ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (EPRLF) செயலாளர் நாயகமும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின்(TNA) பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் இனியொருவிற்கு வழங்கிய நீண்ட நேர்காணலின் ஒரு பகுதி இங்கு தரப்படுகிறது.
இனியொரு: வன்னிப் யுத்தம் நடைபெறற நாட்களில் புலிகள் மக்களை வெளியேறவிடாமல் தடுத்துவைத்திருந்தனர் என்றும் அவர்கள் மீது தாக்குதல் நடத்தியதாகவும் கூறப்படுகிறது. புலிகள் இவ்வாறு நடந்துகொண்டது குறித்து உங்கள் கருத்து என்ன?
இது அவர்களின் பலவீனம். பாரிய இராணுவ பலத்தை வைத்திருந்த போதும் கூட, அந்த இராணுவ பலத்தை மக்கள் சார்ந்த அரசியல் பலமாக மாற்றாமல், வெறுமனே ஒரு இராணுவ வெற்றியில் நம்பிக்கை கொண்டிருந்ததனுடைய விளைவே அவர்களை அந்த சூழ்நிலைக்குக் கொண்டுசென்றது எனலாம். இராணுவ வெற்றிகள் அரசியல் வெற்றிகளாக மாற்றப்பட்டிருக்குமேயானால் நிச்சயமாகப் பல மாற்றங்கள் உருவாகியிருக்கும். தமிழ் ஈழக் கோஷத்தில் அவர்கள் விடாப்பிடியான போக்கைக் கொண்டிருந்த போதும், அவர்களின் அரசியலற்ற இராணுவக் கண்ணோட்டமானது, பொதுமக்களையும் தங்களுடைய பாதுகாப்பிற்காக இழுத்துச் செல்லவேண்டிய துர்ப்பாக்கிய நிலையை அவர்களுக்கு ஏற்படுத்தியுள்ளது எனலாம்.
இது சரியானதுமல்ல ஆரோக்கியமானதுமல்ல. ஆனால் அங்கிருந்து வந்த பொதுமக்களின் கருத்துக்களைக் கேட்டபோது, அப்படியான பல மோசமான சம்பவங்கள நடைபெற்றதாக நாங்களும் அறிகின்றோம். ஆரம்பத்திலிருந்தே புலிகள் அரசியல் குறித்து அசட்டையீனமாக இருந்ததால் இறுதி முடிபுகள் மோசமானதாக அமைந்துவிட்டது.
இனியொரு: புலிகளால் உங்கள் கட்சியின் முன்னய செயலாளர் பத்மநாபா கொலைசெய்யப்பட்டதன் பின்னணியில் நீங்கள் இருந்ததாக சில முன்னை நாள் ஈ.பீ.ஆர்.எல்.எப் உறுப்பினர்கள் கூறுவது தொடர்பாக நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
அப்படியான செய்திகளைப் பரப்புபவர்களுக்குக் கூட அது குறித்த உள்ளார்ந்த நம்பிக்கை இருக்காது என்றே நான் நம்புகிறேன். பெரும் பாலான ஈ.பீ.ஆர்.எல்.எப் உறுப்பினர்கள் பத்மநாபா கொலை செய்யப்பட்டு பல நாட்களின் பின்னர் தான் இங்கு வந்திருப்பார்கள். இங்கு வருவதற்கு முன்னர் அவர்க என்னுடன் தான் இருந்திருப்பார்கள். வரதராஜப் பெருமாள் கொழும்பிற்கு வந்து எமது அமைப்பில் குழப்பம் உருவாகும் வரை அவர்கள் என்னுடன் தான் இருந்தார்கள். அதுவரையில் அப்படியான குற்றச்சாட்டுக்கள் ஏதும் அவர்களால் முன்வைக்கப்படவிலை. இன்று வெளிநாடுகளுக்கு வந்ததன் பின்னர், தமக்காக ஒரு அமைப்பை ஏற்படுத்திக் கொள்வதற்காக, எனக்கு மேல் சேறடிக்க வேண்டும் என்ற அடிப்படையில் திட்டமிட்டு அவர்கள் இவ்வாறான பிரச்சாரங்களை மேற்கொள்கிறார்கள். இதில் நான் அக்கறை கொள்ளவோ அதற்கு பதில் சொல்வதோ அர்த்தமற்ற ஒரு விடயம்.
