24.03.2009.
வன்னியில் யுத்த சூனிய வலயத்தில் சிக்கியுள்ள அப்பாவிச் சிவிலியன்கள் பாரிய மனிதப் பேரவலத்தை எதிர்நோக்கி வருவதாகவும் இந்த நிலைமை மேலும் பாரதூரமாகக் கூடும் எனவும் ஐக்கிய நாடுகள் எச்சரிக்கை விடுத்துள்ளதாக கார்டியன் இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது. அரசாங்கப் படையினருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான மோதல்கள் நடைபெற்று வரும் வலயத்தில் சுமார் 150,000 சிவிலியன்கள் சிக்கியிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
35 சதுர கிலோ மீற்றர் பரப்பளவில் அப்பாவிச் சிவிலியன்கள் சிக்கியிருப்பதாகக் குறிப்பிடப்படுகிறது. சிவிலியன்கள் பாதுகாப்பு வலயத்தில் தொடர்ந்தும் தங்கியிருந்தால் அரசாங்கத்தின் எறிகணைத் தாக்குதல்களுக்கு இலக்காகக் கூடும் எனவும் தப்பிக்க முயன்றால் புலிகளின் துப்பாக்கிப் பிரயோகத்திற்கு இலக்காகக் கூடும் எனவும் ஐக்கிய நாடுகள் அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. யுத்த நடவடிக்கைகளின் காரணமாக குறிப்பாக அரசாங்கத்தின் எறிகணைத் தாக்குதல்களினால் நாள் தோறும் 60 க்கும் மேற்பட்ட சிவிலியன்கள் உயிரிழப்பதாக ஐ.நா. அறிக்கை வெளியிட்டுள்ளது.
கடந்த ஜனவரி மாதம் முதல் இதுவரையில் சுமார் 3000 சிவிலியன்களின் உயிர்கள் காவு கொள்ளப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. நாள்தோறும் எறிகணைத் தாக்குதல்கள் நடத்தப்படுவதாகவும் இதன் காரணமாக பல சிவிலியன்கள் பரிதாபமாக உயிர் நீப்பதாகவும் அரசாங்க வைத்திய அதிகாரி எம். சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
நாளொன்றில் சுமார் 5000 த்திற்கும் மேற்பட்ட சிவிலியன் நோயாளர்களுக்கு சிகிச்சையளிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளதாகவும் காணப்படும் வளங்களுடன் ஒப்பிடுமிடத்து இது மிகவும் சவாலான ஓர் விடயம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.