17.11.2008.
நிபுணத்துவம் பெற்ற பொலிஸாரும், சி.ஐ.டி.யினரும் விசாரணைகளை மேற்கொண்டுள்ள நிலையில் தனது செயலாள ரைப் புலிகள் கொலை செய்யவில்லை என்று கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையான் எதனை அடிப்படையாக வைத்து கூறுகின்றார்.
விசாரணை அறிக்கை கிடைக்கும் முன்னர் பிள்ளையான் எப்படிக் கூற முடியும் என்று பிரதமர் ரட்ணசிறி விக்ரமநாயக்க சபையில் கேள்வியெழுப்பினார்.
பாராளுமன்றத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற ஜனாதிபதி செயலகம், பிரதமர் செயலகம், அரசியலமைப்பு சபை, பாராளுமன்றம் உள்ளிட்ட 24 தலைப்புகளில் நடைபெற்ற நிதி ஒதுக்கீட்டு தொடர்பான குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே இவ்வாறு பிரதமர் கேள்வி எழுப்பினார்.
அங்கு பிரதமர் தொடர்ந்து உரையாற்றுகையில் தெரிவித்ததாவது:
அரசியலமைப்பின் 17ஆவது சீர்திருத்தம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் பிரகாரம் உயர் நீதிமன்றம் சில விதப்புரைகளை வழங்கியுள்ளது. அதன் பிரகாரம் நானும், எதிர்க்கட்சித் தலைவரும், ஜனாதிபதியும் சந்தித்து கலந்துரையாடினோம்.
17ஆவது திருத்தத்தை அன்று அவசர அவசரமாக கொண்டு வந்தோம். அது சரியோ, பிழையோ அரசியலமைப்பின் ஒரு பிரிவாகவே இருக்கின்றது. அரசியலமைப்பு சபை இல்லாவிடின் நியமனங்களை வழங்க முடியாது.
உயர் நீதிமன்றத்தின் வழிகாட்டலின் பிரகாரம் சகலரும் இணைந்து கருத்து முரண்பாடுகள் இன்றி பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும். அதன் பொறுப்பினை உயர் நீதிமன்றம் எம்மிடம் ஒப்படைத்துள்ளது. கொலைகளை நியாயப்படுத்தவில்லை.
பிள்ளையான் தனது செயலாளரை புலிகள் கொல்லவில்லை என்று எவ்வாறு கூறுகின்றார் என எனக்குத் தெரியாது. பொலிஸாரையும், சி.ஐ.டி.யினரையும் நியமித்துள்ளோம். நிபுணத்துவம் பெற்றவர்கள் விசாரணைகளில் இறங்கியுள்ளனர். சட்டத்தையும் ஒழுங்கையும் பேணும் கடப்பாடு எம்மிடம் இருக்கின்றது. சட்டத்தை அமுலாக்கும் போதுதான் ஒழுக்கத்தைப் பேண முடியும். சட்டத்தை நாம் நெறிப்படுத்த வேண்டும்.
இலங்கையில் பிறந்த எவருக்கும் தான் பிறந்த, வாழும் சுதந்திரத்தை கொண்டிருக்கின்றார். அதனால் தான் ஜனநாயகத்தை நிலைநாட்டுவதற்கு படையினர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். பெண் ஆங்கில ஆசிரியர் ஒருவர் அரசாங்கத்தின் சம்பளத்தைப் பெற்றுக் கொண்டு பயங்கரவாதத்திற்கு ஆதரவாக செயற்பட்டுள்ளார்.
பலவந்தமாகவே அவர் கடத்தப்பட்டு அரசாங்கத்திற்கு எதிராக செயல்படுத்தப்பட்டார் என்பதனால் தான் பயங்கரவாதத்தை ஒழிக்க வேண்டும். பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டதன் பின்னர் அங்கு அபிவிருத்திகளை முன்னெடுக்க வேண்டும். இல்லையேல், மீண்டும் ஒரு “ஒப்பாரி’ ஏற்படும். அதற்கு இடமளிக்க முடியாது. கிழக்கு மாகாணத்தை பொறுத்தமட்டில் அங்கு அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன. அதேபோல, வடக்கிலும் அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்படும்.
விரைவில் பிள்ளையானும் அம்பேல் ஆகுவார் என்பதன் முன்னெச்சரிக்கை ஒலிக்க ஆரம்பித்து விட்டது.