இவையெல்லாம், அர்த்தமற்ற, போலித்தனமான, சபைக்கு உதவாதவை தவிர நேர்மையான அரசியல் ரீதியான ஒரு விமர்சனமல்ல. அது குப்பைத் தனமான குப்பையில் கொட்டப்படவேண்டிய வார்த்தைப் பிரயோகங்களே.
இனியொரு: சிறீ லங்கா அரச தடுப்பு முகாம்களில் மக்கள் மகிழ்ச்சியாகவே வாழ்கிறார்கள் என்றும், புலிகளின் பிரதேசங்களில் வாழ்ந்ததைவிட ஒப்பீட்டளவில் மேம்பட்ட வாழ்க்கையே நடத்துகிறார்கள் என்றும் ஒரு தீவிர பிரச்சாரம் புலம் பெயர் தமிழ் தன்னார்வ நிறுவனங்களால் மேற்கொள்ளப்படுகிறது. இது குறித்து உங்கள் அபிப்பிராயம் என்ன?
இதைத் தான் பசில் ராஜபக்ச ஆரம்பத்திலிருந்தே அனைவருக்கும் சொல்லி வருகிறார்.
இவ்வளவு நாளும் பிரபாகரனின் கட்டுப்பாட்டுள் இருந்தவர்கள் தானே! வரிகட்டியவர்கள் தானே!! அவ்வாறான துன்பங்களை அனுபவித்த நீங்கள் இப்போது முகாம்களில் ஏன் துன்பப்படக் கூடாது என்று அரசும் அரச சார்பானவர்களும் பிரச்சாரம் மேற்கொள்ளுகின்றனர். இது அரசாங்கத்தால் திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் பிரச்சாரம்.
ஒரு அரசு என்ற வகையில், பாரிய யுத்தம் நடைபெற்றுக்கொண்டிருக்கும் வேளையில் மக்களை அங்கிருந்து வெளியேறுமாறு கோரிக்கை விடுத்தது. அவ்வாறு வெளியேறினால் அனைத்து வசதிகளும் மேற்கொண்டு மீளக் குடியமர்த்துவதாக அரசு நம்பிக்கையளித்து மக்களை முகாம்களுக்குள் உள்வாங்கிக் கொண்டது.
ஆனல் இன்று ஆறு மாதங்களுக்கு மேலான சூழலில் நிலைமை என்ன? ஐக்கிய நாடுகள் சபை, பல சர்வதேச நாடுகள், கட்சிகள், ஐரோப்பிய ஒன்றியம் எல்லாருமே அரசாங்கத்துடன் பல தடவை பேசி அறிக்கைகள் சமர்ப்பித்து எத்தனையோ நடவடிக்கைகளை மேற்கொண்டும் எந்தப் பலனும் கிடைக்கவில்லை. இப்போது தான் ஒரு குறித்த பகுதியினரை விடுதலை செய்வதாகக் கூறுகிறார்கள்.
இனியொரு: இப்போது தடுப்பு முகாம் வாசிகள் அவரவர் இடங்களுக்குச் செல்ல அனுமதிக்கப்படுகிறார்களா?
இல்லை. அவர்கள் சொந்த இடங்களுகுச் செல்ல அனுமதிக்கப்படுவதில்லை. மல்லாவியிலும், மன்னாரிலும், யாழ்ப்பாணத்திலும் வேறு வேறு முகாம்களுக்கு இடம் மாற்றப்படுகிறார்கள். ஒருசில இடங்களில் ஒருசிலர் வீடுகளுக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டதாகக் கூறப்பட்டாலும் கூட, அது மிக மிகச் சொற்பமான அளவுதான்.
இனியொரு: இப்போதுள்ள முகாம்களுக்கு என்ன நிகழும்?
