“மிருகவெறியர்களால் கொலை செய்யப்பட்டு தெருக்களில் வீசியெறியப்பட்ட பிணங்களில் மேல் நடந்து ஜேர்மனிய விமான நிலையத்தில் வந்திறங்கும் அகதிகள் கூட்டத்தில் என்னையும் நீ தேடியலையாதே.” 80 களின் அரைப் பகுதியில் ஈழப் போராட்டம் என்பது சமூக அங்கீகாரமாக மாறியிருந்த வேளையில் தன்னைப் பிரிந்து ஜேர்மனிக்கு அகதியாகச் சென்ற காதலிக்கு ஒரு போராளி எழுதுவது போன்ற செழியனின் கவிதையால் ஆட்கொள்ளப்படாதவர்கள் போர்கால இலக்கித்தை கண்டுகொள்ளாதவர்கள் என்றே கூறவேண்டும். ஒரு போராளியின் உணர்வுகளுக்கிடையே நடந்த உள்ளார்ந்த யுத்தத்தை அழகியலாக கூறிய செழியன் உலகின் அதிபயங்கர ஏகபோக அரசின் கொல்லைப் புறத்தில் தனது வாழ்க்கையை நிரந்தரமாக்கிக்கொள்ளும் அவலத்திற்கு ஈழப் போராட்டம் 80 களின் இறுதியிலேயே நகர ஆரம்பித்துவிட்டது..
கனடா, அமரிக்கா, பிரான்ஸ், ஜேர்மனி, பிரித்தானியா, நோர்வே, டென்மார்க், சுவீடன், சுவிட்சர்லாந்து, நெதர்லாந்து போன்ற பணக்கார நாடுகளை நோக்கி ஈழ அகதிகள் சாரிசாரியாகப் படையெடுத்தனர். 1985 ஆம் ஆண்டிலிருந்து 1995 ஆம் ஆண்டு வரையிலான பத்தாண்டுகளில் இலங்கையிலிருந்து குடிப்பரம்பலையே அசைத்துப்பார்க்கும் அளவிற்கு ஐரோப்பா மற்றும் கனடா ஆகிய நாடுகளை நோக்கி அரசியல் தஞ்சம் கோருவோர் நகர ஆரம்பித்தனர்.
இடம்பெயர்ந்து வாழ்கின்ற ஈழத் தமிழர்கள் குறித்த தெளிவான புள்ளி விபரங்கள் இந்த நாடுகளில் கிடைக்காவிட்டாலும் அகதிகளுக்கான அமரிக்க குழு வெளியிட்ட அறிக்கையின் அடிப்படையில் 1987 இற்கும் 1992 இற்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் பிரான்சில் மட்டும் அண்ணளவாக 225000 அகதிகள் உலகம் முழுவதிலுமிருந்தும் அரசியல் தஞ்சம் கோரியுள்ளனர்.
1987 ஆம் ஆண்டு ஆரம்பிகப்பட்ட பிரன்சின் அகதிகளை விண்ணப்பங்களைப் பரிசீலிக்கும் நிறுவனாஅன ஒப்ரா ஆரம்பித்த 10 ஆண்டுகளுக்குள் ஒரு லட்சம் தமிழர்களை அகதிகளாக அங்கீகரித்துள்ளது.
ஏனைய உலக நாடுகளுடன் ஒப்பிடும் போது ஈழத் தமிழ் அகதிகளை விகிதாசார அடிப்படையில் பல மடங்காக அங்கீகரித்துள்ளது. பிரித்தானியாவில் மட்டும் ஐந்து லட்சம் இலங்கையர்கள் வாழ்வதாக அரச கணக்கெடுப்பு ஒன்று கூறுகின்றது. பொதுவாக 1987 ஆம் ஆண்டிற்கும் 1995 ஆம் ஆண்டிற்கும் இடைப்பட்ட காலப்பகுதியிலேயே இடப் பெயர்வு அதிகரித்துக் காணப்பட்டது.
அகதிகளை அங்கீகரிக்கும் முறைமை ஒரு புறத்தில் அரங்கேறிக்கொண்டிருக்க மறுபுறத்தில் இலங்கையில் படிமுறையான மாற்றங்கள் இடம் பெறுகின்றன.
– 1983 ஆம் ஆண்டில் ஆரம்பித்து இந்திய உளவுத்துறையின் கண்காணிப்பில் இந்திய அரசு தமிழ்ப் போராளிகளுக்கு இராணுவப் பயிற்சி வழங்கி திடீர் இராணுவ வளர்ச்சியை ஏற்படுத்துகிறது.
– 1980 களின் நடுப்பகுதியில் ஆரம்பித்து இந்திய அரச இராணுவத்தால் பயிற்றுவிக்கப்பட்ட இயக்கங்கள் தம்மிடையே மோதிக்கொள்கின்றன.
