இலங்கையின் முன்நாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை இலங்கைக்கான அமரிக்கத் தூதரும் மிகச் சிறந்த இராஜதந்திரியுமான, பற்றீசியா பட்டனிஸ் சந்தித்ததான தகவல்கள் இலங்கைப் பத்திரிகைகள் வெளியிடுகின்றன. சரத் பொன்சேகா அமரிக்கா செல்கிறார். அவர் போர்க்குற்றங்கள் தொடர்பில் விசாரிக்கப்படப் போவதாக ஊடகங்களில் செய்தி வெளியாகின்றன. ரொனால்ட் ரீகன், ரிச்சார்ட் நிக்சன், ஜோர்ஜ் புஷ் ஆகியோரின் சட்ட ஆலோசகரும் வெள்ளை மாளிகையின் முன்நாள் சட்ட ஆலோசகருமான பிரெட் பீல்டிங் பொன்சேகாவிற்குச் சட்ட ஆலோசனை வழங்க அமரிக்க அரசால் நியமிக்கப்படுகிறார். இந்திய அரச பாதுகாப்பு ஆலோசகரும், இலங்கை அரசு நிகழ்த்திய வன்னிப் போரையும் இனப்படுகொலையையும் இந்திய அரசு சார்பில் நெறியாள்கை செய்தவருமான எம்.கே.நாராயணன் அமரிக்காவில் சரத் பொன் சேகாவைச் சந்திக்கிறார். சரத் பொன்சேகா அமரிக்க விசாரணைகளுக்குச் சமூகமளிக்காமல் நாடுதிரும்புகிறார்.
சோகம் படர்ந்த இந்தியத் நிலப்பரப்பின் தென் மூலையின் கண்ணீர்த் துளிபோல அமைந்திருக்கும் இலங்கைத் தீவினை மையப் புள்ளியாய் முன்வைத்து இத்தனை அரசியல் நகர்வுகள்! இலங்கை என்றால் தேயிலையைப் பற்றியும் தேனீர் பற்றியும் பேசிக்கொள்ளும் காலம் கடந்து இத் தீவினைச் சுற்றி இத்தனை இரஜதந்திரிகளும் அரசியலும்!!
கேட்பாரற்றுக்கிடந்த குட்டித் தீவினைச் சுற்றி நிகழும் அரசியல் சதுரங்கம், நிச்சயமற்ற தன்மை எல்லாம் புதிய உலக மாற்றத்தின், புதிய உலக ஒழுங்கு விதியின் குறியீடுகளே! உலக அரசியலின் மையப் புள்ளி அமரிக்கா மட்டுமே என்றிருந்த நிலை இப்போதில்லை. சீனா, இந்தியா, ரஷ்யா போன்ற துருவ வல்லரசுகளின் ஆதிக்கம் உலக விதிகளை முன்னெப்போதும் இல்லாதவாறு மாற்றத்திற்கு உட்படுத்திக் கொண்டிருக்கின்றது.
இவை அனைதிற்கும் மத்தியில் கொலைகளின் கோரத்தில் துயர்கொண்ட புதிதாய் எழும் கட்சிகளும் இயக்கங்களும் மாற்றங்கள் குறித்து எந்த அக்கறையுமின்றி, தோற்றுப் போன கடந்த காலம் குறித்த எந்த ஆய்வுமின்றி, தமது உணர்ச்சிகளின் வடிகால்களாய் தம்மைத் தகவமைத்துக்கொள்ள முற்படுகின்றன.
இலங்கை அரசின் சதி வலைக்குள், அதன் நிகழ்ச்சி நிரலிற்கு இசைவாக, சுய இலாப நோக்கில் வெறும் தன்னார்வ நிறுவனங்களாக மாறிப்போனவர்களும், அரச முகவர்களாக இயங்குகின்ற மூன்றாம் தர வியாபாரிகளுக்கும் மத்தியில் புதிய அரசியல் இயக்கங்களை உருவாக்கிக் கொள்ள முனைகின்றவர்களின் சமூகப்பற்று மதிப்பிற்குரியதே.புலிகளின் தோற்றுப்போன சிந்தனைத் தொடர்ச்சியை ஒரு ஈகோவாக இறுகப்பற்றிக்கொண்டு பிரபாகரனை உயிர்ப்பிக்க முயலும் பலருக்கு மத்தியில் இவர்கள் ஆயிரம் தடவை உயர்வாக மதிப்பிடப்பட வேண்டியவர்களே.
பிரச்சனை அதுவல்ல. இது வெறுமனே ஒப்பீடுகளுக்கான காலகட்டமும் அல்ல. இன்றைய தேவை குறித்த கரிசனை எங்கிருந்து உருவாகிறது என்பதே முதன்மையான கேள்வி. தமிழ்ப் புலம் பெயரிகளின் புதிய கட்சிகள் பொதுவாக 3 அரசியல் தன்மைகளை முன்வைக்கின்றன.
1. நிர்வாக அமைப்புக்களை சீர் செய்யப்பட்ட உட்கட்சி ஜனநாயகம் கொண்ட, மறு சீரமைக்கப்பட்ட புலிகள்.
2. 80 களின் ஆரம்பத்தில் இடது சாரி தேசிய வாதிகளால் முன்வைக்கப்பட்ட கருத்துக்களின் பிரதிகளான அமைப்புக்கள்.
3. புலிகளின் மாற்றங்களற்ற தொடர்ச்சி.
இவை அனைத்துமே தூய தமிழ்த் தேசியம் என்ற ஒருங்கு புள்ளியில் இணைகின்றன. தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டம் தோற்றுப் போனமைக்கான காரணமும், புலிகள் கோலோச்சிய 30 வருடங்கள் குறித்த மீள்பார்வையும் இவர்களைப் பொறுத்தவரை ஒரு சிறு குறி வட்டமாகவே காட்சிதருகிறது.
1. புலிகளின் தோல்விக்கு வெறும் ஆயுதங்கள் மீது அவர்கள் கொண்டிருந்த அதீத நம்பிக்கையே காரணம்.
2. புலிகள் பாசிசக் கருத்துக்களைக் கொண்டிருந்தமையே அடிப்படையான தோல்வி.
என்ற அடிப்படையான கருத்துக்களை முன்வைக்கும் முதல் இரு பிரிவினரும் இவற்றைச் சீர் செய்யும் அமைப்பு முறையானது புதிய போராட்ட இயக்கத்திற்கான முன்நிபந்தனையாகக் கருதுகின்றனர். இதன் ஒரு முன் நோக்கிய பார்வையாக இரண்டாம் வகையினர் தம்மை அறிவித்துக்கொண்டு 80 களில் முன்வைக்கப்பட்ட இடதுசாரிக் கருத்துகளை மறுபடி அரங்கிற்குக் கொண்டுவருகின்றனர்.
