராத வரை, மாற்றங்கள் வரப் போதில்லை. செக்கு மாட்டுத் தடத்தில் தொடர்ந்து வாக்களித்து வாக்களித்து ஏமாறுவதை நிறுத்த வேண்டும். மாற்று அரசியல் பற்றிச் சிந்திக்க ஆரம்பிக்க வேண்டும்.
“மறுக்கப்பட்ட பேச்சுரிமைகள்” என்ற தலைப்பில் இலங்கை புதிய ஜனநாயக மார்க்சிய லெனினியக் கட்சியின் இதழான புதிய பூமியில் வெளியான கட்டுரையிலிருந்து சில பகுதிகள்… புதிய பூமியைப் பெற்றுக்கொள்வதற்கு : [+94] 71 4302909