Friday, May 1, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

பிரிந்து செல்லும் உரிமை – இலங்கை மக்களின் விடுதலைக்கு முன்நிபந்தனை : சபா நாவலன்

இனியொரு... by இனியொரு...
10/30/2012
in பிரதான பதிவுகள் | Principle posts, அரசியல்
0 0
39
Home பிரதான பதிவுகள் | Principle posts

ஒடுக்கப்படும் தேசிய இனங்கள் தமது சுய நிர்ணையக் கோரிக்கையை முன்வைத்துப் போராடுதல் என்பது இனவாதம் என்றும் பாசிசத்தை நோக்கி வளர்ச்சியடையும் முழக்கம் என்றும் திட்டமிட்ட பிரச்சாரம் இலங்கையில் மேற்கொள்ளப்படுகிறது. இலங்கையில் புதிதாக முளைத்திருக்கும் இந்த கருத்தியல் உலகிற்குப் புதிய ஒன்றல்ல. திரிபு வாதிகளும், ஒடுக்குமுறையாளர்களும், ஏகாதிபத்தியத்தின் அடியாட்களும் உலகம் முழுவதும் சுயநிர்ணய உரிமைக்கு எதிரான எதிர்ப்பை  மீண்டும் நிறுவனமயப்படுத்தி வருகின்றனர்.

இலங்கை சார்ந்த சூழலில் தேசிய இனங்களின் சுய நிர்ணய உரிமையும் தேசிய விடுதலையும் குறித்த கருத்துக்களை முன்வைப்பவர்களை அவர்களின் பலம் பலவீனம் என்பவற்றிற்கு அப்பால் பின்வருமாறு வகைப்படுத்தலாம்.

1. பெருமை மிக்க தமிழருக்கு என்று நிலம் வேண்டும் என்பதால் நாம் தனியான நாட்டை அமைப்போம்.

2. தேசிய விடுதலை ஊடாக தமிழர்களின் வர்க்க விடுதலையை அடைவோம்.

3. வர்க்க விடுதலையை முதன்மைப்படுத்தி தேசிய விடுதலையைப் பெற்றுக்கொள்வோம்.

4. ஒடுக்கப்பட்ட இலங்கை மக்கள் விடுதலை அடைவதற்கு ஒடுக்கப்பட்ட தேசிய இனங்களின் சுய நிர்ணய உரிமைக்கான போராட்டம் முன்நிபந்தனை.

தமிழர்களின் பெருமை, அவர்களின் நிலப்பிரபுத்துவ விழுமியங்கள் உட்பட பல்வேறு பிற்போக்கு பழமைவாதக் கருத்துக்களை முன்நிறுத்தி அவர்களுக்கான தனி நாட்டை அமைக்கக் கோரும் கருத்தியலானது, தேசியம் என்று பலராலும் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டுள்ளது. மேலாதிக்கமும் அதிகார வேட்கையும் கொண்ட மக்கள் கூட்டமாகத் தம்மை முன்நிறுத்துவதன் ஊடாக இந்தக் கருத்தியல் தோற்றம்பெற்று அது இறுதியில் எதிரிகளை மட்டுமே உருவாக்கிக்கொண்டு அழிந்துபோகிறது.

முதலாளித்துவமும் அதனோடு கூடிய சந்தைப் பொருளாதாரமும் தோன்றும் போது தேசியமும் அதனோடு இணைந்தே தோற்றம் பெறுகிறது. ஐரோப்பாவில் முதலாளித்துவம் தோன்றிய வேளையில் உருவாகிய மக்கள் கூட்டங்களே முதலில் தேசிய இனங்கள் என்று அழைக்கப்பட்டனர். தேசிய மூலதனமும், தேசிய முதலாளிகளும் இந்தத் தேசிய இனங்களின் ஆதிக்க சக்திகளாகும்.

நிலப்பிரபுத்துவத்தில் காணப்பட்ட மன்னர்களின் அதிகாரத்தையும், ஆதிக்கத்தையும் அதனோடு இணைந்த பிற்போக்கு அம்சங்களையும் அழித்தே தேசிய இனங்களும் தேசங்களும் தோன்றுகின்றன. இதற்கு மாறாக, தமிழ்ப் பேசும் மக்களின் தேசிய விடுதலைப் போராட்டம் அவ்வாறான நிலப்பிரபுத்துவகால பிற்போக்கு பழமைவாதத்தைப் பேணுவதற்காக போராடியிருப்பதை வரலாறு முழுவதும் காணலாம்.

இன்னமும் முழுமையாக வளர்ச்சியடையாத முதலாளித்துவமும் அதனால் இன்னும் முழுமையாக வளர்ச்சிய்டையாத தேசிய இனங்களையும் கொண்ட ஒரு நாடாக இலங்கை காணப்படுவதால், உழைக்கும் மக்களின் அரசியல் தலைமையற்ற சுயநிர்ணய உரிமைக் கோசங்கள் நிலப்பிரபுத்துவ பிற்போக்கு அம்சங்களையும் உள்ளடக்கியுள்ளது.

தேசிய வெறியும் பரந்துபட்ட அடிப்படையில் இன்றி குறுகிய எல்லைகளைக் கொண்ட தேசிய வாதம் இறுதியில் ஏகாதிபத்தியங்களில் நலன்களுக்காப் பயன்படுத்தப்பட்டு பேரழிவுகளை எற்படுத்துகின்றது.

இரண்டாவதாக தேசிய விடுதலைக்கு ஊடாக வர்க்க விடுதலையைப் பெற்றுக்கொள்ளாலம் என்ற முழக்கம் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்(PLOTE), தமிழீழ தேசிய விடுதலை முன்னணி(NLFT) போன்ற இடதுசாரி அடையாளத்தோடு முன்வந்த அமைப்புக்களால் முன்வைக்கப்பட்டன.

இவர்களின் இடது அடையாளம் முதலாவது கருத்தியாலான பழமைவாத பிற்போக்கு அம்சங்களை புலிகளிடமிருந்து தமது தலைமைக்கு மாற்றுவதற்காவே முன்வைக்கப்பட்டது.

முள்ளி வாய்க்கலுக்குப் பின்னதக இதன் எச்சசொசங்கள் மீண்டும் துளிவிடுகின்றன. யாழ்ப்பாண நிலப்பிரபுத்துவ சிந்தனையின் முன் முகமான யாழ் வேளாள மேலாதிக்கவாதிகளின் ஆயுதமாக இந்தக் கருத்தியல் திகழ்ந்தது. 80 களின் ஆரம்பத்தில் வல்வெட்டித் துறையை கரையோர மீனவர் சமூகத்தின் தலைமையை மையமாகக் கொண்டிருந்த, படித்த வேளாள மேட்டுக்குடிகளின் முழுமையான ஆதிக்கத்திற்கு உட்படாமலிருந்த தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழீழ விடுதலை இயக்கம் போன்ற இயக்கங்களை எதிர்கொள்வதற்காக புளட் என்.எல்.எப்.ரி போன்ற இயக்கங்கள் இந்த முழக்கத்தை முன்வைத்தன.

ரெலோ புலிகளால் அழிக்கப்பட்டதும், புலிகளின் கருத்தியல் தலைமை யாழ்ப்பாண உயர்குடிகளின் அரசியலாக முழுமையாக மாற்றமடைந்தது. இதன் பின்னர் புளட் போன்ற அமைப்புக்களின் மக்கள் மத்தியிலான செல்வாக்கு அழிந்துபோனது.

தேசிய விடுதலைக்கு ஊடாக தமிழ் மக்களின் வர்க்க விடுதலை என்ற இவர்களின் வெற்று முழக்கங்கள் ஒடுக்கப்பட்ட தமிழ் உழைக்கும் மக்களை அணிதிரட்டுவதையும் அவர்களின் தலைமையையும் நிராகரித்தது.

மூன்றாவதாக் இலங்கையில் தேசிய இன ஒடுக்குமுறையை நிராகரித்து பாட்டாளி வர்க்க விடுதலை என்பது மட்டுமே தேசிய விடுதலையைப் பெற்றுத்தரும் என்றக் கருத்தைக்கொண்டவர்கள். சண்முகதாசன் போன்ற இடதுசாரிகள் இவ்வாறான கருத்தைக் கொண்டிருந்தபோதிலும் பின்னதாக அவற்றைச் சுயவிமர்சனம் அடிப்படையில் ஏற்றுக்கொண்டது மட்டுமன்றி குறை நிலை வளர்ச்சியடைந்த தேசிய இனங்கள், தேசிய இனங்களாக வளர்ச்சியடைவதன் முற்போக்குப் பாத்திரத்தையும் இனம் கண்டார்கள்.

