தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் கருணா அம்மான் மீண்டும் கிழக்கில் புலிகளுக்கு எதிராகச் செயற்படத் தயாராக உள்ளதாக அந்தக் கட்சியைச் சேர்ந்த சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் திவயினவிற்குத் தெரிவித்துள்ளார்.
கிழக்கு முதலமைச்சர் பிள்ளையான் உள்ளிட்டோருடன் கருணா ஏற்கனவே பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, முதலமைச்சர் பதவியைப் பிள்ளையான் வழங்க முன்வந்தாலும் அதனை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை எனக் கருணா குறிப்பிட்டுள்ளதாகத் திவயின ஞாயிறு இதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
கருணாவிற்கு முதலமைச்சர் பதவி ?
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் தலைவர் கருணா அம்மானிற்கும், தற்போதைய கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையானுக்கும் இடையில் விசேட சந்திப்பொன்று நடைபெறவுள்ளது. மேலும், பிள்ளையான் தற்போது வகிக்கும் முதலமைச்சர் பதவியைக் கருணா அம்மானிற்கு வழங்குவது தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என லக்பிம நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது.
கிழக்கு மாகாணசபைத் தேர்தல் காலத்தில் முதலமைச்சர் பதவியைக் கருணா அம்மானிற்கு எந்தவேளையிலும் வழங்கத் தாம் தயார் எனப் பிள்ளையான் பகிரங்கமாக அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
அசாத் மௌலான, மங்களம் மாஸ்டர், பிரதீப் மாஸ்டர், மர்தனன், ஜெயம் மற்றும் கட்சியின் செயலாளர் தைலேஸ்வரராஜா ஆகியோர் இந்த விசேட சந்திப்பில் கலந்து கொள்ள உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை கருணா அம்மானுக்கும் பிள்ளையானுக்கும் இடையில் விசேட தொலைபேசி உரையாடலொன்று இடம்பெற்றுள்ளதாகக் கட்சியின் செயலாளர் தைலேஸ்வரராஜா தெரிவித்துள்ளார்.
கொழும்பில் உள்ள இரகசிய இடமொன்றில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் கருணா தற்போது தங்கியிருப்பதாக லக்பிம மேலும் செய்தி வெளியிட்டுள்ளது