– 1986 ஆம் ஆண்டில் ஆரம்பித்து புலிகளால் ஏனைய விடுதலை இயக்கங்கள் அழிக்கப்பட்டு நூற்றுக்கணக்கான போராளிகள் பலியிடப்படுகின்றனர்.
-புலிகளின் அழிப்பிலிருந்து தப்பிய போராளிகள் தலைமறைவாகின்றனர்.
-இவர்களிடையேயான தொடர்பாடல்கள் ஏற்படுகின்றன.
-புதிய மக்கள் போராட்டம் குறித்தான சிந்தனைகள் துளிர்விடுகின்றன.
-இந்த நிலையில் புலிகள் போராளிகளைத் தேடி மாபெரும் வேட்டை ஒன்றை ஆரம்பிக்கின்றனர்.
-தமிழ் நாட்டிற்குத் தப்பிச் சென்றவர்கள் வாழ்வாதரத் தேவைகளுக்காக இந்திய அரச துணிப்படைகள் போன்று செயற்பட்ட இயக்கன்களோடு இணைந்து கொள்ளவேண்டிய தேவை ஏற்படுகிறது.
-இவை அனைத்திலிருமிருந்து தப்பிச் செல்ல முற்பட்ட கணிக்கத்தக்க வர்க்க உணர்வுடைய போராளிகளுக்கு ஐரோப்பிய நாடுகளும் கனடாவும் வழியைத் திறந்துவிட்டு உள்வாங்கிக் கொள்கின்றன.
இந்திய அரச ஆதரவு இயக்கங்களால் உள்வாங்கப்பட்டவர்கள் மீளமுடியாத அரசியல் சிறை ஒன்றினுள் பூட்டப்படுகின்றனர். 24 மணி நேரமும் இந்திய உளவுத்துறையின் கண்காணிப்பிற்கு உட்படுத்தப்படுகின்றனர். தமிழ்ப் பிரதேசங்களை இந்திய அரசு ஆக்கிரமித்த வேளையில் அதனோடு இலங்கைக்குச் சென்று அங்கு தமது மக்களுக்கு எதிராகப் போர்தொடுக்கும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.
ஐரோப்பிய அமரிக்க நாடுகளால் அகதிகளாக உள்வாங்கப்பட்டவர்கள் மீளமுடியாத சமூக வாழ்க்கைச் சிறைக்குள் பூட்டப்படுகின்றனர். தமது இருப்பிற்கான மீள முடியாத கடன் பொறிமுறைக்குள் அமிழ்ந்து போனவர்களாக வாழ்க்கை முறை மாற்றமடைகிறது. புலத்திலிருந்து பெயர்ந்தவர்கள் நிரந்தரக் குடியேற்றவாசிகளாகின்றனர். இலங்கையிலிருந்து முழுமையாக வர்க்க உணர்வுடைய சிந்தனைச் சமூகம் ஒன்று வெளியேற்றப்படுகிறது. எஞ்சியிருந்தவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளால் கொலைசெய்யப்படுகின்றனர் அல்லது உள்வாங்கப்படுகின்றனர். இன்னொரு பகுதி தமது பாதுகாப்பிற்காக இலங்கை அரச அடியாள் படைகளான துணை இராணுவக் குழுக்களால் உள்வாங்கப்படுகின்றனர்.
90 களின் இறுதிப் பகுதியை அண்ம்த்த போது அனைத்து முற்போக்கு ஜனநாயக சக்திகளும் இலங்கையிலிருந்து வெளியேற புலிகளின் தனியான சாம்ராஜ்யம் உருவாகி 2009 ஆம் ஆண்டு இனப்படுகொலையோடு அது தரை மட்டமாக்கப்படுகின்றது.
இந்த முழுமையான நிகழ்ச்சிப் போக்கை துல்லியமாக ஆராய்ந்தால் இது தற்செயலானதாகத் தோன்றாது. இதற்கு முன்பதான இலங்கையின் வரலாறு கூட இவ்வாறான திட்டமிடலைக் கொண்டதாகவே அமைந்துள்ளது.
பிரித்தானிய காலனியாதிக்கம் இலங்கையிலிருந்து வெளியேறும் காலப்பகுதியில் தேசிய இன முரண்பாட்டைத் திட்டமிட்டுத் தோற்றுவிக்கின்றது.
டேவிட் ஹேவிதாரண என்ற கிறீஸ்தவரை தத்தெடுக்கும் பிளவாட்ஸ்கி என்ற மேற்கத்தையப் பெண் தமிழ் நாட்டில் அடையாறில் அவரைப் பௌத்தராக மாற்றுகிறார். அமரிக்க இராணுவ அதிகாரியான கேணல் ஒல்கோட் என்பவருடன் இணைந்து தியோ சோபிகல் குழுமம் என்ற அமைப்பை உருவாக்கும் பிளவாட்ஸ்கி அங்கு பௌத்தர்களும் ஆரியர்களும் மேலானவர்கள் என்ற கருத்தை விதைக்கின்றார். கேணல் ஒல்கோட்டுடன் இலங்கை திரும்பிய அனகாரிக தர்மபாலவே முதலில் இலங்கையில் சிங்கள பௌத்த மேலாத்திக்கத்தைப் பற்றிப் பிரச்சாரம் செய்ய ஆரம்பிக்கின்றார்.