இப்போது இருக்கும் முகாம்களில் தொடர்ந்தும் மக்களை வைத்திருந்தால் ஏற்கனவே சில தடவைகள் சிறிய அளவுகளில் ஏற்பட்டது போல, இராணுவத்திற்கும் பொதுமக்களுக்கும் இடையில் பயங்கரமான பாரிய கலவரங்கள் வெடிக்கும் ஆபத்தை அரசு எதிர்கொள்ள வேண்டும்.
தொற்று நோய்களும், மழைக்கால வெள்ளமும், மலசல கூடங்களின் அழிவுகளும், புழுக்களும் விஷக் கிருமிகளும் என்று வெளியான வனாந்தரத்தில் மக்கள் பல இன்னல்களை எதிர் நோக்க வேண்டிய நிலையிலுள்ளனர்.
முகாம் கூடாரங்களில் வெள்ள அபாயம் ஏற்படும் நிலை உள்ளது. சர்வதேசக் கவனம் இதை நோக்கித் திரும்பியுள்ள சூழலில் அவர்களை வேறு உள்ளூர் முகாம்களுக்கு மாற்றும் முயற்சிகள் மேற்கொள்ளப் படுகின்றன.
இரண்டாவதாக, ஜீ.எஸ்.பீ பிளஸ் தொடர்பானது. இச்சலுகையூடாக ஐந்து இலட்சத்திற்கு மேற்பட்ட சிங்கள மக்கள் தொழில் பெற்று வாழ்கிறார்கள். இன்னும் பல இலட்சம் பேர் மறை முகமாகவும் வாழ்கிறார்கள். ஐரோப்பிய ஒன்றியம் இதை நிறுத்துமானால் ஒரு பெரும் பொருளாதார நெருக்கடி இலங்கை அரசிற்கு உருவாகும். அதுவும் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள வேலையில் இலங்கை அரசிற்குப் பாரதூரமான பின் விளைவுகளையும் உருவாக்கும். இவ்வாறு குறித்த தொகை மக்களை விடுதலை செய்வதன் மூலம் இடம்பெயர்ந்தோரை மீளக் குடியம்ர்த்துகிறோம் என்ற ஒரு வகையான மாயையை ஏற்படுத்த முயல்கிறார்கள்.
இந்த நடவடிக்கைகளூடாக, நாங்கள் மனித் உரிமைகளை மதிக்கிறோம் என்ற செய்தியைச் சொல்ல முற்படுகிறார்கள். அதனால் தான் சொற்ப அளவினாலான குடியேற்றங்கள் நடைபெறுகின்றதே தவிர, மக்களைத் தமது சொந்த இடங்களில் குடியேற்றுதல் என்ற வேலை அங்கு நடைபெறவில்லை.
முகாம் கூடாரங்களில் வெள்ள அபாயம் ஏற்படும் நிலை உள்ளது. சர்வதேசக் கவனம் இதை நோக்கித் திரும்பியுள்ள சூழலில் அவர்களை வேறு உள்ளூர் முகாம்களுக்கு மாற்றும் முயற்சிகள் மேற்கொள்ளப் படுகின்றன.
அதனால் தான் சொற்ப அளவினாலான குடியேற்றங்கள் நடைபெறுகின்றதே தவிர, மக்களைத் தமது சொந்த இடங்களில் குடியேற்றுதல் என்ற வேலை அங்கு நடைபெறவில்லை. தவிர, தமிழ் பேசும் மக்கள் மீதான எந்த மனிதாபிமான அக்கறைன் அடிப்படையிலும் இது நிகழவில்லை.
இதில் அரசாங்கத்திற்குச் சார்பாக ஆரம்பத்திலிருந்து வெளிவரும் பல இணையத் தளங்கள், மல்லாவிக்கு மக்களைக் கொண்டு சென்றதும் மக்கள் மீழக் குடியமர்த்தப்பட்டுவிட்டார்கள் என்றும் பிரச்சாரம் செய்கின்றன. யாழ்ப்பாணத்திற்குக் கொண்டு சென்றதும் மக்கள் விடுவிக்கப்பட்டு விட்டார்கள் என்றும், முகாம்களில் எந்தப்பிரச்சனையும் இல்லை என்றும் பிரசாரம் செய்வதனூடாக அரசாங்கத்திற்கு நற்சான்றிதழ் வழங்க முயல்கின்றனர். அரசாங்கத்தை நியாயப்படுத்தி தமிழ் மக்கள் மத்தியில் வியாபாரம் செய்கின்றனர். இது அவர்களின் சுய இலாப நோக்கத்தின் அடிப்படையிலிருந்தே மேற்கொள்ளப்படுகிறது. உண்மையிலேயே முகாம்களைப் பார்வையிட்டவர்கள், முகாம் மக்களோடு பழகியவர்கள் அப்படிச் சொல்லமாட்டார்கள்.