சிங்கள மக்கள் மத்தியில்ருந்து தோற்றம்பெற்ற ஜே.வி.பி போன்ற கவர்சிகரமான புரட்சிகர சுலோகங்களோடு முன்வந்த இயகங்கள் தேசிய இனங்களின் சுய நிர்ணைய உரிமையையும் தேசிய விடுதலைப் போராட்டத்தின் தேவையையும் ஏனைய போலி இடதுசாரிகளைப் போன்றே முற்றாக நிராகரித்தனர். சிங்கள மக்கள் மத்தியில் அரை நிலப்பிரபுத்துவ எச்ச சொச்சமாகப் புரையோடிப் போயிருக்கும் சிங்கள பௌத்த மேலாதிக்கத்திற்குத் தீனி போடுவதற்கும், அவர்களின் ஆதரவைப் பெற்றுக்கொள்வதற்கும் சுயநிர்ணய உரிமைக்கான முழக்கத்தை இனவாதமாக சித்தரிக்க முயன்றனர்.

பௌத்த சிங்கள பாசிசத்தின் வளர்ச்சிக்கு மறைமுகமாகத் துணைபோன ஜே.வி.பி இறுதியில் பேரினவாதக் கட்சிகளோடு சங்கமித்தத வரலாறு எம்முன்னே இன்னும் உறைந்து கிடக்கிறது.

போராடும் தமிழ்ப்பேசும் சிறுபான்மையினர் மத்தியில் இடதுசாரியம் என்பது தமது ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தை நிராகரிக்கும் அரசியல் என்ற பொதுப் புத்தியை உருவாக்குவதிலும் இவர்களின் பங்கே பிரதானமாக அமைந்தது. இறுதியாக போலி இடதுசாரிகளும் ஜே.வி.பி போன்ற குழுக்களும் தேசிய விடுதலப் போராட்டத்தை வலதுசாரி பிற்போக்குத் தலைமைகளிடம் ஒப்படைத்த வரலாற்றுத் துரோகத்தை அரங்கேற்றினர்.

வன்னிப் படுகொலைகளின் பின்னர் தோன்றிய முன்னிலை சோசலிசக் கட்சியின் பெரும்பாலானவர்கள் சுய நிர்ணய உரிமை குறித்து தெளிவான கருத்துக்களைக் கொண்டிருப்பதாக் கூறிவந்தாலும் இறுதியில் ஜே.வி.பி இன் புதிய பதிப்பாக மாறிப்போயினர். மறுபடி ஒருமுறை அதே வரலாற்றுத் துரோகம் ஆரம்பமாகியிருக்கிறது. பெருந்தேசிய வாத தீயில் எண்ணை வார்க்கும் இவர்கள் மறுபுறத்தில் தமிழ் இனவாததையும், இடதுசாரி எதிர்ப்புணர்வையும், வலதுசாரி எழுச்சியையும் வளர்க்கத் துணைபோகின்றனர்.

இறுதியில் தமிழ்ப் பேசும் மக்கள் குறுந்தேசிய வாத்த்திடம் சரணடைவதற்கும், இடதுசாரியம் மீது வெறுப்படைவதற்கும் இவர்கள் இன்னொரு வெளியை உருவாக்கிக்கொடுக்கின்றனர்.

இறுதியாக ஒடுக்கப்படும் தமிழ்த்தேசிய இனங்களின் விடுதலை என்பதும் தேசிய இனங்களின் சுய நிர்ணய உரிமைக்கான போராட்டம் என்பதும் இலங்கை மக்களின் விடுதலைக்கான முன் நிபந்தனை என்பதை ஏற்றுக்கொள்ளும் அரசியல் தலைமை இன்று அவசியமான ஒன்று. பேரினவாதத்தையும் குறுந்தேசிய வாதத்தையும் எதிர்கொள்ளும் அடிப்படை இதிலிருந்தே உருவாகமுடியும்.

தேசிய இனங்கள் தமது சுயநிர்ணய உரிமைக்காகப் போராடுவது என்பது தமது ஆணவத்தினதும் பெருமைகளையும் பழைய பெறுமானங்களையும் முன்வைத்துப் பிரிந்து செல்வதற்காக அல்ல. தேவையேற்படும் போது பிரிந்து செல்வதற்கான முழுமையான உரிமையே சுயநிர்ணய உரிமை. சுயநிர்ணய உரிமைக்காகப் போராடுதலை இனவாதம் என்றும், பிரிவினைவாதம் என்றும் பிரச்சாரம் மேற்கொள்ள்வோரில் பெரும்பகுதியானோர் இலங்கை இந்திய அரசியல் நலன்களைச் சார்ந்தே செயற்படுகின்றனர்.

பிரிந்து செல்லும் உரிமைக்காகப் போராடுதல் என்பதும் பிரிந்து செல்வதற்காகவே போராடுதல் என்பதும் வேறுபட்டவை என்றும் பிரிந்து செல்வதற்கான போராட்டம் பிரிவினை என்ற கருத்தை முன்வைக்கும் சிறுபகுதியினரும் காணப்படுகின்றனர். கட்சி, தேசியவிடுதலை இயக்கங்கள், வெகுஜன இயக்கங்கள் ஆகியவற்றிற்கு இடையேயான அமைப்புரீதியான உறவு குறித்த கோட்பாட்டுரீதியான தெளிவற்ற நிலையிலேயே இந்தக் கருத்து முன்வைக்கப்படுகின்றது.

கட்சி என்பது இலங்கை உழைக்கும் மக்களின் விடுதலைப் போராட்டத்தையும் தேசிய இயக்கத்தையும் தலைமைதாங்கும் உயர்ந்த அரசியல் வடிவம்.

சிங்கள மக்கள் மத்தியிலிருந்து எழும் புதிய இனவாத அரசியல் கட்சிகளுக்கு அப்பால் தமிழ்ப் பேசும் சிறுபான்மைத் தேசிய இனங்களின் பிரிந்து செல்லும் உரிமைய அங்கீகரிக்கும் அரசியல் தலைமை உருவாகி அது அரசியல் இயக்கமாக முன்னெழுமானால் தமிழ்ப் பேசும் மக்கள் மத்தியில் பிரிவினை கோசம் இருந்த இடம் தெரியாமல் இல்லாமல் போகும்.

சந்தர்ப்பவாதிகளும் வாக்குப் பொறுக்கிகளும் தமது பேரினவாத அரசியலை மக்கள் அரசியல் என்று முன்வைக்கும் சூழல் நம்பிக்கை தருவதல்ல. இந்தச் சூழலில் தேசிய இனங்களின் தேசியவிடுதலைப் போராட்டத்திற்கான இயக்கம் எவ்வளவு அவசியமானதோ அதற்கு எந்த வகையிலும் குறைவின்றி இலங்கை தழுவிய இடதுசாரிக் கட்சியினதும் தேவை அவசியமாகின்றது.

Share this:

  • Email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Print (Opens in new window) Print
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post
13ம் திருத்தச் சட்டத்தின் அடிப்படையில் அதிகாரம் பகிரப்படுவதனை ஏற்றுக்கொள்ள முடியாது : கோதாபய

13ம் திருத்தச் சட்டத்தின் அடிப்படையில் அதிகாரம் பகிரப்படுவதனை ஏற்றுக்கொள்ள முடியாது : கோதாபய

Comments 39

  1. Pingback: Indli.com
  2. Robert Mahan says:
    14 years ago

    //இறுதியில் தமிழ்ப் பேசும் மக்கள் குறுந்தேசிய வாத்த்திடம் சரணடைவதற்கும், இடதுசாரியம் மீது வெறுப்படைவதற்கும் இவர்கள் இன்னொரு வெளியை உருவாக்கிக்கொடுக்கின்றனர்.//சுயநிர்ணய உரிமையை ஏற்றுக்கொள்ளாதவர்களுக்கு எதிராக போராட்டாமல் அவர்களை ஊக்கப்படுத்துவது இலங்கையின்ல்தெற்கில் பேரின வாத்ததையும் வடகிழக்கில் இனவாதத்தையும் ஊக்கப்படுத்துவதாகும். பிழைப்பு வாதிகள் மட்டுமே இவர்களை ஆதரிப்பார்கள்.

