இலங்கையில் ஆயுதப் போராட்டம் ஆரம்பித்த பின்னர் முதல் தடவையாக அதன் கரையோரப் பகுதிகள் முழுவதும் படையினரின் கட்டுப்பாட்டுக்குள் வந்திருப்பதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. பாதுகாப்பு வலயத்தைச் சுற்றிவளைத்து 58ம், 59ம் படைப் பிரிவுகள் நேற்று ஒன்றுடனொன்று இணைந்ததன் மூலம் இது சாத்தியமாகியுள்ளதாக அது குறிப்பிட்டுள்ளது.
வட்டுவாகல், முள்ளிவாய்க்கால் பகுதிகளை உள்ளடக்கிய பாதுகாப்பு வலயத்தை முழுமையாகச் சுற்றிவளைத்துள்ள இலங்கைப் படைகள், நேற்றையதினம் கரையோரப் பகுதிகளை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தன. இதன் பின்னர் சுமார் 2 சதுர கிலோமீற்றர் பகுதிக்குள் விடுதலைப் புலிகள் சுற்றிவளைக்கப்பட்டிருப்பதாக படைத்தரப்பு அறிவித்துள்ளது.
இவ்வாறு மிகவும் குறுகிய நிலப்பரப்புக்குள் சுற்றிவளைக்கப்பட்டுள்ள விடுதலைப் புலிகள் தமது பகுதியில் கடுமையான குண்டுவெடிப்புக்களை மேற்கொள்வதாக படைத்தரப்புக் கூறுகிறது. தொடர்ச்சியாக பாரிய குண்டுவெடிப்புச் சத்தங்கள் வெள்ளமுள்ளிவாய்க்கால் சுனாமி கிராமத்துக்குள் அவதானிக்கப்பட்டதாக அது கூறியுள்ளது.
வெள்ளமுள்ளிவாய்க்கால் சுனாமி கிராமத்துக்குள் நிலைகொண்டிருந்த விடுதலைப் புலிகள் அதனுள் பொதுமக்களை நுழைய அனுமதிக்காததுடன், குறிப்பிட்ட சில போராளிகளை மட்டுமே உள்ளே அனுமதித்திருந்ததாகவும் படையினர் தகவல் வெளியிட்டுள்ளனர். இந்த நிலையில், இப்பகுதிக்குள் நடைபெறும் வெடிப்புக்கள் புலிகளின் எஞ்சியுள்ள தலைவர்கள் தற்கொலை செய்துகொள்ளும் நடவடிக்கையா அல்லது தமது முக்கிய ஆவணங்கள், தளபாடங்கள் படையினர் வசம் சிக்காமல் அழிக்கும் நடவடிக்கையா என்று தெரியவில்லை என்றும் படைத்தரப்புக் கூறுகிறது.
வன்னிப் பெருநிலப்பரப்பின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் பின்வாங்கியிருக்கும் விடுதலைப் புலிகள் தமது முக்கிய பல தளபாடங்கள், கருவிகள், ஆயுதங்கள், வாகனங்கள், ஆவணங்கள் அனைத்தையும் தம்முடன் எடுத்துச்சென்றிருந்தனர். தற்போது புலிகள் வசம் எஞ்சியிருக்கும் சிறிய பகுதிக்குள்ளேயே இவையனைத்தும் வைக்கப்பட்டிருக்கக்கூடிய சாத்தியம் இருப்பதால் படையினரிடம் அவை சிக்காமல் புலிகளால் அழிக்கப்படும் சாத்தியம் இருப்பதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கைவிட்ட கடைசித் துருப்பு
விடுதலைப் புலிகளுக்கு எதிராக இலங்கை அரசாங்க படைகள் மேற்கொண்டுவந்த நடவடிக்கைகளில் முன்னெப்போதும் இருந்திராதளவு பின்னடைவுகளைச் சந்தித்த விடுதலைப் புலிகள், ஒரு வெளிநாட்டுத் தலையீடு ஏற்படக்கூடிய சாத்தியக்கூறுகளை எதிர்பார்த்திருந்தனர். புலிகளின் அரசியல்துறையினர் ஊடகங்களுக்கு வெளியிட்ட அறிக்கைகள் அவர்களின் இந்த எதிர்பார்ப்பையே கோடிகாட்டியது.
குறிப்பாக இந்தியத் தேர்தல் முடிவுகள் தமக்குச் சாதமாக அமையலாம் என்று எதிர்பார்த்திருந்த புலிகளுக்கு தேர்தல் முடிவுகள் ஏமாற்றத்தையே அளித்திருக்கும். மத்தியில் காங்கிரஸ் ஆட்சியே மீண்டும் ஏற்பட்டிருப்பதுடன், தமிழீழம் அமைப்பேன் என்று கூறிய ஜெயலலிதாவின் அ.இ.அ.தி.மு.க. வை கருணாநிதி தலைமையிலான தி.மு.க. தோற்கடித்திருப்பது புலிகளுக்கும், அவர்களின் ஆதரவாளர்களுக்கும் பெருத்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈழ ஆதரவுப் பிரசாரத்தை அதிகளவில் முன்னெடுத்த வை.கோபாலசாமி இந்தத் தேர்தலில் தோற்கடிக்கப்பட்டிருப்பதுடன், இதனையே பிரதான கோசமாக முன்வைத்த பாட்டாளி மக்கள் கட்சி போட்டியிட்ட அனைத்துத் தொகுதிகளிலும் படுதோல்வியைச் சந்தித்துள்ளது.
இதன் மூலம், தமிழ்நாட்டுத் தலைவர்களின் ஈழ ஆதரவு நிலைப்பாட்டை அடிப்படையாகக் கொண்டு இந்திய மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் இறுதித் துருப்புச் சீட்டையும் விடுதலைப் புலிகள் இழந்துள்ளனர்.
தமிழ்நாட்டிலுள்ள ஏழு கோடித் தமிழர்களுமே துமது பலம் என்று அறிவித்த விடுதலைப் புலிகளின் நிலைப்பாட்டுக்கு அவர்கள் சாதகமான பதிலை அளிக்கவில்லை. இந்த நிலையில், சண்டையை நிறுத்தி, ஆயுதங்களைக் கைவிட்டு, பொதுமக்களை வெளியேற அனுமதிக்குமாறு கடந்த வாரம் அமெரிக்க ஜனாதிபதி பரக் ஒபாமா விடுத்த வேண்டுகோளை ஏற்றுக்கொள்வதாக விடுதலைப் புலிகளின் சர்வதேச தொடர்பாளர் செ.பத்மநாதன் சனியன்று ஒரு அறிவிப்பை விடுத்துள்ளார். எனினும், காலந்தாழ்த்திய இந்த அறிவிப்பு எந்தளவுக்கு அனைத்துலகின் கவனத்தை ஈர்க்கும் என்பது சந்தேகமே.
இதனால், இறுதிக்கட்ட முடிவுகளை எடுக்கவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள விடுதலைப் புலிகள் எஞ்சியுள்ள தமது கட்டுமானங்களை அளிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கும் சாத்தியம் அதிகம் உள்ளது. இதுவே, அவர்களின் பகுதியில் நடைபெறும் வெடிப்புக்களுக்குக் காரணமாக இருக்கலாம் என்று கணிக்கப்படுகிறது.
THANKS: www.inllanka.com