கே.பி என்ற குமரன் பத்மநாதன் புலம்பெயர் நாடுகளிலிருந்து இலங்கை சென்றவர்களை கோதாபய ராஜபக்சவிற்கு அறிமுகம் செய்து வைத்துள்ளார். பதினைந்து பேரளவிலான அரச ஆதரவாளர்கள் இலங்கை சென்று கே.பி யாழ்ப்பாணத்தில் நிகழ்த்திய சந்திப்பில் கலந்துகொண்டுள்ளனர். அதன் பின்னராக நடத்தப்பட்ட கோதபாய ராஜபக்ச , கே.பியின் மூன்று கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டுள்ளதாகச் செய்தி வெளியிடப்ப்பட்டுள்ளது.
லங்கா ஈ நியூஸ் அலுவலகம் கோதபாய அரச கும்பலினால் தீக்கிரையாக்கப்பட்ட மறுதினம் கே.பி குழுவின் இந்த நாடகம் அரங்கேறியுள்ளது.
இலங்கை இந்திய அரசுகளின் கே.பி ஊடான கிரிமினல் வலைப்பின்னலை புலம் பெயர் நாடுகளில் விரிவாக்குவதற்கான திட்டத்தின் பிரதான பகுதிகளில் ஒன்றாகவே இது கருதப்படுவதாக கொழும்பு ஊடகவியலாளர் ஒருவர் தெரிவித்தார். புலம் பெயர் நாடுகளில் ஒளிபரப்பாகும் தொலைக்காட்சிச் சேவை ஒன்றும் இதன் முன் முகமாகச் செயற்படுவதாக நம்பகமற்ற தகவல்கள் வெளியாகின்றன.
இலங்கையில் மக்கள் முழுமையான இராணுவ அதிகாரத்தின் கீழ் வாழ நிர்ப்பந்திக்கப்பட்ட இந்தச் சூழலில் இலங்கைக்கு வெளியிலிருந்து உருவாகும் எதிர்ப்பலைகளை நிர்மூலமாக்கும் இச் செயற்திட்டம் பல தளங்களில் செயற்படுகின்றது.
இலங்கையில் ஏற்படுத்தப்படும் எழுத்தாளர் மாநாடு களியாட்டங்களுக்கு அரச ஆதரவாளர்களை இணைத்துக்கொள்ளல் போன்ற அனைத்து மட்டத்திலும் இவை செயற்படுத்தப்படுகின்றது.
இலங்கை அரசோடு இணைந்துகொள்வதற்கான இவர்களின் தந்திரோபாயத்திற்கான நுளைவாசல் “அரசியல் பேச மாட்டோம்” என்பதிலிருந்தே ஆரம்மபமாகிறது. இலங்கை அரசின் இனப்படுகொலை, இனச் சுத்திகரிப்பு, பௌத்த மயமாக்கல், திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள், ஊடக அடக்குமுறை, அரசியல் படுகொலைகள், பாலியல் வன்முறைகள்,போர்க்குற்றங்கள், ஊழல் போன்ற அனைத்து இழி செயல்களும் இவர்களைப் பொறுத்த வரை “அரசியல்”. ஆக, அரசியல் பேசாத இவர்கள் இவை குறித்துக் கண்டுகொள்ள மாட்டார்கள்.
குமரன் பத்மநாதனுக்குத் திடீரென்று முளைத்த மனிதாபிமானத்தின் உந்துதலால் மக்களுக்குச் சேவைச் செய்யப் புறப்பட்டிருக்கிறார். அதிலும் புலம் பெயர் நாடுகளில் வாழுகின்ற கடைந்தெடுத்த சந்தர்ப்பவாத வியாபரிகளோடு இணைந்து!
அவர்களுக்கு அரசியல் தேவையற்றது. மனிதாபிமான உதவிகள் மட்டுமே தேவையானதாம். ஆக இலங்கை அரசின் சமூக விரோதச் செயற்பாடுகள் குறித்துப் பேசக் கூடாது என்று வாய்ப்பூட்டுப் போட்டுவிட்டு அவலத்தில் வாழும் மக்களுக்கு எலும்புத்துண்டு வீசுவதாக நாடகமாடுகிறது இந்தக் கும்பல்.
உதவி என்ற பெயரில் உலக நாடுகளிலிருந்து மில்லியன்களைப் பெற்றுக்கொண்ட ராஜபக்ச குடும்பம் ஒரு பகுதிப் பணத்திக் தனது கஜானாவை நிரப்பிக் கொண்டு மறு பகுதியை இராணுவக் குடியேற்றங்களுக்குப் பயன்படுத்திக் கொண்டது. கே.பியை மட்டும் எலும்புத்துண்டு வீசப் பயன்படுத்திக் கொள்கிறதாம்! வேடிக்கை!!