மகாவம்சம் என்ற கற்பனை இதிகாசக் கதைகள் பிரித்தானிய அரசால் பாளியிலிருந்து சிங்கள மொழிக்கு மொழியாக்கம் செய்யப்பட்டு பேரினவாத உணர்வை வளர்க்கின்றனர்.
இதற்கெல்லாம் அப்போது அவர்களுக்குப் தேவையான காரணம் இருந்தது. பெருந்தோட்டத் தொழிற் துறையின் வளர்ச்சி இலங்கையில் தேசியப் பொருளாதாரத்தை பல்வேறு வழிகளில் தோற்றுவித்தது. பருத்தி உற்பத்தி, விவசாயம், மீன்பிடி போன்ற தொழிற் துறைகள் தேசிய அளவில் வள்ர்ச்சி பெற்றன. தேசிய மூலதனத்தின் வளர்ச்சி ஒரு புறத்திலும் மறு புறத்தில் அதனோடு கூடவே தோன்றிய தொழிலாளர்களும் இலங்கையில் அன்னிய மூலதனத்தின் இருப்பிற்கு அச்சுறுதலாகினர்.
1956 ஆம் ஆண்டில் ஆட்சிக்கு வந்த பண்டாரநாயக்கவின் அரசு தேசிய முதலாளித்துவத்தின் ஆரம்பகால வளர்ச்சியைப் பிரதிநிதித்துவப் படுத்தியது. அதே வேளை சிங்கள பௌத்த மேலாதிக்க வாதத்தை சமூகத் தளத்திலிருந்து அரசியல் தளத்திற்கு நிரந்தரமாக நகர்த்தியவரும் பண்டாரனாயக்கவே.
முழுமையான இலவசக் கல்வி இலங்கையின் பாரம்பரிய மேட்டுக்குடிகளை மீறிய கல்விச் சமூகம் ஒன்றை உருவாக்கியது.
அனகாரிக தர்மபாலவும், பின்னைய அரசியல்வாதிகளும் தோற்றுவித்த பேரினவாதத்தைக் கூட உடைத்துக்கொண்டு இலங்கையின் தேசிய உற்பத்தி வளர்ச்சியடைந்தது.
60 இலிருந்து 70 வரையான காலப்பகுதியில் பிரித்தானியப் பல்கலைக் கழகங்களின் தெற்காசிய ஆய்வு மையமாகத் திகழ்ந்தது இலங்கை என்ற சிறிய நாடு. இலங்கையின் தேசிய இனப் முரண்பாடுகள் குறித்து மட்டுமன்றி பொருளாதார வளர்ச்சி குறித்த ஆய்வுகளும் வெளிவந்துள்ளன.
இலங்கையில் தேசிய மூலதன வளர்ச்சிக்கும் அங்கு நிலவிய வளர்ச்சியடைந்த உற்பத்தி உறவுகள் குறித்தும், மக்கள் மத்தியிலான முரண்பாடுகள் குறித்துமே அந்த ஆய்வுகள் மையப்படுத்தப்பட்டிருந்தன.
1977 ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக்கு வருவதற்கு முன்பதான காலனியத்திற்குப் பிந்தைய காலப்பகுதி முழுவதும் இலங்கையின் தேசியப் பொருளாதாரம் அன்னிய மூலதனத்திற்கு எதிராக வளர்ச்சி பெற்றது. மேற்கின் ஆய்வுகளின் பிரதான நோக்கமாக அமைந்தது அன்னிய மூலதனத்தை உட்புகச் செய்வதே என்பதில் மாற்றுக்கருத்திருக்க முடியாது. அன்னிய மூலதனத்தின் அடியாட்களாக தமிழ் ஏகபோக அரசியல் தலைமைகளே செயற்பட்டன என்பது மறுக்க முடியாத உண்மை.
அன்னிய மூலதனத்தின் ஆதிக்கத்தை ஏற்படுத்தும் முகவர்களாகச் செயற்படும் தன்னார்வ நிறுவனங்களின் தெற்காசிய ஆரம்பம் இலங்கையை மையப்படுத்தியே அமைந்திருந்தது.
1960 ஆம் ஆண்டிலேயே இன்றை தன்னார்வ நிறுவனங்களின் ஆரம்பப் புள்ளி என்று கருதத்தக்க Colombo Plan என்ற அமைப்பு பிரித்தானியாவின் உந்துதலால் உருவாக்கப்பட்டது. Colombo Planஎன்ற அமைப்பு இன்றைய ஆப்கானிஸ்தானில் செயற்படும் பிரதான தன்னார்வ நிறுவனங்களுள் ஒன்றாகும்.
