10.04.2009.
இலங்கையில் படையினருக்கும் புலிகளுக்கும் இடையே யான மோதல்களின் மத்தியில் சிவிலியன்கள் அகப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில் காலம் ஓடிக்கொண்டிருக்கிறது. என்று ஐ.நா. வின் மனிதாபிமான நடவடிக்கைகளுக்கான பிரதம அதிகாரி எச்சரித்துள்ளதுடன், அப்பாவி மக்களின் நிலை கருதி சண்டையை தற்காலிகமாக நிறுத்திக் கொள்ளுமாறு மீண்டும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
த கார்டியன் பத்திரிகையில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், இன்றைய நிலையில் நீண்டகால போர் நிறுத்தத்திற்கான சாத்தியங்கள் இல்லை. எனவே தற்காலிக மனிதாபிமான போர் ஓய்வுநிலை அமுல்படுத்தப்படல் வேண்டும். மோதல் பிரதேசங்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கவும், அங்கிருந்து வெளியேற விரும்புபவர்களுக்கு வாய்ப்பளிக்கவும் இது உதவும் எனத் தெரிவித்துள்ளார். அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: அரச படைகள் விடுதலைப்புலிகளை ஒரு சிறு பிரதேசத்தினுள் முடக்கியுள்ளனர். இடம் மிகச் சிறிதாகவுள்ளதனால் ஒரு சூட்டுச் சம்பவமோ, எறிகணைத் தாக்குதலோ 1,50,000190,000 வரையிலான சிவிலியன்கள் மத்தியில் பேரழிவை ஏற்படுத்தலாம். யார் எப்போது எப்படிச் சுட்டார்கள் என்பன பற்றி தீர்க்கமாக விசாரித்தறியும் சூழ்நிலை இல்லை. ஆனாலும் பலநூறு சிவிலியன்கள் இறந்து கொண்டிருக்கிறார்கள். எல்.ரீ.ரீ.ஈ., சிவிலியன்கள் வெளியேறுவதை அனுமதிக்கவில்லை என்பது உண்மையே. புலிகள் இறுதி மோதலுக்கு தம்மைத் தயார்படுத்துகிறார்கள் போலிருக்கிறது. அகப்பட்டுள்ள சிவிலியன்களுக்கு வெளியேறவோ, தொடர்ந்தும் தங்கியிருக்கவோ தீர்மானிக்கும் சுதந்திரம் வேண்டும். புலிகள் தமிழ் மக்களை இதயபூர்வமாக நேசிப்பவர்களாயின் சிவிலியன்களின் அவலங்களுக்கு முடிவு கிடைக்க வழிசெய்ய வேண்டும்.
இலங்கையரசு கனரக ஆயுதங்களைப் பயன்படுத்துவதில்லை என்ற தனது உறுதிமொழிகளைக் காப்பாற்ற வேண்டும். இடைக்கால போர் ஓய்வு பற்றிய பேச்சுக்கள் நடைபெறும் போது மோதல் பிரதேசத்தின் மீது இறுதித் தாக்குதலிலிருந்து விலகியிருத்தல் வேண்டும். மேலும் இடம்பெறக் கூடிய சிவிலியன்களின் மரணங்கள் சர்வதேச அரங்கில் இலங்கை அரசாங்கத்தின் நற்பெயரை மோசமாகப் பாதிக்கச் செய்யும், மேலும் தேசிய குழுக்களுடன் அது விரைந்து சமரசங்கள் செய்துகொள்ள வேண்டும்.
சுயாதீன உதவி வழங்கும் அமைப்புகள் மென்மேலும் உதவிகளை கொண்டுவருவதற்கும், சூழலை மதிப்பீடு செய்து சிவிலியன்களுக்கு உதவுவதற்கும் அனுமதிக்கப்படல் வேண்டும். வழங்கல்கள் கிடைக்கப்பெறுவதற்கான மேலும் சிறந்த மார்க்கங்களை அவசரமான முறையில் பெறமுடியாத நிலையானது தொற்று நோய்கள், பசி,பட்டிணி போன்றவற்றினால் மேலும் இறப்புக்களை ஏற்படுத்தும்.
ஆயிரக்கணக்கான மக்களின் உயிர்கள் ஊசலாடிக்கொண்டிருக்கின்றன. கடிகாரம் ஓடிக்கொண்டிருக்கிறது. அரசாங்கமும் எல்.ரீ.ரீ. யும் தீர்க்கமான முடிவுகளை எடுக்க வேண்டிய நேரம் இதுதான். நிவர்த்தி செய்யமுடியாத கட்டத்திற்குச் சென்றுவிடக் கூடாது இவ்வாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.