மார்க்சியக் கருத்துக்களை ஏற்றுக்கொள்வதாகக் கூறும் இடதுசாரிகள் புதிய அரசியல் சூழல் குறித்த குறைந்த பட்ச மீளாய்விற்கும், மதிப்பீடுகளுக்கும் அது தொடர்பான உரையாடல்களுக்கும் கூட முன்வர மறுக்கின்றனர். குறித்த சமூகச் சூழல் பற்றிய பொருள்முதல் வாத ஆய்வையே முதலில் மார்க்சியம் கோருகிறது. இது சமூகம் குறித்த அறிதலுக்கான ஆய்வு முறையாகும் என்கிறது. ஆனால் இடது சாரிகள் என்போர் இன்றைய சமூகம் குறித்த ஆய்வை நிராகரித்து பத்தொன்பதம், இருபதாம் நூற்றாண்டுகளில் முன்வைக்கப்பட்ட காலாவதியாகிப்போன முடிபுகளையே இன்றைய சமூகச் சூழலாக ஏற்றுக்கொள்வதனூடாக, பொருள்முதல் வாதத்தை நிராகரிக்கின்றனர். இதனால் தான் இவர்கள் கருத்து முதல்வாதிகளாக மட்டுமே தமது கருத்துக்களை முன்வைக்கின்றனர். ஆக, இவர்கள் இடதுசாரிகள் என்று தம்மை அடையாளப்படுத்திக் கொள்வது அர்த்தமிழந்து போன சொற்பதங்கள் மட்டுமே.
80 களில் இடது சாரி தேசிய வாத இயக்கங்கள் முன்வைத்த கருத்துக்கள்:
1. தேசம் தேசியம் சுயநிர்ணய உரிமை தொடர்பானவை.*
2. சமூக கட்டமைப்புக் குறித்த மாவோயிசத்திலிருந்து பிரதியாக்கப்பட்ட கருத்துக்கள்.**
3. கட்சி அமைப்புத் தொடர்பான கருத்துக்கள்.
4. ஐக்கிய முன்னணி குறித்த கருத்துக்கள்.
5. ஒடுக்கப்பட்ட மக்களின் தலைமை குறித்த கருத்துக்கள்.
6. அன்றைய உலக ஒழுங்கு குறித்த பார்வையும் அதன் இயக்கம் பற்றிய அறிதலும். **
இவை அனைத்திலும் உள்ளீடாக அமைந்திருந்த தவறுகள் தான் தமிழ் பேசும் மக்களின் ஒடுக்கு முறைக்கெதிரான போராட்டங்களின் 80 களில் இருந்து ஏற்பட்ட தோல்விக்குக் காரணங்களாக அமைந்திருந்தனவே தவிர தமிழ்ப் பேசும் மக்கள் மீதான சாத்தானின் சாபங்களல்ல.
இவை அனைத்துமே ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்த ஒன்றிலிருந்து மற்றதைப் பிரித்து நோக்க முடியாத கருத்தியல்களாகும்,
80 களின் ஆரம்பத்தில் அனைத்து இயக்கங்களுமே இந்திய மேலாதிக்க வாத நோக்கங்களிற்காகப் பயன் படுத்தப்பட்டு பின்னர் ஒவ்வொன்றாகச் சீரழித்துச் சிதைக்கப்பட்டன என்பது ஒரு புறமிருக்க மறுபுறத்தில் இந்தியாவின் பயன்பாட்டிற்கு உட்படக் கூடிய தத்துவார்த்தப் பலவீனத்தையும் கொண்டிருந்தன என்பது தான இங்கு குறித்துக்காட்டத் தக்கது.
புலம் பெயர் தமிழர்கள் உருவாக்க எத்தனிக்கும் கட்சிகள் பல இத்தத்துவார்த்த அடிப்படைகள் குறித்து மறுவிசாரணைக்கே மறுப்புத் தெரிவிக்கின்றன. புலிகள் ஏற்படுத்திய வெற்றிடத்தைப் பிரதியீடு செய்யும் வகையில் மற்றொரு அமைப்புத் தேவையென வாதாடுகின்றனர். அவைதான் இலங்கையில் புதிய போராட்ட சக்திகளிற்கு உந்து விசையாக அமையும் என்கின்றனர். 80 களில் முன்வைக்கப்பட்ட அதே வகையான வாதம் தான் மறுபடி முன்வைக்கப்படுகிறது.
ஸ்டாலின் தேசிய இனங்கள் குறித்து முன்வைத்த தர்க்கவியல் ஆய்வு முறையூடாகவே இன்று வட கிழக்குத் தமிழர்கள் தேசிய இனமாக வளரும் நிலையிலுள்ள இனக்குழுக்களாக மட்டுமே வரைமுறை செய்யப்படலாம். இன்றைய இலங்கைச் சமூகத்தில் ஆதிக்கம் செலுத்தும் சக்திகளான தரகு முதலாளித்துவத்தின் தற்காலிக உள்முரண்பாடாகவே தேசிய விடுதலைப் போராட்டம் அமையும் என தத்துவார்த்த விளக்கங்கள் முன்வைக்கப்படுகின்றன. இதுவே தேசிய விடுதலைப் போராட்டத்தின் பாரம்பரிய அடிப்படையைச் சாத்தியமற்றதாக்குகிறது என்ற வாதம் குறித்து உரையாடலை ஏற்படுத்த யாரும் தயாரய் இல்லை.
இது ஒன்றல்ல. இடதுசாரி கருத்தியலோடான தேசிய விடுதலை இயக்கங்கள் புலிகளிடமும் இந்திய மேலாதிக்கத்திடமும் தோற்றுப் போனதென்பதும், புலிகளும் மக்களும் சாட்சியின்றி அழிக்கப்படதென்பதும் வெறுமனே தனிமனிதத் தவறுகளோ அல்லது தந்திரோபாயத் தவறுகளோ அல்ல. இவற்றிற்கும் மேலான அடிப்படைத் தவறுகள் குறித்து மறு விசாரணை செய்யப்படவேண்டும்.
இந்திய சமூகத்தை அரை நிலப்பிரபுத்துவச் சமூகம் என்று மாவோ வரையறுத்தவாறே பொருத்திக் கொண்டார்கள் இந்திய மாவோயிஸ்டுக்கள். உலக மயம் பெரு நிலப்பிரபுக்களை வியாபர மையங்களை நோக்கி நகர்த்தி இல்லாதொழித்த போது, ஆந்திராவில் தமது நிலைகளை இழந்து பழங்குடி மக்களை ஆதரவுத் தளமாகக் கொள்ளவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார்கள். உலக மயம் , நவ-தாராளவாதம், அவை ஏற்படுத்துகின்ற புதிய உலக ஒழுங்கு விதிகள், சிந்தனை முறை, சமூக மாற்றம் குறித்த குறைந்த பட்சப் புரிதலும் இன்றி பழங்குடி மக்களின் இயக்கமாக மாறிப்போன மாவோயிஸ்டுக்களின் தோல்வியிலிருந்தும் கற்றுக்கொள்ள நிறையவே விட்டு வைக்கப்பட்டிருக்கின்றன.
