இந்தியாவில் மக்களால் தெரிவு செய்யப்படும் சட்டமன்றம் அமைந்த யூனியன் பிரதேசங்களில் முதன்மையானது புதுச்சேரி. முன்னர் பாண்டிச்சேரி என்று அழைக்கப்பட இந்த பிரெஞ்சு குடியேற்றப்பகுதி தற்காலத்தில் புதுச்சேரி என்று அழைக்கப்படுகிறது.
30 சட்டமன்ற தொகுதிகளைக் கொண்ட புதுச்சேரி சுதந்திரத்திற்குப் பின்னர் காங்கிரஸ் கட்சியால் ஆளப்பட்டு வந்தது. பின்னர் திமுக, அதிமுக இரு கட்சிகளும் புதுச்சேரியை ஆண்டு வந்தன. என்றாலும் புதுச்சேரி அரசியல் வரலாற்றில் நீண்ட காலம் ஆளும் கட்சியாக இருந்தது காங்கிரஸ் மட்டுமே. அதிமுக ஒரு முறை ஆளும் கட்சியாக இருந்தது. 2021 சட்டமன்ற தேர்தலில் அதிமுக என்ற கட்சியே அடையாளம் இல்லாமல் அழிக்கப்பட்டு விட்டது. பாஜகவால். இதை அதிர்ச்சியோடும் ஆச்சரியத்தோடும் புதுச்சேரி அதிமுகவினர் பார்த்து வரும் நிலையில் என்ன நடந்தது எனப் பார்ப்போம்.
ஜெயலலிதா மரணத்தின் பின்னர் அதிமுகவைக் கட்டுப்படுத்திய பாஜக புதுச்சேரியிலும் அதிமுகவோடு கூட்டணி வைத்துக் கொண்டது. எடப்பாடி பழனிசாமி தன் பதவியைக் காப்பாற்றிக் கொள்வதற்காக அதிமுக என்னும் கட்சியை பாஜகவுக்குள் ஐக்கியமாக்கினார். இந்த சட்டமன்ற தேர்தலுக்கு முன்பே காங்கிரஸ் நாராயணசாமி அரசைக் கவிழ்த்த பாஜக. என்.ஆர். காங்கிரஸ் ரங்கசாமியோடு கூட்டணி பேசியது. ரங்கசாமியை முதல்வராக ஏற்றுக் கொண்டு அவருக்கு அவருக்கு 16 தொகுதிகளையும் கொடுத்து பாஜக 14 தொகுதிகளை எடுத்துக் கொண்டு அதிமுகவுக்கு ஐந்து தொகுதிகளை வழங்கி தான் 9 தொகுதிகளில் போட்டியிடுகிறது. அதாவது புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் ஆளும் கட்சியாக இருந்த ஒரு கட்சியை டம்மியாக்கி அழித்து விட்டது பாஜக.
கடந்த இரு சட்டமன்ற தேர்தல்களிலும் பாஜக வாங்கிய வாக்குகளைச் சுட்டிக்காட்டி புதுச்சேரியில் பாஜகவின் செயல்பாடுகளை அதிமுகவினரே விமர்சிக்கிறார்கள். 2011 சட்டமன்ற தேர்தலில் பாஜக 30 தொகுதிகளிலும் சேர்த்து மொத்தமாக 9,183 வாக்குகளை மட்டுமே வாங்கியது. அதே தேர்தலில் அதிமுக தலைவர் அன்பழகன் என்பவர் உப்பளம் தொகுதியில் வாங்கிய ஓட்டுக்கள் மட்டும் 9,536 அதாவது பாஜக மொத்தமாக வாங்கிய வாக்கை விட ஒரு நபர் வாங்கிய வாக்கு அதிகம்.
2016 தேர்தலில் பாஜக மொத்தமாக 19,303 வாக்குகள் மட்டுமே பெற்றது. இது 2.4% வாக்குகள் ஆகும். அதிமுக வாங்கிய மொத்த வாக்குகள் 134,597. தனித்துப் போட்டியிட்ட அதிமுக கடந்த சட்டமன்ற தேர்தலில் நான்கு தொகுதிகளில் வென்றது. ஆனால் ஒரு தொகுதியில் கூட வெல்லாத பாஜக 9 தொகுதிகளிலும் நான்கு தொகுதிகளில் வென்ற அதிமுக ஐந்து தொகுதிகளிலும் போட்டியிடுகிறது.
புதுச்சேரியில் அதிமுகவின் வரலாற்றை துடைத்தழித்து சுத்தமாக முடிவுக்குக் கொண்டு வந்து விட்டது பாஜக.