இந்தியாவின் கோரிக்கையை ஏற்று விடுதலைப் புலிகளுக்கு எதிரான தாக்குதலை சிறிலங்க படைகள் நிறுத்தியதால்தான் 58,000 அப்பாவி மக்கள் போர் பகுதியில் இருந்து வெளியேறியுள்ளனர் என்று அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார்.
கொல்கட்டாவில் அந்நகர பத்திரிக்கையாளர் மன்றம் ஏற்பாடு செய்திருந்த செய்தியாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய பிரணாப் முகர்ஜி, இன்று காலை வரை 58,600 பொது மக்கள் போர் பகுதியில் இருந்து வெளியேறி வந்துள்ளதாக சிறிலங்க அரசு தெரிவித்த செய்தி சற்று முன் தனக்கு கிடைத்தது என்றும், இது இந்தியாவின் கோரிக்கையை ஏற்று தாக்குதல் நிறுத்தம் செய்ததால்தான் சாத்தியமானது என்றும், எனவே இந்தியாவின் கோரிக்கைக்கு சிறிலங்க அரசு செவிசாய்க்கவில்லை என்று கூறுவது சரியல்ல என்றும் கூறியுள்ளார்.
“கடந்த 3 நாட்களில் மட்டும் 58,600 பொது மக்கள் போர் பகுதியில் இருந்து வெளியேறி வந்துள்ளதாக சற்று முன் எனக்கு டெல்லியில் இருந்து தொலை நகல் வாயிலாக செய்தி வந்துள்ளது. எனவே, சிறிலங்க அரசு இந்தியா விடுத்த கோரிக்கைக்கு செவிசாய்க்கவில்லை என்று கூறுவது சரியல்ல. ஆனால் அது அதிகார பூர்வமாக தெரிவிக்கப்படவில்லை” என்று பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார்.
இதற்குப் பின்னரும் போர் பகுதியில் 10,000 முதல் 40,000 பேர் வரை சிக்கியிருக்கலாம் என்று கூறப்படுவதாகவும், அந்த எண்ணிக்கை 10,000 முதல் 20,000 தான் என்று சிறிலங்க அரசு கூறுவதாகவும், 30,000 முதல் 40,000 பேர் என்று ஐ.நா. பார்வையாளர்கள் கூறுவதாகவும் பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார்.
“பயங்கரவாதிகள் மீது எங்களுக்கு எந்தக் கருணையும் இல்லை. ஆனால் பொதுமக்கள் பற்றி கவலை கொண்டுள்ளோம், அவர்களை பத்திரமாக வெளியேற்ற விரும்புகிறோம். அதனால்தான் தாக்குதல் நிறுத்தத்தை நீடிக்குமாறு சிறிலங்க அரசை கேட்டுக்கொண்டோம். அம்மக்களுக்குத் தேவையான நிவாரணங்களை வழங்கக்கூடிய சர்வதேச செஞ்சிலுவை சங்கம் உள்ளிட்ட அமைப்புகளை இப்பணியில் ஈடுபடுத்துமாறும் கேட்டுக்கொண்டோம்” என்று பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார்.
இந்தியாவின் கோரிக்கையை ஏற்று தற்காலிக போர் நிறுத்தத்தை சிறிலங்க அரசு ‘நீடித்ததால்’தான் பொது மக்கள் வெளியேறியதாக பிரணாப் கூறுகிறார். ஆனால் தற்காலிக போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட 14,15ஆம் தேதிகளில் கூட சிறிலங்கப் படைகள் பாதுகாப்பு வலயத்தை நோக்கி தொடர்ந்து தாக்குதல் நடத்தியுள்ளன.
கடந்த 3 நாட்களில்தான் பாதுகாப்பு வலயத்தை நோக்கி மிக கொடூரமான தாக்குதலை சிறிலங்கப் படைகள் தொடுத்தன. கொத்துக் குண்டுகளையும், புகைக் குண்டுகளையும், பாஸ்பரஸ் குண்டுகளையும் வீசியதால் 2,000 அப்பாவித் தமிழர்கள் கொல்லப்பட்டனர். பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் காயமுற்றனர். சிறிலங்கப் படைகள் நடத்திய தாக்குதலைத் தாங்க முடியாமல்தான் பாதுகாப்பு வலயப்பகுதியில் இருந்து கூட்டம் கூட்டமாக மக்கள் வெளியேறினர். இதைத்தான் தாக்குதல் நிறுத்தத்தினால் வெளியேறியதாக பிரணாப் முகர்ஜி திரித்துக் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
‘பொது மக்களை விடுவிக்க’ சிறிலங்க இராணுவத்தின் 53வது, 58வது படைப்பிரிவுகள் மேற்கொண்ட மனிதாபிமான நடவடிக்கையில் 14 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டதாகவும், மேலும் 21 புலிகள் காயமடைந்ததாகவும் சிறிலங்க இராணுவத்தின் இணையத்தளம் கூறுகிறது. ஆனால் தாக்குதல் நிறுத்தம் நீடித்து வருவதாக பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.








அரசியல் கோமாளிகளின் பட்டியலில் பிரணாப் முகர்சியையும் இணைக்கலாம்!தப்பேயில்லை!