இலங்கை குறித்த பல்கலைக் கழக ஆய்வுகளின் மறுபக்கத்தில் இலங்கையின் எல்லைக்குள்ளேயே மற்றொரு ஆய்வு நிறுவனம் அமரிக்க அரசின் நேரடி நித வழங்கலோடு 1972 ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்படுகிறது MARGA என்ற அந்த அமைப்பு பல நூல்களை வெளியிட்டுள்ளது. இன்று USAID இன் நிதிக் கொடுப்பனவுடன் இயங்கும் இவ்வமைப்பு ஏகபோக நாடுகளின் இலங்கைக்கான ஆவணக் காப்பகமாகத் தொழிற்படுகிறது,
ஏகபோக அரசுகளின் இலங்கை மீதான அக்கறைக்கு இரண்டு பிரதான கார்ணங்களைக் கூறலாம்:
1. தேசியப் பொருளாதாரத்தின் வளர்ச்சி
2. கம்யூனிச இயக்கங்களின் வளர்ச்சி.
தேசியப் பொருளாதார வளர்ச்சி இலங்கையில் நிலப்பிரபுசத்துவப் பிணைப்பிலிருந்து அறுக்கப்பட்ட நவீன தொழிலார்களைத் தோற்றுவித்தது. அதனோடு கூடவே தோழர் சண்முகதாசனால் தலைமைதாங்கப்பட்ட இலங்கை மாவோயிசக் கம்யூனிஸ்ட் கட்சிபோன்ற இடதுசாரிக் கட்சிகள் உறுதியான தொழிற்சங்கங்களை வளர்த்தெடுத்தன. கம்யூனிஸ்ட் கட்சியால் தலைமைதாங்கப்பட்ட தொழிற்சங்கப் போராட்டப் பாரம்பரியம் ஒன்று இலங்கையில் வளர ஆரம்பித்திருந்தது. இதனோடு கூடவே ஆயுதப் போராட்ட மரபும் வளர்ச்சியடைந்தது,.
இலங்கையின் வடபகுதியில் கம்யூனிஸ்டுக்களால் தலைமைதாங்கப்பட்ட சாதி ஒழிப்புப் போராட்டம் ஆயுதப் போராட்டமாகப் பரிணமித்தபோது, தமிழீழம் கேட்ட தமிழரசுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் ‘யாழ்ப்பாணத்தில் வியட்னாம் யுத்தம் நடக்கிறது’ என்று பேரினவாதிகளிடம் முறையிட்ட நிகழ்வை இலங்கையில் தேசிய இன முரண்பாடு வளர்ச்சிய்டைந்தமைக்கும் உழைக்கும் வர்க்கத்தின் போராட்டத்திற்கும் நெருங்கிய தொடர்பைக் காணலாம்.
இலங்கையில் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் உட்பட்ட நவீன தொழிலாள வர்க்கத்தால் பலம் பெற்றிருந்த கம்யூனிச இயக்கங்களை அழிப்பதற்கு பல் வேறு தளங்களில் ஏகாதிபத்தியங்கள் தாக்குதல் தொடுத்தன.
1. பேரினவாத்தை அநகாரிக காலத்தில் ஆரம்பித்துத் திட்டமிட்டு வளர்த்தன,
2. பேரினவாதத்திற்கு ஒடுக்குமுறைக்கு எதிரன உணர்வை தமிழ்த் தேசியக் கட்சிகள் சிங்கள – தமிழ் தொழிலாளர்களைப் பிளவுபடுத்துவதற்கும் தமிழ் சாதீய ஒடுக்கு முறையை வளர்ப்பதற்கும் பயன்படுத்தின.
3. ஜே.வி.பி போன்ற திடீர் ஆயுதக் கிளர்ச்சிக் குழுக்களை உருவாக்கி கம்யூனிஸ்டுக்களின் போராட்டத்தை பிந்தள்ளினர்.
4. தன்னார்வ நிறுவனங்களை காளான்கள் போன்று இலங்கை முழுவதும் வளர்த்தன.
இந்த நான்கு பிரதான நவீன சிர்குலைப்பு நடவடிக்கைகளையும் இனம் கண்டுகொள்வதற்கும் அதற்கான புதிய தந்திரோபாயங்களை வகுத்துக்கொள்வதற்கும் காலம் போதமை என்பது கம்யூனிச இயக்கங்கள் அழிந்துபோகும் நிலைக்கு வந்து சேர்ந்தன. 1970 களின் இறுதியில் ஆரம்பித்து கம்யூனிச இயக்கம் என்பது அப்பட்டமான திரிபுவாதிகளதும் வாக்குப் பொறுக்கிகளதும் கூடாரமாக மாறிவிட்டது.