உலகம் முழுவதும் கடந்த நூறாண்டுகளில் அதிகாரத்திற்கு எதிரான எதிர்ப்பியக்கங்கள் அனைத்துமே தோல்வியைத் தழுவிக்கொண்ட துயர படர்ந்த வரலாற்றையே பார்த்திருக்கிறோம். இந்தத் தோல்விகளின் பின்புலம் குறுகிய குழுநிலை போக்கினைக் கடந்து மீள் மதிப்பீடு செய்யப்பட வேண்டும். தோற்றுப்போன அரசியல் எல்லாம் தனிநபர் தவறுகள் அல்லது தந்திரோபாயத் தவறுகள் என்ற குறுகிய எல்லைகளைக் கடந்து தர்க்கீக அடிப்படையிலான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும். சமூகத்தின் சமகாலப் புறச் சூழல், மக்கள் திரள அமைப்புக்கள், கட்சி, புதிய உலக ஒழுங்குவிதி என்ற அனைத்துமே மறு பரிசீலனைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.
நவ தாராளவாதம் உருவாக்கிக் கொண்டிருக்கும் சமூகம் வேலையற்றோரையும், வறுமை எல்லைக் கோட்டிற்குக் கீழிருக்கும் ஏழைகளையும், உலகத்தின் பெரும்பான்மையாக உருவாக்கிக் கொண்டிருக்கிறது. பெரும்பான்மை சார்ந்து எமக்கு மலையைப் புரட்டும் மகத்துவம் இருக்கிறது நாங்களோ எலி வேட்டைக்காக மட்டும் இணைவுகளைக் கோருகிறோம்.
80 களின் ஆரம்பங்களில் சில துப்பாக்கிகளும் துண்டுப்பிரசுரம் வெளியிடும் வசதியும் இருந்தால் ஒரு கட்சியை ஆரம்பித்து விடலாம் என்ற நிலை இருந்ததை ஈழப் போராட்டத்தில் ஈடுபட்ட யாரும் மறந்திருக்க மாட்டார்கள். 25 நீண்ட வருடங்களின் பின்னால் அதே மாதிரியை முன்வத்தா கட்சியை அமைத்துக்கொள்வது தொடர்பாகச் சிந்திக்க வேண்டும்.
எதிர்ப்பியக்கங்களின் தேவை அவசரமாக உணரப்படுகின்ற இலங்கைக்கோ இந்தியாவிற்கோ வெளியிலிருக்கின்ற அனைவருக்கும் ஒரு கடமை உண்டு. அது முன்னைப் போல் கவர்ச்சியான தலையங்களையும், பெயர்களையும் வைத்துக்கொண்டு கட்சியைக் கட்டமைப்பதாக நான் கருதவில்லை. ஒரு தேசத்தின் உற்பத்தியோடும், உணர்வுகளோடும் முற்றாகத் தொடர்பறுந்து போயிருக்கும் இன்றைய சூழலில் இரண்டு பிரதான விடயங்களை சமூக உணர்வோடும் நாம் முன்னெடுத்துச் செல்லலாம். முதலாவதாக இலங்கை அரசிற்கு எதிராகவும், அதிகார மையங்களுக்கு எதிராகவும், அவற்றின் உப அமைப்புகளுக்கு எதிராகவும் எமது எல்லைக்குள் அழுத்தங்களை வழங்க முடியும்; இரண்டாவதாக பிரதான தத்துவார்த்தக் கூறுகளை மீள் மதிப்பீடு செய்ய எம்மாலான அனைத்துப் பங்களிப்பையும் வழங்க முடியும்.இவை இரண்டுமே சமாந்தரமாக முன்னெடுக்கப்பட வேண்டியவை என்பதில் எந்தக் கருத்து மாறுதலும் இல்லை.
எங்கள் குழுக்களைப் பிரச்சாரப்படுத்த நபர்களையும், துண்டுப் பிரசுரங்களையும், அச்சுக் கருவிகளையும், இணையங்களையும், ஆயுதங்களையும் தேடிக்கொள்ளும் தகமை படைத்தவர்களாக இருந்திருக்கிறோம். எம்மைச் சுற்றி நடப்பவை குறித்து மீளாய்வுக்கு உட்படுத்துவதை நிராகரித்தே வந்திருக்கிறோம். தேவையானால் அரை நூற்றாண்டுகளுக்கு முன்னர் சில புரட்சிக்காரர்கள் விட்டு வைத்திருக்கும் சமூகம் குறித்த மதிப்பீடுகளை எந்த மாற்றமும் இன்றி மறு பிரதிசெய்து பிரயோகிக்க முற்பட்டிருக்கிறோம். தோல்விகள் இதிலிருந்து இந்தக் குறைபாட்டின் பகைப்புலத்திலிருந்து தான் ஆரம்பிக்கின்றன. ஆக, கட்சிகளையும் இயக்கங்களையும் உருவாக்குவதற்கான தத்துவம் எதுவென்ற தேடலை உருவாக்குவதற்காக இணைவை ஏற்படுத்தலே காலத்தின் தேவை.
* ஈழத் தமிழ்ப் பேசும் மக்கள் தனித் தேசிய இனம்?
**புதிய உலக ஒழுங்கு விதி – சாம்பல் மேடுகளிலிருந்து.. , இந்திய அரசியல் சதி-புதிய முரண்கள் , இனப்படுகொலை நிகழ்த்திய இந்தியா! – சர்வதேச அரசியற் பின்புலம் ,
இடதுசாரிகள் குரித்த தஙகள் கருத்து ஏறபுடையது அன்று.
இடதுசாரிகள் கேள்விகளுக்கு அப்பாற்பட்டவர்கள் அல்லர்.எனவே அவர்கள் மீதான நாவலன் அவர்களின் கேள்விகள் மற்றும் விமர்சனங்கள் வரவேற்கப்படவேண்டியதும் ஆரோக்கியமானதும் கூட.ஆனால் நாவலன் அவர்கள் இடதுசாரிகள் மீது குற்றம்சாட்டும்போது மிகவும் அவதானம் வேண்டும்.தான் என்ன சொல்லவருகிறார் என்பதை தெளிவாகவும் விளக்கமாகவும் ஆதாரத்துடன் முன்வைக்கவேண்டும்.இடதுசாரிகள் என்றால் பல பிரிவுகள் உண்டு.எனவே பொத்தாம் பொதுவாக இடதுசாரிகள் என்று கூறாமல் எந்தப்பிரிவினர் என்பதையும் அவர்கள் மீதான குற்றச்சாட்டுகளுக்கு என்ன ஆதாரம் என்பதையும் தெரிவிக்கவேண்டும்.உதாரணமாக இந்திய கம்யுனிஸ்ட் கட்சியை இடதுசாரிகள் என்று முதலாளித்துவ பத்திரிகைகள் பொதுவாக அழைப்பதுண்டு.ஆனால் நக்சலைட்டுகள் இவர்களை ஓட்டுப் பொறுக்கிகள் என்றும் புரட்சிக்கு துரோகம் இழைக்கும் எதிரப்புரட்சிகர சக்திகள் என்றும் கூறுகின்றனர்.அதேபோல் இலங்கையில் கம்யுனிஸ்கட்சி மற்றும் லங்கா சமசமாஜக்கட்சி என்பனவற்றை இடது சாரிகள் என்று அழைப்பதுண்டு.ஆனால் இவர்களை ரொக்சியவாதிகள் என்றும் புரட்சிக்கு எதிரானவர்கள் என்றும் தோழர் சண் தலைமையிலான கம்யுனிஸ்ட் கட்சியினர் கூறினார்கள்.எனவே இவ்வாறு இடதுசாரிகளுக்குள் பல பிரிவுகள் முரண்பாடுகள் இருக்கும்போது கட்டுரையாளர் நாவலன் அவர்கள் பொத்தாம் பொதுவாக இடதுசாரிகள் என்று அழைப்பது என்ன விதத்தில் நியாயமாகும்?
