30.09.2008.
இலங்கையின் வடக்கே தரையிலும் கடற்பரப்பி்லும் விடுதலைப் புலிகளுடன் கடும் சண்டைகள் நடைபெற்று வருவதாகத் கூறியுள்ள பாதுகாப்பு அமைச்சகம் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்ட களமுனைகளில் திங்கள் கிழமை இடம்பெற்ற மோதல்களில் ஓர் அதிகாரி உட்பட 10 இராணுவத்தினரும்- 50 விடுதலைப் புலிகளும் கொல்லப்பட்டிருப்பதாகத் தெரிவித்திருக்கின்றது.
இந்த மோதல்களில் மேலும் 32 படையினர் காயமடைந்திருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் கூறியிருக்கின்றது.
முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்காவில் ரயில் நிலையப்பகுதியையும் இராணுவத்தினர் விடுதலைப் புலிகளிடம் இருந்து கைப்பற்றி- முறிகண்டி பகுதியில் ஏ9 வீதியை எட்டிப்பிடிக்கும் தொலைவில் இருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் குறி்ப்பிட்டிருக்கின்றது.
இந்த உக்கிர சண்டைகளை உறுதிப்படுத்தியுள்ள விடுதலைப் புலிகள் வெலிஓயா எனப்படும் மணலாறு பகுதியில் 6 முனைகளில் இராணுவத்தினர் மேற்கொண்ட முன்னகர்வு முயற்சிகள் விடுதலைப் புலிகளின் கடுமையான எதிர்த்தாக்குதல்களில் முறியடிக்கப்பட்டிருப்பதாகவும் கூறியிருக்கின்றனர். இந்த மோதல்களில் 6 படையினர் கொல்லப்பட்டிருப்பதாகவும்- மேலும் 20 இராணுவத்தினர் காயமடைந்திருப்பதாகவும் விடுதலைப் புலிகள் தெரிவித்திருக்கின்றனர்.
கொக்காவில் ரயில் நிலையத்திற்கு மேற்குப் பகுதியிலும் கடும் சண்டைகள் நடைபெற்றிருப்பதாகவும் விடுதலைப் புலிகள் குறிப்பிட்டிருக்கின்றனர்.
கிளிநொச்சி மாவட்டம் வன்னேரிக்குளத்திற்கு மேற்குக் களமுனைகளில் முன்னேற்ற முயற்சியில் ஈடுபட்டிருக்கும் இராணுவத்தினருக்கு எதிராக மூன்றாவது நாளாக இன்றும் கடும் சண்டைகள் இடம்பெற்று வருவதாகவும் விடுதலைப் புலிகள் அறிவித்திருக்கின்றார்கள்.
இதனிடையில்- கிளிநொச்சி- முல்லைத்தீவு மற்றும் வவுனியா களமுனைகளில் நேற்று இடம்பெற்ற வெவ்வேறு மோதல்களில் 50 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டிருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கின்றது.
திங்கட்கிழமை இரவு 11 மணியளவில் பூனகரி கடற்பரப்பில் கடற்புலிகளின் படகு நடமாட்டத்தை அவதானி்த்த கடற்படையினர் அவர்களின் இரண்டு படகுகளைத் தாக்கி அழித்திருப்பதாகவும்- அவற்றிலிருந்த 8 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டிருப்பதாகவும் இராணுவம் கூறியிருக்கின்றது.
கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டக் களமுனைகளில் இட்மபெற்ற மோதல்களையடுத்து 2 விடுதலைப்புலிகளின் சடலங்களையும் இராணுவ தளபாடங்களையும் படையினர் கைப்பற்றியிருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் பட்டியலிட்டு விபரம் தெரிவித்திருக்கின்றது.
மணலாறு பகுதியில் இடம் பெற்ற மோதல்களில் இராணுவத்திடமிருந்து தாங்களும் இராணுவ தளபாடங்களைக் கைப்பற்றியிருப்பதாக விடுதலைப் புலிகளும் கூறியிருக்கின்றார்கள்.