ஏகாதிபத்தியங்களும் அன்னியத் தரகர்களும் இலங்கையில் கம்யூனிச இயக்கத்தை அழிப்பதில் மாபெரும் வெற்றிபெற்றனர்.
இந்த அழிவின் தொடர்ச்சியாக தேசிய இன ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தின் பிரதான போக்குகளில் ஒன்றாக தமிழரசுக் கட்சியின் சிந்தனைத் தொடர்ச்சி அமைந்தது. பேரினவாத அரசிற்கு எதிரான போராட்டம் என்பது ஒரு புறத்திலும் , பேரினவாதிகளுடனான வர்க்க சமரசம் மறுபுறத்திலும் மேற்கொள்ளப்பட்டது.
பிரேமதாச ஜனாதிபதியகவிருந்த காலத்தில் புலிகளுக்கு வழங்கப்பட்ட உதவிகளும் ஜே.வி.பி ஐ அழிப்பதற்குப் புலிகள் பயன்படுத்தப்பட்டமையும் செயற்பாட்டுத் தளத்தில் வர்க்க இணைவை வெளிப்படையாகக் காட்டியது.
தேசிய இன முரண்பாடு வெறுமனே நிலப்பிரபுத்துவ, ஏகாதிபத்திய அரசுகள் சார்ந்து திட்டமிட்டுக் கூர்மைப்படுத்தப்பட்ட நிலையில் ஒடுக்கும் அரச இயந்திரம் ஒடுக்கப்படும் தேசிய இன ஒடுக்குமுறை இராணுவ சர்வாதிகாரமாக கூர்மையடைந்தது. 1980 களொலிருந்தே இனச்சுத்திகரிப்பு தனது வெளிப்படையான வடிவத்தை பெற ஆரம்பித்துவிட்டது.
இந்த இனச் சுத்திகரிப்பிற்கு எதிரான போராட்டத்தின் 80 களில் ஆரம்பித்த ஆரம்பகாலம் ஒளிரும் பகுதிகளாக அமைந்திருந்தது. ஒரு புறத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் குறுந்தேசியத்தின் தொடர்ச்சி அனைத்து இயக்கங்களுள்ளும் ஆதிக்கம் செலுத்திய போதும், சிறிய இடைவெளிகளைப் பயன்படுத்திக்கொண்ட வர்க்க உணர்வுள்ள சக்திகள் பலமடைய ஆரம்பித்திருந்தனர். முழுமையான இராணுவக் குழுவாக வெறுமையாகக் காணப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் தவிர்ந்த ஏனைய அனைத்து இயக்கங்களுள்ளும் முற்போக்கிற்கும் பிற்போக்கிற்கும் இடையேயான போராட்டங்கள் வலுவடைந்தன.
இலங்கை அரசாங்கமோ தமிழ்ப் பேசும் மக்களின் சுய நிர்ணய உரிமைக்கான போராட்டத்தில் சிங்கள உழைக்கும் மக்கள் இணைந்துவிடக் கூடாது அல்லது ஆதரிக்கும் நிலைக்கு வந்துவிடக் கூடாது என்பதில் அதிக கவனம் செலுத்தியது. பேரினவாத நச்சை பௌத்த சிங்கள பாசிசமாக மக்கள் மத்தியில் விதைத்தது. இதற்கு இந்திய அரசும் உதவிபுரிந்தது.
இயக்கங்களுக்கு ஆயுதப் பயிற்சி வழங்கிய இந்திய அரசு தமிழ்ப் பேசும் மக்களின் சுய நிர்ணய உரிமைக்கான போராட்டத்தை சிங்கள மக்களிலிருந்து தனிப்படுத்தி குறுகிய தேசிய வாதப் போராட்டமாக மாற்றுவதற்கு திட்டமிட்டுச் செயற்பட்டது. தமிழீழ விடுதலைப் புலிகளுடன் உடன்பாட்டிற்கு வந்த இந்திய உளவுத்துறை அனுராதபுரத்தில் சிங்கள மக்களைக் சாரிசாரியாகக் கொலை செய்வதற்கும் கொக்கட்டிச் சோலையில் சிங்களக் கிராமத்தில் படுகொலை செய்வதற்கும் தூண்டியது இதற்குப் பதிலாக புலிகளுக்கு பெருந்தொகையான ஆயுதங்கள் இந்திய அரசால் வழங்கப்பட்டது.
இதன் பின்னர் ஒற்றைப் பரிமாணச் இராணுவச் சிந்தனை கொண்ட புலிகளையே எப்போதும் கையாளக்கூடிய அமைப்பாகவும் எப்போதும் அழித்துவிட்க் கூடிய அமைப்பாகவும் இந்திய அரசு நம்ப ஆரம்பித்தது. சமூகக் கட்டுமானத்தில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாத தொடர்ச்சியான போராட்ட அடித்தளத்தை உருவாக்காத புலிகளின் இருப்பு ஏகாதிபத்தியங்களுக்கும் இந்திய அரசிற்கும் மகிழ்ச்சிகரமான ஒன்றகவிருந்தது. இது தவிர, மக்களை அணிதிரட்டி உறுதியான மக்கள் திரள் அமைப்புக்களை உருவாக்கும் கருத்தை முற்றாக நிர்மூலம் செய்வதற்கும் புலிகளைப் பயன்படுத்திகொண்டனர்.