இது நேர்மையற்ற, இலாப நோக்கை அடிப்படையாகக் கொண்ட ஒரு விடயம். அரசாங்கத்தின் கருத்துக்களை தமிழ் மக்கள் மத்தியில் எடுத்துச்செல்லும் வேலையையே இவர்கள் மேற்கொள்ளுகிறார்கள்.
இனியொரு: என்ன காரணத்திற்காக அரசு மக்களை முகாம்களில் அடைத்து வைத்துள்ளது?
முதலாவதாக, கிளிநொச்சி முல்லைத் தீவு மாவட்டங்களில் பாரிய யுத்தம் நடைபெற்றிருக்கிறது. அதிலும் முல்லைத்தீவு மாவட்டத்தில் யுத்தம் நிகழ்ந்த காலகட்டத்தில் பல்லாயிரம் மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். அவையெல்லாம் யுத்தக் குற்றச்சாட்டுக்களாக வெளியே வந்து கொண்டிருக்கின்றன. இப்படியான சந்தர்ப்பத்தில் மக்கள் மீழக்குடியேற அனுமதிக்கப்படுவார்களாக இருந்தால் அந்த மக்கள் மூலமாகவும், அவர்களைப் பராமரிக்க முன்வரும் சர்வதேச நிறுவனங்களூடாகவும், பல சாட்சியங்கள் வெளியே வரலாம் என்பது வெளிப்படையான விடயமாகும்.
இச்சாட்சியங்கள் வெளியேறாமல் தடைசெய்யப்பட வேண்டுமாயின் மக்களைக் குடியேற்றும் செயன்முறையானது கால தாமதப்படுத்தப்பட வேண்டும். தவிர சாட்சியங்களும் ஆதாரங்களும் அழிக்கப்படும் வரை குடியேற்றம் ஒத்திப் போடப்படும்.
குறிப்பாக முல்லைத் தீவு மாவட்டத்தில் கண்ணிவெடி அகற்றும் எந்த முயற்சிகளும் மேற்கொள்ளப்படவில்லை. கிளிநொச்சியில் மட்டும் அதுவும் செப்டெம்பர் மாதம் கடைசிப்பகுதியில், பூநகரியில் அந்த வேலை கண்துடைப்பிற்காக ஆரம்பிக்கப்பட்டது. அது தவிர எதுவுமே நடைபெறவில்லை. ஆக கண்ணிவெடிகளைக் கண்துடைப்பாகக் காரணம்காட்டி சாட்சியங்களை அழிக்கும் வேலையே நடைபெறுகிறது.
இது தவிர புலிகளால் புதைக்கப்பட்ட ஆயுதங்களை எடுத்த பின்னர் தான் மக்களைக் குடியேற்ற முடியும் என்கிறது அரசாங்கம். இதற்கும் மேலாக காடுகளில் தப்பியிருக்கக் கூடிய ஒரு சில புலிகள் மக்கள் குடியேற்றப்பட்டால் மீண்டும் அவர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ளலாம் எனக் காரணம் காட்டுகின்றனர். யுத்தம் முடிந்துவிட்டது தானே என்று நாங்கள் சொன்னால் இல்லை ஒருசிலர் மிஞ்சியிருக்கின்றனர் என்கின்றனர்.