  3. vijey says:
    14 years ago

    கருத்துத் தெளிவானது.
    நடைமுறைச் செயற்பாட்டிலுள்ள அரசியல் கட்சிகளை – சக்திகளை குறிப்பிட்டு எழுதியிருந்தால் மேலும் விளக்கம் கிடைக்கும். உ-மாக த.தே.கூட்டமைப்பு> பு.ஜ.கட்சி> பிற…
    சிங்கள பேரினவாதத்தின் வளர்ச்சியானது> சகலரையும் “இனவாத சகதிக்குள்’ தள்ளிவிடும் நிலையையே தோற்றுவித்து வருகிறது. நேரடியான இனவாதக் கட்சிகளை அவர்கள் போக்கில் விட்டுவிடலாம்.
    ஐ.தே.கட்சியின் தேர்தல் தோல்வி குறித்த அறிக்கையானது> பெளத்த சிங்களவர்களின் ஆதரவினை இழந்தமையே தோல்விக்கான காரணம்” எனக் குறிப்பிட்டுள்ளது. இதன் வழியாக பெறப்படும் முடிவு மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் பற்றி சிலகாலத்திற்குள் நாமறிவோம்.
    தமிழர்கள் (ஒரு சிலரைத் தவிர!) கூட்டமைப்பின் “பிற்போக்குத் தனங்களை” வெளிப்படையாக விமர்சித்து வருகிற போதும்> கூட்டமைப்பிற்கு வாக்களிப்போம்> கூட்டமைப்பை பலப்படுத்துவோம் என்ற அரசியல் முடிவில் உறுதியாக இருக்கிறார்கள்.
    முஸ்லிம்களிற்கு எதிரான இனவாதப் போக்குகள்> மு.காங்கிரஸை பலப்படுத்தியிருக்கிறது மட்டுமல்ல அக்கட்சியின் வெளிப்படையான சந்தர்ப்ப வாதப் போக்குகளை முஸ்லிம் மக்கள் சகிக்கவும் ஏற்கவும் செய்திருக்கிறது. மாறாக ஐ.ம.சு.முன்னணியுடன் இணைந்து கொள்வது குறித்து பலருக்கு எந்த மனநோவுகளும் இல்லாதும் இருக்கிறது.
    தெற்கில் வளர்ந்து வரும் “பொது எதிர்க்கட்சிகள்” (ஐ.தே.கட்சியின் பொது எதிர்க்கட்சி> பிக்குகள் முன்னணி மற்றும் சரத்தின் பொது எதிர்க்கட்சி) தற்போதைய விட மேலும் பல படி முன்னேறிய இனவாதத்துடன் தான் வளர்ந்து வருகிறது.
    தெற்கில் வளர்ந்து வரும் பொருளாதார கோரிக்கைகளுக்கான போராட்டங்கள் ஒரு அரசியல் தன்மையுடன் செல்லுமா? என்பது கேள்வியாக இருக்கிறது. அவர்களின் போராட்டங்கள் தெற்கில் சில அரசியல் மாற்றங்களை எற்படுத்துமா என்பதுவும் கேள்விக்குரியதே.
    இறுதியாக இன்னுமொரு வினாவும் இருக்கிறது. கடந்த 100 ஆண்டு கால வரலாற்றனுபவம்> தமிழ்த் தேசிய போராட்டம் தோல்வியை அழிவை சந்தித்தது போல> சிங்கள பெளத்த தேசியவாதம் முற்போக்கானதாக வளர்ச்சியடைவதில் தோல்வி கண்டதைப் போல> மாக்கிசிய-லெனினச-மாவேயிச கட்சிகளின் மக்கள் போரட்டம் தோல்வி கண்டிருக்கிறது: பெரும் பின்னடைவுகளைக் கண்டிருக்கிறது. அதே போல> சிங்கள-தமிழ் முற்போக்குத் தேசிய வாதம் கடும் ஒடுக்குமுறையின்றி இலவாகத் தோற்கடிக்கப்பட்டிருக்கிறது.
    மக்களின் பிரச்சினை குறித்து ஓரளவுக்காது இன்னமும் பேசுபவர்கள்> குரல் கொடுப்பவர்கள் – பிற்போக்குத் தேசிய வாதிகள் தான் என்கிற போது நிலைமை இன்னமும் மோசமானது என்பதையே காட்டுகிறது.
    இந்த நிலைமைகள் நமது சமூகத்தின் சமூக-பொருளாதார-அரசியல் நிலை குறித்த பகுப்பாய்வுகள் குறித்தும்> உலகளாவிய அரசியல் போக்குகள் குறித்த பகுப்பாய்வு குறித்துமான ஒரு அவசியப்பாட்டை ஏற்படுத்துகிறதா?
    பேரா.சிவத்தம்பி அவர்கள் கூறியதாக கூறப்படுகிற “இந்தப் படிநிலைச் சமூகத்தில் புலிகள் போன்ற அமைப்புத்தான் தோன்ற முடியும்” என்ற கருத்தினை முன்வைத்து>….
    விஜய்.

    • நாவலன் says:
      14 years ago

      தேசியக் கூட்டமைப்பு நிலவும் தேசிய இன ஒடுக்குமுறையை பயன்படுத்திக்கொண்டு வாக்குச் சேர்பத்திலும் இந்திய முகவர்களாக இலங்கையில் செயற்படுவதிலும் ஆர்வம்காட்டுவார்கள் என்பதே எனது கருத்து. செயற்படுவதிலும் ஆர்வம்காட்டுவார்கள் என்பதே எனது கருத்து. புதிய ஜனநாயக மார்க்சிய லெனினியக் கட்சி 84 ஆம் ஆண்டில் அவர்கள் முன்வைத்த முடிவில் எந்த மாற்றத்தையும் முன்மொழிவதற்குத் தயாரில்லை. முள்ளிவாய்கால் அழிவின் பின்னதான தலைமை வெற்றிடத்தி கையகப்படுத்திக்கொள்ள முனையும் கட்சிகளில் இவர்களும் நகர்வதாகத் தோன்றுகிறது. சுயநிர்ணய உரிமை, இலங்கையில் வர்க்க முரண்பாடுகளின் புதிய நிலை போன்ற அடிப்படை விவாதங்களைக் கூட நடத்துவதற்குத் தயாரற்ற நிலையிலேயே உள்ளனர்.
      பேரின வாதத்தத்திற்கு எதிராகப் போராடவும் தமிழ் இனவாத்தை எதிர்கொள்ளவும் பிரதான முரண்பாட்டைக் கையாளும் எந்த நிகழ்சிநிரலும் இவர்களிடம் இருப்பதாகத் தெரியவில்லை.
      கூட்டமைப்பிற்கு அப்பால் புதிய அரசியல் தலைமை உருவாகவேண்டும். கூட்டமைப்பைப் பலப்படுத்தல் என்பது அன்னிய சக்திகளைப் பலப்படுத்தல் என்பதாகும். முதலில் குறைந்தபட்ச ஜனநாயகத்தை மீட்டெடுப்பது எப்படி என்பதற்குரிய வேலைகள் செய்யப்பட வேண்டும் என்பதைப்பலரும் உணர்வதாகத் தெரிகிறது. ஒடுக்கப்படும் தேசிய இனங்கள் மத்தியிலான தேசிய இயக்கங்களும், வர்க்க முரண்பாடுகளை அடிப்படையாகக் கொண்ட தொழிலாளர் அமைப்புக்களும், இலங்கை தழுவிய கட்சியும் தேவையானவை.
      தேசியப் போராட்டங்களின் தோல்வி குறித்து:
      இலங்கை போன்ற நாடுகளில் தேசியப் போராட்டங்களில் தலைமை சக்திகளான தேசிய முதலாளித்துவம் என்பது இல்லை. அடிப்படை முரண்பாடு தரகு முதலாளித்துவத்திற்கும், வறிய கூலி விவசாயிகள் மற்றும் தொழிலாளர் அணிகளுக்கு இடையிலானது. ஆக அவர்களின் தலைமை இன்றிய போராட்டம் தரகு முதலாளிகளால் பயன்படுத்தப்பட்டு அழிந்து போகும். உலகம் முழுவது தேசியப் போராட்டங்களில் இதனைக்காணலாம். ஆக, தேசிய விடுதலைப் போராட்டம் ஒடுக்கப்பட்ட உழைக்கும் மக்கள் அணிகளின் தலைமையில் நடத்தப்பட வேண்டும்.,
      மார்க்சிய லெனினியப் இயக்கங்கள்,
      சண்முகதாசன் காலத்தின் பின்னதாக அதற்கான வாய்ப்புக்கள் அற்றுப் போயின. கோட்ப்பாட்டு ரீதியாகப் பலம்பெற்ற கட்சிகள் உருவாகவில்லை. சண்முகதாசன் மக்களை அணிதிரட்டியிருந்த போது ஏகாதிபத்தியத் தலையீடுகளால் மக்கள் தயாரற்ற சூழலில் இடதுசாரி சந்தர்ப்பவாத வகையிலான ஆயுதப் போராட்டங்கள் ஜே.வி.பி இன் பக்கத்திலிருந்தும் பின்னதாக வடகிழக்கு இளைஞர்கள் மத்தியிலிருந்தும் எழுந்தன.
      சண்முகதாசன் ஏகாதிபத்தியங்களின் வலிமை குறித்துக் குறைத்து மதிப்பிட்டமையும், சர்வதேசப் கம்யூனிச இயக்கத்தில் அதீத நம்பிக்கை வைத்திருந்தமையுமே இதற்கான காரணங்கள்.
      உலகில் புதிய மாற்றங்கள் ஏற்படுகின்றன. சர்வதேச முற்போக்கு இயக்கங்களிடையேயான ஒத்துழைப்புப் பலமடைகின்றது. முரண்பாடுகள் தெளிவாகத் தெரிய ஆரம்பித்துள்ளன.
      சிவத்தம்பியின் கருத்து தவறானது. தேசிய விடுதலைப் போராட்டம் என்பது நிலப்பிரபுத்துவ எச்சங்களுக்கும் எதிரானது என்பதில் இருந்தே அவரது வாதம் தோற்றுப் போகிறது.