இவை அனைத்திற்கும் அப்பால் 80 களின் ஆரம்பம் உற்சாகம் தருவதாகவிருந்தது. வரலாறுகாணாத தத்துவார்த விவாதங்கள் ஒவ்வொரு மூலையிலும் நடைபெற்றன.
தத்துவார்த்த விவாதங்களும், புதிய ஆக்கங்களும் ஆய்வுகளும் மட்டுமன்றி மக்களை அணிதிரட்டும் செயற்பாடுகள் கூட ஆரம்பித்திருந்தன. மக்கள் திரள் பாதை குறித்து சிறிய மார்க்சியக் குழுவான பாசறை அமைப்பிற்கு புதிய ஆதரவுத்தளம் ஏனைய இயக்கங்கள் மத்தியில் உருவாகியிருந்தது. இயக்கங்களிலுன் உட்கட்சிப் போராட்டங்கள் புதிய மக்கள் சார்ந்த அரசியல் தலைமையின் குறித்த நம்பிக்கைகளை வளர்த்தன.
1986 ஆம் ஆண்டுவரை தொடர்ந்த இந்தச் சூழலைக் கண்டு மேற்கின் ஏகபோக அரசுகளும், இந்திய அரசும் மிரண்டு போயிருந்தது. இவ்வாறான சூழலை எதிர்கொள்வதற்கு இரண்டு தந்திரோபாயங்கள் பயன்படுத்தப்பட்டன.
1. முற்போக்கு ஜனநாயக சக்திகளை அழிப்பதும் வெளியேற்றுவதும்.
2. அவ்வாறான சக்திகளின் மீளுருவாக்கத்தைத் தடுத்தல்.
இந்த இரண்டையும் நிறைவேற்றுவதன் முதற்படியாக ஏனைய இயக்கங்கள் புலிகளால் அழிக்கப்பட்டன. இயக்கங்கள் புலிகளால் அழிக்கப்படுவதற்கான சூழலை இந்திய அரசு திட்டமிட்டு ஏற்படுத்தியிருந்தது. ஏனைய இயக்கங்களினுளிருந்த பிற்போக்கு பகுதிகளை இந்திய அரசு தன்னோடு இணைத்துக்கொள்ள இந்திய அரசை ஏற்றுக்கொள்ளாத பகுதியினர் பலர் புலிகளால் அழிக்கப்பட்டனர். புலிகளின் அச்சுறுத்தலின் மத்தியிலும் 90கள் வரை வர்க்க உணர்வுள சக்திகள் ஏற்கனவே இருந்த மக்கள் பலத்தில் தங்கியிருந்து தலைமறைவுப் போராட்டங்களை நடத்த முயன்று தோற்றுப் போயினர். இவர்கள் அழிந்து போவதற்கு எதிரான தந்திரோபாயத்தை வகுத்துக்கொள்வதற்கு முன்பதாக இலகுவான வழி ஒன்று காணப்பட்டது. ஐரோப்பிய அமரிக்க நாடுகளை நோக்கித் தற்காலிகமாக இடம் பெயர்தல் என்ற முடிவிற்கு பெரும்பாலானவர்கள் முன்வருகின்றனர்.
ஐரோப்பிய நாடுகளுகளை நோக்கி நகர்ந்தவர்கள் அங்கு காணப்பட்ட பொருளாதாரச் சிறைக்குள் அடைபட்டுப் போகின்றனர். மகிழ்ச்சி என்பது பணத்தைச் சார்ந்தே அமைந்தது. வங்கிப் பணத்தில் தங்கியிருந்து தங்குமிட வசதிக்கான வீட்டைக் கொள்வனவு செய்து கொள்வதிலிருந்து ஆரம்பித்த பொருளாதாரச் சிறை பல்வேறு ஆடம்பர நுகர்வுகளை நோக்கி வியாபித்தது.
இந்தச் சிறையிலிருந்து விடுதலை பெற முடியாமல் வாழ்க்கை முழுவதும் குறைந்த ஊதியத்திற்காக பல மணி நேரங்கள் வேலை பார்க்கும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். இதற்குப் பின்னர் நிரந்தரமாக புலம் பெயர்ந்த நாடுகளிலேயே தங்கிவிட்டனர். புலம் பெயர் நாடுகளில் புதிய சந்ததி தோன்றிய போது , தாம் சந்தித நிறவாத ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடும் வலுவோடு போராடிய சந்ததி இருக்கவில்லை. ஒருவகையான சமூக சமரசத்திற்குத் தள்ளப்பட்டனர். தாம் மடிந்தாவது குழந்தைகளின் கல்வியை வெள்ளையின மத்தியதர வர்க்கத்திற்கு இணையாக வளர்த்தெடுப்பதில் கணிசமான வெற்றிகண்டனர்.