தவிர நம்பத்தகுந்த அரச மட்டங்களிலிருந்து கிடைக்கப்பெற்ற தகவல்களின் படி, தமிழ் மக்களின் புவியியல் செறிவை நிர்மூலம் செய்யும் திட்டத்தை அரசு நடைமுறைப் படுத்தி வருகிறது. அதாவது, தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாழக்கூடிய பகுதிகளில், சிங்கள மக்களைக் குடியேற்றி தமிழர்களின் செறிவை குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக கிளிநொச்சி, முல்லைத்தீவு பகுதிகளில் முப்பது வீதமான சிங்கள மக்களைக் குடியேற்ற வேண்டும் என்ற ஒரு திட்டம் இருப்பதாக எமக்குத் தெரியவருகிறது.
அதுதவிர இம்மாவட்டங்களில் இரண்டு பாரிய இராணுவ முகாம்களும், அதனைத் தொடர்ந்து இருபத்து ஐந்து சிறிய இராணுவ முகாம்களும், இருபத்து ஐந்து பொலீஸ் நிலையங்களும் நிறுவப்பட இருப்பதாகவும் தெரியவருகிறது. பாரிய இராணுவ முகாம்களுக்கு தலா 500 ஏக்கர் காணியும் சிறிய முகாம்களுக்கு 50 ஏக்கர் காணியும், பொலீஸ் நிலையங்களுக்கு 50 ஏக்கர் காணி என்ற வகையில், மொத்தப் பிரதேசமும் இராணுவ மயப்பட்ட பிரதேசமாக மாற்றப்பட இருக்கிறது.
இது தவிர இராணுவம் பொலீசாருக்கான விடுதிகள், அவர்கள் குழந்தைகளுக்கான பாடசாலைகள், கலாச்சார மையங்கள், விகாரைகள் என்று பார்க்கும் போது, 30 வீதச் சிங்களக் குடியேற்றத்தின் மிகப்பெரும் பகுதி பூர்த்தியாக இன்னுமொரு சாதாரண சிங்கள மக்கள் தொகுதியும் குடியேற்றப்படும். ஆக, இவ்வளவு விடயங்களும் ஒருங்கிணைந்த பிரச்சனை தான் அகதிகள் குடியேற்றம்.
இனியொரு: சர்வதேச தன்னார்வ நிறுவனங்கள் ஏதாவது அங்கு அனுமதிக்கப்படுகின்றனவா?
பல தொண்டு நிறுவனங்கள் அதுவும் அரசியல் நோக்கற்ற தொண்டு நிறுவனங்கள் கூட முகாமிற்குள் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. உலக உணவுத் திட்டம், UNHCR போன்றவற்றிற்கு எல்லைக்கு உட்பட்ட அனுமதி வழங்கப்படுகிறது. அவர்கள் முகாம் மக்களுடன் பேசவோ பழகவோ எந்தச் சந்தர்ப்பமும் வழங்கப்படாத வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. அந்த மக்களை தற்காலிகமாக உயிர்வாழ்வதற்கான உதவிகளே வழங்கப்படுகிறது.
இனியொரு: புலம்பெயர் நாடுகளின் தன்னார்வ நிறுவனங்களால் உதவிகள் வழங்கப்படுகின்றனவே?
புலம்பெயர் நாடுகளிலுள்ள சிலருக்கு அரசாங்கத்துடன் இருக்கக்கூடிய நெருக்கமான உறவுகளைப் பாவித்து, சில சிறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன என அறிகிறோம். அதனுடைய பொருள் அரசாங்கம் எல்லோரையும் முற்று முழுதாக அனுமதித்துள்ளது என்பது அல்ல. அங்குள்ள சில ஆசிரியர்கள் கற்பித்தல் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று விரும்புகிறார்கள். அது முழுதான சுதந்திரத்தைக் குறிப்பதாகாது. இந்தத் தன்னார்வ நிறுவனங்கள் பாடப்புத்தகம் போன்றவற்றை வழங்குவதாகத் தகவல்களை அறிகிறோம். இது அரசாங்கத்திற்குப் பிரச்சார நடவடிக்கைகளுக்கே பெரிதும் பயன்படுகிறது. தன்னுடைய பிரச்சாரத் தேவைக்காக அரசு இவற்றை புலம்பெயர் நாடுகளில் சிலருடன் இணைந்தே மேற்கொள்கிறது.