மேலும் இந்தியாவில் மாவோயிஸ்ட்டுக்கள் தற்போதைய சமூகமாற்றத்தை கவனத்தில் கொள்ளாமல் மாவோ அன்று கூறியதையே இன்றும் விடாமல் பிடிக்கின்றனர் என்ற குற்றச்சாட்டுக்கு போதிய விளக்கமும் ஆதாரமும் வைக்க தவறிவிட்டார் கட்டுரையாளர்.அத்துடன் பழங்குடியினரை தளமாக பாவிக்கவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டதாக குறிப்பிடுகிறார்.அப்படியாயின் அவர்கள் மக்கள் இல்லையா? மாவோயிஸ்டுக்கள் 30 வீதமான பகுதிகளில் செல்வாக்கு பெற்றிருப்பதாக உள்துறை அமைச்சரே ஓப்புக்கொண்டுள்ளார்.அப்படியாயின் இந்த 30 வீதமும் பழங்குடி மக்களா? இந்த முப்பது வீதத்தில் எத்தனை கோடி மக்கள் உள்ளடங்கியிருக்கிறார்கள்?அவர்கள் எல்லாம் மக்கள் இல்லையா?இது குறித்து கட்டுரையாளர் நாவலன் அவர்களின் பதில் என்ன?
இறுதியாக நாவலன் அவர்களிடம் நான் வினவுவது என்னவெனில் இந்தியா மற்றும் இலங்கையில் யார்யாரை இடதுசாரிகள் என்று நீங்கள் வரையறுக்கிறீர்கள்?மேலும் அவர்கள் மீதான குற்றச்சாட்டுக்களுக்கு உங்களிடம் இருக்கும் ஆதாரங்கள் என்ன?
இலங்கை அரசின் சதி வலைக்குள், அதன் நிகழ்ச்சி நிரலிற்கு இசைவாக, சுய இலாப நோக்கில் வெறும் தன்னார்வ நிறுவனங்களாக மாறிப்போனவர்களும், அரச முகவர்களாக இயங்குகின்ற மூன்றாம் தர வியாபாரிகளுக்கும் மத்தியில் புதிய அரசியல் இயக்கங்களை உருவாக்கிக் கொள்ள முனைகின்றவர்களின் சமூகப்பற்று மதிப்பிற்குரியதே. நாவலன் மேற்குறித்த கருத்து குறித்து விரிவான ஒரு தனிக்கட்டுரை எழுதி லண்டனில் திரைமறைவில் நிகழும் திருக்கூத்துகளை வெளிக்கொண்டு வந்தால் ‘சின்ன உதவி’ என்ற போர்வைக்குள் மறைந்திருக்கும் பல மர்ம முடிச்சுகளை அம்பலப்படுத்த முடியும்.
தமிழன்,
உங்கள் பங்களிப்பிற்கு நன்றி. இடதுசாரி தேச்ய விடுதலை இயக்கங்கள் தொடர்பாகவே இங்கு நான் குறிப்பிட்டுள்ளேன். மற்றப்படி பாராளுமன்ற வழிக் கட்சிகளை இடதுசாரிகள் என்ற வட்டத்துள் உள்ளடக்கத் தேவையில்லை என்றே நான் கருதுகிறேன். நாம் மார்க்சிய தத்துவங்களை ஏற்றுக்கொள்கிறோமானால், சமூகம் குறித்த பொருள்முதல்வாத ஆய்விலிருந்தே ஆரம்பிக்கவேண்டும். பிரித்தானிய காலனி ஆதிக்கக் கட்டத்தில் தமது ஆதிக்க நலனுக்காக குக்கிராமங்கள் வரை அவர்கள் மேற்கொண்ட ஆய்வுகள் இப்போது வெளிவருகின்றன.
மறு புறத்தில் இந்திய இலங்கை புரட்சிகர அமைப்புக்கள் அனைத்துமே மிக அடிப்படையிலான ஆய்வுகளைக் கூட மேற்கொள்ளப் பின்னிற்கின்றன.
உதாரணமாக தேசிய இனப்பிரச்சனை தொடர்பான ஸ்டாலின், லெனின் காலத்தைய ஆய்வுகள் பொருள்முதல்வாத அடிப்படையிலானவை. அவை அவர்களது காலப்பகுதிக்குப் பொருத்தமானது. எமது காலகட்டத்திற்குரிய ஆய்வுகள் எங்கே?
வெறுமனே உணர்வுகள் அடிப்படையிலேயே அரசியல் மற்றும் சிந்தனை மேற்கோப்புக்கள் கட்டமைக்கப்படுகின்றன.
பொருள்முதல் வாதத்தை ஏற்றுக் கொண்டவர்கள் இது குறித்துச் சிந்திக்க வேண்டும். ஒரு புதிய உலகப்பார்வையை முன்வைக்கவேண்டும்.
தோழர் சபாநாவலன் கட்டுரை புகலிடத்தில் புதிதாக கிளம்பியுள்ள கட்சி கட்டும் அரசியலை சிறப்பாக ஆராய்ந்துள்ளது. பல கேள்விகளையும் எழுப்பியுள்ளது. புலிகளின் அழிவுக்கு பின்பு “அதிகார ஆசை “கொண்ட புலிகளை எதிர்க்கும் இன்னொரு புலிப்பாணியிலான அமைப்புவடிவங்களை கோரும் நபர்களே இந்த புலிகளின் வெற்றிடத்தை நிரப்புவதற்கு கிளம்பியுள்ளார்கள். கோட்பாடு சார்ந்து, மக்கள் நலன் சார்ந்து வெளிப்படையான அரசியல் இயக்கங்களே இன்று தேவை. இதனை கட்டுகின்ற நபர்கள் புகலிட நாடுகளில் தாங்கள் அரசியல் இயக்கங்களை “மர்ம குழுக்களாக” எந்தவெளிப்படையும் அற்று வெறும் கோசங்களூடாகவும் துண்டுப்பிரசுரங்களூடாகவுமே வெளிக்காட்டுகின்றனர். தாங்கள் யார் என்பதை வெளிப்படையாக அறிவிக்க தயாரில்லை. கடந்தகாலங்களில் இலங்கை அரசியலில் இவர்கள் என்ன செய்தார்கள் ஏது செய்தார்கள் என்பது இப்போது பிரச்சனையில்லை.அதைவிடுவோம்.