  4. thevan says:
    14 years ago

    உடனடி,குறுகிய ,நீண்ட கால,இறுதி இலக்குகளிட்கு இடையில் ஏற்படும் குழப்பங்கள் தான் இவை.இறுதி இலக்கிற்கான கொள்கை ,கோட்ப்பாடு ,தத்துவங்களை தெளிவாக வகுத்துக்கொண்டு இன்று இருக்கும் சமூக அமைப்பை அது போராடிக்கொண்டிருக்கும் அன்றைய

    பிரச்சனைக்கான போராட்டங்களோடு இணைந்து, இணைய முன்வரும் சக்திகளை இணைத்து அவர்களை வழிநடத்தி அடுத்த இலக்கிற்கு தயார் படுத்தலே சரியான வழியாகும். அதை விடுத்து வெவ்வேறு இலக்குகளிட்கான முன்நிபந்தனைகளை இடம் மாற்றி வைப்பது ஒரு மாற்றத்தையும் முன் நகர்த்தாது,எதிர் விளைவையே உருவாக்கும். இந்தக் குழப்பங்கள் விவாதிக்கப்பட வேண்டியவையே ஒழிய திட்டி தீர்ப்பதாக இருக்கவும் கூடாது.

  5. விசரன்  says:
    14 years ago

    “பொது எதிரிக்கு எதிராக போராடுபவர் மத்தியில் முரண்படுகளை ஏற்றுக்கொண்டு உடன்பாடுகளில் ஊன்றி நின்று ஒரு பொது தளத்தில் கூட்டாக வேலை செய்து முரண்பாடுகளை களைய முனைவதுதான் எதிரியை பலவீனப்படுத்துவதற்கும், எம்மை பலப்படுத்துவதற்கும் உள்ள ஒரே வழி என்பது எங்கள் ஆழமான நம்பிக்கை. முன்னிலை சோசலிச கட்சியுடனான உறவையும் புதிய திசைகளாகிய நாங்கள் இவ்வகையிலேயே கருதுகிறோம்.”- புதிய திசைகள்  //// வன்னிப் படுகொலைகளின் பின்னர் தோன்றிய முன்னிலை சோசலிசக் கட்சியின் பெரும்பாலானவர்கள் சுய நிர்ணய உரிமை குறித்து தெளிவான கருத்துக்களைக் கொண்டிருப்பதாக் கூறிவந்தாலும் இறுதியில் ஜே.வி.பி இன் புதிய பதிப்பாக மாறிப்போயினர். மறுபடி ஒருமுறை அதே வரலாற்றுத் துரோகம் ஆரம்பமாகியிருக்கிறது. பெருந்தேசிய வாத தீயில் எண்ணை வார்க்கும் இவர்கள் மறுபுறத்தில் தமிழ் இனவாததையும், இடதுசாரி எதிர்ப்புணர்வையும், வலதுசாரி எழுச்சியையும் வளர்க்கத் துணைபோகின்றனர். – சபாநாவலன் 
    நீங்க முதல்ல ஒரு முடிவுக்கு வாங்கப்பா

    • thevan says:
      14 years ago

      /இன அழிப்பு, இனவாதம் ஆகியவற்றுக்கெதிரான அவர்களது போராட்டத்துடனும், இன ஒற்றுமையை உருவாக்குவதற்கான அவர்களது முயற்சிகளுடனும் இணைந்து வேலை செய்வது என்பது எமது இன்றளவிலான முடிவாகும் ////// இதை எந்த முற்போக்கு சிந்தனையுள்ள நபரும் எதிர்க்க மாட்டார்கள்.என்பது என் கருத்து. .விசரன்!! ,மன்னிக்கவும் விசரன்,இந்த கருத்து சிந்தனையுள்ள நபர்களிற்கு மட்டுமே.

    • thevan says:
      14 years ago

      இந்தக் குழப்பங்கள் விவாதிக்கப்பட வேண்டியவையே ஒழிய திட்டி தீர்ப்பதாக இருக்கவும் கூடாது./// விசரன்!!! விவாதித்து தெளிவாகாததால் வந்தது தான் இந்த விசர்,

      • விசரன் says:
        14 years ago

        சந்தேகங்கள் விவாதிக்கப் படவேண்டியது என்பதை ஒத்துக் கொள்கிறேன் ஆனால் தமிழ் இடது சாரிகளுக்கு முன்னிலை சோசலிசக் கட்சியுடன் இணைவதை தவிர மாற்று வழிகள் தற்போதைக்கு இல்லை என்பதான பொதுப் புத்தியை திணிக்க முயல்கிறீர்களோ என்று தோன்றுகிறது. நீங்கள் கூறும் இனவாதம் இன அழிப்பு என்பவை சுய நிர்ணய உரிமையையை மறுப்பதில் இருந்து தான் தொடங்குகிறது மக்கள் இயக்கங்களை கட்டி எழுப்புவதே தற்போது  மிக முக்கியமானது.

  6. thevan says:
    14 years ago

    உடனடி,குறுகிய ,நீண்ட கால,இறுதி இலக்குகளிட்கு இடையில் ஏற்படும் குழப்பங்கள் தான் இவை.இறுதி இலக்கிற்கான கொள்கை ,கோட்ப்பாடு ,தத்துவங்களை தெளிவாக வகுத்துக்கொண்டு இன்று இருக்கும் சமூக அமைப்பை அது போராடிக்கொண்டிருக்கும் அன்றைய

    பிரச்சனைக்கான போராட்டங்களோடு இணைந்து, இணைய முன்வரும் சக்திகளை இணைத்து அவர்களை வழிநடத்தி அடுத்த இலக்கிற்கு தயார் படுத்தலே சரியான வழியாகும். //விசரன்!!! இந்த கருத்துடன் முரன்படுகிறீர்களா?

  7. நாவலன் says:
    14 years ago

    தேவன்,
    உடனடி நீண்டகாலம், நீண்டகாலம் உடனடி என்று மந்திரம் போல உச்சரிப்பதில் பயனில்லை. குறைந்த பட்சம் முப்பது வருடங்களுக்குப் பின்னர் அடிப்படைப் பிரச்சனைகளைப் புரிந்து கொள்ள முயற்சியுங்கள். தேசிய இனப்பிரச்சனையின் ஊற்றுமூலம் என்ன. தேசிய விடுதலைப் போராட்டத்தின் தலைமை சக்திகள் யார். போன்ற மிக அடிப்படையான பிரச்சனைகளுக்கு முடிவுகாண முயற்சியுங்கள். அதை விடுத்து சுய நிர்ணய உரிமைக்குப் பதிலாக இனவாதத்திற்கு எதிரான போராட்டம் என்பதை முன்வைத்து இனவாதத்தை வளர்க்கும் இனவாதக் கட்சிகளுக்கு ஆதரவளிப்பதால் ஒன்றும் ஆகப்போவதில்லை.சுயநிர்ணய உரிமைக்கான போராட்டத்தை மார்க்சிஸ்டுக்கள் ஒடுக்கப்பட்ட தமிழ்ப் பேசும் மக்களின் தலைமையில் முன்னெடுக்கத் தவறியமையே இனவாதம் வளர்ந்ததற்கான காரணம். இன்று புலம் பெயர் நாடுகளில் இருந்துகொண்டு இலங்கை தொடர்பாக என்ன சாதிக்க முடியும் என எதிர்பார்க்கிறீர்கள்?  உலகம் முழுவதிலும் எமது பிரச்சனையில் ஆரம்பித்து குறைந்தபட்ச கருத்து மாற்றத்தை ஏற்படுத்த முடியும். அதைவிட நாங்கள்  ஒன்றும் செய்யப் போவதில்லை. இனவாதக் கட்சிகளுக்கு ஆதரவாக அறிக்கை தயாரிப்பதை விட கருத்துமாற்றத்தை ஏற்படுத்துவாதற்கான மிகக் குறைந்தபட்ச வேலைகளிலாவது ஈடுபடலாமே?   