இனியொரு: ஈ.பி.ஆர்.எல்.எப்(பத்மநாபா அணி) என்று கூறப்பட்ட இன்று புதிய கட்சியாகப் பதிவுசெய்யப்பட்டுள்ள பத்மநாபா ஈ.பி.ஆர்.எல்.எப் குறித்து உங்கள் நிலைப்பாடு என்ன?
அவர்கள் இன்றும் இவ்வளவு பிரச்சனைகளின் பின்னரும் அரச ஆதரவுப் போக்கையே கடைப்பிடிக்கின்றனர். அல்லது அரசுட மென்மைப் போக்கையே கடைப்பிடிக்க வேண்டும் என்றே விரும்புகின்றனர். முகாம்கள் பற்றி, மக்கள் சொந்த இடங்களுக்கு அனுப்பப்பட வேண்டும் என்ற விடயங்களை அவர்கள் கூறினாலும் கூட, அதனை இலங்கை அரசிற்கு நோகாமல் தாங்கள் சொல்ல வேண்டும் என எதிர்பார்க்கின்றார்கள். அண்மையில், ஹக்கீம், ஆனந்த சங்கரி, சம்பந்தன், மனோ கணேசன் போன்ற பலர் கைச்சாத்திட்டு ஒரு அறிக்கை வெளியிடப்பட்டது. முகாம்களில் மக்கள் கைதுகள், காணாமல் போதல் நிறுத்தப்பட வேண்டும் என்றும், மக்கள் மீழ்குடியேற்றப்பட வேண்டும் என்றும், மனிதாபிமான நடவடிக்கைகள் பற்றிய விடயங்களையும் உள்ளடக்கியதாக அவ்வறிக்கை அமைந்தது.
தமிழ்ப் புத்திஜீவிகளால் தான் அவ்வறிக்கை தயாரிக்கப்பட்டு அதன்பின்னர் தமிழ் பேசும் சிறுபாபான்மைக் கட்சிகளிடம் கையொப்பம் கோரி அதனைப் பிரசுரித்திருந்தார்கள். அந்த அறிக்கையில் பத்மநாபா ஈ.பீ.ஆர்.எல்.எப், புளட் போன்ற அமைப்புக்களும் கைச்சாத்திடுவதாக ஆரம்பத்தில் ஒத்துக்கொண்டிருந்த போதும், பின்னர் அதனை நிராகரித்துவிட்டார்கள். அறிக்கையில் பாவிக்கப்பட்ட வார்த்தைகள் மிகக் கடினமானவை எனக் கூறியே அதனை நிராகரித்திருந்தனர். அரசு தவறுகள் இழைக்கின்றது அத்தவறுகளுக்கு ஒரு மென்மைப் போக்குக் கடைப்பிடிக்க வேண்டும், அரசுடன் இணைந்தே அத் எதையும் சாதிக்க முடியும் என்ற கருத்தையே கொண்டிருக்கின்றனர். என்னை பொறுத்த்வரை அவ்வறிக்கை எந்தக் கடினமான வார்த்தைகளையும் கொண்டதாக இருக்கவில்லை. இவர்களின் இந்தச் செயற்பாட்டை உதாரணமாக வைத்துக்கொண்டு அவர்களை எடைபோட நீங்கள் எடைபோட முடியும் என நான் கருதுகிறேன்.
TNA மற்றும் எதிர்காலம், EPRLF தொடர்பான சுயவிமர்சனம் , இனப்படுகொலை போன்றன குறித்த நேர்காணலில் எஞ்சிய பகுதிகள் இனிவரும் நாட்களில் பதியப்படும்.
தோழர் சுரேஸ்,
யாரும் உங்கள் மீது சேறடிக்க இல்லை. வரலாறு உங்களுக்குப் பதில் சொல்லும்.
SO THAN TO THOSE TAMIL FEARS DENIED YOU THAN,OUR CHILDHOOD TEARS.
சுறேஷ் அவர்களின் தன்னிலை வில்க்கம் ஒதுக்க் முடியாது. கன்னிவெடிகளை அகட்ட்ருகிர பணி வெரும் கந்துடைப்பு என்பதை எல்லொரும் அறிவர் எத்தனை காலம் தான் ஏமாற்ற்வர்ர்கள்.பார்பொமெய் அதையும்.