ஆனால் புகலிடத்தில் கடந்தகாலங்களில் தாங்கள் செய்த அரசியல் செயல்பாடுகள் அதன் தோல்விகள் வெற்றிகள் பற்றி வெளிப்படையாக விமர்சன ரீதியாக அறிவிக்க தயாராக இல்லை. ஆனால் கட்சிகள் கட்ட கிளம்பிவிட்டார்கள். சமீபத்தில் படித்த கட்டுரை ஒன்றில் வாசகர் ஒருவர் எழுப்பியிருந்த அதே கேள்விகளையே இந்த “மர்மக் கட்சி” கட்டும் நபர்களிடமும் கேட்கவேண்டியுள்ளது. அவை இவைதான்:
யார் இவர்கள்.? இவர்களின் பின்னணி என்ன.?
1)நீங்கள் ஒவ்வொருவரும் யார் என்பதை மக்களுக்கு தெரியப்படுத்துங்கள்.!
2)உங்களின் சமுதாய பின்னணி/ கடந்த காலம் முழுவதும் புகலிடத்தில் என்ன செய்து கொண்டிருந்தீர்கள் என்பதையும் தெரியப்படுத்துங்கள்!.
3) உங்கள் சொந்த உழைப்பில் எவ்வளவு எம் மக்களுக்காக செலவழித்திருக்கிறீர்கள்,உங்களது சமுதாயச் செயற்பாடுகள் என்ன என்பதையும் மக்களுக்கு தெரியப்படுத்துங்கள்.!
?
நாவலன் அவர்களுக்கு
தங்கள் பதிலுக்கு நன்றி.பாராளுமன்றப்பாதையை பின்பற்றுவோரை இடதுசாரிகளாக கொள்ளத்தேவையில்லை என்றால் நேபாளத்தில் தேர்தல் மூலம் பதவிக்கு வந்த மாவோயிஸ்டுக்களை தாங்கள் இடதுசாரிகளாக ஏற்றுக்கொள்ளவில்லையா?மேலும் இலங்கையில் தோழர் செந்தில்வேல் அவர்களின் தலைமையில் இயங்கும் புதியஜனநாயக்கட்சியினர் பாராளுமன்ற தேர்தல்களில் பங்குபற்றுகின்றனர்.அப்படியாயின் அவர்கள் இடதுசாரிகள் இல்லையா?இடதுசாரிகள் பற்றிய தங்களின் வரையறை குழப்பமாக இருக்கிறது.தயவு செய்து இது பற்றிய தங்களின் விளக்கமான பதிலை எதிர்பார்க்கிறேன்.
தமிழன்,
உங்கள் முன்னைய கேள்வியின் அடிப்படையில வேறானது. அதில் நீங்கள் என்னுடன் உடன்படுகிறீர்களா இல்லை உங்களிடம் புதிய கருத்துக்கள் உள்ளனவா?
இப்போது, தோழர் செந்தில்வேல் பாராளுமன்றப் பாதை என்பது தான் இறுதியான வழி என்று எப்போதும் வாதிட்டதில்லை. புரட்சி தொடர்பான ஒப்பீட்டளவில் முற்போக்கான கருத்துக்களை இலங்கைச் சூழலில் முன்வைப்பவர்கள். இதுவே தான் நேபாள மாவோயிஸ்டுக்களும் கூறும் வழிமுறை. இருவருமே பாராளுமன்ற வழிமுறைகளை அடிப்படையில் நிராகரிப்போரே தவிர அவற்றை அரசியல் வழிமுறையாகக் கொண்டவர்கள் அல்ல.
ஜே.வி.பி மார்க்சியத்தை முன்னெடுப்பதாக கூறுகிறது.அத்துடன் இலங்கை பத்திரிகைகள் ஜே.வி.பி யை இடதுசாரிகள் என்றே குறிப்பிடுகின்றன.ஜே.வி.பி யும் பாராளுமன்றபாதை தமது இறுதியான வழி என்று கூறியதில்லை.அப்படியாயின் ஜே.வி.பியை இடதுசாரிகள் என்று ஏற்றுக்கொள்ளலாமா?
இந்தியாவில் எல்லாப் பிரதேசங்களிலும் மட்டுமல்லாது ஒரு மாநிலத்திற்குள்ளும் வேறுபட்ட அணுகுமுறைகளைப் பயனபடுத்தும் தேவை உண்டு.
மாஓவாதிகள் பழங்குடியினரிடையும் தலித்துக்களிடையிலும் செல்வாக்குடன் இருப்பது அவர்களே மிகவும் ஒடுக்கப்பட்ட மக்கள் என்பதனால்.
இன்று அவர்களது போராட்டத்திற்கான பிரதான களமாக அமைவது அம் மக்கள் சார்ந்த பகுதிகளே.
தன்னளவில் அது பலவீனமல்ல.
ஆனால் மாஓவாதிகள் அவைககுட் தங்களை வரையறுத்துக் கொள்வது அவர்களது வளர்ச்சிக்கு ஏற்றதல்ல.
மாஓவாதிகள் பற்றிய பிற மார்க்சிய லெனினிய விமர்சனங்கள் உள்ளன. அவை கணிப்பில் எடுக்கப்பட வேண்டும்.
மாஓவாதிகள் மாஓவின் மக்கள் போராட்ட அணுகுமுறையையும் மார்க்சிய லெனினிய ஐக்கிய முன்னணித் தந்திரோபாயத்தையும் சரிவரக் கையாளவில்லை எனவும் குறை கூறப்பட்டுள்ளது.
தேசிய இனப் பிரச்சனை பற்றிய பார்வை பற்றியும் விமர்சனங்கள் உள்ளன.
இவை திருத்த இயலாத தவறுகளல்ல.
ஆனாற் கட்டாயம் திருத்த வேண்டியவை.
கடந்த காலத் தவறுகளால் ஆந்திர மாநிலத்தில் ஏற்பட்ட இழப்புக்களிலிருந்து அவர்கள் கற்க வேண்டும்.
லால்காரில் மக்களிடமிருந்து கற்க நிறைய உண்டு.
நாவலன் சொல்வதன் அடிப்படையான வாதம் வரலாற்றிலிருந்து தொடர்ந்துங் கற்க வேண்டுமென்பது தான்.
நேபாளத்தில் மாஓவாதிகள் மக்கள் யுத்தம் நடத்தி நாட்டில் 80 சதவீத பகுதியைப் பிடித்த பின்பு ; நேபாளத்தில் அந்நியக் குறுக்கீடும் மக்களது உடனடியான எதிர்பார்ப்புக்களும் உடனடியாக இயலுமானவையும் பற்றிய அவர்களது மதிப்பீடுகளின் அடிப்படையில் குறிப்பிட்ட சூழ்நிலைகட்கமையத் தேர்தலில் போட்டியிட வேண்டி வந்தது.
ஆனால் நடந்ததென்ன?
மாஓவாதிகள் மக்கள் போராட்டப் பாதைக்கும் ஆயுதப் போராட்டத்துக்கும் தள்ளப் படுவது தவிர்க்க இலாதது.
அவர்கள் பாராளுமன்றம் பற்றி வைத்திருக்கும் பார்வை நமது பாராளுமன்ற இடதுசாரிகளின் பார்வைவைப் போன்ற வெறும் தேர்தல் அரசியல் பார்வையல்ல.
அது தொர்ந்தும் விவாதிக்கப்படுகிற ஒரு தந்திரோபாயம்.