    • thevan says:
      14 years ago

      ஆகவே NAVALAN !! இன அழிப்பு, இனவாதம் ஆகியவற்றுக்கெதிரான அவர்களது போராட்டத்தை, இன ஒற்றுமையை உருவாக்குவதற்கான அவர்களது முயற்சிககளை எதிர்க்கவேண்டும் என்கிறீர்கள் . இதுவா உங்கள் கருத்து?

      • நாவலன் says:
        14 years ago

        இல்லை அவர்கள் இனவாததை மீண்டும் வளர்க்கிறார்கள் என்கிறேன், சுயநிர்ண்ய உரிமையை மறுத்தல் தான் இனவாதத்தை வளர்த்தது என்பதை திரும்பத்திரும்பக் கூறுவதை நீங்கள் படிக்கவில்லையா? ஜே.வி.பி உம் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியும் சொன்ன அதே விடயத்தைத் தான் அவர்களும் கூறுகிறார்கள். இனவாதத்திற்கு எது காரணமாக அமைந்ததோ அதையே அவர்கள் 30 வருடங்களின் பின்னர் திரும்பக் கையில் எடுத்துள்ளார்கள். இவ்வாறான கட்சிகளைத் தான் இனவாதக் கட்சி என்கிறோம்.

  8. thevan says:
    14 years ago

    புதிய திசைகள்: ///சுயநிர்ணய உரிமை என்பது இலங்கை இனப்பிரச்சனை சூழலுக்குப்பொருந்தாது என்னும் தோழர் குமார் குணரத்தினத்தின் கருத்து, தாய் கட்சியின் சந்தர்ப்பவாத குணாம்சம் இவர்களிடமும் ஒட்டியிருக்கிறதோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. இது எமக்குள் இருக்கும் பிரதான விவாதப்பொருளாக அமையும் என்று கருதுகிறோம்./// Sivagnanam,VISARN and NAVALAN !!! நீங்கள் மூவரும் அக்கறைப்படும் சுயநிர்ணய உரிமை, தனியான அலகு பற்றி புதிய திசைகள், முன்னிலை சோசலிச கட்சியுடனான விவாதங்களில் வலியுறுத்த உங்களுடன் நானும் வாழ்த்துகிறேன்

    • நாவலன் says:
      14 years ago

      அவர்கள் நீங்கள் பிரித்து எடுப்பதைப் போல பல விடயங்களைக் கூறவில்லை. ஒரே ஒரு விடயத்தை மிகத் தெளிவாகக் கூறுகிறார்கள். சுயநிர்ணய உரிமைக்குப் பதிலாக இனவாதத்திற்கு எதிரான போராட்டத்தை முன்வைக்கிறோம் என்று. இதற்கு ஒரே ஒரு பதில்தான் உண்டு. சுயநிர்ணய உரிமையை மறுப்பது தான் இனவாதம். இதில் எனக்கு அவர்களை எந்த இடத்தில் ஆதரிக்க வேண்டும் என்பது தெரியவில்லை.நீங்கள் என்னுடன் வருவதற்கு முதல் இனவாதிகளுக்கு எதிராகப் போரட முற்படுங்கள். அவர்களை ஆதரித்து அல்ல.

      • thevan says:
        14 years ago

        இங்கு தான் உங்களிற்கு பிடிக்காத உடனடி நீண்டகாலம், நீண்டகாலம் உடனடி என்ற மந்திரம் மீண்டும் வருகிறது.மன்னிக்கவும்.

        பிரிந்து செல்லும் உரிமை – இலங்கை மக்களின் விடுதலைக்கு :

        .””இலங்கை மக்களின் விடுதலைக்கு”” தமிழ் தேசிய இனம் இன்றைய நிலையில் தயாரா?

        குறிப்பு :கட்டுரையில் குறிப்பிட்டுள்ள கீழ் வரும் அத்தனை பிரச்சனையையும் முகம் கொடுக்காது , தமிழ் மக்களை எவ்வாறு இலங்கை மக்களின் விடுதலைக்கு அணிதிரட்டுவது? மக்கள் இயக்கங்களை கட்டி எழுப்புவது?

        எமது போராட்டம் பல அக புற காரணிகளையும் பல பரிமாணங்களையும் கொண்டது.ஒவ்வொன்றிற்கும் உடனடி,குறுகிய ,நீண்ட கால,இறுதி இலக்குகள் உண்டு .எழுந்தமானமாக இறுதி இலக்கான “”இலங்கை மக்களின் விடுதலைக்கு”” உரிய முன் நிபந்தனைகளை உடனடி, குறுகிய , இலக்குகள் முன் திணிப்பது நடைமுறைக்கு ஒவ்வாது ,வெறும் கற்பனை. இதுவே ,இந்த கற்பனையே , சுயநிர்ணய உரிமைக்கான போராட்டத்தை மார்க்சிஸ்டுக்கள் ஒடுக்கப்பட்ட தமிழ்ப் பேசும் மக்களின் தலைமையில் முன்னெடுக்கத் தவறியதுமாகும்.

        உங்கள் கட்டுரையில் உள்ள கீழ் வரும் அத்தனை பிரச்சனைகளும் அப்படியே ஒருவித நகர்வுமின்றி தேங்கி நிற்பதற்குரிய காரணமும் இந்த கற்பனையே ஆகும்.

        தமிழ் தேசிய இனம் முன்னுள்ள பிரச்சனைகள்

        : யாழ் வேளாள மேலாதிக்கவாதிகள் (internal),

        தேசிய இன ஒடுக்குமுறை

        ,தமிழ் இனவாதம்

        ,குறுந்தேசிய வாதம்,

        ஒடுக்கப்படும் தமிழ்த்தேசிய இனங்களின் விடுதலை,

        பேரினவாதத்தையும் குறுந்தேசிய வாதத்தையும் எதிர்கொள்ளும் அடிப்படை உருவாக்கம்

        ,பிரிவினைவாதம்,.

        பௌத்த சிங்கள பாசிசம்,பேரினவாதக் கட்சிகள்

        ………………………………………………………………………………………………………………………………….. சிங்கள,தமிழ் தேசிய இனம் முன்னுள்ள பிரச்சனைகள்:

        ஏகாதிபத்தியங்களின் நலன்கள்,

        நிலப்பிரபுத்துவ விழுமியங்கள்,

        முழுமையாக வளர்ச்சியடையாத முதலாளித்துவம் ,

        ,முழுமையாக வளர்ச்சிய்டையாத தேசிய இனங்கள்,

        உழைக்கும் மக்களின் அரசியல் தலைமை இன்மை,

        தேசிய வெறி, தேசிய வாதம்,

        ,குறை நிலை வளர்ச்சியடைந்த தேசிய இனங்கள் தேசிய இனங்களாக வளர்ச்சியடைவது,

        போலி இடதுசாரிகள்,வலதுசாரி பிற்போக்குத் தலைமைகள்,,

        இடதுசாரி எதிர்ப்புணர்வு ,

        வலதுசாரி எழுச்சி,

        , , இலங்கை மக்களின் விடுதலை,

        ,அரசியல் தலைமை,இனவாதம் ,

        பிரிவினைவாதம்.