இனியொருவின் மாற்று அரசியலுக்கான உரையாடல் வெளி என்பது இதுவானால் ! வரும் காலங்களில் கருணாஅம்மான் பிள்ளையான் சரத்பொன்சேகா போன்ற மாற்று கருத்தாளர்களின் சிந்தனைகளுக்கும் களம் அமைத்து ! அவர்களினது புரட்சிகரமான கருத்துக்கள் மக்களை தீ யென பற்றிக் கொண்டால் புரட்சி கொழுந்து விட்டு எரியும்.. இனியொருவின் இலட்சியமும் இலகுவாய் நிறைவேறும் !
கிழக்கு வடக்கு மாகாணங்களில் கொலை செய்யப்பட்ட பல ஆயிரம் அப்பாவி பொதுமக்களின் கொலை களுக்கு கொன்றவன் மட்டுமல்ல கொலை செய்ய தூண்டியவனும் கொலைக்கு ஆதரவாக பேசியவனும் மனித விரோதியே ! கொலை குற்றவாளியே !. சுரேஸ் பிரேமச்சந்திரனிடம் கேட்கப்பட வேண்டியது கேள்வியல்ல சுமத்தப்படவேண்டியது கொலை குற்றம்!. இலங்கை அரசால் நடத்தப்பட்ட கொலைகள் மனிதஉரிமை மீறல்களுக்கு கருணா டக்ளஸ் பிள்ளையான் சித்தார்த்ன் போன்ற அரசுடன் செர்ந்து இயங்கும் அமைப்புக்களும் எவ்வாறு கரணமாவார்களோ அவ்வாறே புலிகளால் நடத்தப்பட்ட கொலைகள் மனிதஉரிமை மீறல்களுக்கும் பிரேமச்சந்திரன் தொடக்கம் சீமான் வரை புலி ஆதரவாளர்கள் அனைவரும்கொலைக்கு உடந்தையானவர்களே!. பிரேமச்சந்திரனிடம் நீ ஓர் போர் குற்றவாளி யா ? என்ற கேள்வியை கூட கேட்கமுடியாமல் புலிகளால் நடத்தப்பட்ட கொலை களை மறந்து (மறைத்து) தாக்குதல் பற்றி நலம் விசாரித்த இனியாருவின் மக்கள் நலம் நலமுடன் இருக்க வாழ்த்துக்கள்!!!!!
புலிகளின் தோல்விக்கு ராணுவக்கண்ணோட்டமே காரணம் என்று கூறும் சுரேஸ் பிரேமச்சந்திரன் அவர்களுக்கு இந்த உண்மையானது மே 17ம் திகதிவரை தெரியாதது ஏன் என்று நாம் கேட்கப்போவதில்லை.ஆனால் எமது கேள்வி என்னவெனில் புலிகளின் தோல்விக்கு வெறும் ராணுவக்கண்ணோட்டம் மட்டும்தான் காரணமா?ஒருவேளை சுரேஸ்பிரேமச்சந்திரன் அவர்களின் கூற்றுப்படி புலிகள் மக்கள் போராட்டம் நடத்தியிருந்தால் வெற்றி பெற்றிருக்கமுடியுமா?அதாவது தமிழீழத்தை அடைந்திருக்கமுடியுமா?சாத்தியமற்ற தமிழீழத்திற்காக புலிகள் போராடியது தவறு என்பதைப் பேச சுரேஸ் ஏன் தயங்கிறார்?இந்தியா நண்பன் அல்ல எதிரி என்பதை இத்தனை அழிவுக்குப்பின்னரும் பேச ஏன் மறுக்கிறார்?சிங்கள மக்கள் அனைவரையும் எதிரிகளாக கணித்தது தவறு என்பதை ஏன் கூற மறுக்கிறார்?இந்த உண்மைகளை பேச மறுப்பதன் மூலம் அவர் தொடர்ந்தும் மக்களை ஏமாற்றி தனது பதவி மற்றும் சுகபோக நலன்களுக்காக மக்கள் மீது சவாரி செய்ய முனைகிறார் என்பது வெளிப்படுகிறது.