புலிகளின் வரலாற்றை நன்கறிவோம் : போர்நிறுத்தம் ஏமாற்று வித்தை-நிமல் சிறிபால டி சில்வா

30/7/2008

தமிழீழ விடுதலைப் புலிகளின் ஒருதலைப்பட்சமான போர்நிறுத்த அறிவிப்பானது ஒரு ஏமாற்று வித்தையாகும். நாம் விடுதலைப் புலிகளின் வரலாற்றை நன்கறிவோம். எனவே, எம்மை இனியும் முட்டாளாக்க முடியாது என சிரேஷ்ட அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.

போர் நிறுத்தம் மற்றும் சமாதான பேச்சுவார்த்தைக்கு வருவதானால் விடுதலைப் புலிகள் முதலில் தமது ஆயுதங்களை கீழே வைக்க வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

சர்வதேச கற்கைகளுக்கான பண்டாரநாயக்கா நிலையத்தில் நேற்று பிற்பகல் நடைபெற்ற சார்க் மாநாட்டின் நிலையியல் குழு கூட்டம் தொடர்பாக தெளிவுபடுத்தும் ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா மேலும் கூறியதாவது:

சார்க் மாநாட்டிற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் இலங்கை அரசாங்கம் எந்தவித குறையுமின்றி மேற்கொண்டுள்ளது. எனவே, தேவையற்ற கவலைகளையும் சந்தேகங்களையும் கொள்ளத் தேவையில்லை. விடுதலைப்புலிகளின் ஒருதலைப்பட்சமான யுத்த நிறுத்த அறிவிப்பானது ஒரு ஏமாற்று நடவடிக்கையாகும். இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி முதல் இலங்கையின் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வரை தலைவர்கள் மேற்கொண்ட சமாதான முயற்சிகளின் போது புலிகள் எவ்விதமான போக்கை கடைப்பிடித்தார்கள் என்பதும் அவர்களது வரலாறும் எமக்கு நன்கு தெரியும்.

எனவே, அவர்களது போர் நிறுத்த அறிவிப்பை நாம் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. ஏனெனில் நாம் தொடர்ந்தும் முட்டாளாக முடியாது. தேசிய பாதுகாப்பு, ஒருமைப்பாடு, பிரஜைகளின் பாதுகாப்பு என்பவற்றிற்கு தேவையான சகல நடவடிக்கைகளையும் எடுப்பதற்கு அரசாங்கம் எந்த தயக்கத்தையும் காண்பிக்காது.

விடுதலைப்புலிகள் பேச்சுவார்த்தைக்கு வர விரும்பினால் முதலில் அவர்கள் தமது ஆயுதங்களை கீழே வைக்க வேண்டும். இதுவே அரசாங்கத்தின் உறுதியான நிலைப்பாடாகும்.