21.10.2008.
ராமேஸ்வரம் பொதுக் கூட்டத்தில் மத்திய அரசை தாக்கிப் பேசிய இயக்குனர்கள் சீமான் மற்றும் அமீருக்கு காங்கிரஸ் தலைவர் தங்கபாலு கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஈழத் தமிழர்கள் பிரச்சினை தீர்வுகாக இந்திரா காந்தி காலத்தில் தொடங்கி ராஜீவ் காந்தி பிரதமராக இருந்த காலத்திலும் எடுத்த முயற்சிகள் ஏராளம். தலைவர் ராஜீவ் காந்தி – ஜெயவர்த்தனே ஒப்பந்தத்தின் மூலம் இலங்கை தமிழர் வாழ்வில் புதிய அத்தியாயத்தை உருவாக்கி முனைந்து செயல்பட்ட நேரத்தில் தமிழின துரோகிகளால் தலைவர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டார்.
மாபெரும் தியாகத்தைச் செய்த காங்கிரஸ் கட்சி ஒரு போதும் அக்கொலை பாதகர்களை, அவர்களுக்கு துணை போகிற இயக்கத்தை (விடுதலை புலிகளை) அக்கொலையை நியாயப்படுத்துகிற கொடுமையாளர்களை மன்னிக்கவோ, மறக்கவோ முடியாது.சோனியா வழிகாட்டுதலில் பிரதமர் மன்மோகன்சிங் தலைமையிலான மத்திய அரசு கடந்த நான்கரை ஆண்டுகளாக இலங்கை தமிழர் பிரச்சினையில் நிரந்தரத் தீர்வுக்கு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. தமிழ்நாட்டில் ஆங்காங்கே தடை செய்யப்பட்ட விடுதலை புலிகளை ஆதரித்தும், அவர்களுக்கு பாராட்டு தெரிவித்தும் பல்வேறு நிலைகளை எடுப்பவர்களை தமிழ் இனம் மட்டுமல்ல எந்த ஒரு சமூகமும் அங்கீகரிக்காது.
இலங்கை பிரச்சனையில் மத்திய அரசும், பிரதமர் மன்மோகன்சிங்கும் எடுத்து வரும் நடவடிக்கைகள் நம்பிக்கை ஊட்டுவதாகவும், அதை வரவேற்பதாகவும் தமிழக முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார். ராமேஸ்வரத்தில் திரை உலகத்தினரால் நடத்தப்பட்ட பேரணி பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்ட சீமான் அமீர் போன்றவர்கள் தமிழினத்தை காக்கின்ற மத்திய அரசையும், இலங்கை தமிழர்களுக்கு பாதுகாப்பு அரணாகவே இருந்து பல்வேறு நடவடிக்கைகளை தங்கள் காலத்தில் செயல்படுத்திய இந்திரா காந்தியையும் ராஜீவ் காந்தியையும், அவரது படுகொலையை கொச்சைப்படுத்தியும், நியாயம் கற்பித்தும் பேசியதை தமிழ்நாடு காங்கிரஸ் வன்மையாக கண்டிக்கிறது.
வன்முறைப் பேச்சை, தடுத்து நிறுத்த வேண்டியது ஒவ்வொரு தமிழின உணர்வாளர்களின் கடமையாகும். அப்பாவி தமிழ் மக்களின் வாழ்வுரிமையைப் பெற்றுத் தரும் சக்தி இந்திய அரசுக்கு மட்டுமே உண்டு. வெறும் வாய்ச் சவடால் பேசுவோருக்கு அந்த தகுதியும் உரிமையும் கிடையாது. அவர்களால் தமிழர்களை காப்பாற்றவும் முடியாது. இந்த நிலையில் இந்திய அரசையும், அதன் நடவடிக்கைகளையும் குறை கூற யாருக்கும் அருகதை இல்லை என்று கூறியுள்ளார்.