புலம் பெயர்ந்த மொத்த சனத் தொகையில் பொதுவாக அனைவருமே போராட்ட இயக்கங்களோடு ஏதாவது ஒரு வகையில் தொடர்புபட்டிருந்தனர். குறைந்தபட்சம் கால்வாசிக்கு மேற்பட்ட பகுதினராவது ஈழத்தில் போராட்டம் எவ்வாறு அழிக்கப்பட்டது என அறிந்துள்ளனர். குறைந்தபட்சம் ஐந்து வீதமான மிகப் பெரும் தொகையானோர் வர்க்க உணர்வுடன் விடுதலைப் போராட்டத்தில் பங்களித்தவர்கள்.
விடுதலை புலிகளின் பணத் தேவைக்கான மையமாக புலம் பெயர் நாடுகள் 90 களின் பின்னர் மாறிய போது பணச் சேர்ப்பை புலம் பெயர் நாடுகளில் வியாபாரமாக்கிக்கொண்ட கூட்டம் புலிகளை ஆளுமை செய்ய ஆரம்பித்தது. 2000 ஆம் ஆண்டின் பின்னர் புலம் பெயர் வியாபார நிறுவனர்களுக்கு புலியின் இருப்புத் தேவையற்றதாகும் அளவிற்கு பணம் சேர்த்திருந்தனர். இவர்களுக்கு புலிகளின் அழிவு தேவையான ஒன்றாக மாற்றமடைய ஏகாதிபத்திய நாடுகள் மற்றும் இந்திய மேலாதிக்க அரசுகளோடு இணைந்து இலங்கை அரசின் இனப்படுகொலைக்குத் துணை போயினர்.
மேற்கின் ஏகபோக நாடுகள், இந்திய அரசு இலங்கை அரசு ஆகியவற்றுடன் இணைந்து இனப்படுகொலைக்குத் துணைபோன அதே பிழைப்புவாதிகள் இன்று புலம் பெயர் அரசியல் தலைமையைக் கையகப்படுத்தியுள்ளனர்.
தமிழ்ப் பேசும் மக்களின் நியாயமான சுய நிர்ணைய உரிமைக்கான போராட்டம் சுவடுகளே இன்றி அழிக்கப்பட்டுவிட்டது. அது புலம் பெயர் பிழைப்புவாதிகளின் வியாபார நலன்களோடு இணைந்த தேசியத் தலைவர், தேசியக் கொடி, மரணச் சடங்குகள் என்பன போன்ற அடையாளம் சார்ந்த குறுகிய எல்லைகளுக்குள் முடங்கிப் போய்விட்டது. இவர்கள் உடனடியாக அரசியல் நீக்கம் செய்யப்பட்டு முற்போக்கு ஜனநாயக சக்திகள் போராட்டத்தைக் கையகப்படுத்த வேண்டும்.
ஏனைய நாடுகளுக்கு மாறாக இலங்கைத் தமிழர்களை அங்கீகரிக்கப்பட்ட அகதிகளக உள்வாங்கி பொருளாதாரச் சிறைக்கு அடைத்த நிகழ்வு தற்செயலானதல்ல. தெற்காசியா முழுவதும் இலங்கையில் நடைபெறும் போராட்டங்கள் ஏற்படுத்தவல்ல தாக்கத்தை நாம் உணர்ந்ததை விட ஏகபோக அரசுகள் உணர்ந்துள்ளன.
அகதிகளை அங்கீகரிக்கும் ஜெனீவா தீர்மானம் உருவாக்கப்பட்டதே கம்யூனிச நாடுகளிலிருந்து எதிர்ப்புரட்சிகர சக்திகளுக்குப் பாதுகாப்பளிக்கும் நோக்குடனனேயே. ஈழத்தமிழர்களைப் பொறுத்தவரை எதிர்ப்புரட்சியை வலுப்படத்தவே அகதிகள் உள்வாங்கப்பட்டுள்ளனர்.
இப்போதெல்லாம் எந்த நாட்டு மக்களின் வரிப்பணத்தில் இலவசக் கல்வி கற்றார்களோ அந்த நாடு பெரும்பாலானவர்களுக்கு விடுமுறைக்கான சொர்க்க புரியாக மாறியுள்ளது.
