இன நெருக்கடிக்கு அரசியல் தீர்வொன்றைக் காணும் நோக்கத்துடனான அரசியல் தீர்வுத் திட்டமொன்றை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தயாரித்து வருவதாகவும், தமிழ்க் கல்விமான்கள் மற்றும் துறைசார் நிபுணர்களின் ஆலோசனைகள் இதற்காகப் பெறப்பட்டிருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன், மாவை சேனாதிராஜா ஆகியோர் இதற்கான பணியில் ஈடுபட்டுள்ள அதேவேளையில், இந்த யோசனைகள் தயாரிக்கப்பட்ட பின்னர் அது தொடர்பாக இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் உட்பட முக்கிய இந்தியத் தலைவர்களுடன் பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கும் திட்டமிட்டுள்ளார்கள்.
இந்தியத் தலைவர்களின் ஆதரவை இதற்காகப் பெற்றுக்கொள்வதன் மூலம், இதனை நடைமுறைப்படுத்துவதற்கான அழுத்தத்தை இலங்கை அரசுக்கு இந்தியா கொடுக்கும் என அவர்கள் கருதுவதாகவும் தெரிகின்றது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தயாரிக்கும் திட்டத்தில் முக்கிய அம்சமாக பிரிக்கப்பட்டுள்ள வடக்கு – கிழக்கு மாகாணங்கள் மீண்டும் ஒரு அலகாக இணைக்கப்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
இந்த இரு மாகாணங்களும் இணைக்கப்பட வேண்டும் என்ற யோசனையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இதற்கு முன்னரும் இந்தியாவிடம் கையளித்திருந்தது என்பது கவனிக்கத்தக்கது.
இது தொடர்பாக சிறிலங்காவின் அரச தலைவர் மகிந்த ராஜபக்சவிடம் இந்திய அரசு அப்போது வினவியபோது, உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு அமைவாகவே இரு மாகாணங்களும் அப்போது பிரிக்கப்பட்டதாக விளக்கிய மகிந்த, உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பில் தலையிட தான் விரும்பவில்லை எனப் பதிலளித்திருந்தார்.
இருந்தபோதிலும் இரு மாகாணங்களும் இணைக்கப்பட வேண்டும் என்பதை உள்ளடக்கியதாகவே தமது யோசனைகளை வெளியிடுவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தற்போது திட்டமிட்டடுள்ளது.
தமிழர்களின் தாயகத்தில் தமிழர்களுக்குள்ள சுயநிர்ணய உரிமை ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும், 13 ஆவது திருத்தத்தில் உறுதியளிக்கப்பட்டுள்ளவாறு காணி மற்றும் காவல்துறை அதிகாரங்கள் மாகாண சபைகளுக்கு வழங்கப்பட வேண்டும் போன்ற விடயங்களையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது யோசனைகளில் உள்ளடக்கியிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
யாழ்ப்பாணம், வவுனியா தேர்தல்கள் முடிவடைந்தவுடன் தமது புதிய யோசனைகள் தொடர்பாக ஆராய்வதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உயர் மட்டக்குழு ஒன்று புதுடில்லிக்குச் செல்லவிருப்பதாகத் தெரிகின்றது.
இந்தியப் பிரதமருடன் தமது புதிய யோசனை தொடர்பாகப் பேசுவதற்கான நேர ஒதுக்கீட்டை இவர்கள் கோரியிருந்த போதிலும், இந்தியாவின் புதிய வெளிவிவகாரத்துறைச் செயலாளர் நிருபாமோ ராவ், பாதுகாப்புச் செயலாளர் எம்.கே.நாராயணன் ஆகியோருடன் இது தொடர்பாகப் பேச்சுக்களை நடத்துமாறு இந்தியப் பிரதமரின் அலுவலகம் கேட்டுக்கொண்டிருப்பதாகத் தெரிகின்றது.