        • navalan says:
          14 years ago

          இப்போது இனவாதக் கட்சிக்கான ஆதரவை விட்டு சரியான ஒரு நிலையை நோக்கி நீங்கள் நகர்வதாகத் தோன்றுகிறது. பாராட்டுக்கள். தேவன், நீண்ட காலம், குறுகிய காலம் என்பதை யாரும் மறுக்கவில்லை. அதற்கு முன்பதாக அடிப்படை விடயங்களில் குறைந்தபட்ச தெளிவு வேண்டும் என்பதே எனது கருத்து. குறிப்பாக முற்போக்கான தேசியவிடுதலைப் போராட்டம் ஏன் இனவாதமாக வளர்ந்தது என்பதிலிருந்து ஆரம்பித்து இலங்கையில் வர்க்கங்க முரண்பாடுகளை முன்வைத்தால் இரண்டு அடிப்படை முரண்பாடுகளைக் கொண்ட வர்க்கத்தை நீங்கள் காணலாம். ஒன்று தரகு முதலாளிகள், மற்றது வறிய கூலிவிசாயிகளை நட்பு சக்தியாகக் கொண்ட தொழிலாளர்கள். இதில் ஒரு வர்க்கம் தான் தலைமை தாங்கமுடியும். தரகுகள் தேசியத்திற்கு எதிரானவர்கள். ஆக, ஒடுக்கப்பட்ட மக்களின் தலைமையிலேயே போராட்டத்தை முன்னெடுக்கப்பட வேண்டும். இல்லையெனில் தோல்வியடையும். கட்டுரையின் சாரம்சமும் இதுவே.
          அவ்வாரன்றிய ஒரு நிலையில் தான் போராட்டம் தோல்விகண்டது. இந்த முடிவிற்கு நீங்கள் வந்தால் அடுத்ததாக உடனடி நீண்டகாலம் பற்றி உரையாடலாம். இல்லையெனில் எங்கிருந்து தொடங்குவது?

  9. thevan says:
    14 years ago

    இப்போது இனவாதக் கட்சிக்கான ஆதரவை விட்டு சரியான ஒரு நிலையை நோக்கி நீங்கள் நகர்வதாகத் தோன்றுகிறது. ///””இப்போது”” புரியவில்லை நாவலன் . எப்போது இனவாதக் கட்சிக்கான ஆதரவை வழங்கினேன்?
    இந்த முடிவு கூட ஒரு கற்பனையே ,ஒரு அடிப்படை ஆதாரங்கள் இல்லாதது.

    • நாவலன் says:
      14 years ago

      தேவன்,
      எனது கருத்தை முன்னைய பின்னூட்டங்களில் பதிந்துள்ளேன். முன்னிலை சோசலிசக் கட்சியின் சுயநிர்ணய உரிமையை மறுத்தல் என்பது இனவாதக் கருத்தே. அந்தக் கட்சியும் ஜேவிபிஐப் போன்று இனவாதக் கட்சி என்பதே எனது கருத்து. இதை நீங்கள் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை என்பது எனது தாழ்மையான கருத்தும் கூட.

  10. thevan says:
    14 years ago

    ஆக, ஒடுக்கப்பட்ட மக்களின் தலைமையிலேயே போராட்டத்தை முன்னெடுக்கப்பட வேண்டும். இல்லையெனில் தோல்வியடையும். ////

    நடைமுறையில் பல சிக்கல்கள்(உங்கள் கட்டுரையில் உள்ள கீழ் வரும் அத்தனை பிரச்சனைகளும்) உண்டென்ற புரிதலுடன் கொள்கையளவில் ஏற்றுக்கொள்கிறேன்.

    ஆகவே “ஒடுக்கப்பட்ட மக்களின் தலைமை” தான் “”இலங்கை மக்களின் விடுதலைக்கு”” “”முன்நிபந்தனையாக”” இருக்கவேண்டுமே ஒழிய சுயநிர்ணய உரிமை அல்ல. சரி தானே நாவலன்?.

    பின்பு ஏன் இங்கு பிரிந்து செல்லும் சுயநிர்ணய உரிமை,சுயநிர்ணய உரிமை மறுப்பு பற்றி பேச வேண்டியிருக்கிறது?

    ஒடுக்கப்பட்ட மக்களின் தலைமையில், அனைத்து அடக்கு முறைகளும் அழிக்கப்பட்டு , அனைத்து மக்களின், அனைத்து உரிமைகளும் வெல்லப்படும் தானே.இல்லையா? அப்படியாயின் நீங்கள் சுயநிர்ணய உரிமை மறுப்பு இனவாதக் கட்சிக்கு ஆதரவா?

    ஒடுக்கப்பட்ட மக்களின் தலைமை- இலங்கை மக்களின் விடுதலைக்கு முன்நிபந்தனை- சபா நாவலன் ….கட்டுரையின் தலைப்பை மாற்றியதற்கு நன்றிகள்.

    • நாவலன் says:
      14 years ago

      நீங்கள் மீண்டும் கட்டுரையையும் கருத்துக்களையும் சரியாகப் படிக்கவில்லை என நம்புகிறேன். அல்லது எனது எழுத்து நடையில் சிக்கல் இருகிறதோ என்ற சந்தேகமும் எழுகிறது.
      1. இலங்கையில் பிரதான முரண்பாடு தேசிய இன முரண்பாடு. ஆக சுய நிர்ணய உரிமையைக்கான போராட்டம் அவசியமானது.
      2. பிரதான ஒடுக்குமுறைக்கு எதிரான தேசிய விடுதலைப் போராட்டம் அவசியமானது.3. ஒடுக்கப்படும் தேசிய இனங்கள் மத்தியில் உள்ள ஒடுக்கப்பட்ட வறிய கூலி விவசாயிகளும் தொழிலாளர்களுமே சுயநிர்ணய உரிமைக்கான போராட்டத்தின் தலைமை சக்திகள்.
      4. போராட்டம் சரியாக முன்னெடுக்கப்பட்டால் பெருந்தேசிய இனத்தின் முற்போக்குப் பிரிவு சுய நிர்ணய உரிமையை அங்கீகரிக்கும் நிலை உருவாகும்.
      5. அந்த வேளையில் இது இலங்கை மக்களின் விடுதலைக்கான போராட்டமாக மேலெழும் அங்கு அனைத்துத் தேசிய இனங்களும் சுயநிர்ணய உரிமை பெறும்.
      ஆக, சுய நிர்ணய உரிமைக்கான போராட்டம் ஒரு முன்நிபந்தனை.

      • chandran.raja says:
        14 years ago

        தேசிய இனங்களின் சுயநிர்ணயஉரிமை 21-ம் நுhற்றாண்டில் தமது வசதிக்கேற்ற புரிந்துகொண்டு நடைமுறை படுத்துபவர்கள் ஏகாதிபத்தியங்களே!

        உதாரணம்: கொசவோ கிழக்க்கு தீமோர்.
        ஏகாதிபத்தியங்களுக்கு தேவையேற்படும் போது இனங்களின் தனித்தவம் பற்றி பொதுமன்றத்திலும் (ஐ.நாடுசபை) விவாதிப்பார்கள்.

        இனங்களின் சுகந்திரப்போக்கு சுகந்திரம் எந்த வர்க்கத்தின் தேவைகளுக்காக…. ? திரு.சபாநாவலன் இதை செவிமடுத்து புரியவைக்கும் படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். நீங்கள் றயாரகரனைப் போல் ஒரு அசடு அல்ல. எதையும் புரிந்து கொண்டு விடையளிப்பவர்களாகவே உங்களை நான் கருதுகிறேன்.

  11. thevan says:
    14 years ago

    ஆகவே ஒடுக்கப்பட்ட மக்களின் தலைமை- சுயநிர்ணய உரிமைக்கான போராட்டம்,இலங்கை மக்களின் விடுதலைக்கு முன்நிபந்தனை- சபா நாவலன் ./// ஏற்றுக்கொள்கிறேன். ஆக, ஒடுக்கப்பட்ட மக்களின் தலைமை ஒரு முன்நிபந்தனை ஏனெனில், ஒடுக்கப்பட்ட மக்களின் தலைமையில், அனைத்து அடக்கு முறைகளும் அழிக்கப்பட்டு , அனைத்து மக்களின், அனைத்து உரிமைகளும் வெல்லப்படும் தானே.இல்லையா?

    • நாவலன் says:
      14 years ago

      பிரதான முரண்பாடு தேசிய இன ஒடுகுமுறையாக அமையும் போது சுய நிர்ணய உரிமைக்கான போராட்டம் முன்நிபந்தனை. அது வெற்றிபெற ஒடுக்கப்பட்ட மக்களின் தலைமை அவசியம். தேசிய முதலாளித்துவம் அற்ற சூழலில் அதனை தவிர வேறு மாற்று வழிகள் இல்லை. தேசிய முதலாளித்துவம் பலமான ஒரு சூழலில் இரண்டு வேறுபட்ட தலைமைகள் சாத்தியமானதாக அமையும் ஒன்று தேசிய முதலாளித்துவம், மற்றது பாட்டாளிகள். தேசிய முதலாளித்துவம் அற்ற சூழலில் ஒடுக்கப்பட்ட மக்களின் தலைமையிலேயே தேசிய இன ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டங்களை முன்னெடுக்க முடியும்.