நாம் அதனுடன் முரண்படலாம்.
ஆனால்நான் சைவன் எனவே மாட்டிறைச்சி தின்ன மாட்டேன் என்கிற மாதிரித் தேர்தலில் பங்குபற்றுவதை ஒரு மத நம்பிக்கை போலாக்கக் கூடாது.
தேர்தலில் பங்குபற்றுவதன் தேவையும் நோக்கமும் எதிர்பார்ப்புக்களும் பற்றி மக்களுக்கு நேர்மையாகச் சொல்ல வேண்டும்.
பாராளுமன்ற ஆட்சி மாற்றம் மக்களின் பிரச்சனைகளைத் தீராது என்று மக்களுக்கு நேர்மையாகச் சொல்ல வேண்டும்.
பாராளமன்ற அரசியலும் தேர்தலிற் பங்குபற்றுதலும் தொழிற் சங்க வேலையுங்கூட வரையறுக்கப்பட்ட காலச் சூழல்கட்குரிய தந்திரேபாயங்களன்றிச் சமூக மாற்த்துக்கான வழிமுறைகளல்ல.
திரிபுவாதிகளும் ஈழத்து ட்ரொக்சியவாதிகளும் பாராளமன்ற அரசியலும் தேர்தலிற் பங்குபற்றுதலும் சமூக மாற்த்துக்கான வழிமுறைகளென நம்புகிறவர்கள்.
அது தான் வேறுபாடு.
அது தான் அவர்களைப் பேரினவாதத்துள் தள்ளியது.
மார்க்சிசவாதிகள் மார்க்சிசலெனிசத்தை (எதிலும்) சமகால யதார்த்த நிலைமைகளுக்கு ஏற்ப பிரயோகிக்கவேண்டும்! இதை நாவலன் சரியாக கோடிட்டு காட்டுகின்றார்!
//ஜே.வி.பி மார்க்சியத்தை முன்னெடுப்பதாக கூறுகிறது.அத்துடன் இலங்கை பத்திரிகைகள் ஜே.வி.பி யை இடதுசாரிகள் என்றே குறிப்பிடுகின்றன.ஜே.வி.பி யும் பாராளுமன்றபாதை தமது இறுதியான வழி என்று கூறியதில்லை.அப்படியாயின் ஜே.வி.பியை இடதுசாரிகள் என்று ஏற்றுக்கொள்ளலாமா?//
இலங்கைப் பத்திரிகைகள் தானே. ?
விட்டுத் தள்ளுங்கள். சிகரம் அவர்களின் பதிலை மறுபடி வாசித்துப் பாருங்கள் தமிழன்.
மண்ணுக்கேத்த மார்க்சியம் என்று சொல்லிக்கொண்டுதான் அன்று ரொக்சி முதல் இன்று அ.மாக்ஸ் வரை தங்கள் திரிபுவாதங்களை புகுத்துகிறார்கள்.சில வருடங்களுக்கு முன்னர் அ.மாக்ஸ் கூறியவற்றையே இன்று நாவலன் கூறுகிறார்.எனவே அ.மாக்ஸ் லிருந்து தான் எப்படி வேறுபடுகின்றார் என்பதை நாவலன் விளக்குவாரா?
I THINK MR SABA NAVALN NOT IN THIS PLANET HE IS SOME WHERE ELSE.IN SRILANKA ITS BECAME WE DIFFICULT FOR TAMILS BECAUSE SINGALA RACE MORE LIKE CRUEL COMMUNITY THEY HAVE NO RESPECT FOR TAMILS ALSO THEY BEING TREATED TAMILS AS THEIR ENEMIES.I DONT THINK SABA NAVALAN TAIKING SENSIBLY HIS UNINTELEGINABLE CONFUSED US.
CAN YOU LIVE WITH THE PERSON WHO HATES YOU?DOUT ON YOU?PICK ON YOU?FAULT ON YOU?
SINGALESE ARE LIKE THAT HOW TAMILS CAN LIVE WITH THEM. JVP ARE FACIST THEY WORSE THAN THE HILTER AND I DONT CONCIDER THEM AS A HUMAN EITHER. WORSE THINGS IN OUR COMMUNITY PEOPLE LIKE SABA NAVALAN AND THEY KEPT ON CONFUSING WHOLE TAMIL COMMUNITY.
தமிழன்,
சமூகத்தின் ஸ்தூலமான புறச்சூழல் குறித்த பொருள்முதல்வாத அணுகுமுறை என்பதே அதன் வர்க்க நிலைகள் தொடர்பாகவும் புரட்சி தொடர்பாகவும் தீர்க்கமான முடிபுகளுக்கு வர உதவும் என்று லெனின் சொல்கிறார் இதைத்தான் நானும் சொல்கிறேன். இது தவறானால் ஏன் தவறு என்பதை தர்க்கரீதியாகக் கூறவும்.
சபநாவலன் எழுதுவதில் என்ன தவறுள்ளது? மார்க்சியத்தின் வழியில் புதிய சமூகத்தை ஆய்விட வேண்டும் என்றுதானே எழுதுகிறார். தமிழன் அப்படி எல்லாம் நடந்து விடக்கூடாது என்று அங்கலாய்க்கிறார்.
இவ்வளவு தோல்விகளின் பின்னுமா?
தமிழன்:
அ. மார்க்சுடன் எல்லாவற்றிலும் முரண்பட வேண்டிய தேவை எவருக்கும் இல்லை.
இக் கட்டுரை அ. மார்க்ஸ் பற்றியதுமில்லை.
மண்ணுக்கேற்ற மாக்சியம் என்பது மிகவும் கொச்சைப்படுத்தப்பட்ட சொற்பிரயோகம்.
ஓரு கொள்கையை ஒரு சுழலின் யதார்த்தத்திற்கேற்பப் பாவிப்பதும் விருத்தி செய்வதும் விஞ்ஞானரீதியான நடைமுறை.
பாவனை சரியா பிழையா என்று நடைமுறையே தீர்ப்பு வழங்குகிறது.
எக்காலத்துக்கும் எல்லாச்சூழல்கட்குமானது என மனிதர் அறியக்கூடிய கொள்ளை கிடையாது.
எல்லா மாற்றங்களையும் மறுப்பது வரட்டுத்தனமானது. மார்க்சியம் மார்க்ஸை மேலும் முன்னெடுக்காவிட்டல் அது மார்க்சிய விரோதமானது.
நூறு கருத்துக்கள் முட்டி போதட்டும் என்று சொன்ன மாஓ, வரட்டு மார்க்சியம் மலத்திலும் இழிவானது என்றார்.
ஒரு கருத்து ஏன் தவறானது அல்லது செல்லாதது எனத் தர்க்கரீதியாக விவாதிக்காமல் மெட்டையாகக் குறை காணுவது ஆக்கமான விவாதத்துக்கு வழி வகுக்காது.
