28.09.2008.
விடுதலைப் புலிகள் தோல்வியடைவதை இணைத் தலைமை நாடுகள் விரும்பவில்லை. எனவே எவ்வாறாவது யுத்தத்தை நிறுத்தச் செய்து மீண்டும் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கச் செய்வதே அவர்களது நோக்கமாகும். தமிழ் மக்களுக்கு தீர்வினை கொடுக்க வேண்டுமென்றால் விடுதலைப் புலிகளை தோல்வியடையச் செய்ய வேண்டும். இதற்கு எதிராகவே மேற்கு நாடுகள் செயற்படுகின்றன. சர்வதேச தலையீடுகளுக்கான வாய்ப்புக்களை அரசாங்கமே ஏற்படுத்திக் கொடுக்கின்றது. யுத்தத்தால் இடம்பெயரும் தமிழ் மக்களுக்கு தேவையான நிவாரணப்பொருட்களை வழங்கி அவர்களை தங்க வைப்பதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ள தவறிவிட்டது.இணைத் தலைமை நாடுகளுக்கு இனிமேலும் இலங்கை பிரச்சினையில் தலையிடும் உரிமை கிடையாது. இதனை அரசாங்கம் பகிரங்கமாக அறிவிப்பதோடு அந்நாடுகளுடன் தேசிய பிரச்சினை தொடர்பாக எந்தவிதமான பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபடலாகாது. தமிழ் மக்களை இரண்டாம் தரப்புப் பிரஜைகளாகக் கூறுவது அரசாங்கம் மீதான நம்பிக்கையை இழக்கச் செய்யும் கருத்தாகும் என்று ஜே.வி.பி. தெரிவிக்கின்றது.இது தொடர்பாக ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா மேலும் கருத்து தெரிவிக்கையில் கூறியதாவது: விடுதலைப் புலிகளுடனான யுத்த நிறுத்தப் புரிந்துணர்வு உடன்படிக்கை என்று ரத்தானதோ அன்றே இணைத் தலைமை நாடுகளின் செயற்பாடும் ரத்தாகிவிட்டது. இதற்கு மேலும் எமது பிரச்சினையில் தலையிடும் உரிமை அந்நாடுகளுக்கு கிடையாது. ஆனால் இதனை அரசாங்கம் தெரிவிப்பதில்லை. மாறாக புலிகளுக்கு சார்பான நோர்வே, ஐரோப்பிய ஒன்றிய நாட்டு பிரதிநிதிகளுடன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கை குலுக்கி மகிழ்கிறார்.அரசாங்கம் யுத்தத்தை முன்னெடுக்கும் அதேவேளை அனைவரையும் சந்தோஷப்படுத்தும் கைங்கரியத்திலும் இறங்கியுள்ளது. எதுவிதமான தெளிவான உறுதியான கொள்கை இல்லை என்றும் ஜே.வி.பி. தெரிவிக்கின்றது.