  12. thevan says:
    14 years ago

    ////ஒடுக்கப்பட்ட மக்களின் தலைமையிலேயே தேசிய இன ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டங்களை முன்னெடுக்க முடியும்//////

    ஒடுக்கப்பட்ட வறிய கூலி விவசாயிகளும் தொழிலாளர்களுமே சுயநிர்ணய உரிமைக்கான போராட்டத்தின் தலைமை சக்திகள். இவர்களின் தலைமையிலேயே பிரதான முரண்பாடான தேசிய இன ஒடுக்குமுறைக்கு எதிரான, மற்றும் இலங்கை மக்களின் விடுதலைக்கான போராட்டங்களை முன்னெடுக்க முடியும்,ஏற்றுக்கொள்கிறேன்.(உழைக்கும் மக்களின் அரசியல் தலைமை இன்மை :புரிதலுடன் ),

    எனது கேள்வி :

    அப்படி முன்னெடுக்கும் போது அனைத்து அடக்கு முறைகளும் அழிக்கப்பட்டு , அனைத்து மக்களின், அனைத்து உரிமைகளும் வெல்லப்படும் தானே.இல்லையா? பின்பு ஏன் இங்கு பிரிந்து செல்லும் சுயநிர்ணய உரிமை,சுயநிர்ணய உரிமை மறுப்பு பற்றி பேச வேண்டியிருக்கிறது?

    அதாவது, ஒடுக்கப்பட்ட வறிய கூலி விவசாயிகளும் தொழிலாளர்களுமே தலைமை என்றும் போது,இந்த தலைமையில் இலங்கை மக்களின் விடுதலை அமையும் போது ஏன் பிரிந்து செல்லும் சுயநிர்ணய உரிமை,சுயநிர்ணய உரிமை மறுப்பு பற்றி பேச வேண்டியிருக்கிறது?

    ஆகவே

    ,ஒடுக்கப்பட்ட வறிய கூலி விவசாயிகளின் தொழிலாளர்களின் தலைமை -இலங்கை மக்களின் விடுதலைக்கு முன்நிபந்தனை-இது தானே சரியான தலைப்பு?.

    அல்லது ,

    ஒடுக்கப்பட்ட வறிய கூலி விவசாயிகளின் தொழிலாளர்களின் தலைமையில் வரும் இலங்கை மக்களின் விடுதலை, தமிழ் தேசிய இனத்தின் சுயநிர்ணய உரிமையை மறுக்கும் என்கிறீர்களா?

    அல்லது,

    ஒடுக்கப்பட்ட வறிய கூலி விவசாயிகளின் தொழிலாளர்களின் தலைமையில் வரும் தமிழ் தேசிய இனத்தின் சுயநிர்ணய உரிமை, இலங்கை மக்களின் விடுதலையை மறுக்கும் என்கிறீர்களா?

    ஒன்றுமே புரியலை.தெளிவுபடுத்துக.

    • நாவலன் says:
      13 years ago

      இலங்கையில் பிரதான முரண்பாடு தேசிய இன முரண்பாடு ஆக தேசிய இன விடுதலைப் போராட்டம் அவசியமானது. அது தமிழ் மக்கள் மத்தியிலுள்ள ஒடுக்கப்பட்ட மக்கள் பிரிவினராலேயே தலைமை தாங்கப்பட முடியும்.தேசிய இனங்களின் விடுதலைக்கான போராட்டமே பெருந்தேசிய வாதத்தை அழிக்கும், அது அழியும் போதே சிங்கள மக்களும் விடுதலை அடைவார்கள், தேசிய இன விடுதலைப் போராட்டதிற்கு சிங்கள மக்கள் மத்தியிலுள்ள ஒடுக்கப்பட்ட மக்களும் ஆதரவளிப்பார்கள். சுயநிர்ணய உரிமைக்கான போராட்டம் முன்நிபந்தனை.

  13. G Manoharan says:
    13 years ago

    இருவரின்  உரையாடலுக்கும்  வாழ்த்துக்கள். 

  14. thevan says:
    13 years ago

    பிரதான முரண்பாடு தேசிய இன முரண்பாடு ஆக தேசிய இன விடுதலைப் போராட்டம் அவசியமானது.///

    பிரதான முரண்பாடான இன முரண்பாட்டை பற்றி பேசும் போது மட்டும் தான் சுய நிர்ணய உரிமை பற்றி பேச வேண்டியுள்ளது. சுய நிர்ணய உரிமை பற்றி பேசும் போது கூட ஒடுக்கப்பட்ட வறிய கூலி விவசாயிகளின் தொழிலாளர்களின் தலைமை தான் முன்நிபந்தனை ஆகிறது.

    இலங்கை மக்களின் விடுதலை பற்றி பேசும் போது அதுவும் ஒடுக்கப்பட்ட மக்கள் பிரிவினராலேயே தலைமை தாங்கப்படும் போது ஏன் சுய நிர்ணய உரிமை பற்றி பேச வேண்டியுள்ளது? இந்த கேள்வியின் பதிலை காணவேயில்லை.யாராவது பதில் தரவும்.

    இன முரண்பாடு தான் பிரதான முரண்பாடு ஆயின் ஏன் இலங்கை மக்களின் விடுதலை பற்றி பேசவேண்டியுள்ளது? இலங்கை மக்களின் விடுதலையா இன முரண்பாட்டின் திறவு கோள்?

    இலங்கை மக்களின் விடுதலையின் ஊடாகத்தான் (திறவு கோள்) பிரதான இன முரண்பாடு தீர்க்கப்படுமாயின் ,இலங்கை மக்களின் விடுதலைக்கு பிரதான முரண்பாடு எது? இன முரண்பாடா? இல்லையே . பின்பு எப்படி பிரிந்து செல்லும் சுய நிர்ணய உரிமை இலங்கை மக்களின் விடுதலையின் முன்நிபந்தனை ஆகின்றது.

    • நாவலன் says:
      13 years ago

      தேவன்,
      மீண்டும் அதே பதில். ஒடுக்கப்படும் தமிழ்ப்பேசும் மக்களின் தேசியப் போராட்டத்தை தேசிய முதலாளிகள் அல்லது வறிய-கூலி ஒடுக்கப்பட்ட மக்கள் மட்டும் தான் தலைமைதாங்க முடியும். மத்தியதரவர்க்கம் இந்த இரண்டில் ஒன்றைத் தான் சார்ந்திருக்க முடியும். இலங்கையில் தேசிய முதலாளித்துவ வர்க்கம் இல்லை. ஆக, வறிய-கூலி-தொழிலாளர் வர்க்கத் தலைமை மட்டுமே தேசிய விடுதலைப் போராட்டத்தைத் தலைமைதாங்க முடியும். ஆக, சுயநிர்ணய உரிமைக்கான போராட்டம் முன்நிபந்ததனை அதன் போராட்ட இயக்கங்களின் தலைமை நான் குறிப்பிட்டவாறே அமைய முடியும். தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும்.
      முரண்பாடுகள் குறித்து மாவோ ஒரு அறிவியல் பூர்வமான கட்டுரை எழுதியுள்ளார். நேரம் கிடைக்கும் போது படித்துப்பார்கவும்.
      http://www.marxists.org/reference/archive/mao/selected-works/volume-1/mswv1_17.htm

      • thevan says:
        13 years ago

        இன முரண்பாடு ,அந்த இனத்திற்குள் இருக்கும் வர்க்க முரண் பாடு,ஒடுக்கும் இனத்திற்குள் இருக்கும் வர்க்க முரண் பாடு,இந்த வர்க்க முரண்பாட்டை பின்தள்ளி கூர்மையடைந்த பெருந்தேசிய ஒடுக்குமுறை இவற்றிக்கெல்லாம் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டமே முன்நிபந்தனை என்று எந்த பந்தியில் உள்ளது என்று கூறமுடியுமா?அந்த பந்தியை விளக்க முடியுமா?

        • நாவலன் says:
          13 years ago

          முரண்பாடுகள் பற்றிய கட்டுரை மக்கள் மத்தியில் முரண்பாடுகள் அவற்றைக் கையாள்தல் குறித்த தத்துவார்தக் கட்டுரை. இதிலிருந்து நீங்கள் தேடும் பந்தியைக் காணமுடியாது. ஆனால் முரண்பாடுகளைக் கையாள்தல் குறித்து விளங்கிக் கொள்ளலாம். பந்திகள் வேண்டுமானால் லெனின் பிரிந்து செல்லும் உரிமை எவ்வாறு ஒடுக்கப்படும் தேசிய இனங்களின் விடுதலை சோசலிசத்தை நிர்மாணிப்பதற்கு முன்நிபந்தனை எனக் கூறும் பல கட்டுரைகளை எழுதியுள்ளார்.