யாவும் மறுவாசிப்புக்கு உட்படுத்தப்படவேண்டும் என பின்னவீனத்துவவாதிகள் கோருகின்றனர்.ஆம்.இது சரிதான்.ஆனால் நாம் ஏன் இவர்களை எதிர்க்கின்றோம்?இப்படி கூறிக்கொண்டு இவர்கள் புரட்சிக்கு எதிரான ஏகாதிபத்தியத்திற்கு சார்பாக கருத்துக்களை புகுத்துவதால்தான்.மேலும் உண்மையான மாக்சியவாதிகள் வளர்ச்சியை மறுப்பதில்லை.எனவேதான் மார்க்சிசம் லெனிசமாகவும் மாவோசிமாகவும் வளர்ச்சி கண்டது.எனவே இங்கு பிரச்சனை என்னவென்றால் மார்க்சியவாதிகள் யாரும் மார்க்சிய வளர்ச்சிக்கு தடையாக இல்லை.மாறாக மார்க்சிய ஆய்வு என்னும் பெயரில் திரிபுவாதத்தை புகுத்துவதற்கே எதிராக வுள்ளனர்.இது அவர்களின் கடமை என்பதால்.
கட்டுரையாளர் குறிப்பாக யார் என்று இனங்காட்டாமல் பொதுவாக இடதுசாரிகள் என்று எழுதியதால்தான் இடதுசாரிகள் என்றால் யார்? அவர்கள் மீதான குற்றச்சாட்டுக்கு என்ன ஆதாரம்? என்று கேட்கவேண்டியேற்பட்டது.மேலும் இலங்கையில் தோழர் சண்முகதாசன் அவர்கள் இலங்கைப்பிரச்சனை மற்றும் சர்வதேசப்பிரச்சனை குறித்து பல ஆய்வுகளை செய்துள்ளார்.அதேபோல் இந்தியாவில் நக்சல்பாரி இயக்கங்கள் பல ஆய்வுகளை செய்துள்ளனர்.இந்த ஆய்வுகளின் அடிப்படையில் பல பிரிவுகளாக பிரிந்தும் உள்ளனர் என்பதை நாம் அவதானிக்கமுடியும்.இவற்றையெல்லாம் கவனத்தில் கொள்ளாமல் வெறுமனனே இடதுசாரிகள் காலத்துக்கேற்ற இயங்கியல் பார்வை கொள்ள மறுக்கின்றனர் என்று கூறினால் என்ன அர்த்தம்?உண்மையிலே நாவலன் நேர்மையாக செய்ய வேண்டியது என்னவெனில் இந்த இடதுசாரிகளின் ஆய்வுகளை முன்வைத்து அவற்றில் எவை இயங்கியல் பார்வைக்கு முரணானது என்பதை சுட்டிக்காட்டவேண்டும்.குறிப்பாக தேசிய இனப்பிரச்சனை தொடர்பாக ஸ்டாலின் பார்வை அந்தக்காலத்திற்கு பொருத்தமாம்.இந்தக்காலத்திற்கு இயக்கவியல் பொருள்முதவாதப்பார்வையில் பொருந்தாதாம்.அதெப்படி ஒரு காலத்தில் இயக்கவியல் பார்வையில் பொருந்திய கருத்து ஒன்று இன்னொரு காலத்தில் இயக்கவியல் பார்வைக்கு பொருந்த மறுக்கிறது என்று கேட்டால் உடனே தான் லெனின் பார்வையில் பார்க்கிறேன்.இது தவறா? என்று கேட்கிறார்.தயவு செய்து இங்கு அனைவரும் உணரவேண்டிய விடயம் என்னவென்றால் நாவலன் அவர்களை குறை கண்டு பிடிப்பதோ அல்லது அவர் மீது குற்றம் காணுவதோ எனது நோக்கம் அல்ல.மாறாக மார்க்சிய ஆசான்கள் மீது விமர்சனம் வைக்கும்போது நாம் மிகவும் அவதானமாக இருக்கவேண்டும் என்பதெ.ஏனெனில் குருசேவ் தனது திரிபுவாதத்தை முன்வைக்கு முன்னர் அவன் முதலில் செய்தது ஸ்டாலின் மீதான அவதூறே.ரொக்சியும் தனது திரிபுவாதத்தை வைக்கு முன்னர் செய்ததும் அதுவே.எனவேதான் நாம் இது குறித்து விழிப்பாக இருக்க வேண்டும் என்கிறேன்.
நான் பெரிதும் மதிக்கின்ற கட்டுரையாளர் நாவலன் அவர்களிடம் கேட்டுக்கொள்வது என்னவெனில் மார்க்சிய ஆசான்களின் கருத்துக்களுக்கு மாறாக இயக்கவியல் பொருள்முதவாதப்பார்வையில் தாங்கள் கண்டுபிடித்திருக்கும் ஆய்வுக் கருத்து என்ன?இதனை தயவு செய்து விளக்கமாக முன்வைக்கவும்.அதன்பின் அதனை நாம் ஏற்றுக்கொள்ளவில்லையாயின் நாங்கள் இயக்கவியல் பொருள்முதவாதப்பார்வையை ஏற்க மறுக்கின்ற வீண் வரட்டுவாத மார்க்சியவாதிகள் என்று தாராளமாக எங்களை அழைத்துக்கொள்ளுங்கள்.
LENIN NO LONER WANT IN RUSSIA AND KARL MARKS LEFT GERMANY TO WRITE A CAPITAL WITH ENGALES AND MAO KILLED MORE CHINESE THAN ANYONE IN CHINESE HISTROY.I WOULD LIKE TO SAY PUTHUVAI WAS SPEND HIS EARLY DAYS IN SINGALA VILLAGES IN SRILANKA AND WAS DREMED TO LIVE TOGHETER.ALSO DURING THE PEACE DEAL TIME THERE WAS SINGALA AND TAMIL WRITERS CONFRENCE IN COLOMBO THAT ATTACKED BY SINGALA GANGS.MR BALAKUMAR HAD A SORT OF IDEA LIKE LENIN TOO.
I THINK BOOKS CANT CHANGE THE POLITICS OF SRILANKA.IN SRILANKA EVEN LABOUR COMMUITY ALSO OWN LANDS IT DIFFERENT TO KARL MARKS AND LENIN OR MAO THEORY. PEOPLE OF SRILANKA IS RELIGIOUS ORIENTATED AND THE LANGUAGE IS DOMINANT. SO THAT ITS IMPOSSIBLE TO THINK SRILANKAN POLITICS WITH OUT SINGALA FANATICS.WE STILL REMEMBER THE MATHAVACHI.
தமிழன்,மறுபடி;
நீங்கள் வழமை போல உணர்ச்சிகரமாக அவசரப்படுகிறீர்கள். நான் மறுபடி மறுபடி சொல்வதெல்லாம் பொருள்முதல்வாத அடிப்படையில் இன்றைய சமூகப் புறச் சூழல் ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்பது தான். இதைத் தான் மார்க்சியத்தின் முதல் படி என்கிறார்கள். இதைக் கூட நீங்கள் புரிந்து கொள்ள மறுக்கிறீர்கள்.
