புலிகள் யாழ் குடாநாட்டுக்குத் திரும்புவதை நினைத்துக்கூடப் பார்க்கமுடியாது

வன்னியிலிருக்கும் விடுதலைப் புலிகள் யாழ் குடாநாட்டுக்குத் திரும்புவதைப் பற்றி அவர்களால் நினைத்துக்கூடப் பார்க்கமுடியாது என யாழ் மாவட்டத்தின் 51வது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி மேஜர் ஜென்ரல் எல்.பி.ஆர்.மார்க் தெரிவித்துள்ளார்.

வன்னிக்கும், யாழ்ப்பாணத்துக்கும் மாறிமாறி விடுதலைப் புலிகள் செல்லும் நிலைமை முடிவுக்குக்கொண்டுவரப்பட்டு, வன்னியிலிருக்கும் விடுதலைப் புலிகள் யாழ்ப்பாணத்துக்கு வரமுடியாத சூழ்நிலை ஏற்படுத்தப்பட்டிருப்பதுடன், இராணுவத்தினருக்கு ஆதரவாக யாழ் குடாநாட்டு மக்கள் செயற்படுவதாகவும் அரசாங்க ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் கூறினார்.

யாழ் பல்கலைக்கழகம், அரசாங்கத் திணைக்களங்கள் உட்பட முன்னணி கல்வி நிறுவனங்கள் தமது படைப்பிரிவின் நேரடிக் கண்காணிப்பில் இருப்பதாகவும், கடந்த வருடங்களைப் போலல்லாது இனிமேல் பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகத்தின் கல்விச் செயற்பாடுகளை எந்தவிதமான ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்களின் இடையூறின்றி முன்னெடுக்க முடியும் எனவும் மேஜர் ஜென்ரல் மார்க் குறிப்பிட்டார்.

ஏ-9 வீதி மூடப்பட்டதைத் தொடர்ந்து யாழ் குடாநாட்டுப் பிரதேசத்துக்கு விடுதலைப் புலிகள் ஊடுருவுவது தடைப்பட்டது என தனது செவ்வியில் சுட்டிக்காட்டியிருக்கும் அவர், விடுதலைப் புலிகளை இல்லாமல் செய்வதற்கு யாழ் குடாநாட்டு மக்கள் தற்பொழுது பாதுகாப்புத் தரப்பினருக்கு ஒத்துழைப்பு வழங்குவதாகக் கூறினார்.

“பொதுமக்களின் ஒத்துழைப்புடன் விடுதலைப் புலிகளை அழிப்பதுடன், மறைத்துவைக்கப்பபட்டிருந்த பாரியளவு ஆயுதங்களையும் நாங்கள் மீட்டுள்ளோம். அண்மையில் யாழ்ப்பாணத்தில் நடத்தப்பட்ட களியாட்ட நிகழ்வும், வர்த்தகக் கண்காட்சியும் பாரிய வெற்றியைத் தந்துள்ளது. பாதுகாப்புத் தரப்பினர் மீது யாழ் குடாநாட்டு மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர் என்பதை இவை எடுத்துக்காட்டுகின்றன” என்றார் 51வது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி.

யாழ் குடாநாட்டிலுள்ள மக்கள் தற்பொழுது மகிழ்ச்சியாக இருப்பதாகவும், அவர்கள் கொழும்பில் இருப்பதைவிட யாழ்ப்பாணத்தில் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் இராணுவத் தளதி கூறினார். வர்த்தக மற்றும் விவசாயச் செயற்பாடுகள் சுமுகமான முறையில் முன்னெடுக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்ட மேஜர் ஜென்ரல் மார்க், சரியான நேரத்தில் யாழ்ப்பாணத்தில் தேர்தல் நடத்தப்படும் எனவும் கூறினார்.

One thought on “புலிகள் யாழ் குடாநாட்டுக்குத் திரும்புவதை நினைத்துக்கூடப் பார்க்கமுடியாது”

  1. //யாழ் குடாநாட்டு மக்கள் தற்பொழுது பாதுகாப்புத் தரப்பினருக்கு ஒத்துழைப்பு வழங்குவதாகக் கூறினார்.

    “பொதுமக்களின் ஒத்துழைப்புடன் விடுதலைப் புலிகளை அழிப்பதுடன், மறைத்துவைக்கப்பபட்டிருந்த பாரியளவு ஆயுதங்களையும்/
    / தமிழில் இப்படி எழுதுவதற்கு “வேறெதாவது செய்யலாம்” என்று தோன்றுகிறது. சிங்களப் பேரினவாதத்திற்கு ஒத்து ஊதுகிற செயலன்றி வேறென்ன?

Comments are closed.