  15. Muththu says:
    13 years ago

    நாவலன்,
    தங்களது 7.31 p.m. குறிப்பில் //இலங்கையில் பிரதான முரண்பாடு தேசிய இன முரண்பாடு// என்ற கூற்றை விளக்குவீர்களா?

  16. நாவலன் says:
    13 years ago

    ஒவ்வொரு சமூகமும் வர்க்க அடுக்குகளாகப் பிரிந்துள்ளது. தொழிலாளர்க, வறிய கூலி விவசாயிகள், மத்தியதர வர்க்கம், அதன் மேலணிகள், மற்றும் ஒடுக்கும் அணியின் மேல் நிலையுள்ள தரகு முதளாளிகளின்(பல் தேசிய நிறுவனங்களினதும் ஏகாதிபத்தியங்களதும் முகவர்கள்) என்ற பல் அடுக்குகளாகப் பிரிந்துள்ளனர். இங்கு கீழ் நிலையிலுள்ள வறிய-கூலி விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களுக்கும் தரகு முதலாளிகளுக்கும் இடையேயான முரண்பாடு அடிப்பாடையான முரண்பாடாகும். இந்த முரண்பாடு அடிப்படையாக இருக்கும் அதே வேளை பிரதானமான முரண்பாடாக பெருந்தேசிய ஒடுக்குமுறையாளர்களுக்கும், ஒடுக்கப்படும் தேசிய இனத்தின் தரகு முதலாளிகள் தவிர்ந்த ஏனைய பகுதியினருக்குமான முரண்பாடு அமைந்துள்ளது. இதுவே வேறுபட்ட முரண்பாடுகளாகும். தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும்.
    முரண்பாடுகள் குறித்து மாவோ ஒரு அறிவியல் பூர்வமான கட்டுரை எழுதியுள்ளார். நேரம் கிடைக்கும் போது படித்துப்பார்கவும்.
    http://www.marxists.org/reference/archive/mao/selected-works/volume-1/mswv1_17.htm

    • Muththu says:
      13 years ago

      நன்றி நாவலன், தமிழ் மக்களுடைய (தமிழ் தரகு முதலாளிகள் தவிர்ந்த) பிரதான முரண்பாடு அவர்களுக்கும் (தமிழ் தரகு முதலாளிகள் தவிர்ந்த ஏனைய பகுதியினருக்கும் ) பெளத்த சிங்கள பெருந்தேசிய ஒடுக்குமுறையாளர்களுக்கும் இடையிலான முரண்பாடே என்று கூறியுள்ளீர்கள். சிங்கள மக்களுடைய பிரதான முரண்பாடு எது என்று வரையறுப்பீர்களா?

      • நாவலன் says:
        13 years ago

        சிங்கள மக்கள் மத்தியில் பிரதான முரண்பாடு என்பது வர்க்க முரண்பாடே. வர்க்க முரண்பாட்டை அவர்கள் உணரமுடியாதவகையில் பெருந்தேசிய வாதத்தில் கட்டுண்டுள்ளார்கள். ஆக ஒடுக்கப்படும் தேசிய இனங்கள் விடுதலையடைம் போதே அவர்கள் தங்கள் வர்க்க முரண்பாட்டை உணர்ந்துகொள்ளும் நிலை உருவாகும். இன்றைய உலக சூழலில் போராட்டம் வெற்றியடையும் சூழல் உருவாகும் நிலையில் கூட வர்க்க முரண்பாட்டை அவர்கள் உணர வாய்ப்புண்டு.

  17. thevan says:
    13 years ago

    கீழ் நிலையிலுள்ள வறிய-கூலி விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களுக்கும் தரகு முதலாளிகளுக்கும் இடையேயான முரண்பாடு அடிப்பாடையான முரண்பாடாகும். இந்த முரண்பாடு அடிப்படையாக இருக்கும் // இது பெருந்தேசிய இனத்திற்குள்ளும்,ஒடுக்கப்படும் தேசிய இனத்திற்குள்ளும், ஒன்றின் மேல் மற்றொன்றுக்கும்,பொதுவாக உள்ள ஒரு உள்ளக,புற அடிப்படை வர்க்க முரண்பாடு ஆகும். சுயநிர்ணய உரிமைக்கான போராட்டம் இந்த முரண்பாட்டின் தீர்வல்ல.முன்நிபந்தனையும் அல்ல. அதாவது வர்க்க போராட்டத்தின் முன் நிபந்தனை சுயநிர்ணய உரிமை அல்ல. அடிப்படை முரண்பாடான வர்க்க முரண்பாட்டால் வந்ததே இந்த பிரதானமான தேசிய இன முரண்பாடு. இந்த பிரதானமான முரண்பாட்டிற்குரிய தீர்வு ,எப்படி

    அடிப்படை முரண்பாடான வர்க்க முரண்பாட்டிற்கு முன்நிபந்தனை ஆக முடியும்?

    அடிப்படை முரண்பாடான வர்க்க முரண்பாட்டிற்குரிய தீர்வு ,அதற்குரிய போராட்டத்தை, தரகு முதலாளிகள் தவிர்ந்த ஏனைய கீழ் நிலையிலுள்ள வறிய-கூலி விவசாயிகள் மற்றும் தொழிலாளர் பகுதியினர்

    தலைமை முன்னெடுக்கும் போது மட்டும் தான் தீர்க்க முடியும். இதன் போது பிரதானமான முரண்பாடு பற்றியோ ,அதற்குரிய சுயநிர்ணய உரிமைக்கான போராட்டம் பற்றியோ ஏன் பேச வேண்டும்?

    வர்க்க முரணின் தீர்வு இன முரணையும் தீர்க்கும்.
    ஏனெனில் இனமுரணின் மூலமே இந்த வர்க்க முரண் தானே ,இல்லையா?

    • நாவலன் says:
      13 years ago

      இலங்கையில் பிரதான முரண்பாடு தேசிய இன முரண்பாடு அதன் அடிப்படையில் மக்கள் வர்க்கப்பிரிவினையை உணர்ந்துகொள்ளவில்லை. தேசிய இன முரண்பாட்டைக் கையாள்வதற்கான போராட்டம் மேலெழும்போதும் பிரிந்து செல்லும் உரிமை வழங்கப்படும் போது மட்டுமே அடிப்படை முரண்பாடு கூர்மையடையும். ஆக, தேசிய இனங்கள் ஒடுக்கப்படும் நாட்டில் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டம் முன்நொபந்தனை.

  18. thevan says:
    13 years ago

    நன்றி நாவலன். அடிப்படை முரண்பாடான வர்க்க முரண்பாட்டையும் மீறிய, மக்கள் வர்க்கப்பிரிவினையை உணர்ந்துகொள்வதை தடுக்கும் பெருந்தேசியவாதம் தான் தேசிய இன முரண்பாட்டின் அடிப்படைக்கே மூல காரணி, இது வர்க்கங்களையும் மீறிய காரணி என்று தெளிவு படுத்தியதற்கு. வர்க்கப் போராட்டம் மூலம் பெருந்தேசிய ஒடுக்குமுறைக்கு எதிராக இன்றுள்ள நிலையில் தீர்வு இல்லை ,ஏனெனில் மக்கள் வர்க்கப்பிரிவினையை உணர்ந்துகொள்வதை பெருந்தேசிய ஒடுக்குமுறைக்கு தடுக்கிறது என்பதையும் புரிய வைத்ததிற்கு.

  19. Muththu says:
    13 years ago

    தமிழ் மக்களின் பிரதான முரண்பாடு தேசிய இன முரண்பாடென்கிறீர்கள். சிங்கள மக்களின் பிரதான முரண்பாடு = வர்க்கமுரண்பாடு என்கிறீர்கள் தங்கள் கூற்றின்படி இலங்கையில் இரு பிரதான முரண்பாடுகளை வரிசைப்படுத்தி உள்ளீர்கள். (முச்லீம் மக்கள் மற்றும் மலையக மக்களின் பிரதான முரண்பாடுகளை நீங்கள் இன்னமும் நிரல்படுத்தவேயில்லை) இவ்வாறிருக்க இலங்கையில் பிரதான முரண்பாடு தேசிய இன முரண்பாடு என்ற தங்கள் கூற்று கருத்துக்கூறலில் பொறுப்புணர்வை வெளிப்படுத்துகின்றது என்று கருதுகிறீர்களா?

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

04/28/2026
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

04/28/2026
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...