ஸ்டாலின் தேசிய இனங்களின் ஆய்வில் மிகத் தெளிவாகச் சொல்வதெல்லாம் இதுதான்:
தேசிய இனங்கள் ஒரு குறித்த வரலாற்றுக் கட்டத்திற்குரிய மக்கள் கூட்டமாகும். அது வரலாற்றின் முதலாளித்துவ வளர்ச்சிக் கட்டமாகும். இப்போது ஸ்டாலின் சொல்வது போலவே இன்றைய, உலகமய காலகட்டத்தில் தேசிய இனங்களின் பண்பியல் ஆராயப்பட வேண்டும். அதன் வர்க்க நிலைகள் பற்றிப் பேச வெண்டும். பாருங்கள் ஸ்டாலின் காலத்தில் அவர் சொல்கிறார், தேசிய முதலாளிகளே தேசிய இனங்களின் ஆதிக்க வர்க்கம் என்று. ஆனால் இன்று இலங்கையில் நீங்கள் தேசிய முதலாளிகளைச் சுழியோடினாலும் காணமுடியாது.
ஆக, இன்றைய தேசிய இனங்களின் பண்பு குறித்து நான் கருத்தில் கொள்ள வேண்டுமோ இல்லையோ? இதைத் தான் நான் சொல்ல வருகிறேன். இது யார் மீதான அவதூறும் இல்லை. தமிழன், மார்க்சியம் என்பது முதலில் விஞ்ஞான பூர்வமான ஆய்வுமுறை. ஜெகவேவவின் சாட்சி அல்ல.
இயக்கவியல் பொருள் முதல் வாதப் பார்வையில் நான் பிழை கூறவில்லை. அது மட்டும் தான் விஞ்ஞான பூர்வமான முறை அவசரப்படாமல் கட்டுரையை மீண்டும் வாசியுங்கள் புரியும். நான் சொல்வதெல்லாம் அந்த முறையைப் பாவித்து இன்றைய குறித்த சூழல் ஆய்வு செய்யப்பட வேண்டும் என்பது மட்டும்தான்.
மற்றப்படி நான் இடது சாரி தேசிய விட்தலை இயக்கங்கள் என்று தான் கூறினேன். நீங்கள் தான் அவசரப்பட்டு உணர்ச்சி மிகுதியில் கற்பனை செய்கிறிர்கள். –
இங்கிருக்கும் தன்னார்வ நிறுவனக்கள் அவர்கள் நடத்தி இன்புறும் இலக்கியச் சந்திபுக்கள், ஒன்று கூடல்கள், ஆகியன தொடர்பில் மெளனமாய் ஆதரவு கொடுக்கும் பலரை எல்லாம் விட்டுவைத்து விட்டு, சபாநாவலன் மார்க்சியம் சரி என்று வாதாட தமிழன் ஆத்திரப்படுகிறாரே. இது கட்டுரையைத் திட்டமிட்டுத் திசை திருப்பும் தமிழனின் முயற்சியா இல்லை அறியாமையா? இன்று காலையில் புகையிரதத்தில் ஏறும் போது திருடர்கள் கவனம் என்ற விளம்பரம் கண்ணுற்றேன். பின்னதாக சந்தணமும் கருப்புமாக ஒரு மனிதனின் அறியாமையையும் கண்ணுற்றேன்.
நான் மறுபடி மறுபடி சொல்வதெல்லாம் பொருள்முதல்வாத அடிப்படையில் இன்றைய சமூகப் புறச் சூழல் ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்பது தான். இதைத் தான் மார்க்சியத்தின் முதல் படி என்கிறார்கள்……..
இது சரி. வழக்கு பற்றிய கோப்பு இனிமேல்தான் திறக்கப் ப்டவேண்டும் என்று சொல்கிறீர்கள். ஆனால் அவ்ர் இடது சாரி , இவர் இடது சாரியல்ல என தீர்ப்பை மட்டும் முதலிலேயே வழங்கிவிடுவது எப்படி சரி?
//இது சரி. வழக்கு பற்றிய கோப்பு இனிமேல்தான் திறக்கப் ப்டவேண்டும் என்று சொல்கிறீர்கள். ஆனால் அவ்ர் இடது சாரி , இவர் இடது சாரியல்ல என தீர்ப்பை மட்டும் முதலிலேயே வழங்கிவிடுவது எப்படி சரி?//-
ராஜன்
,பதில்:
அவர்கள் முதல் படியையே நிராகரித்தார்கள் என்பதால் தான் . ராஜன், இது எனது கருத்து மட்டும் தான் அது தவறாக இருந்தால் சுட்டிக்காட்டும் உரிமை உங்களுக்கு உண்டு.
/இந்திய இலங்கை புரட்சிகர அமைப்புக்கள் அனைத்துமே மிக அடிப்படையிலான ஆய்வுகளைக் கூட மேற்கொள்ளப் பின்னிற்கின்றன./
இங்கு நாவலனால் சுட்டிக்காட்டப்பட்டிருக்கும் புரட்சிகர அமைப்புகள் என்பது இடதுசாரி தேசிய விடுதலை இயக்கங்களை குறிக்கிறதா? அல்லது அனைத்து புரட்சிகர அமைப்புகளையும் குறிக்கிறதா? என்பதை தயவு செய்து விளக்கவும்.
புரட்சிகர அமைப்புகள் அனைத்தையும் குறிக்கின்றன என்றால் என்ன அடிப்படையில் இந்த குற்றச்சாட்டு சுமத்தப்படுகிறது?அதற்கான ஆதாரம் என்ன?
/
தேசிய இனப்பிரச்சனை தொடர்பான ஸ்டாலின்இ லெனின் காலத்தைய ஆய்வுகள் பொருள்முதல்வாத அடிப்படையிலானவை. அவை அவர்களது காலப்பகுதிக்குப் பொருத்தமானது./
/தேசிய இனங்கள் ஒரு குறித்த வரலாற்றுக் கட்டத்திற்குரிய மக்கள் கூட்டமாகும். அது வரலாற்றின் முதலாளித்துவ வளர்ச்சிக் கட்டமாகும். இப்போது ஸ்டாலின் சொல்வது போலவே இன்றையஇ உலகமய காலகட்டத்தில் தேசிய இனங்களின் பண்பியல் ஆராயப்பட வேண்டும். அதன் வர்க்க நிலைகள் பற்றிப் பேச வெண்டும். பாருங்கள் ஸ்டாலின் காலத்தில் அவர் சொல்கிறார்இ தேசிய முதலாளிகளே தேசிய இனங்களின் ஆதிக்க வர்க்கம் என்று. ஆனால் இன்று இலங்கையில் நீங்கள் தேசிய முதலாளிகளைச் சுழியோடினாலும் காணமுடியாது./
இது பற்றி கொஞ்சம் விபரமாக விளக்கமுடியுமா?
/மற்றப்படி நான் இடது சாரி தேசிய விட்தலை இயக்கங்கள் என்று தான் கூறினேன். நீங்கள் தான் அவசரப்பட்டு உணர்ச்சி மிகுதியில் கற்பனை செய்கிறிர்கள். -/
இங்கு இடதுசாரி தேசிய விடுதலை இயக்கங்கள் என்று யார் யாரை குறிப்பிடுகிறீர்கள் ? அப்படியாயின் மற்ற இடதுசாரிகள் தேசிய விடுதலை குறித்து கவனம் செலுத்தவில்லை என்று அர்த்தப்படுத்தலாமா?