இது விடுதலைப் போராட்டம் அழிக்கப்பட்டதற்கான சுருக்கமான புறக் காரணிகள். கட்டுரையில் புள்ளிவிபரங்கள் பல அனுமானங்கள் அடிப்படையில் முன்வைக்கப்பட்டுள்ளன. இவை முழுமைப்படுத்தப்பட வேண்டும். புலம் பெயர் நாடுகளில் இன்னும் வாழும் முற்போக்கு ஜனநாயக சக்திகள் தமது நிலையைப் புரிந்துகொண்டு பொருளாதாரச் சிறைகளுக்கு வெளியில் புதிய சமூகத்தை உருவாக்கத்திற்கு பங்களிப்பு வழங்க வேண்டும். போராடுதல் என்பதைப் பொதுப் புத்தியாக மாற்ற முன்வர வேண்டும். ஐரோப்பிய அமரிக்க நாடுகளில் உழைக்கும் மக்கள் மூன்றாமுலக நாட்டு மக்களின் நிலையை நோக்கித் தள்ளப்படுகின்றனர். சுய நிர்ணய உரிமைக்கான போராட்டத்தை ஐரோப்பிய மக்கள் மத்தியில் அவர்களுடன் பங்களிப்பு என்ற தளத்தில் வளர்த்தெடுப்பதற்கான வாய்ப்புக்கள் அதிகமாகவே காணப்படுகின்றன.
எமது சிறைகளிலுந்து எப்படி வெளியேறுவது யாருடன் இணைவது என்று புரியாமலே 30 வருடங்களை தொலைத்துவிட்டவா்களில் நானும் ஒருவன்.
தயவு செய்து வளியைக்காட்டுங்கள்.
தற்துணிவுடன் தீர்மானம் எடுக்கும் வலிமையும் எண்ணமும் முதல் வேண்டும் .
போராளிகளை ஆயுதக் குழுக்களாக்கி பயிற்சியும் ஆயுதமும் வழங்கி மோத விட்டு அழித்த இந்திய உளவுத் துறை. இன்று அரசியல் செயல்பாடுகளுகளுக்குள் சுரேஸ் பிரேமச்சந்திரன் , வித்தியாதரன் , காதர், சத்திய சீலன் , பரந்தன் ராஜன் , சிவபெருமான் போன்ற சக்திகளை “கையாண்டு” எதிர்கால அரசியல் வாய்ப்புகளையும் சூனியமாக்க முனைகின்றது.
இதற்கு எந்த நேரமும் சிறீலங்கா அரசால் பூச்சியமாக்கப்படக் கூடிய மாகாண சபை என்ற “பொறி” வைக்கப்பட்டுள்ளது . இந்த அபாயத்தை உணருமா தமிழினம்.
வடமாகாண சபை உறுப்பினர்களாக வருபவர்கள் அதன் வெறுமையை சர்வதேச மயப்படுத ஆர்வமும் தற்துணிவும் உள்ளவர்களாக இருக்க வேண்டும் . போராளிக் குழுக்களிடையே கைக் கூலிகளை தெரிவு செய்த இந்திய உளவுத் “துரை” அதே வேலையை அரசியலில் செய்கின்றது .
தற்துணிவுடன் தீர்மானம் எடுக்கும் வலிமையும் எண்ண்மும் முதல் வேண்டும் .
போராளிகளை ஆயுதக் குழுக்களாக்கி பயிற்சியும் ஆயுதமும் வழங்கி மோத விட்டு அழித்த இந்திய உளவுத் துறை. இன்று அரசியல் செயல்பாடுகளுகளுக்குள் சுரேஸ் பிரேமச்சந்திரன் , வித்தியாதரன் , காதர், சத்திய சீலன் , பரந்தன் ராஜன் , சிவபெருமான் போன்ற சக்திகளை “கையாண்டு” எதிர்கால அரசியல் வாய்ப்புகளையும் சூனியமாக்க முனைகின்றது.
இதற்கு எந்த நேரமும் சிறீலங்கா அரசால் பூச்சியமாக்கப்படக் கூடிய மாகாண சபை என்ற “பொறி” வைக்கப்பட்டுள்ளது . இந்த அபாயத்தை உணருமா தமிழினம்.
வடமாகாண சபை உறுப்பினர்களாக வருபவர்கள் அதன் வெறுமையை சர்வதேச மயப்படுத ஆர்வமும் தற்துணிவும் உள்ளவர்களாக இருக்க வேண்டும் . போராளிக் குழுக்களிடையே கைக் கூலிகளை தெரிவு செய்த இந்திய உளவுத் “துரை” அதே வெலையை அரசியலில் செய்கின்றது .
Mouleesan. now the Sri Lanka Police is consolidation. All the guns should be with the government. Refugee care should be the priority for people like Shrimathi Nirupama Menon Rao and Shri Shiv Shanker Menon. Let us not for forget Shri Gopla Krishna Ghandhi and he had been to the Eastern University of Sri Lanka. Thank you.
The article analyses several an untold truths which really has to be considered seriously, with the contacts and links that diaspora has, i think we can make changes. we all expect from the people like saba navalan is to come forward and initiate the changes, we will be with you. writing is not enough for changes, some times no one cares about it. There are so many people like Kumar and i expect more than this from you