இலங்கை அரசு அதுவே கூறிக்கொள்வது போல உலகின் கோரமான ஒடுக்கு முறைக்கு முன்னுதாரணமாகத் திகழ்கிறது. அதன் செயற்பாடுகள் இலங்கை மக்களுக்கு மட்டுமன்றி தெற்காசிய நாடுகளின் அனைத்து மக்களுக்கும் அபாய ஒலியை சதா எழுப்பிக்கொண்டே இருக்கிறது. கே.பி மட்டுமல்ல அனைத்து “அரசியல் வேண்டாம்” குழுக்களும் இன்று தெருவிற்கு இழுத்துவரப்பட்டு அரசியல் நீக்கம் செய்யப்பட வேண்டும்.
இன்று எமக்குத் தேவை கே.பிக்களல்ல மக்கள் உணர்வு மிக்க போராட்டங்கள். இலங்கை அரசிற்கு எதிரான அழுத்தம் வழங்கும் போராட்டங்கள். சிங்கள மக்களுக்கும் ஏன் தெற்காசியப் பிராந்தியத்தில் வாழுகின்ற, அடக்கப்படுகின்ற ஒவ்வொரு தனி மனிதனுக்கும் கே.பி போன்றவர்களின் அபாய ஒலி கேட்க வேண்டும்.
இவ்வளவு இழப்புக்கள், அவலங்கள், ஏமாற்றங்கள், துரோகத்தனங்கள் என்ற அனைத்திற்கும் மத்தியில் சமூகப்பற்றோடு எஞ்சியுள்ள மனிதர்களுக்கு கசப்பான கடந்த காலம் கற்றுக் கொள்வதற்காவும், நிகழ்காலம் முன்னோக்கிச் செல்வதற்காகவுமே அமைய முடியும்.
கே.பி யின் சிந்தனை வட்டத்தினுள் வாழுகின்றவர்களுக்கு கடந்தகாலம் பெருமை பேசுவதற்காகவோ, சேறு பூசுவதற்காகவோ, பயன்படுகிறது. நிகழ்காலம் அவற்றிலிருந்து இலாபமீட்டிக்கொள்வதற்காகப் பயன்படுத்தப்படுகிறது.
இன்று அரேபிய நாடுகளின் சர்வாதிகாரங்களுக்கு எதிரான மக்கள் எழுச்சி உலகின் ஒடுக்கப்படும் மக்களுக்கு புதிய நம்பிக்கையை வழங்கியுள்ளது. இப்போது மாற்றத்திற்கான காலகட்டம்! நீதிகும், அநீதிக்கும், மெய்மைக்கும் பொய்மைக்கும், ஒடுக்குபவனுக்கும் ஒடுக்கப்படுபவனுக்கும் இடையே முரண்பாடுகள் கூர்மையடைந்து போராட்டங்களாக வெளிப்படுகின்ற மாற்றத்திற்கான காலகட்டம்!!
இப்போது ஒடுக்கப்படுகின்ற தேசிய இனத்தின் அங்கங்களான நாம் பலமடைந்து மேலெழுகின்ற ஒடுக்கப்படுகின்ற உலக மக்களின் பக்கத்திலிருந்து இணைந்து கொள்வோமாயின் ஆக்கிரமிப்பாளர்களை அழிவிற்குட்படுத்தல் கடினமான ஒன்றல்ல.
யானை தடவிய குருடர்கள் கே பிக்கு முதுகு சொறீகிறார்கள் அவரால் தமிழ்க் குலம் சிரிக்கும் என்ற கோத்தாபாயா பம்மாத்துக்கள தமிழ்ச் சனம் நம்பும் என்றா நினைக்கிறீர்கள்.புலம் பெயர்ந்த சில புண்ணாக்குகளூக்கு அதிக பிரசங்கித்தனம் நிறய தெரியலாம் கரன்சிகளால் நாடகம் காட்டலாம் ஆனால் தமிழ்ச்சனத்த லேசில பேய்க் காட்டேலாது ஏனெண்டால் ஒவ்வொரு வீட்டிலும் ஒருவராவது லண்டனில் பெற்றோல் ஸ்டேசனில் வேலை செய்கிறார்கள் அவைக்கு எல்லாம் தெரியும்.ஆனால் ஆமி இருக்கிறதால கே பிக்கு கற்பூரம் காட்டுகிறார்கள் ஆமி போனால் அவற்ற மொட்டைத் தலயில மிச்சம் இருக்கிற முடியும் இருக்காது.இவர் எல்லாம் எங்களூக்கு தலைவர் என்றால் நாங்கள் கரம்பனில் பிறந்தும் தமிழர் இல்லை என்பதாகி விடும்.